Wednesday, September 24, 2014

மின்சாரம் தாக்கிய பெண்ணை 72 மணிநேரம் மண்ணுக்குள் புதைத்து வைத்து சிகிச்சை..!

உத்தரபிரதேச மாநிலத்தில் மின்சாரம் தாக்கிய பெண்ணை 72 மணிநேரம் மண்ணுக்குள் புதைத்து வைத்து கிராம மக்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் பிலிபெட் மாவட்டம் சுக்தாபூரை சேர்ந்த பெண் ராம் காலி பிரஜாபதி. பிரஜாபதியை கடந்த ஞாயிறு அன்று மாலை மின்சாரம் தாக்கியுள்ளது. அவர் உணர்வற்ற நிலையில் இருந்துள்ளார். இதனையடுத்து கிராம மக்கள் அவரை மண்ணுக்குள் புதைத்து வைத்துள்ளனர். பெண்ணின் தலையை மட்டும் விட்டுவிட்டு பிற பகுதிகளை மண்ணுக்குள் புதைத்தனர். நேற்று காலை வரையிலும் பெண் மண்ணுக்குளே வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான செய்திகள் அப்பகுதியை சேர்ந்த மீடியாக்களில் பரவியுள்ளது. ஜெய்ராம் ரவுத் என்ற கிராமவாசி இந்த செய்தியை மீடியாவிற்கு தெரிவித்துள்ளார்.

ஞாயிறு அன்று பெண்ணை மின்சாரம் தாக்கியது. பின்னர் அவர் உணர்வற்ற நிலையில் இருந்தார். செவ்வாய் கிழமை காலை அவரது உடலில் அசைவுகள் ஏற்பட்டதை அடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தோம். என்று அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே மீடியாக்களில் செய்தி வெளியானதை அடுத்து போலீசுக்கு பயந்து கிராம மக்கள் பெண்ணை மண்ணுக்குள் இருந்து எடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கூறுகையில், இது போன்று நாங்கள் நிறைய பேர்களுக்கு சிகிச்சை அளித்துள்ளோம். இது எங்களுக்கு புதியது இல்லை. நாங்கள் அவரது உயிரை காப்பாற்றிய பின்னர் மருத்துவமனையில் அனுமதித்தோம். என்று கூறியுள்ளா.ர்

ஏற்கனவே நாங்கள் இதுபோன்று சிறுவன் ஒருவனுக்கு சிகிச்சை அளித்தோம். அவன் தற்போது நன்றாக உள்ளான். மின்சாரம் தாக்கியவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு இந்த முறையே சரியானது. என்று அவர் கூறியுள்ளார். இது மிகவும் தவறானமுறை என்றும் பாதிக்கப்பட்ட பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாலிவுட் வாய்ப்பை நானாக தேடிப் போக மாட்டேன் - சமந்தா..!

இந்திய சினிமாவில் எந்த மொழியில் நடித்தாலும், அவர்களின் அல்டிமேட் இலக்கு பாலிவுட்டாகத்தான் இருக்கும். இந்திப் படங்களின் மார்க்கெட், மவுசு, அங்கு புழங்கும் பணம் அப்படி. ஆனால் அங்கு காலூன்றுவது அத்தனை சுலபமில்லை. வலுவான சினிமா பின்னணி, பெரிய இயக்குநர்கள் ஆதரவெல்லாம் தேவை.

தென் இந்திய சினிமாவிலிருந்து அசின், இலியானா, த்ரிஷா, காஜல் அகர்வால், ஸ்ருதி ஹாஸன், தமன்னா உள்ளிட்டோர் இந்திக்குப் போனார்கள். இவர்களில் ஸ்ருதி மட்டும் உள்ளே வெளியே என்ற லெவலில் நடித்துக் கொண்டிருக்கிறார். மற்றவர்களுக்கு பெரிய ப்ரேக் இதுவரை கிடைக்கவில்லை. அசினுக்கு முதல் படம் ஓடியதோடு சரி. தமன்னா நடித்தவை அடுத்தடுத்து ப்ளாப் லிஸ்டில் சேர்ந்துவிட்டன.

