Monday, August 12, 2013

தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்ட வரலாறு!




ஆயிரம் ஆண்டுகளாக தஞ்சையில் தமிழரின் பெருமையை பறை சாற்றி கொண்டு உயர்ந்து நிற்கிறது தஞ்சை பெரிய கோயில்...
இது எப்படி சாத்தியமானது ? ? ?
கோயில் எப்படி கட்டப்பட்டது ????


            தஞ்சைப் பெருவுடையார் கோயில் அல்லது பிரகதீசுவரர் கோயில்  அல்லது தஞ்சை பெரிய கோயில் என அழைக்கப்படும் இது இந்து சமயக் கோயில் மேலும் தமிழரின் பாரம்பரியச் சின்னம் ஆகும்.




10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ஆண்டகாலத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்ட இக் கோயில், 17, 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம் ஆகியது.




இத்தகையதொரு பிரம்மாண்டமான கோயிலை சுமார் 7 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது.

இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவன் ராஜராஜன்.





தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆயினும் இவற்றில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. கோபுரத்தின் உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே சோழர் கால அளவுகளின்படி கோயிலின் திட்டமிடப்பட்ட உயரம் என்ன, கடைக்கால்கள் எந்த அடிப்படையில் திட்டமிடப்பட்டன. கட்டப்பட்டன, பாரந்தூக்கிகள் முதலியன இல்லாத ஒரு காலத்தில் சுமார் 60 மீட்டர் உயர கோபுரம் எவ்வாறு கட்டப்பட்டது.

இந்த கேள்விகளுக்கு விடைபெற நாம் ராஜராஜன் காலத்தில் கையாளப்பட்ட அளவு முறைகளைப் பற்றிச் சற்று தெரிந்து கொள்ளவது அவசியம்..

பெரிய கோயில் அளவுகோல்

எட்டு நெல் கதிர்களை அகலவாட்டில் ஒன்றோடொன்று நெருக்கமாக அமைத்து அந்த நீளத்தை விரல், மானாங்குலம், மானம் என்று அழைத்தனர். இருப்பத்தி நான்கு விரல் தஞ்சை முழம் என்று அழைக்கப்பட்டது.

தற்போதைய அளவின்படி ஒரு விரல் என்பது 33 மில்லி மீட்டராகும். கருவறை வெளிச்சுவர்களில் காணப்படும் கலசத்தூண்களின் அகலம் 10 விரல்களாகும், அதாவது 0.33 மீட்டர் ஆகும். இதுவே தஞ்சாவூர் பெரிய கோயிலின் அடிப்படை அளவாகும். இதனை நாம் அலகு என்று குறிப்பிடலாம். இந்த அடிப்படையில் விமானத்தின் திட்டமிட்ட உயரம் 180 அலகுகள். அதாவது சுமாராக 59.40 மீட்டர்.



சிவலிங்கத்தின் உயரம் சரியாக 12 அலகுகள்.




               
                  கருவறையின் இரு தளங்களிலும் விமானத்தின் பதின்மூன்று மாடிகளும் சேர்ந்து 15 தளங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அலகுகளின் அடிப்படையில் கருவறை 24 அலகுகள் கொண்ட ஒரு சதுரம். கருவறையின் உட்சுவரும், வெளிச்சுவரும் முறையே 48 அலகுகள், 72 அலகுகள் அளவுடைய சதுரங்களாகும்.

பிரகாரத்தில் நாம் காணக்கூடிய விமானத்தின் அடிப்பகுதி 90 அலகுகள். இந்த அடிப்படையில் விமானத்தின் கடைக்கால் 108 அலகுகள்  பக்க அளவு கொண்ட பெரிய சதுரமாக இருக்கலாம் என யூகிக்க முடிகிறது. சரியான அளவுகள் தெரியவில்லை.




இந்த கடைக்கால் மிகக்குறைந்த ஆழத்திலேயே, அதாவது 5 அலகுகள் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. கோயில் வளாகத்தின் அருகே பாறை தென்படுகிறது. ஆயினும் சுமார் 42,500 டன் எடையுள்ள விமானத்தை பாறையின் தாங்கு திறனைச் சோதித்துப் பார்க்காமல் கட்டியிருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது.




சுமார் 1.2 மீ சதுரத்தில்  0.6 மீ அளவு கற்களை ஒவ்வொரு அடுக்கிலும் நான்கு கற்கள் என்ற கணக்கில் அடுக்கிக் கொண்டே போய் பாறையில் எப்போது விரிசல்கள் விழுகின்றன என்பதைக் கவனித்த பின்னரே கடைக்காலின் அளவுகள் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகள் இக்கோயில் நிர்மாணித்த சிற்பிகள் மேற்கொண்டனர் என்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.


