Tuesday, August 12, 2014

ரஜினி போட்டோ வெளியிட தடை விதித்தார் கே.எஸ்.ரவிகுமார்..!

ரஜினி அருகில் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ஆன்லைனில் வெளியிட வேண்டாம் என்று பாலிவுட் இயக்குனருக்கு கே.எஸ்.ரவிகுமார் தடை விதித்தார்.ரஜினியின் ‘லிங்கா பட ஷூட்டிங் சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்தது.

அப்போது அவரை சந்திக்க பிரபல பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி,  ஷூட்டிங்கிற்கு வந்தார். இவர், சென்னை எக்ஸ்பிரஸ் உள்பட பல படங்களை இயக்கி உள்ளார். மேக் அப் அணிந்துக்கொண்டிருந்த ரஜினியிடம் இயக்குனர் வந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக ரஜினியே ரோஹித் இருக்கும் இடத்தை நோக்கி வந்தார். தன்னை நோக்கி ரஜினி வருவதை கண்டதும் ஒரு நிமிடம் ஷாக் ஆனார் இயக்குனர். வந்த வேகத்தில் ரோஹித்தை வரவேற்ற ரஜினி நலம் விசாரித்ததுடன், ‘உங்களுடைய பணி எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் உங்கள் ரசிகன் என்றார்.

பின்னர் இதுபற்றி ரோஹித் கூறும்போது,‘உலகத்திலேயே சிறந்த நடிகர் என்று நான் எண்ணிக்கொண்டிருக்கும் ரஜினி எந்தவித பந்தாவும் இல்லாமல் என்னைவந்து சந்தித்து நலம் விசாரித்து பாராட்டியபோது எனக்கு மயக்கமே வந்துவிட்டது. அவர் முன்னால் நான் ஒன்றுமே கிடையாது. ஆனாலும் என்னை அவர் மரியாதையுடன் நடத்தினார் என்றார். பின்னர் ரஜினியுடன் நின்று ரோஹித் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.அருகில் இருந்த டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார்,  ‘எவ்வளவு புகைப்படம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் அதை தயவுசெய்து ஆன் லைனில் வெளியிட்டு விடாதீர்கள். அப்படி வெளியிட்டால் லிங்காவில் ரஜினி ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் சஸ்பென்ஸ் வெளிப்பட்டுவிடும் என்றார். 

போன வருஷம் லவ்வர் இந்த வருஷம் அம்மா..!

கடந்த வருடம் தனது பிறந்த நாளை காதலன் சிம்புவுடன் கொண்டாடிய ஹன்சிகா இந்த வருடம் தனது அம்மாவுடன் கொண்டாடினார்.வாலு, வேட்டை மன்னன் ஆகிய படங்களில் சிம்புவுடன் இணைந்து நடித்து வருகிறார் ஹன்சிகா. வாலு பட ஷூட்டிங்கின்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது.

 இதை இணைய தள பக்கத்தில் இருவரும் வெளியிட்டனர். இந்த காதலுக்கு ஹன்சிகாவின் அம்மா எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இதற்கிடையில் மாஜி காதலி நயன்தாராவுடன் ‘இது நம்ம ஆளு படத்தில் சிம்பு ஜோடி சேர்ந்து நடித்தார். இது ஹன்சிகாவுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. சமீபத்தில் ஹன்சிகா சிம்புவுடனான காதலை முறித்துக்கொண்டதாக அறிவித்தார்.

கடந்த ஆண்டு சிம்பு-ஹன்சிகா காதல் ஜோடிகளாகவே வலம் வந்துக்கொண்டிருந்தனர். ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி ஹன்சிகாவின் பிறந்த நாள். அவருக்கு என்ன கிப்ட் தருவது என்று திணறிக்கொண்டிருக்கிறேன். ஐடியா இருந்தால் சொல்லுங்களேன் என்று ரசிகர்களிடம் தனது இணைய தள பக்கத்தில் யோசனை கேட்டிருந்தார் சிம்பு.

மறுநாள் ஹன்சிகாவுடன் பிறந்தநாள் கொண்டாடிய படங்களை இணைய தளத்தில் வெளியிட்டார். இந்த பிளாஷ்பேக் நடந்து சரியாக ஒரு வருடம் ஆகிறது. கடந்த 9ம் தேதி ஹன்சிகா தனது பிறந்த தினத்தை தனது அம்மா மோனா மோத்வானியுடன் கேக் வெட்டி கொண்டாடினார். அப்போது தனது முறிந்த காதலை எண்ணி ஹன்சிகா கண் கலங்கினாராம். 

கமல் படத்துக்கு சிக்கல் நீங்குமா..? - பரபரப்பு தகவல்

கமல் படத்துக்கு ஏற்பட்டுள்ள சட்ட சிக்கல் நீங்குமா என கேள்வி எழுந்துள்ளது.மோகன்லால்-மீனா நடித்த மலையாள படம் ‘திரிஷ்யம்‘. இப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது. மோகன்லால் ஏற்ற வேடத்தை கமல் ஏற்று நடிக்கிறார். ஹீரோயின் தேர்வு இறுதி செய்யும் நிலையில் உள்ளது.

மலையாளத்தில் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் தமிழிலும் இயக்குகிறார். தமிழில் கமல் நடிக்கும் இப்படத்துக்கு  ‘பாபனாசம்‘ என பெயரிடப்பட்டிருக்கிறது. திருநெல்வேலி பின்னணியில் இக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. பாபனாசத்தில் தாமிரபரணி ஆறு ஓடுகிறது. அதன் அருகிலும் ஷூட்டிங் நடக்க உள்ளது. இதில் வில்லனாக கலாபவன் மணி நடிப்பார் என்று தெரிகிறது.

 மலையாளத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த ஆஷா சரத் தமிழிலும் அதே வேடத்தில் நடிக்க உள்ளார்.இப்படத்தை உருவாக்குவதில் சட்ட சிக்கல் எழுந்துள்ளது.

படத்தின் கதை தனக்கு சொந்தம் என்றும் அதனால் இதை தமிழில் ரீமேக் செய்யக்கூடாது என்றும் ஒருவர் வழக்கு தொடுத்துள்ளார்.  விரைவில் இப்பிரச்னை பேசி தீர்க்கப்பட்டுவிடும் என்று தயாரிப்பாளர் தரப்பில் கூறப்படுகிறது.

காப்பகம்