அடுத்து சமந்தாவும் பாலிவுட்டுக்கு போகப் போகிறார் என்று தகவல்கள் வெளியாகின. சமீபத்தில் அவர் நடித்து வெளியான ரபாசா நல்ல வசூலைக் குவித்தது. எனவே சம்பளத்தையும் ஏற்றிவிட்டார். இந்த வெற்றி தந்த கையோடு பாலிவுட் போவார் சமந்தா என்று வந்த செய்திகளை அடியோடு மறுத்துள்ளார்.

எனக்கு தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களே போதும். கைவசம் நல்ல படங்கள் உள்ளன. இந்திப் படம் வேண்டும் என்று நானாக தேடிப் போக மாட்டேன். ஒருவேளை அதுவாக அமைந்தால் பார்க்கலாம், என்றார்.

இப்போது தமிழில் கத்தி, பத்து எண்ணுறதுக்குள்ள, எண்ணி ஏழு நாள் போன்ற படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் இரண்டு படங்களில் நடிக்கிறார்.

திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை - சுருதிஹாசன்..!

திருமணத்துக்கு முன் முதலில் குழந்தை பெற்றுக் கொள்வேன். அதன் பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சுருதிஹாசன் கூறினார்.

சுருதிஹாசன் டெலிவிஷன் பேட்டியொன்றில் விவாகரத்து செய்துகொண்ட தனது தந்தை கமலஹாசன், தாய் சரிகா பற்றி மனம் திறந்து பேசினார். அவர் கூறும்போது, ஒரு தம்பதியாக என் தாயும் தந்தையும் அழகான ஜோடியாக இருந்ததை நான் பார்த்து இருக்கிறேன். ஒருவருக்கொருவர் நிறைய அன்பு செலுத்தினார்கள். சந்தோஷமான குடும்பமாக இருந்தோம்.

தாய்–தந்தை போலவே நானும் சமூக வரையறைகளுக்குள் சிக்க விரும்பவில்லை. திருமணத்துக்கு முன்பு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கு பிறகுதான் திருமணமே செய்து கொள்வேன் என்றார்.

சுருதிஹாசன் மும்பையில் தற்போது புது வீட்டுக்கு குடிபெயர்ந்துள்ளார். ஏற்கனவே வாடகைக்கு குடியிருந்த வீட்டில் அவர் மேல் தாக்குதல் நடந்தது. பின்னர் தாக்கியவன் கைது செய்யப்பட்டான். இதையடுத்து அந்த வீட்டை காலி செய்து விட்டு தோழி வீட்டில் தங்கினார்.

அதன் பிறகு அந்தேரி பகுதியில் அபார்ட்மென்ட்டில் 2 படுக்கையறையுடன் கூடிய வீடு ஒன்றை சொந்தமாக விலைக்கு வாங்கினார். அங்கு ஓரிரு மாதங்களாக உள் அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்டன. நவீன இருக்கைகள், கட்டில் ஷோபாக்களும் வாங்கி போடப்பட்டன. அந்த பணிகள் முடிவுற்ற நிலையில் சுருதிஹாசன் அவ்வீட்டில் பால் காய்த்து குடியேறியுள்ளார்.

அத்துமீறுகிறதா ஆன்லைன் கலாய்ப்புகள்... 'வித்தை'களை இறக்கி 'டியூன்' ஆக வேண்டியது யார்..?

"இதுவரைக்கும் கத்துகிட்ட மொத்த வித்தையும் முழுசா இறக்கனும்னு நினைச்சிட்டு இருக்கேன்.

நானே அப்படி டியூன் ஆகிருக்கேன்"

சென்ற வருடம் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் இந்த வார்த்தைகளை சொல்லும்போது, இயக்குநர் லிங்குசாமி சத்தியமாக அது இப்போது இந்த அளவில் பிரபலமாகும் என நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

கடந்த சில நாட்களாக, தமிழ் கூறும் சமூக வலைதளங்களில் இந்த வார்த்தைகள்தான் கன்னா பின்னா ஹிட். தமிழ் சினிமா பிரியர்கள் அனைவரும் தங்களால் முடிந்தவரை இதற்கான வெவ்வேறு அர்த்தங்களை கற்பித்து, அடுத்தவர்களை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

முதல் பத்தியில் விவரம் புரியாதவர்களுக்கு: சென்ற வருடம் ஒரு தொலைக்காட்சி பேட்டி ஒன்றில், அஞ்சான் படம் எப்படி இருக்கும் என தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு, இயக்குநர் லிங்குசாமி தந்த பதில்தான் முதல் இரண்டு வரிகள்.

