சினிமாவைப் போல் சீரியல்களுக்கும் சென்சார் தரச் சான்றிதழ் கொண்டு வரலாம் போல் இருக்கிறது. காரணம் காலை முதல் இரவு வரை தொடர்ந்து சீரியல்களை சில சேனல்கள் ஒளிபரப்புவதால் தாய்மார்களோடு சேர்ந்து குழந்தைகளும் சமயங்களில் சீரியல் ரசிகர்களாகி விடுகிறார்கள்.
அவ்வாறு குழந்தைகளும் பார்க்கும் சீரியல்கள் அவர்களுக்கு நல்லறிவைப் போதிக்கிறதா எனக் கேட்டால் பெரும்பாலும் இல்லையென்று தான் சொல்ல வேண்டும். தங்கள் முடிவு சரியானது தான், தாங்கள் நினைப்பது தான் சரி பெற்றோர்க்கு நம்மை விட அதிகமாக ஒன்றும் தெரியாது என்ற மனநிலையில் உள்ள வளரும் இளம்பருவத்தினர் இத்தகைய சீரியல்களால் வழி தவறிப் போகிறார்கள் என்றால் மறுப்பதற்கில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பள்ளியில் மாணவி ஒருத்தி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அதற்குக் காரணம் தனது தந்தை இரண்டாவது மணம் முடித்தது தான் எனக் கூறப்படுகிறது. தந்தையின் மறுமணத்தால் மனமுடைந்த சிறுமிக்கு தற்கொலை முடிவைக் கற்றுத் தந்தது தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்கள் தான் எனக் குற்றம் சாட்டுகிறார்கள் மனோதத்துவ மருத்துவர்கள்.
அவர்கள் கூற்றை இல்லையென புறந்தள்ள முடியாது. இதோ குழந்தைகளின் உலகம் என சில தொலைக்காட்சி சீரியல்கள் காட்டும் மோசமான காட்சிகள் உங்கள் பார்வைக்கு.
பிள்ளைநிலா...
பெரும்பாலான சீரியல்களில் குழந்தைகள் தங்கள் வயதுக்கு மீறியவர்களாக பேச்சில் காணப்படுகின்றனர். அதிலும், மாலையில் குழந்தைகள் பள்ளியில் இருந்து திரும்பிய நேரத்தில் ஒளிபரப்பப் படும் ‘பிள்ளை நிலா' சீரியலைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.
கேள்விப்பட்டவரை சமீபகாலமாக பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இந்த சீரியலைப் பார்க்க விடுவதில்லை. காரணம் அதில் வரும் சிறுவர்களின் கதாபாத்திர அமைப்பு.
தனக்கு நோய் எனத் தெரிந்த சிறுவன் பெற்றோருக்குத் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறுகிறான். அவனைத் தேடிச் செல்கிறாள் அவனது இளவயது. சிறுவன் அடைக்கலமாகும் இடத்தில் உள்ள சிறுமி, சிறுவனை புதை குழியில் தள்ளிக் கொல்ல முயற்சிக்கிறாள் என இப்படியாக செல்கிறது கதை.
இந்தச் சீரியல்களில் வரும் பெரியவர்கள் அனைவரும் குழந்தைகள் போல, குழந்தைகள் சொல்வதைக் கேட்டுத் தான் நடக்கிறார்கள். இந்தச் சீரியலைப் பார்க்கும் மற்ற குழந்தைகளுக்கு இதைப் போலவே தங்களது பெற்றோரும் தங்கள் சொல்பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும் என்ற எண்ணம் அடிமனதில் பதிய வாய்ப்பிருக்கிறது.
கல்யாணப்பரிசு...
இதேபோல், மதியம் ஒளிபரப்பாகும் கல்யாணப்பரிசு சீரியலில் நாயகன் தனது குழந்தைப் பருவக் கதையை எடுத்துக் கூறுகிறார். அதில், சித்தி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட தனது நண்பனுக்கு பெற்றோரை விட்டுப் பிரிகிறார் நாயகன்.
பெற்றோரைக் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய தான் அனாதை இல்லத்தில் சேர்ந்து, மூட்டைத் தூக்கி பிழைத்து கல்வி கற்று முன்னேறியதாக கூறுகிறார் நாயகன்.
இதன்மூலம் வீட்டை விட்டு வெளியேறினால் எப்படியும் பிழைத்துக் கொள்ளலாம் என தன்னைக் கொண்டு நாயகன் முன்னுதாரணம் கூறுவது போல் உள்ளது. இதற்குப் பதிலாக இவ்வாறு அவசரப்பட்டு வீட்டை விட்டு வெளியேறக் கூடாது என நாயகன் வருத்தப் படுவது போல் அக்காட்சியை அமைத்திருந்தால் சிறுவர்களுக்கு நிச்சய்ம் பாடமாக அமைந்திருக்கும்.
வாணிராணி...
இந்த வரிசையில் நிச்சயம் வாணிராணி சீரியலையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். பிள்ளை நிலாவில் நடித்து வரும் சிறுமி தான் இதிலும் நடிக்கிறார். எதிர்பாராத விதமாக விபத்து ஒன்றைப் பார்க்க நேரிடும் இச்சிறுமிக்கு கதைப்படி பேசும் திறன் தற்காலிகமாக நின்று விடுகிறது.
மனவருத்தத்தோடு பள்ளி செல்லும் சிறுமியை, சக மாணவி ஒருவர் சகட்டுமேனிக்கு கிண்டல் செய்கிறார். இது பாதிக்கப்பட்ட மாணவி பற்றி பார்வையாளர்களுக்கு பரிதாபத்தைக் கூட்டுவதற்காக வைக்கப்படும் காட்சி எனத் தெரிந்தாலும், அவரைக் கிண்டல் செய்யும் சகமாணவியும் அதே வயதுக்காரர் தான் என்பதை மறந்து விடக் கூடாது.
வில்லியாகக் காட்டப்படும் மாணவி வாய் பேச முடியாமல் தவிக்கும் மாணவியிடம் சென்று சகட்டு மேனிக்கு டயலாக் பேசுகிறார். அவரது தோரணையே ‘நாங்கெல்லாம் ரவுடியாக்கும்' என்பது போல் தான் உள்ளது.
நிஜ வாழ்க்கையில் இருப்பதைத் தான் படத்தில் காட்டுகிறார்கள் எனக் கூறிய காலங்கள் போய், இன்று படங்களைப் பார்த்துத் தான் சில பிஞ்சுகள் பழுத்து விடுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
பள்ளியில் தற்கொலை செய்து கொண்ட சிறுமி, கடத்தல் நாடகம் ஆடிய சிறுவர்கள், தனியாக பட்டணம் கிளம்பும் சிறுமிகள் ஆகியோரை மனதில் கொண்டாவது இது போன்ற காட்சிகளை வைக்கும் இயக்குநர்கள் இனி வரும் காலங்களில் மாறினால் வருங்கால சந்ததிக்கு நலம் பயக்கும்.