பெரிய கோயிலின் விமான வடிவமைப்பு




180 அலகுகள் உயரம் கொண்ட கோயில் விமானம் எவ்வாறு கட்டப்பட்டது என்பது குறித்த குறிப்புகள் எதுவுமில்லை. சில சாத்தியக் கூறுகள் மட்டுமே பரிசீலிக்கலாம். கருவறையின் உட்சுவருக்கும், வெளிச்சுவருக்கும் இடையே 6 அலகுகள் கொண்ட உள் சுற்றுப்பாதை உள்ளது. இந்த இடைவெளி படிப்படியாகக் குறைக்கப்பட்டு, சுமார் 20 மீட்டர் உயரத்தில் இரு சுவர்களும் இணைக்கப்பட்டன. இங்கிருந்து விமானம் மேலே எழும்புகிறது. சுவர்களை இணைத்ததன் மூலம் 72 அலகுகள் பக்க அளவு கொண்ட (சுமார்  24 மீ) ஒரு பெரிய சதுர மேடை கிடைக்கப் பெற்றது. விமானம் 13 தட்டுகளைக் கொண்டது. முதல் மாடியின் உயரம் சுமார் 4.40 மீட்டர், பதின்மூன்றாவது மாடியின் உயரம் சுமார் 1.92 மீ. பதின்மூன்று மாடிகளின் மொத்த உயரம் 32.5 மீட்டராகும்.




 பதின்மூன்றாவது மாடியின் மேல் எண்பட்டை வடிவ தண்டு, கோளம், கலசம் மூன்றும் உள்ளன. இதன் மொத்த உயரம் 30 அலகுகள். அதாவது பிரகாரத்திலிருந்து விமானத்தின் 13-வது மாடி சரியாக 150 அலகுகள் (50 மீ) உயரத்தில் உள்ளது. தஞ்சை சிற்பிகள் இந்த உயரத்தை மூன்று சம உயரப் பகுதிகளாகப் பிரித்துள்ளனர்.


அதாவது, கருவறை மேல் மாடி உயரம் 50 அலகுகள், விமானத்தின் முதல் மாடியிலிருந்து 5-வது மாடி வரை 50 அலகுகள், விமானத்தின் 6-வது மாடியிலிருந்து 13-வது தளம் வரை 50 அலகுகள். இந்த மூன்று பகுதிகளுக்கும் அதன் உயரத்துக்கேற்ப தனித்தனியான சார அமைப்புகள் அமைக்கத் திட்டமிட்டிருந்தனர் என்று தெரிகிறது.


சாரங்களின் அமைப்பு




கருவறைக்கு ஒரு கீழ்தளமும் ஒரு மேல் தளமும் உள்ளன. மேல் தளத்தின் கூரை சரியாக 50 அலகுகள் (16.5 மீ) உயரத்தில் உள்ளது. இங்கு தான் முதல்கட்ட சாரம் - ஒரு சாய்வுப் பாதை முடிவுற்றது. ஒன்றுக்கு மேற்பட்ட சாய்வுப் பாதைகள் (தஅஙடந) உபயோகப்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது. இவை பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்பட்டன. சாய்வுப் பாதையின் இருபக்கங்களிலும் கற்கள் - சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்டப்பட்ட உறுதியான சுவர்கள் இருந்தன. இந்த இரு சுவர்களுக்கு நடுவில் உள்ள பகுதி (4 அல்லது 5 மீ அகலம் இருக்கலாம்) பெரிய மற்றும் சிறிய உடைந்த கற்கள், துண்டுக் கற்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்டன. மண்ணால் அல்ல. யானைகள் செல்வதற்கு ஏற்ற மிதமான வாட்டத்துடன் அமைக்கப்பட்டன. மழைநீர் வடியவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலின் திருமதில் சுவரும் (சுமார் 1 மீ குறுக்களவு கொண்டது) இதே பாணியில் கட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.






இரண்டாவது கட்டமாக 50 முதல் 100 அலகுகள் வரை (சுமார் 16.5 மீட்டரிலிருந்து 33 மீட்டர் உயரம் வரை) விமானம் கட்டுவதற்குச் சற்று மாறுபட்ட சாரம் தேவைப்பட்டது. இது அமைப்பில் சீனாவின் நெடுஞ்சுவர் போல் ஓர் அரண் மதில் சுவர் அமைப்பாக செங்குத்தான இரு சுவர்களையும், அதன் நடுவே முதல்கட்ட சாரத்தைப் போல் யானைகள் செல்வதற்கேற்ற வழித்தடத்தையும் கொண்டிருந்தது. விமானத்தின் நான்கு பக்கங்களையும் சுற்றிச் செல்லுமாறு அமைந்திருந்த இந்த அரண் மதில் சாரம், கோபுரம் உயர உயர தானும் உயர்ந்து கொண்டே சென்றது. முதல் கட்ட சாய்வுப் பாதையின் இறுதிகட்ட மேடைச் சுவர்களுடன் இந்த இரண்டாம் கட்ட சாரத்தின் சுவர்கள் இணைக்கப்பட்டிருந்தன. இந்த கட்டுமானத்தின் அமைப்பில் மிகுந்த கவனம் தேவைப்பட்டது. இதுமட்டுமன்றி இந்த அரண் சுவர்களுக்கு நிறைய கற்களும் தேவைப்பட்டன. முதல் கட்ட சாரங்களில் சில கலைக்கப்பட்டு, அவற்றின் கற்கள் முதலியவை செங்குத்தான அரண் சுவர்கள் கட்டுவதற்கு உபயோகப்படுத்தப்பட்டன என்று நம்புவதற்கு இடமிருக்கிறது.





