Wednesday, January 8, 2014

விரைவில் வருகிறது புரட்சித் தலைவரின் ஆயிரத்தில் ஒருவன்



புரட்சித் தலைஹிவர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா இணைந்து நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் விரைவில் டிஜிட்டல் வடிவத்தில் மீண்டும்
வெளியாகவுள்ளது.

நடிகர் திலகம் சிவாஜி கணேஷன் நடித்த “கர்ணன்” திரைப்படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு, புதிய திரைப்படங்களுக்கு சவாலாக இருந்ததுடன், வசூலையும் வாரிக்குவித்தது நினைவிருக்கலாம். இந்தப் புதிய ஐடியாவை அன்றைய மெஹாஹிட் படங்களை டிஜிட்டலுக்கு மாற்றுவதன் மூலம் தொடரலாம் என்று தயாரிப்பாளர்கள் முடிவு செய்திருப்பார்கள் போலும். அதனால் மக்கள் திலகத்தின் படம் விரைவில் வெளிவரவிருக்கிறது.

கடந்த 1965 ஆம் ஆண்டு பத்மினி பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, நம்பியார், நாகேஷ் மற்றும் பலர் நடித்து வெளியாகி வெள்ளிவிழா கண்ட திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். பி.ஆர்.பந்துலு இயக்கியிருந்த இப்படத்திற்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர். இப்படத்தினை மீண்டும் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றி விரைவில் வெளியிடப்போகிறது திவ்யா பிலிம்ஸ் நிறுவனம்.

இப்படத்தின் ட்ரெய்லர் வருகிற ஜனவரி 10ல் வெளியாகவிருக்கும் வீரம் திரைப்படத்துடன் இணைந்து வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது. விரைவில் அஜித் மற்றும் விஜய்க்குப் போட்டியாக எம்.ஜி.ஆரும் கலமிறங்கவுள்ளார்.

வாக்காளர் அடையாள அட்டை தொலைந்தால்..?

வாக்காளர் அடையாள அட்டை தொலைந்தால்? 


புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை தொலைந்தாலோ, சிதைந்த நிலையில் இருந்தாலோ அல்லது தரம் குறைந்த புகைப்படமாக இருந்தாலோ, கருவூலம் அல்லது சார்நிலை கருவூலத்தில் முகவரி சான்றுடன், "0001சி' படிவத்தில் புகைப்படத்துடன், 15 ரூபாய் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் அல்லது வாக்காளர் அடையாள அட்டை மையத்தில் பணமாக செலுத்தி, அதற்கான ரசீதை பெற்றுக் கொள்ளலாம்.

முகவரி மாறியிருந்தாலும் விண்ணப்பிக்கலாம். இதற்கும், 15 ரூபாய் செலுத்த வேண்டும்.இதற்கு, அசல் அட்டை நகலுடன் விண்ணப்பிக்க வேண்டும். அடையாள அட்டைக்கு முகவரி சான்றாக, குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், தற்போதைய தொலைபேசி ரசீது, பாஸ்போர்ட், வங்கி, தபால் நிலைய கணக்கு புத்தகம் ஆகியவற்றில் ஒன்றை காண்பிக்கலாம். வயது சான்றுக்கு, பள்ளி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் அல்லது பெற்றோரின் உறுதி ஆவணம் ஆகியவற்றில் ஒன்றை அளிக்கலாம்.

ஒரு கப் காபியில் கைபேசியை சார்ஜ் செய்யலாம்..!

ஒரு கப் காபியில் கைபேசியை சார்ஜ் செய்யலாம்..!


இன்றைய தொழில்நுட்ப உலகில் வாடிக்கையாளர்களின் தேவையை உணர்ந்து நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு வித்தியாசமான சாதனங்களை உருவாக்கி வருகிறது.அந்த வகையில்

அமெரிக்க நிறுவனம் ஒன்று புதிய சாதனம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இதில் ஆச்சர்யம் என்னவெனில் உங்களுடைய கைபேசியை சுட சுட காபியோ அல்லது குளு குளு பீரோ இருந்தாலே போதும் தேவையான சார்ஜை செய்துகொள்ளலாம்.


