Showing posts with label மருத்துவம்!. Show all posts
Showing posts with label மருத்துவம்!. Show all posts

Friday, August 29, 2014

'குளிர்காலம்..' வறண்ட சருமக்காரர்கள் உஷார்..!

இந்த குளிர் காலத்தில் பலருக்கு உடம்பு முழுவதுமே வறண்டு காணப்படும். அதிலும் இயற்கையிலேயே வறண்ட சருமம் உடையவர்களுக்கு கேட்கவே வேண்டாம்.. முகம் அதிக அளவில் வறண்டு போய்விடுவதால், ஒருவித அசௌகரியத்தை அவர்கள் உணர்வார்கள்.

இத்தகையவர்களுக்காகவே கைகொடுக்கிறது ஆரஞ்சு பழமும், தேனும். வறண்ட சருமம் உடையவர்கள் மட்டுமல்லாது எண்ணெய் வடியும் முகத்தை கொண்டவர்களுக்கும் இந்த இரண்டும் அற்புத மாற்றத்தை ஏற்படுத்திவிடும்.

ஆரஞ்சு பழத்தில் சாத்துக்குடி ஒருவகையென்றால், சுளை சுளையாக காணப்படும் கமலா ஆரஞ்சு இந்த குளிர் சீசனில் அதிகமாகவே சந்தைகளில் கிடைக்கும்.

வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் அதிகம் நிறைந்த இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மேனி மினு மினுப்படைவது உத்தரவாதமான ஒன்று என்கிறார்கள் அழகுக் கலை நிபுணர்களும், டயட்டீசன்களும்.

பொதுவாக மேனி வறண்டுபோகாமல் இருக்க வழக்கமாக கூறப்படும் ஆலோசனை, அதிக அளவில் தண்ணீர் அருந்துவது. அது ஒரு வகையில் பலனளிக்கும் என்றாலும், ஆரஞ்சு மற்றும் தேன் ஆகியவை புரியும் மாயஜாலம் அதி அற்புதமானவை என்கிறார்கள் நிபுணர்கள்.

ஆரஞ்சு பழ சுளைகளை உண்டுவிட்டு அதன் தோலை தூக்கி எறிந்துவிடாமல், அதனை காயவைத்து பவுடராக்கி தண்ணீருடன் குழைத்து முகம் மற்றும் கைகளில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவினால் வறண்ட சருமம் போயே போச்!

அதேப்போன்று அரை மூடி எழுமிச்சை பழச்சாறில் ஒரு டம்ளர் சுடு நீரை கலந்து, அதனுடன் ஓரிரு ஸ்பூன் தேனை கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், மேனி மினு மினுப்படைவதோடு, உடம்பில் உள்ள தேவையற்ற சதைகள் குறைந்து உடம்பும் "சிக்"கென்று இருக்கும்.

எண்ணெய் சருமம் உடையவர்கள் ரோஸ் வாட்டரை ஒரு பஞ்சில் நனைத்து தடவ, சருமம் மினு மினுக்கும்.

தோலில் தழும்புகள், கீறல் வடுக்கள் போன்றவை உள்ளவர்கள் தக்காளி பழக்கூழுடன், தயிர் கலந்து தடவி சிறிது நேரம் காயவிட்டு, பின் கழுவி வர தழும்புகள் மறையும்.

மக்காச்சோள மாவு மற்றும் தயிர் கலந்த கலவையை தினசரி உடம்பில் தடவி, காயவிட்டு பின்னர் கழுவி வர சருமம் மின்னுவது சர்வ நிச்சயம் என்கிறார்கள் அழகு கலை நிபுணர்கள்.

இவையெல்லாவற்றையும் விட வெளியில் செல்லும்போது வெயில் படாமல் இருக்க கையில் குடை எடுத்து சென்றால் சூரிய கதிர்களின் வெப்பத்தினால் சருமம் வறண்டு போவதை தடுக்க முடியும்.

மேற்கூறியவற்றில் உங்களுக்கு வசதியானவற்றை பின்பற்ற ஒரு சில நிமிடங்கள்தான் தேவை. அதை செய்தால் பள பளக்கும் மேனியை நிச்சயம் பெறலாம்.

Tuesday, August 26, 2014

நீரழிவை ஏற்படுத்தும் நான் ஸ்டிக் சமையல் பாத்திரங்கள்..! - அதிர்ச்சித் தகவல்



ஒட்டும் தன்மையற்ற (நான் ஸ்டிக்), சமையல் பாத்திரங்களில் சமைக்கப்படும் உணவை உண்பதால், நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக, ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, ஸ்வீடனில் உள்ள உப்சலா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியுள்ளதாவது,

´நான் ஸ்டிக்´ சமையல் பாத்திரங்களில், ஒட்டும் தன்மை இல்லாமல் இருக்க, சில வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வேதிப்பூச்சுகள், விஷத்தன்மை கொண்டவை. இவ்வகை பாத்திரங்களில் உணவு தயாரிக்கும் போது, வேதிப்பூச்சுகள் உணவில் கலந்துவிடுகின்றன.

இதனால், இவ்வகை உணவுப் பொருட்களை உட்கொள்வதின் மூலம், மனித உடலில் கேடுகளை விளைவிக்கின்றன. இதனால், ´நான் ஸ்டிக்´ பாத்திரங்களில் சமைக்கப்படும் உணவுகளை உண்பவர்களுக்கு, நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

´நான் ஸ்டிக்´ பாத்திரங்களில் சமைக்கப்படும் உணவுகளை உட்கொள்ளும், ஆயிரம் நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், அனைவரின் இரத்தத்திலும், வேதிப் பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் பெரும்பாலானோர், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, ´நான் ஸ்டிக்´ பாத்திரங்களில் சமைக்கப்படும் உணவுப் பொருட்களை உண்பதின் மூலம், நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நான் ஸ்டிக் பாத்திரங்களில் பயன்படுத்தப்படும் வேதிப்பூச்சுகளே, இவ்வகை பாதிப்புகளுக்கு காரணமாய் இருப்பதால், அவற்றில் சமைக்கப்படும் உணவுப் பொருட்களை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. இவ்வாறு, ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தலைமுடி செழித்து வளர முருங்கைக்கீரை சூப் குடிங்க....!



தலை முடி நன்கு வளர...தினமும் முருங்கைக்கீரையை சூப் செய்து சாப்பிட்டால் தலை முடி நன்கு செழித்து வளர ஆரம்பிக்கும். நல்ல பலன் கிடைக்கும்(தொடர்ந்து 3 மாதங்கள்)இது அனுபவத்தில் கண்டது.

முருங்கைகீரை சூப் செய்யும் முறை:


முருங்கைகீரை - 2 கப்

வெண்ணெய் 1 - டீ ஸ்பூன்

கார்ன் ஃப்ளோர் - 1 டீ ஸ்பூன்

உப்புத்தூள், மிளகுத்தூள் - சிறிதளவு


முதலில் 2 டம்ளர் தண்­ணீர் சேர்த்து சுத்தம் செய்து வைத்த கீரையை போட்டு 7 நிமிடங்கள் வேகவைத்துகொள்ள வேண்டும். கீரையில் உள்ள சத்து தண்­ணீரில் இறங்கி விட்டிருக்கும்.

அதை உடனே எடுத்து வடிகட்டி (இல்லையெனில் சத்துக்கள் திரும்பவும் கீரைக்கே சென்றுவிடும்), தேவைப்பட்டால் வெண்ணை சேர்க்கலாம் சூட்டிலேயே உருகிவிடும். திக்காக வேண்டும் என்று நினைப்பவர்கள் கார்ன் ஃப்ளோரை சிறிது தண்ணீ­ரில் கரைத்து சேர்த்துக்கொள்ளலாம்.(வடிகட்டியபின் இதை சேர்த்து இரண்டு கொதி விட்டு இறக்கவும்) பின்பு மிளகுத்தூள், உப்புத்தூள் சேர்த்து பருக வேண்டும்.

Tuesday, January 21, 2014

கொழுப்புக்கு குட்பை..! உடல் கொழுப்பு அதிகமானால் ..?



நாம் உண்ணும் உணவில் தினமும் கிடைக்கக்கூடிய கலோரியில் ஏழு சதவிகிதத்திற்கும் அதிக அளவில் கொழுப்பு இருக்கக்கூடாது.

வாய்க்கொழுப்பு அதிகமானால் செல்போனில் நாள் முழுவதும் அரட்டை கச்சேரி செய்யத் தோன்றும். உடல் கொழுப்பு அதிகமானால் யாரையாவது அடிக்கத் தோன்றும்.

ஆனால் இரத்தத்தில் கொழுப்பு அதிகமாகிவிட்டால் இதயநோய்கள் தாக்க ஆரம்பித்துவிடும். எனவே நாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஒரு நாளைக்கு நமக்கு 1200 கலோரி உணவு போதும். இந்த அளவுடைய உணவை தினமும் உண்டால் நம இரத்தத்தில் கொழுப்பு சேராது.

காலையில் காபியோ அல்லது தேனீரோ அருந்தலாம். ஆனால் அதில் ஆடை நீக்கிய பாலும், சர்க்கரையும் குறைவாக இருக்கவேண்டும்.

