Monday, August 18, 2014

பானை போன்று வயிறு வர ஆரம்பிக்கிறதா..? அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...

இன்றைய காலத்தில் வீட்டில் சமைத்து சாப்பிடுவோரின் எண்ணிக்கை குறைவு. மாறாக கடைகளில் பார்த்ததும் சாப்பிடும் வண்ணம் சுவையாக இருக்கும் உணவுப் பொருட்களான பிட்சா, பர்கர், சாண்ட்விச் போன்றவற்றை உட்கொண்டு வருவதோடு, எண்ணெயில் பொரித்த அசைவ உணவுகளை அதிகம் உட்கொண்டு வருகின்றனர். இதனால் அவர்களின் உடலில் கலோரிகள் மற்றும் கொழுப்புக்களானது அதிகரித்து, உடல் பருமன் அதிகரித்து தொப்பை வர ஆரம்பிக்கிறது.

இப்படியே தொடர்ந்தால், எழுந்து நடக்க முடியாத அளவில் போவதோடு, பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். குறிப்பாக இதய நோய், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் விரைவில் வரக்கூடும். ஆகவே உடல் பருமன் அதிகம் இருந்தால், முடிந்த அளவில் கடைகளில் வாங்கி சாப்பிடுவதை தவிர்த்து, வீட்டிலேயே கலோரி குறைவாக இருக்கும் உணவுப் பொருட்களை வாங்கி சமைத்து சாப்பிடுங்கள்.

குறிப்பாக அன்றாடம் உடற்பயிற்சி செய்து, உண்ணும் உணவில் கலோரிகள் குறைவான உணவுகளை சேர்த்து வந்தால், உடல் பருமன் குறையும். இங்கு கலோரி குறைவாக இருக்கும் சில உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து பிடித்ததை சமைத்து சாப்பிட்டு வாருங்கள்.

காளானில் வைட்டமின் டி மற்றும் செலினியம் அதிகம் நிறைந்திருப்பதால், இவற்றை உட்கொண்டால் மன அழுத்தம் குறைந்து, நல்ல தூக்கத்தைப் பெறலாம். மேலும் இதில் கலோரிகளும் குறைவாக இருப்பதால், இவற்றை உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது.

வெள்ளரிக்காயில் கலோரிகள் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் நிறைந்திருப்பதால், இவற்றை அவ்வப்போது உட்கொண்டு வந்தால், உடலுக்கு வேண்டிய இதர சத்துக்களான வைட்டமின் கே, பொட்டாசியம் போன்றவையும் கிடைக்கும். மேலும் உடல் எடையும் குறையும்.

அஸ்பாரகஸில் கலோரிகளே கிடையாது. மேலும் இது மிகவும் சுவையானதும், ஆரோக்கியமானதும் கூட. அதுமட்டுமின்றி, அஸ்பாரகஸில் உடலுக்கு வேண்டிய வைட்டமின் ஏ மற்றும் ஃபோலேட் அதிகம் நிறைந்துள்ளது.

தர்பூசணியிலும் நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு தர்பூசணி மிகவும் சிறப்பான உணவுப் பொருள். ஆகவே இதனை தினமும் ஸ்நாக்ஸ் நேரத்தில் உட்கொண்டு வருவது நல்ல பலனைத் தரும்.

சாலட் செய்யும் போது, அதில் மறக்காமல் தக்காளியை சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் தக்காளியில் உள்ள லைகோபைன் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. அதிலும் இதில் நீர்ச்சத்து நிறைந்திருப்பதால், இவற்றை உட்கொண்டு வந்தால், விரைவில் வயிறு நிறைந்துவிடும்.

இந்த சூப்பர் உணவுப் பொருளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதிலும் கலோரிகள் இல்லாததால், இதனை தினமும் உணவில் சிறிது சேர்த்து வருவது மிகவும் சிறந்தது.

சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி மற்றும் ஃபோலிக் ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. எனவே சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போன்றவற்றை சேர்த்து வந்தால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் கரைவதோடு, கலோரிகள் இல்லாததால் உடல் எடையும் குறையும்.

குடைமிளகாயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின சி எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளது. ஆகவே இதனையும் உணவில் அதிக அளவில் சேர்த்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

பரங்கிக்காயில் நீர்ச்சது அதிகம் இருப்பதுடன், வைட்டமின்களும், இதர சத்துக்களும் வளமாக நிறைந்துள்ளது. மேலும் இதில் கலோரிகளும் இல்லை. ஆகவே எடையை குறைக்க நினைப்போருக்கு இது மிகவும் சிறப்பான உணவுப் பொருள்.