இறுதிகட்டமாக, 100 முதல் 150 அலகுகள் வரையிலான விமானப் பணிகளுக்காக மரத்தினாலான வலுவான சாரம்  அமைக்கப்பட்டது. சவுக்குக் கழிகள், சணல் கயிறுகள் தவிர்க்கப்பட்டன. தரமான நல்ல உறுதியான மரங்களிலான தூண்கள் , நேர்ச்சட்டங்கள் , குறுக்குச் சட்டங்கள் அனைத்தும் முட்டுப் பொருத்துகள்  மூலம் இணைக்கப் பெற்றன. இவை இரண்டாவது கட்ட மதில் அரண் சாரத்தில் நிலை நிறுத்தப்பட்டன. செங்குத்தான தூண்களும் நேர் சட்டங்களும் மேடைகளை விரும்பிய விதத்தில் அமைத்துக் கொள்ள
உதவின.


அரண் மதில் உட்சுவரிலிருந்து மேடைகளுக்குக் கற்களையும் சிற்பிகள் மற்றும் ஏனைய தொழிலாளர்களையும் எடுத்துச் செல்ல சாய்வுப் பாதைகள் அமைப்பது இந்த முறையில் எளிதாகவிருந்தது.






மேலே கூறிய அமைப்பு ஒரு சாத்தியக் கூறு. இரண்டாவது கட்ட அரண் மதில் சுவர் சாரத்துக்கு முதல் கட்ட சாய்வுப் பாதைகள் கலைக்கப்பட்டு, அதன் கற்கள் பயன்படுத்தப்பட்டன. விமானக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவுற்றதும் சாரங்கள் கலைக்கப்பட்டு, கற்கள், மண், மரம் அனைத்தும் கோயில் மதில் சுவர், மதில் சுவர் உள்புறத்தில் காணப்படும் துணைக் கோயில்கள், நுழைவுவாயில்கள், சாலைகள் அமைப்பது முதலிய கட்டுமானங்களில் எவ்வித சேதாரமுமின்றி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. !!



*முன் தாழ்வாரம், நந்தி மண்டபம், கருவூர்த் தேவர் கோயில, அம்மன் கோயில், சுப்பிரமணியர் கோயில் ஆகியன பிற்காலங்களில் கட்டப்பட்டன.
 


 
*தஞ்சைப் பெரியகோவிலில் உள்ள நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இதன் உயரம் 14 மீ, நீளம் 7 மீ, அகலம் 3 மீ ஆகும். நந்தி மண்டபம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது
 

*1010ம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010வது ஆண்டோடு 1000 வது பிறந்தநாளை (சதய விழா) அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதியால்  சிறப்பாக கொண்டாடப்பட்டது 
 

 
*1987ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது[3]

*மத்திய அரசு 1995ம் ஆண்டில் மாமன்னர் ராஜராஜ சோழன் உருவம் பதித்த 2 ரூபாய் தபால் தலையை வெளியிட்டது.

*தஞ்சை பெரிய கோவிலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மத்திய அரசு சார்பாக கடந்த 1954&ம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி  1000 நோட்டை வெளியிட்டது. அதில் தஞ்சை பெரிய கோவில் எனப்படும் பிரகதீசுவரர் ஆலயத்தின் வியத்தகு தோற்றம் பதிக்கப்பட்டது.
 
 


உலகின் மிக பெரிய வழிபாட்டு தளம்!




உலகின் பெரிய வழிபாட்டு தளம் என்ற பெருமை பெற்ற கோவில்  "கம்போடியா" நாட்டில் உள்ள "அங்கோர் வாட்"(ANGKOR WAT) கோயில்.




 
இந்த கோவிலை கட்டியது யார் தெரியுமா? "இரண்டாம் சூரிய வர்மன்" என்னும் தமிழ் மன்னன். இரண்டாம் சூர்யவர்மன் கம்போடியாவை  கைப்பற்றியவுடன்(1113 – 1150) இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான்.இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயல்பட்டது.




 . 
"விஷ்ணு" கடவுளுக்காக கட்டப்பட்ட இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே " பெரியது "! !.




 
இந்த கோயிலை ஒரு கலை பொக்கிசம் என்றே கூறலாம்,திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர் . இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் !!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ), இதன் ஒரு பக்க  சுவர் நீளம் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள் !!!