நினத்தபோதெல்லாம் காபி அல்ல தேநீரை அருந்துவது, நண்பர்களுக்கு கம்பெனி தருவதாக நொண்டிச்சாக்குச் சொல்லிச் சொல்லி அடிக்கடி தேநீர் குடிப்பது போன்றவற்றை முற்றிலும் தவிர்க்கவேண்டும்.

‘வேறு வழியில்லாமல் குடித்து விட்டேன் இப்போ நெஞ்செரிச்சல் ஆரம்பித்து விட்டது’ என்று சிலர் சொல்வதைக் கேட்கலாம். கொழுப்பக் குறைப்பது என்பது மற்றவர்களின் ஆரோக்கியத்திற்காக அல்ல என்பதை மனதில் பதியவைத்துக் கொள்ளுங்கள். அது உங்கள் ஆரோக்கியத்திற்கும் உங்கள் குடும்ப நன்மைக்காகவும்தான்.

சாப்பிடத்தெரிந்து கொள்ளுங்கள்

என்னங்க இது கூடவா தெரியாது? ரொம்பத்தான் ... என்று சிலர் முணுமுணுப்பது காதில் கேட்கிறது. காலை டிபனுக்கு எல்லாவற்றயும் வளைத்துக்கட்ட வேண்டாம். மூன்று இட்லி அல்லது இரண்டு தோசை போதும். போதுமா என்கிறீர்களா? போதும்தான். உழைப்புக்கு ஏற்ற ஊதியம்தான் கிடக்கும் என்பதைப்போல உழைப்பிற்கு ஏற்ற உணவுதான் உண்ணவேண்டும் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.

தோசைக்கு எண்ணெய் விடாமல் இருப்பது நல்லது. சட்னிக்கு தேங்காய் வேண்டாம். காரம், புளி, உப்பு இவை குறைவாக வைத்துச் செய்த ஏதாவது ஒரு சட்னியைத் தொட்டுக் கொள்ளுங்கள். தோசைக்கு சொத சொதவென்று எண்ணெய் விட்டுக் கொண்டும் மிளகாய்ப்பொடியை ஏராளமாக எண்ணெய் விட்டு குழைத்துக் கொண்டும் இதுவரையில் சாப்பிட்டவர்களுக்கு நான் மேலே குறிப்பிட்டபடி சாப்பிடப் பிடிக்காது.

உண்மைதான் ஆனாலும் என்ன செய்வது? நீங்கள் இதுவரையில் உங்கள் விருப்பப்படி சாப்பிட்டுவிட்டீர்கள். அது போதும். இனிமேல் உங்கள் ஆரோக்கியத்திற்காக நாக்கை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். காலை டிபனோடு ஒரு டம்பளர் தண்ணீரில் பாதி மூடி எலுமிச்சை பழத்தைப் பிழிந்து, சிறிது உப்பு சேர்த்து ஜூஸாக குடியுங்கள்.

எனக்கு டிபன் சாப்பிட்டால் சூடாக ஒரு கப் காபி சாப்பிட்டால் தான் திருப்தி என்ற கதையெல்லாம் வேண்டாம். காலை ஒன்பது மணிக்குள் டிபனை முடித்துக் கொண்டு சுறுசுறுப்பாக வேலையில் ஈடுபடுங்கள்.

பகல் உணவை வெந்த காய்கறிகள், கீரை, ஒரு சப்பாத்தி, இவற்றோடு குறைவான அளவு சாதத்துடன் முடித்துக் கொள்ளுங்கள். ஒரு கப் சாம்பார், ஒரு கப் ரசம், இரண்டு கப் காய்கறிகள், ஒரு கப் மோர் இவற்றோடு ஒரு கப் சாதம் என்று சாப்பிடுவ மிகவும் நல்லது.

இவ்வாறு சாப்பிட்டால் எளிதாக செரிமானம் ஆகும். மூன்று மணிநேரத்திற்கு பசி இல்லாமலும் இருக்கும். நன்றாகக் கடைந்த மோர் ஒரு தம்ளர் குடியுங்கள். இதற்குப் பிறகு எதுவும் வேண்டாம். மாலை டிபன் வேண்டும் என்றால் காய்கறிகள பச்சையாக நறுக்கி அவற்றுடன் ஒன்று அல்லது இரண்டு பிரட் துண்டுகளச் சாப்பிடுங்கள். அவசியமானால் பால் குறைவான தேநீர் அல்ல காபி அருந்தலாம். சர்க்கரையை குறைவாக உபயோகிப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டும் அல்ல எல்லோருக்குமே அவசியம்தான்.

இரவு நேரத்தில் நெய் விடாத சப்பாத்தி, முளைகட்டிய கடலையில் மிளகும் உப்பும் தூவி செய்த டிஷ் செய் சாப்பிடுங்கள். இது வேண்டாம் என்றால் கோதுமை ரவையுடன் பாசிப்பயறு கலந்து மிளகுத்தூள் சேர்த்து பொங்கலாக்கிச் சாப்பிடுங்கள். இது என்ன ஏக கெடுபிடியாக இருக்கிறதே என்று எண்ண வேண்டாம். இவ்வாறு திட்டமிட்டுச் சாப்பிட்டால் உடம்பில் அதிக எடை சேராது. கொழுப்பும் ஏறாது. இதயநோய்களுக்கு டாடா சொல்லிவிட்டு ஆனந்தமாக வாழலாம்.

கொழுப்பு என்ன செய்யும்?

இரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகமாகிவிட்டால் இரத்தக்குழாய்களின் உட்புறச் சுவர்களில் கொழுப்பு படிந்து, இரத்த ஓட்டத்தைத் தடைசெய்கிறது. எனவே இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதயத்தசைகள் ஓவர்டைம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் இதயம் பலம் குறைந்து நோய்களுக்கு ஆளாகிறது.

இரத்தத்தில் கலந்த கொழுப்பு இரத்தக்குழாய்களில் அங்கங்கே சிறுசிறு கட்டிகளாகத் தேங்கிவிடும். இதனால் இதயம் மற்றும் மூளக்குச் செல்லும் இரத்தத்தின் அளவு குறைந்து விடும் அல்லது முழுவமாக தடைபட்டுவிடும். அதுபோன்ற நேரங்களில் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவை ஏற்படுகின்றன. இந்த அடைப்புகள் பெரிய அளவில் இருக்கும்போது திடீர் இறப்பும் நேரிடுவதுண்டு.

கொலஸ்டிரால் மற்றும் உடல் எடையக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதன் மூலமாக இதன் நோய்த் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும். புகை பிடிப்பவராக இருந்தால் அந்தப் பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிடுங்கள். இப்போது எல்லாவற்றையும் ஒருகை பார்ப்பது என்று இறங்கி கண்டபடி சாப்பிட்டு விட்டால் இதய நோய்களுக்கு ஆளாகிவிடுவது உறுதி.

இதய அறுவ சிகிச்சை என்று போய்விட்டால் வலியும், வேதனையும், பணச்செலவும், உயிர்ப்பயமும் ஒருபக்கம் இருக்க, உணவுக்கட்டுப்பாடு என்ற பெயரில் வேளைக்கு வேளை வாய்க்கு பூட்டு போட்டுக் கொள்ள வேண்டிய கட்டாயமும் ஏற்படும். வாழ்க்கையே வெறுதுத்ப்போய்விடும். இவைகளை மனதில் கொண்டு ருசிக்கு மட்டுமே சாப்பிடாமல் பசிக்கு சாப்பிட பழகிக் கொள்ள வேண்டும்.

இளசுகளுக்கான எச்சரிக்கை


நம நாட்டில் நாகரிக மோகத்தின் தாக்கத்தினால் ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுவது இளம் வயதினரிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அதிக எடை கூடுவதோடு, இரத்தத்தில் கொழுப்பின் அளவும் அதிகரிக்கும் அபாயம் உண்டு. மேலும் தற்போது கணிப்பொறியின் சந்நிதியிலேயே காலத்தக் கழிப்பதை ஆண்களும் பெண்களும் வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.

உடல் உழைப்பே இல்லாத நிலையில் இந்த உணவு வகைகள் உடல் எடையக் கூட்டுவதற்கும், ஊளைச்சதை போடுவதற்கும் அடிப்படையாக அமைகின்றன. இது மட்டும் அல்லாமல் இந்த உணவு வகைகள் இவர்கள கொலஸ்டிராலின் அளவை கணிசமான அளவிற்கு உயர்த்தி இதயநோய் தாக்கும் அபாயத்தை உண்டாக்குகின்றன.

எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவை இன்றைய இளசுகள் மிகவும் விரும்பி உண்கின்றனர். கணிப்பொறி வேலையப் பற்றியும், கைநிறையப் பெறும் வருமானத்தைப் பற்றியுமே கவலைப்படும் இவர்கள், தங்கள் ஆரோக்கியத்தை கவனிக்கத் தவறிவிடுகின்றனர். மிதமிஞ்சிய இத்தனை உணவினால் எதிர்காலம் இவர்களுக்கு இருண்டுவிடும் அபாயம் இருக்கிறது. எனவே ஃபேஷனுக்கு அடிமையாகி மோசம் போகாமல் இளைய தலைமுறயினர் தவறான உணவு முறையைத் தவிர்ப்பது நல்லது.

ஃபாஸ்ட் ஃபுட்டுக்குப் பதிலாக இவர்கள் பழங்களைச் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். தினமும் திராட்சைச் சாறு குடிப்பது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. இது பல் சொத்தயைத் தடுக்கிறது. மேலும் இது நன்மை செய்யும் கொழுப்பான எச்.டி. எல்லின் அளவை ஏழு சதவீதம் வரையில் உயர்த்துகிறது. ஆகவே தினமும் திராட்சையை சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்வது நல்லது.