பச்சை இலைக் காய்கறிகளான பசலைக்கீரை, கடுகு கீரை, கேல் போன்றவற்றில் வைட்டமின் கே மற்றும் நார்ச்சத்து அமிகம் நிறைந்துள்ளது. எனவே இவற்றை உணவில் சேர்த்து வந்தால், தொப்பை வருவதைத் தவிர்க்கலாம்.

மன அழுத்தத்தை குறைப்பதற்கு நொறுக்குத்தீனி சிறந்த வழி தானா..?

இன்று பெருகி வரும் நவீன உலகத்தில் நாம் நமது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க தவறுகின்றோம். இதனால் நமது உடல் வலிமை குறைந்து பல நோய்கள் வரும் அபாயம் உள்ளது. ஆகவே, நமது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாது மனவலிமைக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

இப்பொழுது எல்லோர் வாழ்விலும் மன அழுத்தம் என்பது அவர்களது வாழ்வின் ஒரு பகுதியாகவே இருந்து வருகின்றது. மனஅழுத்தம் ஒரு நோயாகவே மாறி மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பிரச்சனைகளை உருவாக்குகின்றது. இந்த நோய்க்கு காரணமாக இருப்பது அதிக வேலைப்பளு, ஒழுங்கற்ற வாழ்க்கைமுறை மற்றும் ஊட்டச்சத்து இல்லா உணவு பழக்கவழக்கங்கள் தான். இதுவே அதிக மன அழுத்தம், மன மற்றும் உடல் வலுக்குறைகள் மற்றும் உணர்ச்சி வெளிப்பாடு போன்றவற்றிக்கு வழிவகுக்கும். இவ்வாறாக, மன அழுத்தம் ஒருவரது வாழ்வில் பெரிதான பிரச்சனையாக மாறி வருகின்றது. அதனால் இதனை தவிர்த்து நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும்.

மனஅழுத்தம் மற்றும் அதன் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க பல வழிகள் உள்ளன. அதில் ஒன்று தான் நொறுக்கு தீனி. நீங்கள் டென்சனாகவோ சோகமாகவோ இருக்கும் போது, உங்கள் மன அழுத்தத்தை குறைக்க ஏதாவது சாப்பிட வேண்டும். உங்கள் மன அழுத்தத்தை குறைக்கும் சிறந்த வழி நொறுக்கு தீனி சாப்பிடுவது தான். குறிப்பாக, இனிப்பு வகைகள் மிகுந்த பலனை அளிக்கும். இதனை சிலர் நம்ப மறுப்பார்கள். ஆனால் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. நொறுக்குத்தீனி உங்கள் மன அழுத்தத்தை எவ்வாறு குறைக்கும் என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

ஊக்கிகள்

 நாம் அதிக டென்சனாகவோ, வேலைப்பளு அதிகமாக இருந்தாலோ, கலக்கம் இருந்தாலோ நமது உடல் சில மனஅழுத்தம் உண்டாக்கும் ஊக்கிகளை உற்பத்தி செய்யும். இந்த ஊக்கிகளின் காரணமாக நமது உடலில் மனஅழுத்தத்தின் அளவு அதிகரிக்கும். இதனால் நமது உடல் மிகவும் தளர்வடைந்து சக்தியின்றி மாறிவிடும். இந்த சமயங்களில், இனிப்பு நொறுக்குத் தீனி நமது மனஅழுத்தத்தை குறைக்கும் வழிகளில் ஒன்றாக இருக்கும். இனிப்பு நொறுக்கு தீனிகள் மனஅழுத்தம் தொடர்பான ஊக்கிகளை குறைக்கச்செய்யும். குறைவான ஊக்கிகள் உற்பத்தியினால் மனஅழுத்தம் குறையக்கக்கூடும்.

சுகாதாரம்:-  நொறுக்குத் தீனி என்பது மனஅழுத்தத்தை குறைக்கும் சிறந்த வழிமட்டும் அல்லாது மிகவும் சுகாதாரமான வழியாகும். ஆம், நீங்கள் மனஅழுத்தத்தின் போது உட்கொள்ளும் உணவு சுகாதாரமாக இருந்தால் தான் நன்மையை அளிக்கும். ஊட்டச்சத்து உணவுகளான பழங்கள், பெர்ரீஸ், டார்க் சாக்லேட், பால் பொருட்கள் போன்றவை மனஅழுத்தத்தை குறைக்க உதவும். மனஅழுத்தம் தொடர்பான ஒழுங்கின்மையையும் சரிசெய்யும்.