எபிபானி ஒன் puck என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சாதனம், சூடான பானம் அல்லது குளிர்ந்த பானங்களிலிருந்து கைபேசிக்கு தேவையான மின்சக்தியை உற்பத்தி செய்கிறது.

இந்த புதிய சாதனத்திற்கு இரண்டு பக்கங்கள் உள்ளன. நீல வண்ணத்திலுள்ள பக்கத்தில் குளிந்த பானத்தை தான் வைக்கவேண்டும். மேலும் சிவப்பு நிறமுடைய பக்கத்தில் சூடான பானங்களை வைத்தாலே செல்போனானது சார்ஜ் செய்யப்படும்.

1816ல் உருவாக்கப்பட்ட ஸ்டீம் என்ஜின் என்ற முறையின் தொழில்நுட்ப தாக்கமே இந்த புதிய சார்ஜருக்கான அடித்தளம் என்கிறது எபிபானி லேப்ஸ் என்ற நிறுவனம். இந்நிறுவனம் தான் இந்த புதிய சாதனத்தை தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உட்கார்ந்தபடி வேலை பார்க்கிறீர்களா? அவசியம் படியுங்கள்

உட்கார்ந்தபடி வேலை பார்க்கிறீர்களா? அவசியம் படியுங்கள்


 பெரும்பாலான அலுவலகங்களில் பணி நேரம் முழுக்க ஒரு நாற்காலியிலேயே கட்டுண்டு கிடக்க வேண்டியதாகி விடுகிறது. இதனால் தேவையான உடல் உழைப்பு இல்லாமல் போவதால் டென்ஷன், முதுகு வலி, அஜீரண கோளாறு என்ற வரிசை கட்டும் பிரச்சினைகள் ஏராளம்.இவற்றைச் சரிசெய்து கொள்ள நமக்கு சில எளிய ஆலோசனைகள்.

காலையில் அலுவலகத்துக்கு வந்து உங்கள் இடத்தில் அமர்ந்ததும், வேலையைத் தொடங்குவதற்கு முன் ஒரு நிமிடம் கண்களை மூடி அமர்ந்து மனதை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு வேலையை தொடங்கினால் பிரெஷ்ஷாக உணர்வதுடன், உங்களின் காலை நேரப் பதற்றமும் குறையும்.

நீங்கள் உபயோகிக்கும் நாற்காலி உங்கள் உடல் வெப்பத்தை வெளியேற்றும் வகையில் துளைகள் உள்ளதாக இருக்கவேண்டும். அவ்வாறு துளைகள் இல்லாத குஷன் நாற்காலிகளை பயனபடுத்தினால், ஒரு டர்க்கி டவலை நான்காக மடித்துப் போட்டு அதன்மீது அமருங்கள். சில மணி நேரங்களில் உங்கள் உடலின் வெப்பம் அதில் இறங்கிய பின், அதன் மடிப்பை மாற்றிப் போட்டு அமருங்கள்.

முதுகை வளைத்து, கூன் போட்டு உட்காராமல், நன்கு நிமிர்ந்து நாற்காலியில் முதுகு படும்படி உட்காருங்கள். கால்களை தரையில் வைப்பதைவிட, சற்று உயரமான ஒரு சப்போர்ட் கொடுத்து வைத்துக் கொண்டால், முதுகுவலி ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

பல மணி நேரம் தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால், தசைப்பிடிப்பு ஏற்படும்.

எனவே,அவ்வப்போது கை, கால்களை நீட்டி மடக்குவது, தலையை ரிலாக்ஸ்டாக நாலாபுறங்களிலும் சாய்த்துக் கொள்வது போன்ற செயல்களைச் செய்யுங்கள். கூடவே தண்ணீர் குடிப்பது, முகத்தைக் கழுவுவது, அருகில் சிறிது தூரம் நடந்துவிட்டு வருவது. என்று ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை உடலுக்கு ஏதாவது இயக்கம் கொடுங்கள்.
தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இல்லை என்றால் குனிந்து கைகளால் பாதத்தை தொடுவது, இடுப்பில் கை வைத்துக்கொண்டு பின்புறம் வளைவது, இடது மற்றும் வலது புறம் சாய்வது போன்ற எளிமையான பயிற்சிகளை சில நிமிடங்கள் செய்யுங்கள் (முதுகு மற்றும் இடுப்பு வலி இருப்பவர்கள் மருத்துவரை ஆலோசித்த பிறகே இவற்றைச் செய்யவேண்டும்). இதனால் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். தசைப் பிடிப்பும் விலகும்.