 
இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட "சூர்யவர்மன்" இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது .இதன் பின்னர் ஆறாம் "ஜெயவர்மன்" கைக்கு மாறியது .பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக "புத்த" வழிபாடு தளமாக மாற்றப்பட்டு.இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது !.பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது , அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதைவடையத்தொடங்கியது.





 
பின்னர் 1586 ஆம் ஆண்டு " António da Madalena " என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது ,அதை அவர் " is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of." என்று கூறியுள்ளார்.


பின்னர் Henri Mouhot' என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெளியிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது .அவர் அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged." என்று குறிப்பிட்டுள்ளார் !!!!.



 
இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார்.ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.


 


 இதில் இன்னொரு சிறப்பு "கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் "தேசிய சின்னமாக" பொறிக்கப்பட்டுள்ளது !. 





 
2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை !! வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்த்ல் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது !!






அங்கர் வாட் என்பது பிற்காலத்தில் இட்ட பெயரே சூரிய வர்மன் இந்த கோவிலுக்கு  இட்ட பெயர் வரலாற்றில் இல்லை அல்லது மறைக்கபட்டிருக்கலாம் 




உலகின் மிக பெரிய ஹிந்து கோவில் என அறிவித்தது "earth ஒப்செர்வடோரி"  என்ற நாசாவின் ஒரு அமைப்பு.




 இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை ! குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே !!
தமிழர்கள் பற்றிய தேடல் தொடரும்!!!!!



இந்த அறிய பொக்கிஷத்தை google map இல் காண


http://maps.google.co.in/mapshl=en&psj=1&bav=on.2,or.r_gc.r_pw.r_qf.&biw=1280&bih=675&um=1&ie=UTF8&q=angkor+wat&fb=1&gl=in&hq=angkor+wat&cid=0,0,839606976138454449&sa=X&ei=4FwrULCyEfCziQf3zYC4Bg&ved=0CKMBEPwSMAk

இதுவா அம்மா உன் தேசம்? சுதந்திர தின கவிதை!



அறுபத்திஐந்து வயது  அன்னை  இன்று
அரங்க சூதாடடத்தில்  பலியாடு!
அண்ணல் கண்ணன்வரும் வரைக்கும்
அக்கிரமக்காரர்களின் விளையாட்டு.


அரசியல்வாதிகள் அளக்கும் பேச்சில்
அடிக்கடி வருவது திருநாடு!
ஆயினும் மக்கள்  வறுமைக்கோட்டில் அலைந்து
கையில் ஏந்துவதென்னவோ திருவோடு!


ஒருமைப்பாடு என்பது எல்லாம்
ஒடுங்கிப் போனதில் வந்தது குறைபாடு.
ஓசைபடாமல் சத்திய தர்மம்
ஓடிச் சென்றதென்னவோ சுடுகாடு!


வழிப்பறி கொள்ளை படுகொலைகள்
வீதி நடுவினில் மதுக்கடைகள்
அடிக்கடி நடக்கும் அராஜகங்கள்
அடியோடு புதையும்  முழு நிஜங்கள்.


தர்மத்தலைமையை கைகேயியைப்போல்
துரத்தி் அனுப்புவர் வனவாசம்.
தாயே உன்னைக்காணக்கண்ணும் பனிக்கிறதே
இதுவா அம்மா உன் தேசம்?


ஊழல்செய்யும் பேர்களுக்கு
உற்சாகமாய்   தருவர் பரிவட்டம்!
உண்மைபேசும்  அப்பாவிகளோ
அழிந்தே போவார் தரைமட்டம்.


ஒடுங்கி அடங்கிக் கைகுவித்தே
ஒருநாள் கேட்பான் தன் ஓட்டு
பதவி கிடைத்த உடனேயே
பாவி வைப்பான் மக்களுக்கு வெடிவேட்டு.


பாவியைவிடவும் அப்பாவிதானே பொதுமக்கள்?
பொய்யைப்பேசி புரட்டு செய்பவர் தான் தலைமக்கள்!
நாக்கே வாயை விழுங்குவதா நகமே விரலைச்சுரண்டுவதா?
போக்கே சரியா தலைமையினில்
போய்க்கொண்டிருக்கிறதே நம் நாட்கள்!


ஏய்ப்பவர் அமரும் கோபுரத்தை
இடித்துதள்ள வேண்டும் ஓர் புறத்தில்.
மேய்ப்பவன் புலியாய் இருந்துவிட்டால்
மேயும் ஆடுகள் பலியாகும்


சிறுமைகளுக்கும் சில்லறைகளுக்கும்
சிறப்பு சேர்க்க விடுவோமா
பெருமைக்குணங்கள் கொண்ட பழம்
பெரும்தலைவர்வழியில் வாழ்வோமா!