மேலும் இரத்த சோகைஉள்ள பெண்கள் தினமும் 500 கிராம் அளவிற்கு திராட்சப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் இரண்டு வாரங்களில் அவர்களின் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகமாகும். எனவே ஃபாஸ்ட் ஃபுட் கலாசாரத்திற்கு விடைகொடுத்து பழங்களை உண்ணும் பழைய வழக்கத்திற்குத் திரும்புவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

Wednesday, January 8, 2014

புற்று நோய் பரவுவதை தடுக்கும் சோதனை முயற்சி வெற்றி!




மருத்துவ ஆய்வில் வியத்தகு சாதனையாக புற்று நோய் பரவுவதை தடுக்கும் சோதனை முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.சோதனை முயற்சியாக நடத்தப்பட்ட இந்த முதல்கட்ட ஆய்வு இன்னும் பலகட்ட சோதனைகளையும் மேம்பாடுகளையும் கடந்து, வெற்றிகரமான செயல் வடிவத்தை பெறும் போது புற்று நோய் சார்ந்த மரணங்கள் முற்றிலுமாக குறைந்து விடும் என்பதை உறுதியாக நம்பலாம்.

உயிர்கொல்லி வியாதியான புற்றுநோய்க்கு இலக்கானவர்களுக்கு மரணத்தை தவிர மருந்து ஏதும் இல்லை என பேசப்பட்டு வந்த பழைய வேதாந்தம் இதன் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது.

அதிலும், மார்பக புற்று நோய் மிக வேகமாக பரவக்கூடியது என்பதால் இந்நோயால் தாக்கப்பட்ட கோடிக்கணக்கான பெண்களின் ஆயுட்காலத்தின் பெரும்பகுதி பயத்திலும், பீதியிலும், வலியிலும், வேதனையிலும் தான் கழிந்து வந்தது. பெரும்பாலான புற்று நோய் சார்ந்த மரணங்களுக்கு நோய் கிருமிகள் மனித உடலுக்குள் வேகமாக பரவி ரத்த அணுக்களை சிதைத்து அழிப்பதே காரணம் என கண்டறியப்பட்டது.

இவ்வகையிலான புற்றுக் கட்டியில் இருக்கும் கிருமிகள் வேகமாக பரவுவதை தடுக்கும் தீவிர ஆராய்ச்சியில் அமெரிக்காவில் உள்ள கார்னெல் மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நீண்ட காலமாக ஈடுபட்டு வந்தனர்.இவர்களின் பல ஆண்டு கால உழைப்புக்கு தற்போது முதல்கட்ட பலன் கிடைத்துள்ளது.

புற்று நோயினால் பாதிக்கப்பட்ட மனித ரத்தம் மற்றும் எலிகளின் ரத்தத்தில், ஒட்டும் தன்மை கொண்ட ஒருவித ‘நானோ’ துகள்களை செலுத்தி ஆய்வு செய்ததில் அதிசயிக்கத்தக்க வகையில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது.

இதன் மூலம் புற்றுக் கிருமிகள் வேறு இடத்திற்கு பரவுவது முற்றிலுமாக தடுக்கப்பட்டதுடன் புற்று கிருமிகளும் கொல்லப்பட்டன. 2 மணி நேரத்திற்குள் இந்த அரிய மாற்றம் நிகழ்ந்ததாக ஆராய்ச்சியாளர்கள் பெருமிதத்துடன் குறிப்பிட்டனர்.

Monday, January 6, 2014

தினமும் சாப்பிடக் கூடாத உணவுகள்..!!!



நம் உடல் எடை அதிகரிப்பதற்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் சில உணவுகளை பல நேரங்களில் நாம் குறை கூறி கொண்டிருப்போம். ஆனால் உடல் எடை கூடுவதற்கு காரணமாக இருக்கும் வேறு சில உணவுகளை பற்றி நாம் யோசிப்பதே இல்லை. ஜங்க் வகை உணவுகளை முழுவதுமாக தவிர்த்து புரதச்சத்துள்ள பானத்தை மட்டும் குடித்து வந்தாலும் கூட, நாம் நம் அன்றாட உணவு பழக்கங்களில் சில தவறுகளை செய்யத் தான் செய்வோம்.

அதனால் சரியான உணவு பழக்கங்களை கடைப்பிடித்து, உடல் எடையை சரியாக பராமரிக்க கீழ்கூறிய உணவு பட்டியலை தவிர்க்க வேண்டும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கின் மீது மக்களுக்கு உண்டான காதல் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே ஏற்பட்டது. உணவின் ருசியை கூட்டவோ அல்லது அளவை கூட்டவோ நாம் உருளைக்கிழங்கை பயன்படுத்துகிறோம். அதனால் அதனை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள தனியாக எந்த ஒரு காரணமும் தேவையில்லை. நாளடைவில் அது உங்கள் உடல் எடையையும் அதிகரிக்கச் செய்யும். அதனால் அடுத்த முறை உருளைக்கிழங்கிற்கு பதில் நற்பதமான காய்கறிகளை பயன்படுத்துங்கள்.

பால்

பல பிரச்சனைகளுக்கும் பால் தீர்வாக இருப்பது உண்மை தான். ஆனால் அதனை அன்றாடம் பருகி வந்தால் அது உங்கள் வளர்ச்சியில் தடையாகவும் இருக்கும். தூங்கும் முன்பு, காலை உணவின் போது அல்லது மாலை வேளைகளில் நொறுக்குத் தீனி உண்ணும் போது பால் குடித்தால் கொஞ்சம் இடைவேளை எடுத்துக் கொள்ளுங்கள். பால் குடிக்கவில்லை என்றால் உங்கள் சோம்பல் நீங்கி, உடல் எடை குறைந்து, சருமம் பொலிவடைகிறதா என்பதை கவனியுங்கள். இல்லையென்றால் பிரச்சனை பாலில் இல்லை, வேறு ஏதோ ஒரு உணவில் உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

உணவிற்கு பின்பு டெசெர்ட்

உணவருந்திய பிறகு இனிப்பு பண்டங்கள் ஏதாவது உண்ணுவது நம்மில் பல பேருக்கு உள்ள பழக்கமாகும். இது தேவையற்றது என்பதும் நமக்கும் தெரியும். நீங்கள் உண்ணும் இனிப்பு பண்டங்களில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால் உங்கள் உடல் எடையை குறைக்க நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வீணாய் போகும். தினமும் டெசெர்ட் வகை உணவுகள் உண்ணுவதை தவிர்த்தால் நீங்கள் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கலாம். வார இறுதி நாட்கள் அல்லது ஏதாவது விசேஷ நாட்களில் மட்டும் அவைகள் உண்ணுங்கள்.

மாலையில் உண்ண வேண்டிய நொறுக்குத் தீனிகள்

மாலை வேளைகளில் உண்ணும் நொறுக்குத் தீனிகளில் தான் அதிக கவனம் தேவை. மாலை வேளையில் பசி எடுக்கும் போது சாண்ட்விச் அல்லது சமோசா போன்ற நொறுக்குத் தீனிகளை உண்ண நம்மை தூண்டும். பசி நம்மை வாட்டும் போது நாம் எதனை உண்ணுகிறோம் என்பதை பற்றி அதிகம் கவலை கொள்வதில்லை. இது அன்றாடம் நடக்கக் கூடியது என்றால் அது நம் உடல் நலத்தை நாம் நினைப்பதை விட வெகுவாக பாதித்து விடும். அதனால் நட்ஸ், வெண்ணெய் அல்லது தயிர் போன்றவற்றை உங்கள் மாலை வேளை நொறுக்குத் தீனியாக பயன்படுத்துங்கள்

முதுகு வலி: 10 எளிய தீர்வுகள்..!

முதுகு வலி: 10 எளிய தீர்வுகள்..!


நீங்கள் அலுவலகத்தில் வெகு நேரம் கம்ப்யூட்டர் முன் அசையாமல் அமருபவரா? ஒரு வேளை உங்களுக்கு முதுகு வலி இதுவரை எட்டி பார்க்காவிட்டால், போதிய முன் எச்ச்ரிக்கைகளுடன் நீங்கள் செயல்படாதவரெனில் உங்களுக்கு முதுகு வலி பிரச்சனை கூடிய விரைவில் வரும்.

ஆனால் இது போன்ற வலிகளுக்கு நமக்கு நாமே காரணம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். உணவுகளில் அக்கறையின்மை, வைட்டமின் டி குறைபாடு, உட்காருவதில் அலட்சியம், சரியான இருக்கைகள் இன்மை, வேலைக்கு தேவையான பொருட்களை கண்ட இடங்களில் வைத்து உபயோகிப்பது போன்ற பல பிரச்சனைகளை நாமே ஏற்படுத்தி கொள்கிறோம்.