அமைதியாக்குதல்:- நொறுக்குத் தீனி மனஅழுத்தத்தை குறைக்கும் வழிகளில் ஒன்றாக இருப்பதோடு மட்டுமல்லாது நமது மூளையையும் உடலையும் அமைதிப்படுத்துக்கின்றது. உங்கள் மனதை அமைதிப்படுத்துவது மற்றும் தணிப்பது என்பது மிகவும் அவசியமானதாகும். எதிர்பாராமல், மனஅழுத்தத்தின் போது உங்கள் மனதிற்கு ஓய்வு கிடைப்பது இல்லை. அதனால், நொறுக்கு தீனி உங்கள் மனதை எளிதாக்கும்.

மெட்டபாளிசத்தை மேம்படுத்துதல்:- ஊட்டச்சத்து உள்ள உணவை நொறுக்கு தீனியாக உட்கொண்டால், மனஅழுத்த ஊக்கிகளால் குறையும் மெட்டபாளிசத்தை மேம்படுத்த உதவும். ஊட்டச்சத்து உள்ள உணவை உட்கொள்ளுவதால் நமது உடல் பழைய நிலையை அடைவதோடு பழுதடைந்துள்ள நிலையில் இருந்து நமது உடலை மீட்கச்செய்யும். மேலும் இவ்வகை உணவுகள் நமது உடலில் உள்ள ஊட்டச்சத்தை மேம்படுத்தி மனஅழுத்தத்தை குறைக்கும் சக்தியைத் தரும். அதனால், மனஅழுத்த நேரங்களில் நொறுக்குத் தீனி சாப்பிடுவது மிகவும் நன்று.

மனநிலை மாற்றங்கள்:- கொடிய மனநிலைக்கு மனஅழுத்தமே காரணமாகும். இது ஒருவரை நிலைகுலைய வைத்து கவலையில் ஆழ்த்தும். இந்த சமயங்களில் டார்க் சாக்லேட் போன்றவை மனநிலையில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும். மனஅழுத்தம் தொடர்புடைய ஊக்கிகளை குறைத்து நல்ல மனநிலைக்கு கொண்டு வரும். நீங்கள் இந்த மனநிலை மாற்ற பொருட்களை கவலையாக இருக்கும் போது உபயோகிக்கலாம். இவ்வகை உணவினால் மனநில அளவுகள் மாறுபட்டு மனஅழுத்தத்தை குறைக்கும். இதனால், மன அழுத்தத்தை குறைக்கும் வழிகளில் இந்த நொறுக்குத் தீனி சிறந்த முறையாகும்.

மேற்கூறிய இவை அனைத்தும் நொறுக்குத் தீனி தான் மனஅழுத்தத்தை குறைப்பதற்கு சிறந்த வழியாக இருக்கின்றது என்பதை கூறுகின்றது. மனஅழுத்தத்தை குறைக்கும் வேறு சில வழிகள் : புத்தகம் படிப்பது, தூங்குவது, பாட்டு கேட்பது, சுற்றுலா செல்லுவது போன்றவை ஆகும். மற்றவரிடம் பகிர்தல் அல்லது பேசுதல் போன்றவையும் மனஅழுத்தத்தை குறைக்கும்.

நாள் முழுவதும் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து முதுகு வலி பின்னி எடுக்குதா..?

மனம் மயங்க வைக்கும் கார்பரேட் உலகத்திற்கு உங்களை தாரை வார்த்து விட்டவரா நீங்கள்! நாள் முழுவதும் இதற்காக கம்ப்யூட்டருக்கு முன்னால் அமர்ந்திருப்பதால் சோர்ந்திருப்பவரா?

கம்ப்யூட்டருக்கு முன்னால் முறையான நிலையில் அமராத போது, முதுகு வலி, கழுத்து வலி, முழங்கால் வலி மற்றும் உங்களுடைய கைகள், விரல்கள் மற்றும் மணிக்கட்டுகளில் கடுமையான வலி உணர்வுகள் ஆகியவற்றை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும். எனவே, நல்ல நிலையில் கம்ப்யூட்டருக்கு முன்னர் அமரும் நிலையையும், மேலும் சில நல்ல பழக்க வழக்கங்களையும் பின்பற்றுவது மேற்கண்ட பிரச்னைகளை எதிர்கொள்ளாமல் தவிர்க்க உதவும்.