தியாகிகள் உரைத்தது வந்தே மாதரம்!
அரசியல் திருடர்கள் உரைப்பது
வந்து ஏமாத்தறோம்!
ஏய்த்துப்பிழைக்கும்  ஈனர்களை
சாத்தித்துரத்த இளைஞர் அணி
சடுதியில்வந்தால் நாட்டிற்கு
சட்டெனக்கிடைக்கும் பெருமை இனி!

இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!




தாயின் மணிக்கொடி பாரீர்!- அதைத்தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!


எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்  எல்லாரும் இந்திய மக்கள்,

எல்லாரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை எல்லாரும் இந்நாட்டு மன்னர் – நாம் எல்லாரும் இந்நாட்டு மன்னர் – ஆம் எல்லாரும் இந்நாட்டு மன்னர் -

ஆன்ம வொளிக்கடல் மூழ்கித் திளைப் பவர்க்கு அச்சமும் உண்டோ  என மனத்திற்கு ஊர்சாகமூட்டும் பொன்னாள் சுதந்திரத் திருநாளே!

நெஞ்சு பொறுக்கு திலையே – இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்,

கொஞ்சமோ பிரிவினைகள்?

“தண்ணீர் விட்டோ வளர்த்தோம்சர்வேசா – இப்பயிரை கண்ணீரால் காத்தோம்!” -என்ற பாரதியின் வரிகளிலே நம்முன்னோர்கள் பெற்ற சுதந்திரத்தின் மதிப்பை அறியலாம்.

1947ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி இரவுஉலகமே உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் இந்தியா சுதந்திரத்தையும் புது வாழ்வையும் பெற்று புதிய சகாப்தம் துவக்கியது. வரலாற்றில் மிகவும் அரிதானதருணம்..

நீண்ட காலம் அடைபட்டுக் கிடந்த ஒரு நாட்டின் மறுமலர்ச்சி  புத்துயிர் பெற்றது..


நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பெற்ற சுதந்திரத்தை பேணிக் காக்கவும், நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்லவும், மக்களின் 

 

சேவைக்காவும், மனிதநேயத்திற்காகவும் அர்ப்பணித்து அயராது உழைக்கும் சக்தியை சுதந்திர தினம் வழங்குகிறது..


அநீதிகளைக் கண்டு, முறைகேடுகளைக் கண்டு கோபம் கொள்ள வேண்டும்;இது நமது நாடு; இதன் ஒவ்வொரு வளர்ச்சியும் தாழ்ச்சியும் நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் பிரதிபலிக்கும்..

நமது நாட்டின் அரசியல், பொருளாதாரம், பண்பாடு , சமூக வாழ்க்கை முறையை புற்றுநோயைப்போல் பாதித்து வரும் ஊழலை உடனடியாக ஒழிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

அரசு, பாராளுமன்றம், நீதித்துறை மற்றும் சமூக அமைப்புகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து அதற்கான வழிமுறைகளை கண்டறிய வேண்டியது அவசியம்…

கிராமங்கள் தான் இந்தியாவின் முதுகெலும்பு’

“நாட்டுப்பற்று மிக்க நூறு இளைஞர்களைத் தாருங்கள்;இந்தியாவை உயர்த்திக் காட்டுகிறேன்” என்று விவேகானந்தர்கூறினார்.

இளைஞர்களால் ஒரு செயலை எளிதாகவும், சிறப்பாகவும் செய்து முடிக்க முடியும். இதனாலேயே விவேகானந்தர் ஆணித்தரமாகஇளைஞர் சக்தியை நம்பினார்.

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் இந்தியாவை அனைத்து துறையிலும் உயர்த்தி வருகின்றனர்.

இந்த எழுச்சியால், இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது
வளர்ச்சியடைந்த நாடுகளே பொருளாதாரச் சிக்கலில் மாட்டிக் கொண்டன.
இந்தியா இதிலிருந்து தப்பித்து சீரான வளர்ச்சி அடைந்து வருவது, உலகநாடுகளை வியப்படையச் செய்தது.

இந்தியர்களின் கடின உழைப்பு தான், வளர்ச்சிக்கு காரணம்.

இந்திய மக்கள்தொகையில் இளைஞர்கள் அதிகரித்திருப்பதே நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. இந்திய மக்கள் தொகையில் ஏறத்தாழ 50 சதவீதம் பேர் இளைஞர்கள். இந்த இளமைத் துடிப்பு எந்த நாட்டுக்கும் இல்லை.
நம் நாடு உலகில் உயர்ந்தது என உறுதியாய் நம்புவோம்;

நாட்டைச் சுரண்டும் தீய சக்திகளை அடையாளம் கண்டு அப்புறப்படுத்துவோம்;
நாட்டின் வளர்ச்சிக்கு உழைப்போரை போற்றுவோம்.

மனதில் உறுதி வேண்டும்! சுதந்திர தினம் - சிறப்புக் கட்டுரை!