எனவே வேலையின் போது சில விஷயங்களில் கவனம் கொண்டால் முதுகு வலி பிரச்சனையிலிருந்து நீங்கள் உஷாராக தப்பித்துவிடலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை,

1. உட்காரும் தோரணை

அலுவகத்திலோ, வீட்டில் சகஜமாக டிவி பார்க்கும் போதோ உட்காரும் நிலையை கவனம் கொள்ள வேண்டும். உட்காரும் போது விழிப்புடன் நேராகவும், சரியான உடல் தோரணையிலுமே அமர்ந்தாலும், வேலையின் பளுவால் நீங்கள் சற்று சோர்ந்து செளகரியமாக உட்கார நேர்ந்திடும். இப்படியான பட்சத்தில் சில நிமிடங்கள் என்பது, சில மணி நேரங்களாக மாற்றி உங்களை சோம்பல் அடைய செய்யும். இதனை மனதில் கொண்டு அவ்வப்போது நீங்கள் அமர்ந்திருக்கும் நிலையை கருத்தில் கொண்டு நேராக உட்கார பழகி கொள்ள வேண்டும். நாளடைவில் இது உங்களின் மாறா பழக்கவழக்கமாக மாறிவிடும்.

வேலையின் நடுவே அவ்வப்போது கழுத்தை நேர் முகமாகவும், வலது இடது புறமாகவும் திருப்பி கண்களை மூடி ஆசுவாசப்படுத்தி கொள்ளுங்கள்.

2. உடற்பயிற்சி
கீழ் முதுகு வலியால் அவதிப்படுவோர், மூட்டு வலிகள் இல்லாத பட்சத்தில் தரையில் மண்டியிட்டு அவ்வப்போது உட்காருங்கள், எப்போதும் இப்படி உட்காருவது சிறந்த முறையாகும். இப்படி உட்கார்ந்த நிலையில், உங்கள் உள்ளங்கயை தரையில் வைத்து நேராக அமர்ந்து உங்கள் முதுகு தண்டை உணருங்கள்.

அடுத்த பயிற்சி, நாற்காலியில் உட்கார்ந்த நிலையில், மூட்டு மற்றும் கால்களை நேராக வைத்தப்படி கீழே குனிந்து உங்கள் கால் விரல்களை தொட வேண்டும். ௦20 எண்ணிக்கைகள் வரை இதே வாக்கில் இருக்கவும். நாள்பட பயிற்சியின் நேரத்தை 2 நிமிடங்கள் வரை செய்யலாம்.

3.உணவு முறை:

பூண்டு, இஞ்சி, மஞ்சள் போன்ற நம் உணவுகளில் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களை சேர்க்க மறக்காதீர்கள். கொழுப்பு இல்லாத இறைச்சி வகைகள், மீன், பழங்கள், பேரிச்சை, பச்சை காய்கறிகளை உணவின் முக்கிய பங்காக வைத்து கொள்ளுங்கள்.

4. வைட்டமின்கள்:

 கால்ஷியம் எலும்பிற்கு முக்கிய தேவை, உணவில் உள்ள கால்ஷியத்தை உடல் தக்கவைத்து கொள்ள வைட்டமின் டி அத்தியாவசியம். வைட்டமின் டி இல்லாமல், நீங்கள் எடுத்துகொள்ளும் கால்சியம் உணவுகளை உடல் ஏற்காது. அதே போல வைட்டமின் பி 12 , எலும்பு மஜ்ஜையின் வாழ் நாள் உறுதி செய்ய இந்த வைட்டமின் முக்கியம் வாய்ந்தவை. ஈரல், மீன், பாலாடையில் வைட்டமின் பி 12 அதிகம். இதை தவிற வைட்டமின் ஏ, வைட்டமின், சி, வைட்டமின் கே ஆகியவை எலும்பு தேய்மானத்தை தடுக்க கூடிய வல்லமை பெற்றவையாலும்.

5. தாதுக்கள்:

 எலும்பின் வளர்ச்சி, வலிமையை கால்ஷியம், மெக்னிஷியம், இரும்புச்சத்து ஆகியவையை உணவில் சரிவர எடுத்து கொள்ளுதல் ஒரு சீரான சத்தான உடலை அமைத்து கொள்ள உதவும். வைட்டமின்களுடன், தாதுக்களும் நமக்கு முக்கியமானவை.

6. சூடான குளியல்:

 வலி மிகுந்த நேரத்தில், சோம்பல் படாமல் சூடான குளியளில் ஈடுப்படுவது நல்லது. உற்சாகத்தையும் இது தரும்.

7. சப்ளிமென்ட்ஸ்:


 நல்ல உணவு அதனுடன் தேவையான சில சப்ளிமென்டுகளை எடுத்து கொள்ளுங்கள், பல சமயங்களில் உடனடி உடல் தேவையை சப்ளிமென்டுகள் ஈடு செய்யும்.

8. மசாஜ்: 

வாரம் ஒரு நாள் நல்ல மசாஜ் எடுத்து கொள்வதை வழக்கத்தில் கொள்ளுங்கள், வாரம் முழுவதிலுமான உடல் வேலைகளில் நம் தசைக்களை உற்சாகப்படுத்த இது உதவும்.

9. கடுகு எண்ணெய்:

 எலும்புகளை வலுவூட்ட கடுகு எண்ணெயை உடலில் தேய்த்து சிறிது நேரம் வெயிலில் நடங்கள். கடுகு எண்ணெய் எலும்பிற்கு உகந்தது.

10.ஆரோகியமான சூழ்நிலை:

 சில ஆரோக்கிய பழக்கவழக்கங்களை மேற்கொள்ளும் சூழல், எண்ணம் கொண்ட நண்பர்களை வைத்து கொள்ளுங்கள், அவர்கள் அப்படி இல்லை எனில் அவர்களை மாற்ற பாருங்கள்.

பிரசவத்தின் பின்னும் இளமையாக இருக்கனுமா..?



சத்தான உணவுகள் உட்கொள்வதன் மூலமும், ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றத்தினாலும் உடல் குண்டாவது இயல்பு. முகம் மட்டுமல்லாது, வயிறு, இடுப்பு, உள்ளிட்ட பல இடங்களில் உடல் அமைப்பே மாறிவிடும். பிரசவத்திற்குப் பின்னர் ஒரு சிலருக்குத்தான் உடம்பு இயல்பு நிலைக்கு திரும்பும். பெரும்பாலோனோர் குண்டம்மாக்களாகவே காட்சித்தருவார்கள். இதனால் பல சிக்கல்களை அவர்கள் சந்திக்க நேரிடுகிறது. எனவே புது அம்மாக்கள் தங்களின் பழைய உடம்பைப் பெற செய்யவேண்டிய ஏழு வழிமுறைகளை கூறியுள்ளனர் மகப்பேறு நிபுணர்கள் படியுங்களேன்.

தாய்பால் கண்டிப்பாக கொடுக்கணும்


பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது அவசியம். சிலர் கட்டுடல் குலைந்து விடும் என்று தாய்ப்பாலை சில மாதங்களில் நிறுத்திவிடுவார்கள். இதுதான் உடல் இளைக்காமல் போவதற்கு காரணமாகிறது. எனவே பெண்கள் கண்டிப்பாக ஒரு வருடம் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது அவசியம். இதனால் உடல் கண்டிப்பாக இளைக்கும்.

ஜும்பா டான்ஸ் ஆடுங்க


நடனமாடுவது ஒருவகை உடற்பயிற்சிதான். லத்தின் நடனமான ஜும்பா நடனத்தை ஒருமணி நேரம் ஆடுவதன் மூலம் உடலில் 500 கலோரிகள் வரை குறைகிறதாம். இதனால் உடலும், மனமும் ரிலாக்ஸ் ஆகிறது என்கின்றனர் நிபுணர்கள்.

சாப்பாடு சரியா இருக்கணும்


கர்ப்பகாலத்தில் எந்த அளவிற்கு உணவில் கவனம் செலுத்தினோமோ அதேபோல பிரசவத்திற்குப் பின்னரும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளவேண்டும். ஃபாஸ்ட் புட், எண்ணெயில்பொறித்த உணவுகளை கண்டிப்பாக தவிர்த்து விடுங்கள். காய்கறிகள், மீன் உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள், தண்ணீர் அதிகம் குடிக்கவேண்டும் என்பது நிபுணர்களின் அறிவுரை.

குட்டீஸ் உடன் வாக்கிங்

வீட்டுக்கு அருகாமையில் பார்க் அல்லது பீச் இருந்தால் குழந்தையை அழைத்துக் கொண்டு வாக்கிங் போகலாம். அந்த வசதி இல்லாதவர்கள் வீட்டு மொட்டை மாடியில் நன்றாக ரவுண்ட் அடிக்கலாம். இதனால் உடல் மெலியும் என்கின்றனர் நிபுணர்கள்.

நீச்சல் அடிங்களேன்

கிராமங்களில் இருப்பவர்களுக்கு ஆறு, குளம் என நன்றாக நீந்திக்குளிக்க இடம் இருக்கும். ஆனால் நகரங்களில் இருப்பவர்களுக்கு அந்த வசதி குறைவுதான். எனவே கண்டிப்பாக நீச்சல் குளத்திற்குச் சென்று நன்றாக நீந்தி பயிற்சி செய்யுங்கள். இது உடல் அமைப்பை பழைய நிலைக்கு மாற்றும்.

தூக்கம் அவசியமானது…

பிறந்த குழந்தையை வைத்திருப்பவர்கள் சில மாதங்கள் வரை தூக்கத்தை தியாகம் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் 6 மாதங்களுக்குப் பின்னர் தாய்மார்கள் கண்டிப்பாக நன்றாக தூங்கவேண்டியது அவசியம். இதனால் செல்கள் புதுப்பிக்கப்படுவதோடு தேவையற்ற இடங்களில் சேமிக்கப்பட்டுள்ள கொழுப்புகள் கரையும். உடலும் பழைய நிலைக்குத் திரும்பும்.