நிற்கும் போதும், நடக்கும் போதும், அமரும் போதும் அல்லது படுக்கும் போதும் உங்களுடைய உடலை சரியான நிலையில் வைத்திருப்பதும் மற்றும் தசைகள் அல்லது மூட்டுகளில் வலி வராமல் இருக்கச் செய்வதும் தான் நல்ல நிலை எனலாம்.

தசைகளை திறமையாக பயன்படச் செய்ய விரும்பினால், எலும்புகளையும், மூட்டுகளையும் நேராக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். சரியான நிலையில் இவ்வாறு வைத்திருப்பதன் மூலமாக மூட்டுகளில் தேவையற்ற அழுத்தங்கள் ஏற்படுவதை தவிர்த்திட முடியும். குறிப்பாக நீங்கள் கம்ப்யூட்டர்களுக்கு முன்னால் நெடுநேரத்திற்கு அமர நேரும் வேளைகளில், சரியான நிலையில் அமர்வது உங்களுடைய முதுகெலும்பை அழுத்தம் உணராத இடமாக வைத்திருக்கவும் மற்றும் தசை வலி மற்றும் முதுகு வலி வராமல் வைத்திருக்கவும் உதவும். சிறந்த பார்வைக்கு மட்டுமல்லாமல், சரியான நிலையில் அமர்வதால் தசை வலிகள் குறைவதுடன், உடலில் குறைந்த அளவு சக்தியை மட்டுமே செலவிட வைக்கவும் முடியும்.

ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் தங்களுடைய முதுகையும் மற்றும் தோள்பட்டைகளையும் நேராக வைத்திருக்கப் பழக வேண்டும். மேலும், உங்களுடைய பிட்டங்கள் நாற்காலியின் பின்புறத்தை தொட்டுக் கொண்டிருக்கவும் வேண்டும்.

உங்களுடைய முதுகுப் பகுதியின் வளைவை சாதாரணமாக இருக்கச் செய்யும் வகையில் குஷன்களையோ அல்லது சுருட்டி வைக்கப்பட்ட டவல்களையோ பயன்படுத்தலாம். சரியான நிலையில் உட்கார்வதற்காக, உங்களுடைய நாற்காலியின் முனையில் அமர்ந்து கொண்டு, முன்னோக்கி மெதுவாக சாய்ந்து கொள்ளுங்கள். பின்னர், உங்களுடைய முதுகுப் பகுதியின் வளைவை முடிந்த வரையில் நேராக வரச் செய்யுங்கள். இந்த நிலையிலேயே சில நொடிகளுக்கு இருக்கவும். அதன் பின்னர், உங்களுடைய இடுப்பு பகுதிக்கு உடலின் எடையை தள்ளியவாறு, சுமார் 10 டிகிரிகளுக்கு வளைந்து உட்காராலாம்.

கம்ப்யூட்டரின் திரையிலிருந்து கையை நீட்டும் தொலைவில் அமர்ந்து கொள்வதன் மூலம், உங்களுடைய பார்வையின் இடைவெளியை கட்டுப்படுத்த முடியும். வலது புறமாக உங்களுடைய முழங்கால்களை மடித்து உட்காரலாம் மற்றும் கால்களை குறுக்காக வைத்தவாறு அமர்வதை தவிர்க்கவும். உங்களுடைய கால் பாதங்கள் தரையை தொடுமாறு வைத்திருக்கவும் மற்றும் உங்களுடைய கண்களை மேல் நோக்கியோ அல்லது கீழ் நோக்கியோ வைத்திருக்காமல் நேராக வைத்திருக்கவும். உங்களுடைய புஜங்கள் மற்றும் முழங்கைகளை நாற்காலியில் ஓய்வு நிலையில் வைத்திருங்கள் மற்றும் தோள்பட்டைகளையும் ஓய்வாக வைத்திருங்கள்.

அவ்வவ்போது ஓய்வு இடைவேளை எடுத்துக் கொள்வதும் அவசியமானது. 30 நிமிடங்களுக்கு மேலாக ஒரே நிலையில் அமர்ந்திருப்பதை தவிர்க்கவும். நீண்ட நேரம் வேலை செய்ததாக நினைத்தால், சற்றே கழுத்துக்கான பயிற்சிகளை செய்திடுங்கள் - உட்கார்ந்த இடத்திலேயே இந்த பயிற்சியை செய்யலாம். உங்களுடைய கழுத்தை முன்பக்கமிருந்து, பின்பக்கமாக திருப்பவும் மற்றும் பக்கவாட்டில் இடப்பக்கமிருந்து, வலப்பக்கமாக திருப்பவும். உங்களுடைய கைகள் இரண்டையும் பின்பக்கமாக வைத்துக் கொண்டு, ஃபார்வார்ட் ரெசிஸ்டன்ஸ் மற்றும் பேக்வார்ட் ரெசிஸ்டன்ஸ் பயிற்சிகளையும் கூட நீங்கள் செய்யலாம். இந்த நிலையிலேயெ ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களுக்கு உங்களை நிலைநிறுத்தி வைத்திருங்கள்.

