Thursday, August 14, 2014

உடல் எதிர்ப்புச் சக்தியை எபோலா வைரஸ் எப்படி செயலிழக்கச் செய்கிறது..?

உலகை அச்சுறுத்தி வரும் எபோலா என்ற உயிர்க்கொல்லி வைரஸ் மனித உடலின் எதிர்ப்புச் சக்தியை எப்படிச் செயலிழக்கச் செய்கிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதனால் அதன் செயல்பாடுகளைத் தடுக்கும் மருந்தைக் கண்டுபிடிக்க முடியும் என்று இந்த ஆய்வுக்குழுவினர் தீவிரமாக நம்புகின்றனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளை பதட்டத்திற்கு உள்ளாக்கிய இந்த எபோலா, முதன்முதலாக 40 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் வாஷிங்டன் பல்கலைக் கழகத்தின் மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த அமரசிங்கே மற்றும் பலர் குறிப்பிடத் தகுந்தவர்கள்.

எபோலா புரோட்டீன் விபி24 என்ற ஒன்று செல்லின் எதிர்ப்புச் சக்தியை கடுமையாக பாதிப்படையச் செய்கிறது.

“எபோலா வைரஸ் முக்கிய எதிர்ப்புச் சக்தி திரவமான இண்டெர்ஃபெரான் என்பதை கடுமையாகச் செயலிழக்கச் செய்கிறது என்பது நீண்ட காலத்திற்கு முன்னரே தெரிந்த விஷயம், இப்போது எபோலா எப்படி இந்தக் காரியத்தைச் செய்கிறது என்பது தெரியவந்துள்ளது. இதனால் இந்த கொடிய நோய்க்கு புதிய சிகிச்சை முறைகளை வளர்த்தெடுக்க அனுகூலமான நிலை தோன்றியுள்ளது” என்று டாக்டர் அமரசிங்கே தெரிவித்துள்ளார்.

இண்டெர்ஃபெரான் என்ற அந்த திரவத்தின் எபோலா வைரஸ் எதிர்ப்புச் செய்தி அல்லது சமிக்ஞையான ஸ்டாட் 1 என்பதை எபோலா வைரஸ் தொற்று தொந்தரவு செய்கிறது. அதாவது செல் மையத்திற்கு அந்தச் சமிக்ஞை சென்றடைந்தால்தான் உடலின் இயல்பான எதிர்ப்புச் சக்தி எபோலாவை எதிர்த்துப் போராடும். ஆனால் அந்த சமிக்ஞையை எபோலா திறமையாகத் தடுத்து விடுகிறது.

சாதாரணமாக இண்டெர்ஃபெரான் என்பது ஸ்டாட் 1 என்ற அந்தச் செய்தியை செல் மையத்திற்கு அனுப்பிவிடும். அங்கு அது மரபணுக்களையும் நூற்றுக் கணக்கான எதிர்-வைரஸ் புரதங்களையும் செயல்பட முடுக்கி விடுகிறது.

ஆனால் விபி24 என்ற என்ற புரோட்டீன் ஸ்டாட் 1-உடன் சேரும்போது அது செல்மையத்திற்குச் செல்வதிலிருந்து தடுக்கப்படுகிறது. இதனால் உடலின் இயல்பான வைரஸ் எதிர்ப்புச் சக்திகள் எபோலாவினால் செயலிழந்து விடுகிறது.

எபோலா விபி24 எவ்வாறு இந்த இடையூறைச் செய்கிறது என்பதைக் கண்டுபிடித்து விட்டால் எபோலாவை வீழ்த்தலாம் என்று இந்த ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

என்று தணியும் இந்த மருத்துவர், பொறியாளர் மோகம்..?