    ஆகஸ்டு 15, 2013, இந்தியாவின் 67 வது சுதந்திர தினம். ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினக்கொண்டாட்டத்தின் போது அனைத்துத் தலைவர்களும் சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு, சுதந்திரதின சிறப்பு உரையாற்றுவது வழக்கம். பாரதப் பிரதமர் திரு மன்மோகன் சிங், இந்தியாவின் 67 வது தனது சுதந்திர தின சிறப்பு உரையை ஆற்ற இருக்கிறார். மற்ற தலைவர்களின் உரையைவிட, பிரதமரின் சுதந்திரதின சிறப்பு உரைக்கு மதிப்பு அதிகம் என்பதை அனைவரும் அறிவோம்.


அடிமைத் தளத்திலிருந்து இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நமது நாட்டின் வளர்ச்சியைப் பற்றி நாம் சிந்திக்கத் தவறுவதில்லை. செயற்கைக்கோள் அனுப்புவதில் நாம் மற்ற நாடுகளின் கவனத்தை நம் பக்கம் திருப்பி இருக்கிறோம். இதற்கு முழுமுதற் காரண கர்த்தாவாக விளங்கியவர் நமது முன்னாள் ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான டாக்டர் அப்துல் கலாம். தொடர்ந்து அவர் கொடுத்த ஊக்கத்தினால் இந்தத் துறையில் நாம் சிறந்து விளங்குகின்றோம். முன்பு இருந்ததைவிட இப்போது நம் இந்தியா, அணு ஆயுத உற்பத்தியிலும் முன்னேறியிருக்கிறது, உலக மக்கள் தொகை விகிதாச்சாரத்தில் நாம் இரண்டாவது இடத்தில் இருந்தாலும், இளைஞர்களின் கல்வி ஆர்வம் அதிகரித்திருக்கிறது. கிராமப்புற வளர்ச்சியில் மற்ற நாடுகளை விட அதிக அளவில் முன்னேற்றம் கண்டிருக்கிறது. அவ்வப்போது இயற்கைப் பேரழிவு ஏற்பட்ட போதிலும், உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருக்கிறது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சம்பந்தப் பட்ட விஷயங்களிலும் முன்னேற்றம் கண்டுள்ளது. சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவின் வளர்ச்சியை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டால், சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட தியாகிகளின் கனவு ஓரளவுக்கு நனவாகியிருக்கிறது என்றும், வல்லரசு நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் பெயர் இடம் பெற இன்னும் நாம் உழைக்க வேண்டியிருக்கிறது என்பதும் அறிவியல் அறிஞர்கள் தொடர்ந்து வலியுறுத்தும் வேண்டுகோளாகும்.



     இந்தியா சுதந்திரம் அடைந்து விட்ட பிறகு, அடுத்த பத்தாண்டுகளில் தொழில் துறையில் கண்ட வளர்ச்சி விகிதம், பின் வருகின்ற அடுத்தடுத்த பத்தாண்டுக்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளும் போது, அந்த வளர்ச்சி விகிதத்தின் அளவு வீழ்ச்சி நிலையில் தான் உள்ளது என்பது இந்திய அறிஞர்களின் கருத்து. அப்படி இருந்த போதும், சமூக முன்னேற்றத்தில் வளர்ச்சி கண்டுள்ளது. இந்த வளர்ச்சியைப் பொருளாதார வளர்ச்சியோடு ஒப்பிட்டுப் பார்த்தால், மற்ற நாடுகளைக் காட்டிலும் நாம் பொருளாதாரத்தில் சற்றுப் பின் தங்கியிருக்கிறோம் என்பதை அறிய முடியும். சுதந்திர தினத்தின் போது மட்டுமே, நமது நாட்டின் வளர்ச்சியை மட்டும் சொல்லிப் பெருமைப் பட்டுக் கொள்ளுகின்ற நம் நாட்டுத் தலைவர்கள், வளர்ச்சி அடையாத பல துறைகளை இன்னும் அடையாளம் காணமுடியவில்லை. வளர்ச்சி அடைந்த நாடுகளை இந்தியாவோடு ஒப்பிடும் போது பல துறைகளில் பின் தங்கி இருப்பதற்கு நாட்டை ஆளும் தலைவர்கள் எடுக்கும் தவறான முடிவுகளே காரணமாக அமைந்து விடுவதை நம் அனுபவத்தில் உணர்கிறோம்.



   “இந்திய மக்களாகிய நாம் மனித குலத்துக்குச் சேவை செய்ய நம்மை அர்ப்பணித்துக் கொள்வோம்” என்று விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித நேரு அவர்கள் ஆற்றிய உரை உலகின் தலைசிறந்த பேச்சுகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறதே தவிர, அதைக் கடைப்பிடிப்பவர்கள் இன்று இருக்கிறார்களா?… என்ற கேள்விக்கு விடை காண முடியவில்லை.