30 நிமிடங்களிலிருந்து 1 மணிநேரத்திற்கு ஒரு முறை எழுந்து நிற்கவும் மற்றும் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது, கழிவறைக்கு சென்று வருவது, அருகில் பணியில் உள்ளவரின் இடத்திற்கு சென்று வருவது அல்லது கால்களை நீட்டி முழக்கப் பயன்படும் வகையில் உள்ள அலுவல் இடததிற்கு செல்வது போன்ற செயல்களை செய்யுங்கள். இவ்வாறான சரியான நிலைகளை கம்ப்யூட்டரில் பணி செய்யும் போது, ஒவ்வொரு நாள் வேலையின் போதும் நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பதையும் மற்றும் மற்றவர்களை விட உயர்ந்து நிற்பதையும் உணர்வீர்கள்.

திரையரங்கில் தேம்பி அழுத தருணம் - இயக்குநர் பார்த்திபன் நெகிழ்ச்சிப் பதிவு

'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்திற்கு விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ள வரவேற்பு, இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபனை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

முற்றிலும் புதுமுகங்கள் நடிப்பில், பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்'. ஆர்யா, விஷால், விஜய் சேதுபதி, டாப்ஸி, அமலா பால் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் கவுரவ வேடத்தில் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.

கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) அன்று வெளியான இப்படம் விமர்சகர்கள், ரசிகரக்ள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது.

தனது படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பை திரையரங்கு சென்று பார்த்த இயக்குநர் பார்த்திபன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு நிலைத்தகவல் வெளியிட்டுள்ளார்.

அதில், "சத்தியமாக இவ்வவு பெரிய வெற்றி காண.. காத்திருந்த காலத்தின் எடை, கண்களை அழுத்த சுமை தாளாமல் கீழிமை கிழிந்து, கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் முதல் காட்சி போல் என்னை ஒட்டு மொத்தமாக புரட்டிப் போட்டது. கைதட்டல் விசிலில் அரங்கம் அதிரும் போது சின்னப் பிள்ளையாய் தேம்பியது, யாருக்கும் தெரிந்துவிடாதிருக்க ஏற்கனவே நனைந்த கைகுட்டையும் கைவிரித்தது. அந்நேரமும் என் மானம் காக்க கீர்த்தனா தான் வந்தார். கட்டிப் பிடித்து அவர் கன்னம் நிறைத்து நனைத்தேன்.

நினைக்கலாம் நீங்கள்.. அப்படியென்னா? பொல்லாத பொடலங்கா படம் என்று. கதை திரைக்கதை வசனம் இயக்கம் ஒரு new wave பிலிம். முற்றிலும் புது முயற்சி. ரசிகர்களின் ரசனை மற்றும் புத்திசாலித்தனத்தை மட்டும் நம்பி, முதன்முறையாக ரசிகனுக்கும் திரைக்குமான இடைவெளியை வெகுவாக விலக்கி எடுக்கப்பட்ட படம். இவ்வெற்றி எனதல்ல நமது!

தயவு செய்து (திருட்டு VDC போன்ற) களவு முறைகளை கையாளமால் திரையில் பார்த்து என்னை இன்னும் உயரம் அழைத்து சொல்லுங்கள்.. நன்றி" என்று குறிப்பிட்டு இருக்கிறார் இயக்குநர் பார்த்திபன்.

இயக்குநர் பார்த்திபனின் இந்த நிலைத்தகவல் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட விருப்பங்களைக் குவித்தது கவனிக்கத்தக்கது.

எலும்புகளை மட்டுமல்ல... இதயத்தையும் பாதிக்கும் மூட்டுவலி..!

ஒவ்வொருவருக்கு ஒவ்வொருவிதமான உடல் வலி...ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமான வலி... ஆக, நாமும் சரி, நம்மைச் சுற்றியிருப்போரும் சரி, வலியின்றி வாழ்ந்த நாட்களை எண்ணிவிடலாம். சகித்துக்கொள்ள முடியாத அளவுக்கு வலியின் தீவிரம் எல்லை மீறும் போதுதான் அதை நாம் கவனிப்போம். ‘ஏன் இத்தனை நாள் கவனிக்காமல் விட்டீர்கள்?’ என்று ஆரம்பிக்கிற மருத்துவர், வலியின் தொடக்கத்தில் நாம் உணர்ந்து, அலட்சியம் செய்த அறிகுறிகளைப் பற்றியெல்லாம் விசாரிப்பார். அப்போது காலம் கடந்திருக்கலாம்.