தனியார் பல்கலைக்கழகங்களிலும் சுயநிதிக் கல்லூரிகளிலும் முக்கியமான படிப்புகளுக்கு நன்கொடைக் கட்டணம் பெறப்படுவதாக இந்த ஆண்டும் தெரியவந்திருக்கிறது. நன்கொடைக் கட்டண வசூலுக்குத் தடை விதித்து சில மாநில அரசுகள் ஏற்கெனவே சட்டம் இயற்றியுள்ளன. உச்ச நீதிமன்றமும் 2003-ல் தனது தீர்ப்பு மூலம் இதற்குத் தடை விதித்துள்ளது. ஆனால், சட்டம் வேறு நடைமுறை வேறு என்பதுதான் உண்மை.

இந்த நன்கொடை நடைமுறையைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆழ்ந்து விசாரித்து, அறிக்கை தருமாறு முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த வழக்கறிஞருமான சல்மான் குர்ஷிதை உச்ச நீதிமன்றத்தின் 2 நீதிபதிகளைக் கொண்ட பெஞ்ச் கேட்டுக்கொண்டுள்ளது. இதற்குத் தேவைப்படும் தகவல்களையும் தரவுகளையும் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம் ஆகிய மாநில அரசுகள் அவருக்குத் தர வேண்டும் என்றும் பெஞ்ச் கேட்டுக்கொண்டிருக்கிறது. மாணவர்களுக்கான கல்விக் கட்டணங்களை நிர்ணயிப்பதில் வெவ்வேறு மாநிலங்களுக்கு இடையே ஏற்படும் கருத்து வேற்றுமை காரணமாக இந்த நடவடிக்கை அவசியமாயிற்று.

சுயநிதிக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கிய நாளிலிருந்தே இந்த கல்விக் கட்டணங்கள் குறித்துப் பொது விவாதம் நடந்துவருகிறது. கட்டுக்கடங்காத அளவில் தனியார் கல்லூரிகளுக்கு அரசு அனுமதி வழங்கிவிடுகிறது. தனியார் கல்லூரி தொடங்குவதற்குப் பெருமளவு நிதி தேவைப்படுகிறது. அந்த நிதியைத் தனியார் நிர்வாகம் பெரும் பகுதியும், மாணவர்கள் சிறு பகுதியும் ஏற்க வேண்டுமென்பதிலும் நியாயம் இருப்பதாகவே ஏற்கப்பட்டது. ஆனால், கல்லூரிகளைத் தொடங்கிப் பல ஆண்டுகள் ஆன பிறகும் இந்த நன்கொடைக் கட்டண அளவு குறைக்கப்படாமல் வசூலிக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, சில படிப்புகளுக்கு இந்தக் கட்டணம், மாணவர்களுக்கிடையே ஏற்படும் போட்டி காரணமாக மிகவும் அதிக அளவில் வசூலிக்கப்படுகிறது.

உச்ச நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்தாலும், சட்டம் தடையாக இருந்தாலும் தனியார் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் ஏதோவொரு வகையில் நன்கொடைக் கட்டணங்களை வசூலித்துக்கொண்டுதான் நிர்வாகங்களுக்கு ஒதுக்கப்படும் இடங்களை நிரப்புகின்றன. மருத்துவக் கல்லூரிகளில் ஒரு எம்.பி.பி.எஸ். சீட் பெற ரூ.40 லட்சத்துக்குக் குறைந்து பணம் கொடுத்தால் கிடைக்காது, மருத்துவத்தில் முதுகலை பட்டப் படிப்பில் சேர ஒரு கோடி ரூபாய் வரைகூட செலவாகிறது என்பதே இப்போதைய நிலவரம்.