   இன்று சுதந்திரதின வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் அதே சமயத்தில், நம் நாட்டில் உள்ள தலையாய பிரச்சினைகளுக்கு இன்னும் நிரந்தரத் தீர்வு காணமுடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறோம். இந்தச் சுதந்திர நன்னாளிலாவது நாட்டில் நிலவும் பிரச்சினைகளையும், பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுகின்ற வழியையும் பற்றி சற்று நினைவு கூர்வோம்.


    வல்லரசு நாடுகளோடு நம் இந்தியாவை ஒப்பிட்டுப் பார்ப்பதோடு முடிந்து விடுகிறது. வல்லரசாவதற்கான வழியைப் பற்றி சிந்தித்துக் கொண்டே இருக்கிறோமே தவிர இன்று வரை இந்தியா வல்லரசாவதற்கு எடுக்கும் முயற்சிகள் பல தேக்க நிலையில் உள்ளது.


     சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்து, தேசியக் கொடியை ஏற்றி, சுதந்திரத்துக்காக ரத்தம் சிந்தியவர்களைப் பற்றி நாலு வார்த்தைகளைச் சொல்லி, இனிப்பு வழங்கி விட்டால் அன்றய சுதந்திரதினம் அன்றோடு மறக்கப்பட்டு விடுகிறது என்பதே இன்றைய உண்மை நிலை. சுதந்திரத்துக்கு முன் விடுதலைக்காகப் பாடுபட்ட தியாகிகளின் கனவுகள் எல்லாம் கடந்த 66 வருடங்களில் முழுவதுமாக நிறைவேற்றப் பட்டுள்ளதா?. என்ற கேள்விக்கு எவரும் இன்னும் பதில் சொல்ல முடியவில்லை. சுதந்திரம் அடைந்து 66 வருடத்திற்கு பின்னும் இந்த வினாக்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை என்றால் அதற்கான காரணம் என்னவென்று சிந்திக்க வேண்டிய அவசியம் ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் உண்டு.


   ஒவ்வொரு முறை சுதந்திர தினம் வரும் போது, கொடியேற்றும் விழாக்களைச் சீரும் சிறப்புமாகக் கொண்டாடுவதில் அரசுக்கு இருக்கின்ற அக்கரை, நாட்டின் அன்றாடச் சிக்கல்களைத் தீர்க்கும் வழிகளில் கவனம் செலுத்தப்பட்டாலும், அதிக அளவில் முன்னேற்றம் இல்லை. சுதந்திரப் போராட்டத் தியாகிகளின், சுதந்திர இந்தியாவைப் பற்றிய எதிர்காலக் கனவுகள் நனவாக வேண்டுமெனில், இளைய தலைமுறையினரை நல்வழிப் பாதையில் நடத்திச் செல்லுகின்ற மனஉறுதி அரசுக்கு வரவேண்டும்.



    நாட்டை ஆக்கப் பாதையில் அழைத்துச் செல்வதற்கு, அரசாங்கத்துக்கும், குடிமகனுக்கும் இருக்கின்ற கடமைகள் ஏராளம். இன்று இந்தியா எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளையும் அதனைத் தீர்க்கின்ற வழிமுறைகளையும் ஆராய்ந்து பார்த்து, அதைச் செயல்படுத்த ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் உறுதி எடுத்துக் கொண்டால் மட்டுமே இந்தியா வல்லரசு நாடாகும் கனவை நனவாக்க முடியும் என்பதே வல்லுனர்களின் கருத்து.



    அரசியல் தலைவர்கள், தேசியக் கொடியை ஏற்றுவதற்குச் செய்யும் செலவுகளைக் கணக்கிட்டால் கோடியைத் தாண்டி விடுகிறது, அந்தக் கோடிக்கணக்கான பணத்தில், ஒரு கிராமத்தைத் தத்து எடுத்து, அதனை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல முடியும்.



     அன்றாடம் நாளிதழ்களின் பக்கங்களைப் புரட்டினால், கொலை கொள்ளை, தீவிரவாதம் போன்ற செய்திகள் இடத்தை நிரப்புகின்றன. தனிநபர் ஒழுக்கத்தில் அக்கறை இல்லாததால், இன்று தீவிர வாதத்தின் கையில் படித்த இளைஞர்கள் சிக்கி இருக்கிறார்கள், தகுதி, திறமை, தன்னம்பிக்கை போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்தால், இளைஞர்கள் தவறான வழிகளில் செல்லுவதை அரசாங்கத்தால் தடுக்க முடியும்.



    இந்தியனின் இரத்தத்தில் பிழிந்து எடுக்கப்பட்ட பணமெல்லாம், அந்நிய நாடுகளில் கருப்புப் பணமாக தஞ்சம் அடைந்து விட்டது. மதம் என்ற பெயரில் மடாதிபதிகளின் ஆஸ்ரமத்துக்குள், கணக்கில்லாமல் அழியாத் தங்கமென அடக்கலம் அடைந்து விடுகிறது. குற்றங்களைத் தடுக்க இந்தியாவில் சட்டங்கள் பல இருந்தும் அதை நிறைவேற்றுவதில் இன்னமும் தடுமாற்றம் காணப்படுகிறது.