சின்ன அறிகுறியுடன் உங்களை சீண்டிப் பார்க்கிற வலிகளை சீக்கிரமே அடையாளம் கண்டு கொண்டால், அதன் பிடியிலிருந்து தப்பிக்கலாம் என்கிறார் வலி நிர்வாக மருத்துவர் குமார். அந்த வகையில் பரவலாக எல்லோரையும் பாதிக்கிற மூட்டுவலிகளைப் பற்றி, அவற்றின் அறிகுறிகள், சிகிச்சைகள், தடுப்பு முறைகளுடன் விரிவாகப் பேசுகிறார் அவர்.

மூட்டுவலி என்பது பொதுவான பெயர். இதில் ருமட்டாயிட் ஆர்த்ரைட்டிஸ், ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ், ஆங்கிலோசிங் ஆர்த்ரைட்டிஸ், கவுட் ஆர்த்ரைட்டிஸ் எனப் பல வகைகள் உள்ளன. எலும்பு மூட்டுகளைப் பாதிக்கும் நோய்கள் இவை எல்லாம்.

ருமட்டாயிட் ஆர்த்ரைட்டிஸ்:- இது உடலிலுள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படும் சிறு குழப்பத்தின் காரணமாக, மூட்டுத்திசுக்களை நோய்க்கிருமிகளாக நினைத்து, நம் உடலிலிருந்தே சில ரசாயனங்களை உண்டாக்கி, மூட்டுத்திசுக்களைப் பாதிக்கிறது. 30 முதல் 60 வயதுக்காரர்களை, குறிப்பாக பெண்களை அதிகம் பாதிக்கிற இந்த நோயின் அறிகுறிகள் எல்லோருக்கும் பொதுவாக இருப்பதில்லை.

உடல் முழுவதும் வலி, குறிப்பாக மூட்டுகளில் அதிக வலி, சோர்வு, மூட்டு வீக்கம், கை, கால்களில் விரைப்புத் தன்மை, காலையில் எழுந்ததும் கால்களில் விரைப்பு, ஓய்வுக்குப் பிறகும் கை, கால்களில் விரைப்பு நீடிப்பதும், சோர்வு தொடர்வதும் ஆரம்பக்கட்ட அறிகுறிகளாக உணரப்படலாம். இந்த நிலையிலேயே மருத்துவரை அணுகினால், நோயின் தீவிரத்தை கண்டறிந்து, குணப்படுத்தி விடலாம். அலட்சியப்படுத்தினால், மூட்டுகளில் வீக்கம், அதிக வலி, மூட்டுகள் தேய்வடைந்து முற்றிலும் பாதிக்கப்படக்கூடும். தொடர்ந்து மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம் நோயைக் கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

குறிப்பிட்ட இடைவெளிகளில் மருந்து எப்படி வேலை செய்கிறது என்பதையும், நோயின் தீவிரம் எப்படியிருக்கிறது என்பதையும் சில ரத்தப் பரிசோதனைகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த வகையான மூட்டுவலி ஒருவரது எலும்புகளை மட்டுமின்றி, இதயத்தையும் பாதிக்கக் கூடியது. மூட்டு மட்டுமின்றி, முதுகெலும்பு, முழங்கால், கணுக்கால்களிலும் வலி உணரப்படும். எனவே, சிகிச்சையையும் பயிற்சிகளையும் பாதியில் நிறுத்தக் கூடாது. குறிப்பாக பயிற்சிகளை முறையாகச் செய்து வந்தால் எலும்புகள் நெகிழ்வுடன் காணப்பட்டு, வலி குறையும். பயிற்சிகளை ஆரம்பக் கட்டத்திலேயே மெதுவாக, குறைவாகத் தொடங்கவும்.