எவ்வளவு கேட்டாலும் கொடுக்கத் தயாராக இருக்கும் பெற்றோர்களும் இதற்கு ஒரு வகையில் காரணம். இப்படி நன்கொடை செலுத்திப் படிக்கும் மாணவர் படிப்பு முடித்துவிட்டு மருத்துவராகவோ பொறியாளராகவோ பணியில் அமரும்போது அதிக அளவில் பணம் சம்பாதிப்பதைத்தானே வாழ்வின் நோக்கமாகக் கொள்வார்? இந்த வகையில் கல்வி கடைச்சரக்காகி எத்தனையோ ஆண்டுகளாகிவிட்டது. குர்ஷித் கமிட்டி இதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

கருப்புப் பணம் உருவாகும் துறைகளில் ஒன்றாகிவிட்டது கல்வித் துறை. அரசுக்கு மக்களிடமிருந்து ஒத்துழைப்பு கிடைத்தாலன்றி இந்தத் தீமையைத் தடுக்க முடியாது. அரசுக் கல்லூரிகள் பெருகி, தரமான கல்வி அவற்றில் வழங்கப்பட்டால் மட்டுமே இதற்குத் தீர்வு கிடைக்குமே தவிர வெறும் ஆணைகளையும் தீர்ப்புகளையும் வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது.

காலிங் பெல் அடிக்கிறார், எட்டிப் பார்க்கிறார்... 2வது கணவர் மீது நடிகை சுருதி புகார்..!

பெங்களூர்: கன்னட திரைப்படங்களில் முன்னணி நடிகையாக இருந்தவர் சுருதி. தமிழிலில் கல்கி, குமரேசன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். கன்னட இயக்குநர் எஸ்.மகேந்தரை திருமணம் செய்து கொண்டு 11 ஆண்டுகள் வாழ்க்கை நடத்திய இருவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், மகேந்தரை விவாகரத்து செய்த நடிகை ஸ்ருதி, கடந்த ஆண்டு கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் கன்னட பத்திரிகையாளர் சந்திரசூட் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இது குறித்து ஊடகங்கள் மூலமாக தெரியவந்ததும், அதிர்ச்சி அடைந்த சந்திரசூட் மனைவி மஞ்சுளா, இருவரின் திருமணத்தை ரத்து செய்யுமாறு பெங்களூர் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

முதல் திருமணத்தை விவாகரத்து செய்யாமல் நடிகை ஸ்ருதியுடன் 2வது திருமணம் செய்து கொண்டுள்ளார் சந்திசூட் என்று குற்றம்சாட்டிய மஞ்சுளா, இந்த திருமணத்தை ரத்து செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் நடிகை ஸ்ருதியும் மஞ்சுளாவுக்கு திடீரென ஆதரவு கரம் நீட்டினார். விவாகரத்து வாங்கிவிட்டதாக ஏமாற்றி தன்னை சந்திரசூட் திருமணம் செய்துவிட்டதாக சுருதியும் குற்றம்சாட்டினர். எனவே சுருதி-சந்திரசூட் திருமணத்தை குடும்ப நல நீதிமன்றம், ரத்து செய்து உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதில் மட்டும் சுருதி கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில், சந்திரசூட் சுருதியை தொல்லை செய்துவருவதாக கூறப்படுகிறது.

பெங்களூரின் பசவேஸ்வரநகர் பகுதியிலுள்ள சுருதியின் வீட்டுக்கு இரவு 11.15 மணியளவில் சென்ற சந்திரசூட் அவரது வீட்டு காலிங் பெல்லை தொடர்ந்து அழுத்தி தொல்லை கொடுத்ததாகவும், சாவி துவாரத்தின்வழியாக வீட்டுக்குள் எட்டிப்பார்ப்பதாகவும் சுருதி பெங்களூர் மாஜிட்ரேட் கோர்ட்டில் புகார் செய்தார்.

இதனிடையே சுருதியின் வீட்டு வாசலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான சந்திரசூட்டின் நடவடிக்கைகள் ஊடகங்களில் கசிந்துள்ளன. அந்த காட்சிகளில், சுருதி புகாரில் தெரிவித்ததை போலவே சந்திரசூட் நடவடிக்கைகள் இருப்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.இந்த சம்பவத்தால் கன்னட திரையுலகில் மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

உடலை குறைக்கும் வீட்டு உணவுகள் - இதோ உங்களுக்காக…!