ரிலாக்ஸ்சா இருங்களேன்

பிரசவத்திற்குப் பின்னர் பெண்களுக்கு ஒருவித மனஅழுத்தம் ஏற்படுவது இயல்புதான். உடல் இளைக்காமல் போவதற்கு இந்த மனஅழுத்தமும் ஒருவகையில் காரணமாகிவிடும். எனவே தியானம், மெடிடேசன் செய்து மனஅழுத்தத்தை போக்குங்கள். ரிலாக்ஸ் ஆக இருந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறைந்து பழைய நிலைக்குத் திரும்பும் என்கின்றனர் நிபுணர்கள்

Sunday, January 5, 2014

மாதுளம்பூவின் பயன்கள்



மாதுளம்பூவின் பயன்கள்:-

மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.

மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும்.

மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்.

பெண்களின் கால்சியமும் வைட்டமின் 'டி' யும்



பெண்களின் ஆரோக்கியத்திற்கு அடிப்படையானது கால்சியம். வெறுமனே பாலையும், தயிரையும் குடிப்பதால் மட்டுமே கால்சியம் அளவு  அதிகரிப்பதில்லை. அதற்கு வைட்டமின் டி சத்து அவசியம். கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்துகள் குறைபாட்டால் பெண்கள் சந்திக்கக் கூடிய  பிரச்சனைகளைப் பற்றியும், அவற்றுக்கான தீர்வுகள் பற்றியும் விளக்கமாகப் பேசுகிறார் மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ்

கால்சியம் பற்றாக்குறை வந்தா வரக்கூடிய பிரச்சனைகள் பத்தி மக்களுக்கு ஓரளவுக்குத் தெரியுது. ஆனா அந்த கால்சியத்துக்கு தேவையான  வைட்டமின் டி பத்தின விழிப்புணர்வு பலருக்கும் இல்லை..

முட்டையோடு வெள்ளை கரு, உலர் பழங்கள்னு உணவுப்பொருட்கள் மூலமா கிடைக்கிற வைட்டமின் டி ரொம்ப அரிது. அந்தச் சத்துக்கான ஒரே  ஆதாரம் சூரிய வெளிச்சம். ஆனா வெயில்ல தலைகாட்டினா சருமம் கருத்துடும், அழகு போயிடும்னு பலரும் வெயிலைத் தவிர்க்கறோம்.. அதிகாலை  சூரிய வெளிச்சத்துலதான் வைட்டமின் டி அதிகம் என்ற கருத்து உண்மையில்லை.. காலை 10 மணிலேர்ந்து பிற்பகல் 3 மணி வரைக்குமான  வெயில்ல தான் போதுமான வைட்டமின் டி சத்தை பெற முடியும்.

ஆனா அந்த நேரத்துல வெயில் அழகுக்கு எதிரிங்கிறதால சருமத்தை பாதுகாக்க சன் ஸ்கிரீன் போட்டுக்கறோம். சன் ஸ்கிரீன் போடறது மூலமா  வைட்டமின் டி சத்து சருமத்துக்குள்ள ஊடுருவறது தவிர்க்கப்படுகிறது. தசைகள் வலுவோட இருக்க, இதயம் சரியா இயங்க ரத்தத்துல  ஹீமோகுளோபின் அளவு சரியான அளவுல இருக்க இப்படிப் பல விஷயங்களுக்கு வைட்டமின் டியும் அவசியம்..

கர்ப்பிணி பெண்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின் டி பற்றாக்குறை இருந்தா அவங்களுக்குப் பிறக்கிற பெண் குழந்தைக்கு இடுப்பெலும்பு சின்னதா  இருக்கும். அந்த குழந்தை வளர்ந்து திருமணமாகி குழந்தை பெறும் நேரத்துல அதுக்கு சிசேரியன் தேவைப்படலாம். ஒரு மாசத்துக்கு ஒருத்தருக்கு  60ஆயிரம் யூனிட் வைட்டமின் டி தேவை.. ரத்தப் பரிசோதனை மூலமா இந்த பற்றாக்குறையைக் கண்டுபிடிக்கலாம்.

மருத்துவரோட ஆலோசனையோட வைட்டமின் டி மருந்துகளை 3 மாதங்களுக்கு எடுத்துக்கிட்டு மறுபடி ஒரு பரிசோதனை செய்து பார்த்து, போதுமான  அளவு இருக்கிற பட்சத்துல மருந்துகளை நிறுத்திடலாம். 35வயதுக்கு மேலான பெண்களும், கர்ப்பிணி பெண்களும் கட்டாயம் கால்சியம் மற்றும்  வைட்டமின் டி அளவுகள்ல கவனமா இருக்கணும். இது போதிய அளவு இருக்கிறது மூலமா முதுகு வலி, கொலஸ்ட்ரால் பிரச்சனைகளை கூட  தவிர்க்க முடியும்.

Saturday, January 4, 2014

கலப்பட பெருங்காயத்தை அறியும் வழி....




கலப்பட பெருங்காயத்தை அறியும் வழி
கலப்பட பெருங்காயம் சமையல்பெருங்காயம்
வாயுத் தொல்லைக்கு பெருங்காயம்


பெரின்னியல் (pernnial plant) என்னும் சிறு மரவகையின் பிசின்தான் பெருங்காயம் என்பது. இது இந்தியாவில் பஞ்சாப், காஷ்மீர் ஆகிய பகுதிகளிலும், வெளிநாடுகளில் ஈரான், ஆப்கானிஸ்தானம், துருக்கி, பெஷாவர் போன்ற இடங்களிலும் இந்தச் சிறு மரம் நன்றாக விளைகிறது.

மார்ச்-ஏப்ரல் மாதங்களில் பூ பூப்பதற்கு முன்பாக, நான்கு, ஐந்து வருடங்களாக வளர்ந்து வந்துள்ள சிறுமரத்தின் கேரட் வடிவத்திலுள்ள வேர்ப்பகுதியை நறுக்கி, அதன் மேல் பகுதியை மண்ணாலும் காய்ந்த குச்சிகளாலும் மூடிவைப்பார்கள். சில நாட்களுக்குப் பிறகு, வேரின் நறுக்கிய பகுதியிலிருந்து பால் போன்று வடிந்துள்ள பிசினைச் சுரண்டி எடுத்துவிடுவார்கள். மறுபடியும் வேரை நறுக்கி, சில நாட்களில் அதில் படிந்துள்ள கோந்து போன்ற பகுதியைச் சுரண்டிவிடுவார்கள். இப்படியாக வேரை நறுக்க நறுக்க, வெளிப்படும் பிசின் முழுவதுமாக வரும்வரை தொடர்ந்து செய்துகொண்டே இருப்பார்கள்.

இருவகை நிறங்களில் இந்தப் பிசின் கிடைக்கின்றன. கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் அவை இருக்கும். கருஞ்சிவப்பான பிசினும் கருப்பு வகையில்தான் சேர்க்கப்படும். வெள்ளை நிறமாக உள்ள பால் பெருங்காயம் நல்ல மணமும் மருத்துவக் குணங்கள் அதிகம் கொண்டதுமாகும்.

கலப்படம் செய்து விற்கப்படும் பெருங்காயத்தை அறிந்து கொள்ள ஒரு வழி இருக்கிறது. இந்தப் பெருங்காயத்தைத் தண்ணீரில் போட்டால் கரையாமல் கோந்து போலக் காணும். அந்தக் கோந்தை எடுத்து எரித்தால் கரி மட்டுமே மிஞ்சும். கலப்படமில்லாத சுத்தமான பெருங்காயமானால் தண்ணீரில் போட்டவுடன் கரைந்து தண்ணீர் பால் நிறமாக மாறிவிடும். மேலும் சுத்தமான பெருங்காயத்தின் மேல் தீக்குச்சியைப் பற்றவைத்துப் போட்டால் கற்பூரம் போலப் பற்றிக் கொண்டு முழுவதுமாக எரிந்துவிடும்.

பெருங்காயத்திலுள்ள “ஓலியோ ரெஸின்’ மிக உயர்ந்த மருத்துவ குணங்களைக் கொண்டது.

பாவப் பிரகாசர் எனும் முனிவர் பெருங்காயத்தைப் பற்றி குறிப்பிடுகையில் அது உஷ்ணம் (சூடான வீர்யத்தைக் கொண்டது), பாசனம் (எளிதில் தானும் ஜீரணமாகி தன்னைச் சுற்றியுள்ள மற்ற உணவையும் விரைவில் ஜீரணம் செய்துவிடும்), ருச்யம் (வாயில் ருசியை அறியும்.