உணவில் மூன்றில் 2 பங்கு காய்கறிகள் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். சைவ உணவே சிறந்தது. அசைவத்தில் மீன் மட்டும் சேர்த்துக் கொள்ளலாம். அதிலும் சாலமன் மற்றும் டுனா மீன்கள் சிறந்தவை. அவற்றில் உள்ள ‘ஒமேகா 3’ கொழுப்பு அமிலம் வலியைக் குறைக்க உதவும். காய்கறிகள் தவிர, பழங்கள், தானியங்களும் முக்கியம். ஸ்ட்ராபெர்ரி பழமும், ஆலிவ் ஆயிலும் நல்லவை. உணவில் கால்சியம், செலினியம், வைட்டமின் டி சத்துகள் நிறைந்திருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். கோழி இறைச்சி, வாட்டப்பட்ட உணவுகள் (க்ரில்), துரித உணவுகள், நொறுக்குத்தீனிகள், பதப்படுத்திய உணவுகள் போன்றவை வலியை அதிகரிக்கும் என்பதால் தவிர்க்கப்பட வேண்டியவை. இந்த நோய்க்கு, இதய நோயுடன் தொடர்புண்டு என்பதால் கொழுப்பு நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும்.

ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ்:- மிகப்பரவலாகக் காணப்படுகிற முக்கியமான நோய் இது. முழங்கால், இடுப்பு, இடுப்பு மூட்டு, முதுகெலும்புப் பகுதிகளில் வலி இருக்கும். வயதானவர்களிடம் அதிகம் காணப்படுகிற இது, 90 சத விகிதம் எலும்புத் தேய்மானத்தால் வருகிறது. வயதின் காரணமாக எலும்புகளில் உண்டாகிற தேய்மானம், மூட்டில் எப்போதோ ஏற்பட்ட விபத்து, அடி, காயம், பருமன், உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை போன்றவையே பிரதான காரணங்கள். வலி மருந்துகள் மற்றும் பயிற்சிகளின் மூலம் நிவாரணம் பெறலாம். தேவைப்பட்டால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையும் பரிந்துரைக்கப்படலாம். இப்போது தீவிர வலி நிவாரண சிகிச்சையின் மூலம், மூட்டு மாற்று அறுவை சிகிச்சையைக் கூடத் தவிர்க்க முடிகிறது. ரேடியோ அலை சிகிச்சை முறை மற்றும் ஊசி மூலம் மருந்து செலுத்தும் முறைகளும் உதவியாக இருக்கும்.


ஆங்கிலோசிங் ஸ்பான்டிலைட்டிஸ்:- முதுகெலும்பிலுள்ள சிறு சந்திப்புகளிலும் இடுப்பிலும் உணரப்படுகிற வலி இது. முக்கியமாக இடுப்புவலி என்பது நோய் எதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படுகிற குழப்பம் காரணமாகவே வரும். அதி தீவிர வலி நிவாரண சிகிச்சை முறையின் மூலம் வலியைக் குறைத்து, பயிற்சிகளையும் தொடர்வதன் மூலம் வேதனையிலிருந்து விடுபடலாம். தேவைப்பட்டால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இடுப்பெலும்பில் மருந்தைச் செலுத்தியும் வலியைக் குறைக்கலாம்.

கவுட் ஆர்த்ரைட்டிஸ்:- உடலிலுள்ள யூரிக் அமிலம் எனப்படுகிற ரசாயனம், மூட்டில் படிவதே இந்த வலிக்கான காரணம். கை, கால்களில், கால் பெருவிரல்களில், கணுக்கால்களில், முழங்கை சந்திப்புகளில் அதிக வலி தெரியும். ரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவைச் சரி பார்த்து, அதைக் குறைக்க மருந்துகள் பரிந்துரைக்கப்படும். பயிற்சிகளும் அவசியம். அசைவ உணவுகளை அறவே தவிர்க்கவும். கொழுப்பு அதிகமுள்ள உணவுகள் இந்த வகை நோய்க்கு வழி வகுக்கலாம் என்பதால் அதுவும் வேண்டாம். குடிப்பழக்கம் கூடாது. அதிக இனிப்பு சேர்த்த உணவுகள், மைதாவில் செய்த உணவுகள் போன்றவையும் ஆபத்து.

இவற்றுக்குப் பதிலாக, சுத்தமான பழச்சாறுகள், முழு தானிய உணவுகள், காய்கறிகள், கொழுப்பு இல்லாத அல்லது குறைந்த பால் உணவுகள் சேர்த்துக் கொள்ளலாம். நிறைய தண்ணீர் மற்றும் திரவ உணவுகள் எடுத்துக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு 16 டம்ளர் தண்ணீர் குடிப்பதன் மூலம் அதிகப்படியான யூரிக் அமிலம் வெளியேற்றப்படும்.