இன்றைய காலத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள், என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பாக இருப்பது தான். இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது, ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது.வேளியே வாங்கி சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும்.

பெண்களைப் பொறுத்த வரை உடல் உழைப்பு குறைந்து போகும் போதும், மேலும் சத்தான உணவு இல்லாததாலும். இது தவிர அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்வது, பகலில் அதிக நேரம் தூங்குவது போன்றவையும் காரணமாக உள்ளது.

சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைசதை குறைத்து உடல் வடிவம் அழகு பெறும். மேலும் நாம் சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம், அதிகமாக சேர்த்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளைக் குறைத்து உடலிற்கு புத்துணர்ச்சி தரும்.

பப்பாளிக் காயைச் சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் மெலியும். இது மற்றுமின்றி மந்தாரை வேரை நீர்விட்டு காய்ச்சி தொடர்ந்து அருந்தி வந்தாலும் உடல் மெலியும். கிழங்கு வேர், பெருஞ்சீரகம் பாலில் காய்ச்சி குடித்து வந்தாலும் உடல் எடை குறையும். தேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் குடித்து வரவேண்டும் அது மட்டுமின்றி சுரைக்காய் வாரத்திற்கு 2 முறை சாப்பிட்டு வந்தால் வயிற்றுச் சதை குறையும். இதுதவிர வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு, இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பருகி வந்தால் சதை போடுவதைத் தடுக்கலாம்.

முக்கியமாய் இது எல்லாவற்றிக்கும் மேலாக காலையில் அரைமணி நேர நடைப்பயிற்சி மேற்கொண்டால்  கொழுப்பும் கரையும், உடல் எடையும் குறையும், புத்துணர்வாகவும் இருக்கலாம்.

கொழுப்பை கரைக்கும் உணவுகள் - உங்களுக்கு தெரியுமா..?

உணவில் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும், அதுவும் கொழுப்புச்சத்து நிறைந்த உணவு வகைகளை தவிர்த்து விடுவதே நல்லது.அப்படி அறவே தவிர்க்க முடியாத சூழ்நிலையில் சிறந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவை அதிக அளவில் உட்கொண்டு கொழுப்புச்சத்து நிறைந்த உணவை குறைவாக உட்கொள்ளலாம்.அமெரிக்காவின் இதய அமைப்பின் படி, ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகளை சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள கொழுப்புச்சத்து குறையும் என்று சொல்கிறது.

ஓட்ஸ்:-காலை உணவை ஓட்ஸ்க்கு மாற்றினால் அது இரத்தக் கொழுப்பை பெரிதளவு குறைக்க உதவும். அதிலும் 2 கப் ஓட்ஸானது ஆறே வாரங்களில் LDL இரத்தக் கொழுப்பை 5.3% குறைக்கும். ஓட்ஸில் உள்ள பீட்டா க்ளுட்டான், நம் உடலில் உள்ள கெட்ட இரத்தக் கொழுப்பை உட்கொள்ளும் தன்மை படைத்தவை.

ரெட் ஒயின்:-உடல் வலிமையை செழுமைப்படுத்த இதோ இன்னொரு வழி. ரெட் ஒயின் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் ரெட் திராட்சைகள் இரத்தக் கொழுப்பை கட்டுபடுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றது.
எனவே ஒரு வாரத்திற்கு இரண்டு டம்ளர் ரெட் ஒயின் குடித்தால், நமது இரத்தக் கொழுப்பிற்கு நல்லது.

சால்மன் மற்றும் கொழுப்புள்ள மீன்கள்:-ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த இயற்கை ஊட்டச்சத்து நிறைந்த உணவுப்பொருள் தான் சால்மன் மீன்கள். அவை இதய நோய்களான நெஞ்சு வலி, பக்கவாதம் மற்றும் அதிக இரத்த கொழுப்பு போன்றவைகளை துரத்த உதவும். அதிலும் மீன் வகைகளான சால்மன், சர்டின்ஸ் மற்றும் ஹெர்ரிங் வகைகள் நமது நல்ல இரத்த கொழுப்பை 4% உயர்த்த உதவும்.