கோளங்களில் படிந்துள்ள அழுக்கை அகற்றி ருசியைத் தூண்டிவிடும்). ஸ்த்ரீபுஷ்பஜனனம் (கருப்பையைச் சார்ந்த முட்டையை நன்றாக உற்பத்தி செய்து மாதவிடாய் கோளாறுகளைப் போக்கும் அதனால்தான் பிரசவித்தவுடன் தாய்க்கு இதைப் பொரித்துப் பூண்டு, பனை வெல்லம், இஞ்சிச் சாறு இவைகளுடன் கொடுப்பது உண்டு), பவ்யம் (உடலுக்கு வலுவைக் கூட்டும் பெருங்காயத்தை நெய்யில் பொரித்துத் தசமூலாரிஷ்டம், வில்வாதி லேஹ்யம், ஜீரக வில்வாதி லேஹ்யம் இவைகளில் ஏதாவது ஒன்றுடன் சிட்டிகை சேர்த்து உணவிற்குப் பின் சாப்பிட, வயிற்றில் அஜீர்ணம், அஜீர்ண பேதி, குடலோட்டம், பசியின்மை, ஜீரண சக்திக் குறைவு ஆகியவற்றைப் போக்கி, உடலுக்கு வலுவைத் தரும்), மூர்ச்சாபஸ்மாரஹ்ருத்பரம் (மூர்ச்சை எனும் மயக்கநிலை, வலிப்பு ஆகிய நோய்களில் மிகவும் உபயோகமானது) என்று கூறுகிறார்.

கொள்ளுப்பால்---உணவே மருந்து..!





கொள்ளுப்பால்---உணவே மருந்து!

இயற்கைப்பால் பற்றி அனைவரும் அறிந்ததே. ”கொழுத்தவனுக்கு கொள்ளு” என்பது முதுமொழி. அதாவது உடல் கொழு கொழு என்று இருப்பவர்கள் கொள்ளைப் பயன் படுத்தினால் அது உடல் எடையைக் குறைத்து உடலில் உள்ள உப்புகளை வெளியேற்றும். உப்புதான் மிக முக்கிய காரணம் உடலில் ஊளை சதை போடுவதற்க்கு, அது நீரை சேர்த்து வைத்துக் கொள்ளும் குணமுடையது.

100 கிராம் கொள்ளை நன்கு சுத்தப்படுத்தி, அதன் பின் அதை முளைக்கட்ட வேண்டும். ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களில் முளைவிடும். (இது சூரிய சக்தியின் அடிப்படையில் தான் இருக்கும், குளிர் காலத்தில் மூன்று நாட்கள் கூட ஆகலாம்) அதாவது போதுமான சூரிய சக்தி அதற்கு கிடைத்தால்தான் அதன் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டு முளைவிடும்.

முளைவிட்ட (1-1.5 Cms முளைவிட்டப் பின்) சிறிது தேங்காய் துருவலையும் சேர்த்து மிக்ஸியில், ஓட விட்டு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்க்க வேண்டும். தேங்காய் சட்னிக்கு அரைப்பது போல் பதம் வந்ததும் அதை இறக்கி துணி அல்லது வடிகட்டி உதவியுடன் பால் பிழிந்து கொள்ளவும்.

பலன்கள்: சிறுநீர் நன்றாக வெளியேறும். (அத்துடன் தேவையில்லாத உப்புகளும் வெளியேறி உடல் எடை குறையும்). சளித்தொல்லை நீங்கும். பக்க வாதத்தால் கை, கால் விழுந்து போனவர்களுக்கு இந்த கொள்ளுப்பால் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். உடலுக்கும் நல்ல சக்தி கொடுக்கும். ஒரு நாளைக்கு ஒரு தடவைக்கு மேல் குடிக்கவேண்டாம். ஒரு நபருக்கு 100 கிராம் கொள்ளில் இருந்து வரும் பால்தான் மருந்தின் அளவு.

Friday, January 3, 2014

மாதுளம்பூவின் பயன்கள்...?

 

 மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.


மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும்.


மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்.

Thursday, January 2, 2014

104-க்கு அழைத்தால் இலவச மருத்துவ ஆலோசனை: தமிழகத்தில் புதிய திட்டம் துவக்கம்!




'104' என்ற எண்ணுக்கு போன் செய்து இலவச மருத்துவ ஆலோசனைகளைப் பெறும் புதிய திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.


இது தொடர்பாக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:


பொதுமக்கள் இனிமேல் முதலுதவி குறித்த தகவல்கள், மருத்துவ ஆலோசனைகள், தாய், சேய் நலம் பற்றிய தகவல்கள், ரத்ததானம், கண்தானம் பற்றிய தகவல்கள், தொற்று மற்றும் தொற்றா நோய்கள் பற்றிய தகவல்கள், ஊட்டச்சத்து குறித்த தகவல்கள், முதல்வரின் விரிவுபடுத்தப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள வசதிகள், குறிப்பிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் மற்றும் நிலையங்கள் பற்றிய தகவல்கள், மனநல ஆலோசனைகள், எச்.ஐ.வி., பால்வினை நோய்கள் பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களை '104' என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.


இதற்காக ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 24 மணிநேர தொலைபேசி '104' மருத்துவ சேவையை முதல்வர் ஜெயலலிதா கொடநாடு முகாமிலிருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.


மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையின் முக்கியமான திட்டங்களை முன்னின்று நிறைவேற்றுவதிலும், டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ் பெண்கள், குழந்தைகள் மற்றும் பிரசவித்த தாய்மார்கள் பற்றிய விவரங்களைக் கணினி மூலம் தினந்தோறும் பதிவு செய்வதற்காக கிராம சுகாதார செவிலியர்களுக்கு ஏற்படும் காலவிரயத்தை குறைக்கும் வகையிலும், அவர்கள் பணி மேம்பாடு அடையும் வகையிலும் அவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும் என்று கடந்த 2.11.2012 அன்று சட்டமன்றப் பேரவையில் முதல்வர் அறிவித்தார்.


அதன்படி, கிராம சுகாதார செவிலியர்களுக்கு ரூ.19 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் 9,397 விலையில்லா மடிக்கணினிகள் வழங்குவதன் அடையாளமாக 7 கிராம சுகாதார செவிலியர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா மடிக்கணினிகளை வழங்கினார்.

சீழ்க் கட்டிகள் - வெயில் கால நோய் பற்றிய தகவல்கள்...??



சீழ்கட்டிகள் என்பது ஆபத்தான நோயல்ல என்ற போதும் வேதனை அளிக்கின்றவையாக இருக்கின்றன. சருமத்தில் உள்ள முடி வேர்களில் கிருமித் தொற்று ஏற்படுவதால் இவை உண்டாகின்றன. சொறிவது உராய்வது போன்றவற்றால் சழுமத்தில் ஏற்படக் கூடிய நுண்ணிய காயங்களுடாக கிருமிகள் சருமத்தைத் தாண்டி உள்ளே ஊடுருப் பெருகுவதால் கட்டிகள் ஏற்படுகின்றன


 பொதுவாக முகம், கழுத்து, அக்குள், முதுகு, தொடை போன்ற இடங்களிலேயே இவை அதிகம் தோன்றுவதுண்டு. இருந்தாலும் வேறு முடி உள்ள வேறு இடங்களிலும் தோன்றலாம். காது, மூக்கு போன்ற நொய்த இடங்களில் தோன்றும் கட்டிகள் கடுமையான வேதனையைக் கொடுக்கும்.


எவ்வாறு இருக்கும்?


கட்டி தோன்றும்போது ஆரம்பத்தில் சற்று வலி இருக்கும், தடவினால் வீக்கம் இருப்பதாக உணர்வீர்கள். உற்று நோக்கினால் அவ்விடம் சற்றுச் சிவந்து தடித்திருப்பதாகத் தென்படும். நாட்கள் செல்ல வீக்கம் அதிகரிக்கும். பின்பு கடினமமாக இருந்த வீக்கம் சற்று மெதுமையாகி தொள தொளவென மாறும். உள்ளே கட்டி கரைந்து சீழ் தோன்றியிருக்கும். சீழ் அதிகரிக்க வலியும் அதிகரிக்கும்.


கட்டிகளின் அளவுகளில் வித்தியாசங்கள் இருக்கும். கச்சான் கொட்டை அளவு முதல் டெனிஸ் பந்தளளவு அல்லது அதனிலும் பெரிதாகவும் வீங்கலாம். கட்டி பழுக்க ஆரம்பிக்கும்போது அதன் மத்தியில் சற்று மஞ்சள் நிறமாக மாற்றமுறும். இதனை மருத்துவத்தில் Pரளவரடந என்பார்கள்.
சில அருகருகாக பல கட்டிகள் தோன்றும்போது ஒன்றுடன் மற்றது இணைந்து பெரிதாக மாறக் கூடும்.


வலி அதிகமாகி வீக்கமும் அதிகரிக்கிறது எனில் நீங்கள் மருத்துவரை நாட நேரிடலாம். ஆனால் சில கட்டிகள் தானாகவே உடைந்து சீழ் வெளியேற வலி தணிந்துவிடும். உடைந்து சீழ் வெளியேறிய பின்னரும் சில நாட்களுக்கு அதிலிருந்து கசிவு ஏற்படக் கூடும். அவ்வாறு கசிவதனால் அவ்விடத்தில் தானாகவே காய்ந்து படிவதுண்டு.


சீழ்கட்டிகள் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல கிருமியின் தாக்கத்தால் ஏற்படுவதாகும். கிருமித் தொற்றுக் காரணமாக உடலில் அலுப்பு வேதனை ஏற்டலாம். சில நேரங்களில் காய்ச்சலும் தோன்றக் கூடும். சிலருக்கு அது தோன்றுவதற்கு முன்னர் அவ்விடச் சருமத்தில் சற்று அரிப்பு ஏற்படுவதுண்டு.


நீங்கள் செய்யக் கூடியது எவை?