அஞ்சான் திரைப்படம் வெளியாகி, அதற்கு கிடைத்த விமர்சனங்கள் அனைவரும் அறிந்ததே. திடீரென எவருக்கோ இந்த பேட்டி நினைவில் வர, அவர் அதை எடுத்துப் பகிர, அதைப் பார்த்து ரசித்த, அஞ்சான் திரைப்படத்தால் திருப்தி அடையாத ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பகிர, ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் அந்த வார்த்தைகள் ட்ரெண்டிங் ஆக, ஐ படத்தில் 'மெர்சலாய்ட்டேன்..' என்று வந்த பாடல், 'டியூன் ஆயிட்டேன்..' என ரீமிக்ஸ் ஆக, மீம் (Meme) எனப்படும் நையாண்டி புகைப்பட வாக்கியங்கள் புதிது புதிதாக முளைக்க, இப்படி அந்த பேட்டியில் சொன்ன வார்த்தைகள் கட்டுக்கடங்காமல் பிரபலமாகிவிட்டன. வேறு எப்படியெல்லாம் அந்த வார்த்தைகளை வைத்து நையாண்டி செய்யலாம் என இதற்கென்றே பிரத்தியேகமாக பல ஃபேஸ்புக் குழுக்களும் உருவாகி 'ரூம் போட்டு' யோசித்து வருகின்றன.

திரைப் பிரபலத்தை சமூக வலைதளங்களில் கிண்டலடிப்பது ஒன்றும் புதிதல்ல. டி. ராஜேந்தர், பவர் ஸ்டார் என்று அழைக்கபடும் சீனிவாசன், சாம் ஆண்டர்சன் எனப் பலரும் தொடர்ந்து ரசிகர்களின் நையாண்டிக்கு ஆளாகி வருகின்றனர். ஹாலிவுட்டிலும் கூட, நட்சத்திரங்கள் இப்படி பேட்டியில் ஏதாவது ஏடாகூடமாகச் சொல்லி மாட்டிக் கொண்டால் அதை வைத்து அவர்களை கிண்டலடிப்பது வழக்கம்.

ஆனால் லிங்குசாமியின் பேட்டி ஒளிபரப்பாகி ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு, அஞ்சான் திரைப்படம் வெளியான ஒன்றரை மாதங்கள் கழித்து, ஏன் இந்த கேலியும், நக்கலும் என பலருக்குப் புரியவில்லை. இணையத்தில் இருக்கும் ஒரே வசதி, பெருந்திரளாகச் சென்று கலவரம் செய்வதைப் போல, இதை யார் தொடங்கியது என்று யாருக்கும் தெரியாது.

அஞ்சான் திரைப்படம் தந்த ஏமாற்றத்தால் ஒரு பக்கம் பலரும் இதை சந்தோஷமாக அணுகினாலும், ஒரே ஒரு நபரை இப்படி குறி வைத்து கலாய்ப்பது நியாயம்தானா என லிங்குசாமிக்கு ஆதரவாக அனுதாப அலைகளும் வீசிக் கொண்டுதான் இருக்கின்றன.

இதற்கு காரணம் ரசிகர்களுக்கு லிங்குசாமியின் மீது இருந்த மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏமாற்றமாய்ப் போனது தான் என சொல்லப்பட்டாலும், இது சரியான போக்கு தானா?

இணையவாசிகளின் கற்பனை வளம் செழித்து வளர்ந்தோங்குவது ஒருபுறம் இருந்தாலும், சில பல கலாய்ப்புகள் அத்துமீறி தனி மனிதத் தாக்குதல்கள் / கிண்டல்களாய் இருப்பதை அனுமதிப்பது எப்படி?

சமூக வலைதளங்களில் படைப்பாளிகளையும் படைப்புகளையும் கலாய்த்தல் என்பது இயல்பானதே. ஆனால், அதைத் திட்டமிட்டு ஓர் இயக்கமாக செயல்படுத்துவதால் பிற்காலத்தில் ஏற்படும் விளைவுகள் எப்படிப்பட்டதாய் இருக்கும்..?

காப்பகம்