நட்ஸ்:-நட்ஸ் மற்றும் விதைகளில் இருக்கும் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்பில் குறைவான கொழுப்பு அமிலங்கள் உள்ளன.
இவை மூன்று வகை கொழுப்புகளான பாலி சாச்சுரேட்டட் கொழுப்பு, சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்பு ஆகியவற்றில் மிகவும் சிறந்தது.

அதிலும் நட்ஸ்கள் உடம்பில் நல்ல கொழுப்பை பெற உதவும். இதில் இருந்து வரும் கொழுப்பு எந்தவித இரசாயன முறையிலும் இல்லாமல் இயற்கையான முறையில் தருவதால் இதயம் நன்றாகவும், வயிறு நிரம்பியும், ஊட்டச்சத்து வழிமுறைகளுக்கு துணையாகவும் இருக்கும்.

அவரை:_இதயத்திற்கு மிகவும் நன்மை அளிக்கக்கூடிய உணவுப் பொருட்களில் ஒன்று தான் அவரை. அதிலும் அரை கப் அவரையை, உணவில் சேர்த்து வந்தால், இரத்தக் கொழுப்பு 8% குறைய உதவி புரியும்.
மேலும் உணவில் காராமணி, மொச்சை கொட்டை போன்றவைகளை சேர்த்து வந்தால், அவை நாள் ஒன்றிக்கு தேவைப்படும் நார்ச்சத்தில் மூன்றில் ஒரு பங்கை அளிக்கும்.

டீ:-டீயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், காபியை காட்டிலும் குறைவான காப்ஃபைன் உள்ளது. அதுவும் 8 அவுன்ஸ் கப் காபியில் 135 mg காப்ஃபைன் உள்ளது. அதுவே டீயில் 30 – 40 mg அளவே உள்ளது. டீயில் உள்ள பைட்டோ கெமிக்கல், நமது எலும்புகளை பாதுக்கக்கின்றன. மேலும், LDL இரத்தகொழுப்பிற்கு எதிராகவும் செயல்படுகின்றன.

சாக்லெட்:-சொக்லெட் சாப்பிடுபவர்கள் டார்க் சொக்லெட் சாப்பிட்டால் நல்லது, ஏனெனில் அதில் பெரும் அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் கொழுப்பைக் குறைக்கும் தன்மை உள்ளது. டார்க் சொக்லெட்டில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட், இரத்த குழாய்களுக்கு ஏற்படும் சேதமான சிர்ஹோசிஸ் வரும் வாய்ப்பை குறைக்கும். மேலும் இவை கல்லீரல் இரத்த குழாய்கள் சேதம் அடைவதை தவிர்க்கும். தினமும் 100 கிராம் சாக்லெட் சாப்பிட்டால் இதய பிரச்சனைகள் 21% குறையும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

கீரைகள்:-கீரைகளில் உள்ள 13 ப்ளேவோனாய்டுகள் புற்றுநோய், இதய நோய்கள் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கின்றது. அதிலும் அரை கப் கீரையை தினமும் சாப்பிட்டால், நெஞ்சு வலியில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

ஆலிவ் எண்ணெய்:-ஆலிவ் எண்ணெயில் ஊட்டச்சத்து பலன்கள் அதிகம் இருக்கின்றன. இதில் உள்ள மோனோ சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள், நல்ல கொழுப்பை குறைக்காமல், கெட்ட இரத்த கொழுப்பையும் ட்ரைகிளிசரையும் குறைக்க உதவும்.

ஆரோக்கிய உணவு முறைக்கான குறிப்புகள் - இதோ உங்களுக்காக...!