மூட்டுவலிக்கு பொதுவான சில ஆலோசனைகள்:- அறிகுறிகள் சின்னதாக இருந்தாலும் அலட்சியப்படுத்தாமல், ஆரம்பக் கட்டத்திலேயே மருத்துவரை அணுகவும். ஆரம்பக் கட்ட பரிசோதனையின் மூலம் நோய் தீவிரமடைவதைத் தவிர்த்து, வலியிலிருந்து முற்றிலும் விடுதலை பெறலாம்.

மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே மருந்துகளை எடுத்துக் கொள்ளவும். குறிப்பிட்ட காலத்துக்கு, குறிப்பிட்ட அளவு மட்டுமே எடுக்க வேண்டும். சுய மருத்துவம் ஆபத்தானது.

உடற்பயிற்சிகள் மிக முக்கியம். அவற்றின் மூலம்தான் மூட்டுகளில் வலி வராமல் காக்க முடியும்.நோய் வந்த பிறகு பயிற்சி என்பதைத் தவிர்த்து, பயிற்சியை வாழ்க்கையின் ஒரு பகுதியாக நினைத்துப் பின்பற்றுவது ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம். 

திருமணத்திற்கு முன் செக்ஸ் வைத்துக்கொள்ள தூண்டுவதில் செல்போன் முக்கிய பங்கு..!

இன்றைய இளைஞர்களை திருமணத்திற்கு முன் செக்ஸ் வைத்துக்கொள்ள தூண்டுவதில் செல்போல் முக்கிய பங்கு வகிக்கிறது என்று தெரியவந்துள்ளது. மிசோராம் மாநிலத்தில் உள்ள கிருஸ்துவ அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்தது.

உலக அளவில் செல்போன் பயன்பாடு இந்தியாவில் அதிகரித்து வருகிறது. பொருளாதாரம், வேலைவாய்ப்பு அதிகம் முள்ள வளர்ந்த மாநிலங்களாக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் மட்டுமல்லாது, வடகிழக்கு இந்திய மாநிலங்களில் செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்த செல்போன் பயன்பாடுதான் இளம் தலைமுறையினரை திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக்கொள்ள தூண்டுகோலாக இருக்கிறது.


வடகிழக்கு மாநிலமான மிசோராமில் இளம் தலைமுறையினர் திருமணத்திற்கு முந்தைய உறவில் அதிக ஆர்வம் காட்டி வருவது அங்கு எடுக்கப்பட்ட சர்வே ஒன்றில் தெரியவந்துள்ளது.

இதேபோல் காமசூத்ரா காண்டம் நிறுவனம், மேற்கொண்ட ஆய்வில் நாடு முழுவதும் 17 ஆயிரத்து 45 பேர் பங்கேற்றனர். இதில் பாதிப்பேர், சென்னை, மும்பை, டில்லி, கொல்கட்டாவை சேர்ந்தவர்கள். காண்டம் பயன்படுத்துவோரில் சாப்ட்வேர் துறையில் உள்ளவர்கள் தான் அதிகபட்சமாக 17 சதவீதம்பேர் தைரியமாக தங்கள் கருத்துக்களை கூறியுள்ளனர். அடுத்து, மார்கெட்டிங், வர்த்தகத் துறைகளில் உள்ள நிர்வாகிகள், உயர் நிர்வாக பதவியில் உள்ளவர்கள் 13 சதவீதம் பேர் கருத்து கூறியுள்ளனர்.

திருமணத்துக்கு முன்பு செக்ஸ் உறவு கொண்டது உண்டா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, 49 சதவீதம் பேர் ஆம் என்று கூறியுள்ளனர். இப்படி கூறியவர்கள் பெரும்பாலோர் 18 முதல் 24 வயது உள்ளவர்கள் தான். இதை விடக்கொடுமை என்னவென்றால், இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர், ஒருவருக்கு மேல் செக்ஸ் உறவு கொண்டுள்ளனர் என்பதும் இந்த சர்வேயில் தெரிந்தது.

சினிமாக்களாலும், டி.வி தொடர்களாலும் தான், திருமணத்துக்கு முந்தை செக்ஸ் உறவு பற்றி தெரியவந்தது. அது தான் மக்களை கெடுக்கிறது என்று சொல்வதும் எந்தளவு உண்மை என்பதும் இந்த சர்வேயில் தெரிந்தது. 73 சதவீதம் பேர் நண்பர்கள், புத்தகம் படிப்பதன் மூலம், அடுத்து நீலப்படம் பார்ப்பது மூலம் தான் திருமணத்துக்கு முந்தைய செக்ஸ் வைத்துக்கொள்ள தூண்டுவதாக கூறியுள்ளனர்.

காப்பகம்