    “ஊழலற்ற இந்தியா” உருவாக ஒத்துழைப்போம் என்று ஒவ்வொரு சுதந்திர தினத்தின் போதும் தவறாமல் உறுதிமொழி எடுத்துக் கொண்டு, அதைச் சரிவரப் பின்பற்றாமலேயே 67 ஆண்டுகள் கழிந்து விட்டது. சுதந்திரத்துக்குப் பின்னால் வந்த அனைத்துத் தலைவர்களும் ஊழலுக்கு எதிராகச் சூளுரைத்துத் தோற்றுப் போகிறார்களே தவிர, உறுதியுடன் எதிர்கொண்டு வெற்றி காண முடியவில்லை.



     நெடுஞ்சாலை வழித்தடங்கள் சரியில்லை, வாகன நெரிசல்களுக்கு விடை இல்லை, நெடுஞ்சாலைகள் அத்து மீறிய ஆக்கிரமிப்பால் குறுஞ்சாலைகள் ஆகி விட்டதால், விரைவான வர்த்தகத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. முறையற்ற ஆக்கிரமிப்புகளை அகற்ற சட்டத்தில் வழியிருந்தாலும், ஊழல், லஞ்சம் போன்றவற்றால் சட்டத்தை முறையாகச் செயல் படுத்தமுடியவில்லை.



    சத்தியம், தர்மம், நேர்மை, சட்டம், ஒழுங்கு, உண்மை இவைகளைக் கடைப்பிடித்து ஒழுக்கத்துடன் வாழ்வதைத்தான், தேசியக் கொடியில் இடம் பெற்றிருக்கும் அசோகச் சக்கரம் விளக்குகிறது. அறுபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன் தேசத்தலைவர்களிடம் இருந்த நேர்மை, கடமை, நாட்டுப் பற்று, நாணயம், நேரம் தவறாமை போன்றவற்றை, என்றைக்கு இந்திய இளைஞர்களிடம் காந்தியக் கொள்கையோடு காண்கிறோமோ!.. அன்று தான் உண்மையான சுதந்திர தினத்தை நாம் அனுபவித்துக் கொண்டாட முடியும்.
இன்று மஹாகவி பாரதி உயிருடன் இருந்திருந்தால், அவரின் பாட்டுத்திறத்தால், இன்றைய வையத்தைப் பற்றி இப்படித்தான் பாடியிருப்பார்!….



மனதில் உறுதி வேண்டும்,
அரசியல் தலைவர்களின் வாக்கினிலே நேர்மை வேண்டும்,

நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கயவர்களின் கைவசமாவதைத் தடுக்க வேண்டும்,

காரியத்தில் உறுதி வேண்டும், அந்தக் காரியம்
கையூட்டு பெறாமல் நடைபெறும் நிலை வேண்டும்.

பெண் சிசுக்கொலைத் தடுத்து சுபஜனனம் வேண்டும்.
பெண் விகிதாச்சாரம் நாட்டில் பெருக வேண்டும்.

பெரிய கடவுள் (சூரியன்) காக்க வேண்டும்
பற்றாக்குறை இல்லா மின்சாரம் வேண்டும்.

மண் பயனுற வேண்டும்,
மணல் வெளிகள் அடுக்கு வீடாவதைத் தவிர்க்க வேண்டும்,

காணி நிலம் வேண்டும், அந்தக்
கனவு மெய்ப்பட வேண்டும், அதைக்
கயவர்களிடமிருந்து பேணிக்காக்க பராசக்தி அருள் வேண்டும்

பத்துப் பதினைந்து தென்னைமரம் பக்கத்திலே வேணும்
அலைபேசி கோபுரத்தை மாற்றிட வேணும், அங்கு
கத்துங் குயிலோசை சற்றே வந்து காதிற் படவேணும்.

தேசிய நதிகளுக்கோர் பாலம் அமைப்போம்
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
தென்னகத்து நாடுகளில் பயிர் செய்குவோம்

மனதில் உறுதி வேண்டும்,
ஊழலற்ற இந்தியா உருவாக, எல்லோர்
மனதிலும் உறுதி வர வேண்டும்.

மனதில் உறுதி வேண்டும்.
தீவிர வாதத்தால், அவ்வப்போது
துவண்டு கிடக்கும் பாரதத்தைத் தூக்கி நிறுத்த,
மனதில் உறுதி வேண்டும்.

அண்ணல் காந்தியடிகளும், பண்டித நேருவும் கண்ட வருங்கால இந்தியா பற்றிய பலவிதக் கனவுகளை நனவாக்கும் மன உறுதியோடு வல்லமை மின் இதழின் சார்பாக நாமும் நம் “2013 சுதந்திரதின வாழ்த்துக்களை” மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வோம்.

‘ஜெய் ஹிந்த்’

காப்பகம்