உண்மையில் ‘நல்ல உணவு முறை’ என்பது பலவற்றை ஒட்டுமொத்தமாக விலக்குவது அல்ல. எந்த அளவுக்கு விரிவான உணவு வகைகளை எடுத்துக் கொள்கிறோம் என்பதும் கூட. அதாவது நம் உடலுக்கு தேவையான பல்வேறு நுண்சத்துக்கள், வெவ்வேறு வகையான உணவுப்பொருட்களில் ஒளிந்து கிடக்கின்றன.

ஆலிவ் ஆயில்:-ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் விரும்பினால் கட்டாயம் ஆலிவ் எண்ணெயை சமையலில் பயன்படுத்துங்கள். கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலை உடலில் அதிகரிக்கும் அற்புதமான சத்துக்கள் இந்த எண்ணெயில் அடங்கியுள்ளன. அதுமட்டுமல்லாமல் செரிமான உறுப்புகளுக்கு இதமான தன்மையை இது கொண்டிருக்கிறது. வயிற்றுப்புண் மற்றும் பித்தப்பை கற்கள் போன்றவை உருவாகாமல் தடுக்கும் சக்தியும் இதற்குண்டு. விலை சற்று அதிகம் என்றாலும் குறிப்பாக ‘எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் எண்ணெய்’ நமது ஆரோக்கியத்திற்கான மூலதனம் என்பதில் சந்தேகமில்லை.

ஆர்கானிக் காய்கறிகள் பழங்களுக்கு மாறுங்கள்:- ஆர்கானிக் முறையில் விளைவிக்கப்படும் காய்கறிகள், பழங்கள் மற்றும் இதர விளைபொருட்களால் உண்மையிலேயே ஆரோக்கிய பலன் இருக்கிறதா என்பது பற்றி இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. இருப்பினும் ஆர்கானிக் முறையில் விளையும் சில குறிப்பிட்ட காய்கள் மற்றும் பழங்களுக்கு (ஆப்பிள், ஸ்டாபெர்ரி மற்றும் தக்காளி) கூடுதல் சுவை இருப்பது உண்மை. எனவே இவற்றை தேடி வாங்கிக் கொள்வது நல்லது. அதே போல் விவசாய சந்தைகளில் கிடைக்கும் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றிற்கும் இது பொருந்தும்.

கேரட்:-காய்களில் உள்ள சத்து அழியாதவாறு சமைக்க எத்தனையோ வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று கேரட்களை நறுக்காமல் அப்படியே முழுதாக சமைப்பது. மைக்ரோவேவ் அல்லது தவாவில் துண்டுகளாக்கி சமைக்காமல், அப்படியே சமைப்பது கேரட்டில் உள்ள சத்துகளின் சாரத்தை இன்னும் கூட்டுகிறது. அதுவும் கேரட்டை துண்டுகளாக வெட்டப்படும் போது அதன் வெளிப்புற அடுக்குகள் திறக்கப்பட்டுவிடுவதால், அவற்றின் வழியே சத்துக்கள் வெளியேறிவிடுவதாக சொல்லப்படுகிறது.

சாஸ் மற்றும் சட்னி வகைகள்:-பெரும்பாலும் சட்னி என்றாலே இட்லி தோசைக்கான தேங்காய் சட்னி, சாஸ் என்றாலே ஃப்ரைட் ரைஸ் தக்காளி-மிளகாய் சாஸ் என்று புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால் உண்மையில் எல்லா விதமான சத்து நிறைந்த காய்கள், பட்டாணி, கீரை வகைகள் போன்றவற்றிலிருந்தும் இவ்விதமான சட்னி வகைகளை தயாரித்துக் கொள்ளலாம். இதில் ஒரு வசதி என்னவென்றால் எதை வேண்டுமானாலும், இதில் தோய்த்தோ அல்லது பிசைந்தோ சாப்பிட முடியும் என்பது தான். தேவைக்கேற்ப அவ்வப்போது மிக்ஸியில் இந்த சட்னி வகைகளை புதிதாக தயாரித்துக் கொள்வது நல்லது.