சிறிய வேதனை அதிகமற்ற கட்டி எனில் உடடியாக மருத்துவரை நாட வேண்டியதில்லை. அது தானாகவே உடைந்து சீழ் வெளியேறிய பின்னர் குணமாகும்.


சுத்தமான துணியை சுடுநீரில் நனைத்து ஒத்தடம் கொடுக்கலாம். ஒரு நாளில் பலதடவைகள் செய்ய வேண்டும். இது வேதனையைத் தணிக்க உதவும். அத்துடன் கிருமி பெருகுவதையும் குறைக்கும்.


கைகளால் அழுத்தியோ அல்லது பிளெட் போன்ற கூரிய ஆயதங்களால் வெட்டியோ சீழை நீங்களாக அகற்ற முற்பட வேண்டாம். சீழ் அகலுவதற்குப் பதிலாக கிருமிகள் பரவி நோயை தீவிரப்படுத்தலாம்.


கட்டி தானாக உடைத்துவிட்டால் தொடர்ந்தும் சுடுநீர் ஒத்தடம் கொடுத்து அழுக்குகள் முழுமையாக வெளியேற உதவுங்கள். சீழ் வடிந்து கொண்டிருந்தால் அந்த இடத்தை அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம்.
அந்த இடத்தை நீங்கள் தொட்டால் சுத்தமாக நன்கு கை கழுவிய வேண்டும்.


அதேபோல நோயாளி உபயோகித்த, துணி. டவல், படுக்கை விரிப்புகள் போன்றவற்றை மற்றவர்கள் உபயோகிக்கக் கூடாது. அவர் உபயோகித்த துணிமணிகளை நன்கு கழுவி உலர்ந்த பின்னரே மற்றவர்கள் உபயோகிக்கக் கூடாது. அவற்றை சுடுநீரில் கழுவுவதும் சிறந்தது.

Wednesday, January 1, 2014

குழந்தைபேறு தரும் எலுமிச்சை....!!!




கொங்குநாட்டில் பதினான்காம் நூற்றாண்டின் மத்தியில் சிறப்பாக ஆட்சி புரிந்து வந்தவன் `கோணவராயன்' என்ற குறுநில மன்னன். அவனது ஆட்சி கட்டுப்பாட்டில் இருந்து வந்த நம்பியூரில் பழமைமிக்க பல திருக்கோயில்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்றுதான், பட்டத்து அரசி அம்மன் கோயில். இக்கோயில் தோன்றிய வரலாறு தெளிவாக இன்னும் அறியப்படவில்லை என்றபோதும் செவி வழிச் செய்தியாகப் பல தகவல்கள் சொல்லப்படுகின்றன.


ஒருசமயம், திப்புசுல்தானின் படை வீரர்களால் இப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டது. போரில் நம்பியூரையும் அதன் சுற்றுப் பகுதிகளையும் அப்போது ஆட்சி செய்து வந்த பட்டத்து அரசியான மருதம்மா உயிர் நீத்தாள். அந்த அரசியின் வீரத்தை நினைவுகூரும் விதமாக, அங்குள்ள கோயிலில் அருளாட்சி புரிந்து வந்த அம்மனுக்குப் `பட்டத்து அரசி அம்மன்' என்ற பெயர் ஏற்பட்டதாகச் சொல்கின்றனர்.


போர் நடைபெற்றபோது படைகளைத் தலைமை தாங்கி நடத்திய அரசியையே `படைத்தலைச்சி அம்மன்' என்று பிற்காலத்தில் மக்கள் வணங்க ஆரம்பித்ததாகவும், அந்த அம்மனே இன்று பட்டத்தரசி அம்மன் எனவும் ஒரு கருத்து நிலவுகிறது. கோயிலின் முன்னே விநாயகருக்கு தனி சன்னதி இருக்கிறது.


உள்ளே கன்னிமார் சிலைகள் மலர்ச்சரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பிரதி வாரம் வெள்ளி, திங்கள் கிழமைகள் இங்கே விசேஷமானவை. மிகப் பழமை வாய்ந்த பட்டத்து அரசி அம்மன் மிகுந்த வரப்பிரசாதி. குழந்தைப் பேறு இல்லாத தம்பதிகளுக்கு, அன்னையின் சூலத்தில் குத்திய எலுமிச்சங் கனியை பூசாரி கொடுத்து, பிழிந்து உண்ணச் சொல்வார்.


பல தம்பதிகளுக்கு இதனால் குழந்தைப்பேறு கிடைத்திருக்கிறது என்று சொல்கிறார்கள். கோபி செட்டிபாளையத்திலிருந்து கோவை செல்லும் பேருந்துப் பாதையில் 18 கி.மீ. தொலைவில் நம்பியூர் பாரதிநகரில் உள்ளது பட்டத்து அரசி அம்மன் கோயில்.

கசப்பு அமுதம் பாகற்காய்...!!


 பாகற்காயின் கசப்புச் சுவைக்கு பயந்தே பலர் அதை ஒதுக்கி விடுகிறார்கள். ஆனால் கசப்புத் தன்மை அவர்கள் நினைப்பது போல விஷம் அல்லது. மாறாக அமுதத்துக்கு சமமானது. நம்முடைய உடம்பு தனக்கு வேண்டிய அளவு இந்தச் சத்தை உறிஞ்சிக் கொண்டு எஞ்சியவற்றை கழிவுப் பொருட் களாக வெளித் தள்ளிவிடும். பாகற்காய் சூடு உண்டாக்கும். கொம்பு பாகற்காய், மிதி பாகற்காய் என இரண்டு வகைகள் உண்டு. இரண்டுமே கறி சமைத்து உண்ணக் கூடியவை. இது கசப்புள்ளதாக இருந்தாலும் பருப்பு, தேங்காய் முதலியவற்றைச் சேர்த்து சமைத்தால் உண்பதற்கு சுவையாக இருக்கும்.


இது உணவுப்பையில் உள்ள பூச்சிகளைக் கொல்லும். பசியைத் தூண்டும். பித்தத்தை தணிக்கும். மலத்தை இளக்கும். பெண்களுக்கு பாலைக் கொடுக்கும். இதனுடன் சிறிது புளி சேர்த்துக் கொண்டால் நல்லது. பாகற் காயை அவ்வப்போது சேர்த்துக் கொண்டால் ஜூரம், இருமல், இரைப்பை, மூலம், வயிற்றுப்புழு ஆகியவை அகலும். நீரழிவு வியாதி உள்ளவர்கள் இதை சாப்பிட வேண்டாம்.


பாகற்காய் எளிதில் ஜPரணமாகாது என்றாலும் ஜடாராக் கினியை ஊக்குவிக்கும். கபம், பித்தம், ரத்த தோஷம், பாண்டு, குஷ்டம், மந்தம், காமாலை ஆகிய கொடிய நோய்களை எளிதில் போக்குவது இதன் இயல்பாகும்.


பாகற்காய் சிறந்த உணவுப் பொருளாக மட்டுமில்லாமல் மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. பாகற்காய் இலையின் சாறினை ஒரு அவுன்சு சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை, மாலை ஆகிய இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும். இலையை அரைத்து உடம்பு முழுவதும் தடவி 1 மணி நேரம் ஊறியபின் குளிக்க வேண்டும். இது போன்று 3 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் நாய்க் கடியின் விஷம் உடம்பில் ஏறாது.


பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை சிறிது உரைத்து சிரங்கின் மேல் நல்ல தடிப்பாக தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்று சிரங்கு உதிர்ந்து விடும். பாகற் காய் வேரை சந்தனம் போல அரைத்து நல்லெண்ணெய் - யில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும் புறமும் தடவி வந்தால் பெண்களுக்கு கருப்பை நோய் தீரும். பிரசவத்துக்குப் பின்வரும் மண்குத்தி நோய்க்கு இது கண்கண்ட மருந்து.


கொடி பாகல் இலையுடன் 500 மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்று போட்டு வந்தால் மாலைக்கண் அகலும். 2 அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றிலே சிறிது வெல்லத்தைக் கரைத்து சாப்பிட்டால் வயிற்றிலிருக்கும் நாக்குப்பூச்சிகள் வெளியேறும். பாகல் சாற்றில் சிறிது குங்குமப் பூவை அரைத்துச் சாப்பிட்டால் பெருத்திருந்த வயிறு சிறுத்து விடும். பாகல் இலைச் சாற்றை குடிப்பதால் பாம்பு விஷம் நீங்கும். பாகல் இலையை உலர்த்தி பீடி போல சுற்றிக் கொண்டு அதன் புகையை உறிஞ்சினால் பல் நோய்கள் பறந்தோடி விடும்.


பாகல் இலைச் சாற்றை 1 அவுன்ஸ் எடுத்துக் கொண்டு அதில் 1_2 அவுன்ஸ் நல்லெண்ணெய் கலந்து உட் கொண்டால் காலரா உடனே நீங்கும். 1 அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவுக்கு பெருங்காயப் பொடியை கலந்து சாப்பிட்டு வந்தால் நீரழிவு நிரந்தரமாக குணம் ஆகும்.


அதுபோல 1 அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் அதே அளவு ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து 3 நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்த முடியும்.

Tuesday, December 31, 2013

தலைமுடி சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு...?




>> முருங்கை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு வரா மல் தடுக்கலாம்.


>> முருங்கை கீரையுடன் மிளகு சேர்த்து அரைத்து தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டால் ரத்தசோகை குணமாகும்.


>> மிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும் கலந்து அரைத்து தலையில் புழு வெட்டு உள்ள இடத்தில் பூசினால் அந்த இடத்தில் முடி முளைக்கும்.


>> மருதாணி இலை, அவுரி இலை இரண்டையும் தேங் காய் எண்ணெயில் காய்ச்சி வடிகட்டி தலையில் தேய்த்து வந்தால் முடி கருப்பாக மாறும்.


>>மருதாணி இலைகளை நன்றாக அரைத்து சிறு சிறு உருண்டைகளாக வெயிலில் காய வைத்து தினமும் ஒரு உருண்டையை தேங்காய் எண்ணெயில் கரைத்து தலையில் தடவி வந்தால் முடிவளரும்.


>> பொடுதலைக் கீரைச்சாற்றில் வசம்பு, வெள்ளை மிளகு இரண்டையும் சம அளவில் எடுத்து ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி ஒரு ஸ்பூன் பொடியை நல்லெண்ணெயில் குழைத்து தலைக்குத் தேய்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து குளித்தால் பொடுகு தொல்லை தீரும்.

எம்.பி.பி.எஸ்..-இலவசமாய படிக்க விருப்பமா.?




இன்றைய சூழலில் பிளஸ் டூ படிக்கும் பெரும்பாலான மாணவ-மாணவிகளின் கனவு பொறியியல் படிப்பில் சேர்ந்து, எப்படியாவது சாப்ட்வேர் துறையில் வேலைக்குச் சேர்ந்துவிட வேண்டும் என்பதுதான். இருந்தாலும் எம்.பி.பி.எஸ். மீதான மோகம் மாணவர்கள் மத்தியில் குறைந்துவிடவில்லை. ஆனால் 200க்கு 200 கட் ஆப் மதிப்பெண் பெற்றால்தான், அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் உறுதி என்று சொல்லும் அளவுக்கு மருத்துவப் படிப்பில் சேரக் கடுமையான போட்டி நிலவுகிறது.


0.5இல் எம்பி.பி.எஸ். வாய்ப்பைத் தவறவிடும் மாணவ-மாணவிகள் அநேகம். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பல லட்சங்களைக் கொட்டிச் சேருவது என்பது எல்லா மாணவர்களாலும் இயலாத காரியம்.இப்படிப்பட்ட நிலையில், மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள இந்திய ராணுவ மருத்துவக் கல்லூரி எம்.பி.பி.எஸ். படிப்பை இலவசமாக வழங்கி, கையோடு ராணுவத்தில் டாக்டர் வேலையையும் வழங்குகிறது.


மத்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ராணுவ மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் மொத்தம் 130 இடங்கள் உள்ளன. 105 இடங்கள் மாணவர்களுக்கும், 25 இடங்கள் மாணவிகளுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.


அகில இந்திய மருத்துவ, பல் மருத்துவ நுழைவுத் தேர்வு, ராணுவ மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வு, நேர்முகத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வைச் சி.பி.எஸ்.இ. நடத்துகிறது. 2014ஆம் ஆண்டுக்கான நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பை சி.பி.எஸ்.இ. அண்மையில் வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு http://aipmt.nic.in/aipmt/Welcome.aspx என்ற இணையதளத்தில் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு அடுத்த ஆண்டு மே மாதம் 4ஆம் தேதி நடைபெற உள்ளது.


ராணுவ மருத்துவக் கல்லூரியில் சேரப் பிளஸ் டூவில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் 60 சதவீத மதிப்பெண், ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண் தேவை. வயது 17 முதல் 22க்குள் இருக்க வேண்டும். ராணுவ மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு வெளியானதும், அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.


இந்த ஆன்லைன் தேர்வில் ஆங்கிலம், லாஜிக்-ரீசனிங் பகுதிகளில் இருந்து அப்ஜெக்டிவ் முறையில் கேள்வி கேட்கப்படும். அதில் தேர்ச்சி பெறுவோருக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இறுதியாக 130 பேர் எம்.பி.பி.எஸ். படிப்புக்குத் தேர்வு செய்யப்படுகிறார்கள். அவர்களின் படிப்புக்கான அனைத்துச் செலவையும் பாதுகாப்பு அமைச்சகமே ஏற்றுக்கொள்கிறது. டியூஷன் கட்டணம், விடுதி, உணவு வசதி, புத்தகம், சீருடை அனைத்தும் இலவசம். படிப்பு செலவுகளுக்காகத் தனியாகக் கல்வி உதவித்தொகையும் வழங்கப்படும்.


4 அரை ஆண்டு மருத்துவப் படிப்பை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு மராட்டிய மருத்துவப் பல்கலைக்கழகம் எம்.பி.பி.எஸ். பட்டம் வழங்கும். ராணுவ மருத்துவமனைகளில் ஓராண்டு இன்டர்ன்ஷிப் முடித்ததும் ராணுவ மருத்துவப் பிரிவில் அதிகாரி அந்தஸ்துடன் மருத்துவர் பணியில் நியமிக்கப்படுவார்கள்.


ராணுவ அதிகாரிகளுக்கான பதவி உயர்வு, அனைத்து வசதிகளும் உண்டு. ராணுவ மருத்துவக் கல்லூரியில் படிப்பவர்கள் குறைந்தபட்சம் 7 ஆண்டுகளாவது ராணுவத்தில் பணியாற்ற வேண்டும். அதன் பிறகு தொடர்ந்து பணியாற்ற விரும்பினால் பணியைத் தொடரலாம்.


2014ஆம் ஆண்டுக்கான ராணுவ மருத்துவக் கல்லூரி எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு வரும் மார்ச், ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படும். இதுதொடர்பான முழு விவரங்களை அக்கல்லூரியின் இணையதளத்தில்( http://afmc.nic.in/) மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.

நான்கு கோடி ரூபாய்க்கு ஏலம் போகும் மருத்துவப் படிப்புகள்...!




உயிர்காக்கும் புனிதத் தொழிலாக கருதப் படும் மருத்துவத்தில் சிறப்புப் பிரிவுகளில் சேருவதற்கு புத்திசாலித்தனமும், நல்ல கல்வியறிவும் மட்டும் போதாது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர வேண்டுமானால் பணம் ஒரு முக்கியக் காரணியாக தற்காலத்தில் விளங்குகின்றது.


முதுநிலை பட்டப்படிப்பு பிரிவுகளில் அதிகப் பணம் அளிக்க முன்வருவோருக்கே அனுமதி என்ற நிலையே பரவலாகக் காணப்படுகின்றது.அதிலும் ஒரு மருத்துவக் கல்லூரியின் அரங்கத்தில் நிர்வாகக் குழுவினருடன் அமர்ந்திருக்கும் பெற்றோர்கள் கூட்டத்தில் அதிக விலை கொடுப்பவருக்கே அவர் விரும்பும் பிரிவில் அனுமதி கிடைக்கின்றது என்ற தகவல் வெளியாகியுள்ளது..

சென்னையில் சிறந்து விளங்கும் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் ரேடியாலஜி பிரிவில் முதுநிலைப் படிப்பிற்கான அனுமதி 4 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே பிரிவு பெங்களூரு மருத்துவக் கல்லூரிகளில் 3 அல்லது 3.5 கோடிக்கு கிடைக்கின்றது. எலும்பு மற்றும் தோல் மருத்துவத்திற்கான உயர்கல்வி அனுமதி ஒன்றிலிருந்து ஒன்றரை கோடியாக இருக்கின்றது. குழந்தை மருத்துவத்திற்கான அனுமதி 1.6 கோடிக்கு கிடைக்கின்றது.


ஒரு மருத்துவக் கல்லூரியின் அரங்கத்தில் நிர்வாகக் குழுவினருடன் அமர்ந்திருக்கும் பெற்றோர்கள் கூட்டத்தில் அதிக விலை கொடுப்பவருக்கே அவர் விரும்பும் பிரிவில் அனுமதி கிடைக்கின்றது. இத்தகைய முறை பெற்றோர்களுக்குமே திருப்தி அளிக்கவில்லை. இதுபோல் ஏல முறையில் அனுமதி கிடைப்பது சொத்துகளை வாங்குவதுபோல் இருக்கின்றது. அதுபோல் பணம் கொடுக்க இயலாத பெற்றோர்களின் பிள்ளைகளே எதிர்காலத்தில் பாதிக்கப்படுகின்றனர் என்று அவர்கள் கருதுகின்றனர்.


ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்கள் ரேடியாலஜி பிரிவிற்கு விண்ணப்பிக்கும் போது மொத்தம் 683 சீட்டுகளே அந்தப் பிரிவில் உள்ளன. மாணவர்களின் தேவை மற்றும் விநியோகத்திற்கு இடையே பெரும் இடைவெளி இருக்கின்றது. இந்தப் பற்றாக்குறை செலவினத்தை அதிகரிக்கின்றது என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகின்றது.


இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் முதுநிலைப் படிப்பிற்கான இடங்களை அதிகரிக்கும்படி தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தும் பயனில்லை என்று கல்லூரி தரப்பு நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன. மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கும்போது நிர்வாக செலவு அதிகரிப்பதால் அதனை ஈடுகட்ட அனுமதிக் கட்டணம் அதிகரிக்கின்றது என்பது அவர்கள் தரப்பு கருத்தாகும்.

காப்பகம்