காளான்:-அடுத்த முறை மாட்டிறைச்சியை வதக்கி சமைக்கும் போது, அதில் இறைச்சியின் அளவை குறைத்து ஒரு கைப்பிடி அளவு காளான்களை சேர்த்துக் கொள்ளுங்கள். இது இறைச்சியில் உள்ள கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் போன்றவற்றை குறைக்க உதவும். மேலும், மற்ற உணவுகளில் அரிதாய் கிடைக்கும் வைட்டமின் டி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் போன்றவையும் காளான்களிலிருந்து நமக்கு கிடைக்கிறது. காளான்களை ஆலிவ் எண்ணெயில் வதக்கி எடுத்து, சீஸ் பிட்சா, டோஸ்ட் மற்றும் நம் நாட்டு உணவான ஊத்தாப்பம் போன்றவற்றில் தூவியும் சாப்பிடலாம்.

சிவப்பு முள்ளங்கி:-உருளைக்கிழங்கு மசியல் செய்கிறீர்களா? அதில் ஏற்கனவே வைட்டமின் சி, வைட்டமின் பி6 மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இருந்தாலும் கொஞ்சம் சிவப்பு முள்ளங்கியை அதில் சேர்த்துக் கொண்டால் இன்னும் அதிகமாக வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள், வைட்டமின் ஏ போன்றவை கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் முள்ளங்கியின் மேல் பாகத்தில் உள்ள கீரைப்பகுதியை தூக்கி எறிந்து விடாமல், அதையும் இந்த கலவையில் சேர்த்துக் கொள்வது நல்லது. இதனால் சுண்ணாம்பு, தாமிரம் மற்றும் இரும்பு போன்ற கனிமச்சத்துகள் கிடைப்பது உறுதி.

லவங்கம்:-ஏதோ ‘மசாலா’ சம்பந்தப்பட்ட ஒரு வஸ்து என்று நாம் கருதும் இந்த ‘லவங்கம்’, உடலுக்கு தேவையான அற்புதமான சத்துப்பொருட்களை கொண்டிருக்கிறது. இதில் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் அதிகமாக இருப்பதோடு, காய்ச்சல் மற்றும் உடல் ரணம் போன்றவற்றையும் குணமாக்கும் இயல்பு இதற்குண்டு. ஆகவே ஓட்ஸ், கஞ்சி, டோஸ்ட் மற்றும் தேனீர் போன்ற காலை நேர உணவுகளோடு இந்த லவங்கத்தை சேர்த்துக் கொள்வது நல்லது. சுவையை கூட்டுவது தவிர கலோரியில் எந்த மாற்றத்தையும் இது ஏற்படுத்தாது.

கீரை:-சுத்தமான பச்சைக் கீரையை எந்த உணவோடும் சேர்த்துக் கொள்ளலாம். லெட்யூஸ் போன்றவற்றை பர்கரில் வைத்து சாப்பிடுகிறோம் இல்லையா. அதே போல் தான், பிரட் சாண்ட்விச், தோசை மற்றும் அடை போன்றும் எதில் வேண்டுமானாலும் கீரையை சேர்த்துக் கொள்ளலாம். கீரையில் உள்ள மனித உடலுக்கு தேவையான முக்கிய சத்துக்கள் பற்றி ஒரு நீண்ட பட்டியலே தயாரிக்கலாம். பல்வேறு வைட்டமின் சத்துக்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் (இரத்தக்குழாய்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான நுண்வேதிச்சத்து) போன்றவை கீரையில் அடங்கியிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றல் கீரைக்கு உண்டு.

வால்நட்:-ஒவ்வொரு முறையும் வால்நட் பருப்புகள் சாப்பிடும் போது, உடலுக்கு தேவையான ஒமேகா-3 கொழுப்பு எண்ணெய்கள் (நல்ல கொழுப்புக்கள்) கிடைக்கின்றன. இவை புற்றுநோய் மற்றும் இதய நோய்களிலிருந்து பாதுகாக்கக் கூடியவை. வால்நட் பருப்புகளை பச்சையாகவோ அல்லது பொடியாக உதிர்த்து இனிப்புகளின் மீது தூவியோ உட்கொள்ளலாம். வேண்டுமெனில் நறுக்கப்பட்ட துண்டுகளாக வாங்கி சிக்கன் அல்லது மீன் உணவுத் தயாரிப்புகளில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சாப்பாட்டுத் தட்டில் இடம் பெறும் உணவுகளின் விகிதாசாரத்தை உடனே மாற்றுங்கள்

இறைச்சி, காய்கறிகள் மற்றும் ஸ்டார்ச் (மாவுப்பொருள்) ஆகிய மூன்றும் உணவில் இடம் பெற வேண்டும் என்றால், அதன் பொருள் இறைச்சிப் பண்டங்களை அதிகம் அடுக்கி சாப்பிட வேண்டும் என்பதல்ல. ஆனால் அப்படி ஒரு தவறான புரிதல் உள்ளது. உண்மையில் சிறிதளவு இறைச்சி உணவு மற்றும் அதிகமான காய்கறி உணவு என்பது நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். எனவே இறைச்சியை குறைத்து, பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சேர்த்து சாப்பிடுங்கள். உணவு அதே அளவு தான், ஆனால் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைந்திருக்க வேண்டும் என்பது தான் சாராம்சம்.

மண்பாண்டத்தின் மகிமை தெரியுமா உங்களுக்கு...?

“மண் பாண்ட சமையல், ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரக்கூடியது. உணவில் சுவையைக் கூட்டக்கூடியது. நீண்ட நேரத்துக்குக் கெடாமலும் சுவை மாறாமலும் இருக்கும். உணவும் எளிதில் செரிமானம் ஆகும். மண் பாத்திரத்தில் தயிரை ஊற்றிவைத்தால் புளிக்காமல் இருக்கும். தண்ணீர் குளிர்ச்சியாகவும், சுவையாகவும் இருக்கும். இவ்வளவு அருமை பெருமைகள் இருந்தும், இன்று பெரும்பான்மையான வீடுகளில் இது பயன்பாட்டில் இல்லை.


மண்பாண்டம் தவிர்த்து அந்தக் காலத்தில் தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, வெண்கலம் என ஐந்து வகையான உலோகங்களை நம் முன்னோர்கள் பயன்படுத்தினர்.

வெள்ளிப் பாத்திரம் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியது. பித்தம், வாதம், கபம் ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும். பித்தளை மற்றும் செம்புப் பாத்திரத்தில் சமைக்கும் உணவு வயிறு தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கும். குன்மம் (அல்சர்) நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.
செம்புப் பாத்திரத்தில் தண்ணீர்வைத்துக் குடித்தால், இருமல், இரைப்பு நோய் வராது. இரும்புப் பாத்திரத்தில் சமைக்கும்போது, உடலில் ரத்த விருத்தி அதிகரிக்கும். உடலை எஃகு போல உறுதிப்படுத்தும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது. இளைத்தவனுக்கு இரும்புப் பாத்திரம் என்பது அந்தக்கால அறிவுரை.

எஃகு பாத்திரத்தில் செய்த உணவு, உடலில் அதிகப்படியான வாதம், பித்தம், கபத்தைப் போக்கும்.

ஈயச் சொம்பில் ரசம் வைத்துச் சாப்பிடும்போது, வாசனை ஊரைக் கூட்டும்.
இப்படி உடல் ஆரோக்கியத்தைத் தரக்கூடிய நம்முடைய பாரம்பரியப் பாத்திரங்களைப் பயன்படுத்தினால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
இன்றைக்கு நவீன சாதனங்களுக்கு நாம் பழகிவிட்டாலும், ஆரோக்கியத்தைக் கருத்தில்கொண்டு, நம் முன்னோர்கள் பயன்படுத்திய பாத்திரத்தைப் பயன்படுத்த ஆரம்பிக்கலாமே!

காப்பகம்