கணினி முன் வேலை செய்யும்போது எப்போதும் ஸ்கிரீனையே பார்த்துக் கொண்டிருப்பதால் தான் கண்களில் எரிச்சல் ஏற்படும். இதை தவிர்க்க அயர்ச்சியாகத் தோன்றும் போதெல்லாம் சில விநாடிகள் கண்களை மூடி, அந்தக் கையின் மேல் மற்றொரு கையையும் வைத்து மூடிக்கொள்ளுங்கள்.

இதனால் கண்களுக்கு சில நொடிகள் அடர்ந்த இருட்டுக் கிடைக்கும். இது, அதிக ஒளியினால் ஏற்படும் சோர்வை விலக்கும். தவிர, கண்களை மேலும் கீழுமாக, முன்னும் பின்னுமாக சுழற்றுகிற எளிமையான பயிற்சிகளையும் செய்யலாம். ‘ஆன்ட்டி ரேடியேஷன் கிளாஸ்’ -ஐ கம்ப்யூட்டர் திரையில் பொருத்துவதும் ஒளியினால் கண்கள் எரிச்சலடைவதைத் தடுக்கும்.

உடல் உழைப்பு குறைவாக இருப்பதால் மாலை நேர சிற்றுண்டிக்கு எண்ணெய் பதார்த்தங்களை தவிர்ப்பது, அஜீரணக் கோளாறுகளை தடுக்கும். அதற்கு பதில் அவல், அவல் புட்டு, பிரெட் சாண்ட்விச், பழக்கலவை, சுண்டல், சன்னா மசாலா, முளைகட்டிய பயிறு, பொரி, மசாலா பொரி, வேர்க்கடலை, பட்டாணி…போன்றவற்றை சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாவதுடன் அதில் உள்ள வைட்டமின்கள் உடலுக்கும் அதிக சக்தி கொடுக்கும்.

இரவு வெகு நேரம் தூங்காமல் கண் விழித்து வேலை செய்வதாலும் அஜீரணக் கோளாறு ஏற்படும். இதனால் மறுநாள் காலை மலம் கழிக்க முடியாமல் சிரமப்படுவார்கள். இதை தவிர்க்க, மாலை நேரத்தில் நாட்டு சர்க்கரை சேர்த்த அவல் அல்லது காய்ந்த திராட்சை அல்லது பப்பாளிப்பழம் சாப்பிடலாம். கூடவே நிறைய தண்ணீரும் குடிக்க வேண்டும். இதனால் அஜீரண கோளாறுகள் வெகுவாகக் குறைவதுடன் உடலின் வெப்பநிலையும் சீராக இருக்கும்.

90 அடி உயரத்தில் அஜித்!




அஜித் நடித்துள்ள வீரம் படத்தின் கவுன்ட் டவுன் ஸ்டாட் ஆகிவிட்டதால் உற்சாகத்தில் உள்ளனர் ‘தல’ ரசிகர்கள்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வீரம் படம் நாளை மறுநாள் வெளியாகவுள்ளது.
இதனால் தமிழகம் முழுக்க அஜித்தின் கட்-அவுட் வைத்து அசத்த நினைத்துள்ள ’தல’யின் ரசிகர்கள் ஆங்காங்கே பிரம்மாண்ட ‘கட்-அவுட்’களை வைத்து வருகிறார்கள்.

இதில் ஹைலைட்டாக நெல்லையில் உள்ள பாம்பே திரையரங்கு முன்பு வெள்ளை வேட்டி சட்டையில் அஜித்தின் கிராமத்து கெட்-அப் கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்-அவுட் 90 அடி உயரம் கொண்டது,இந்த பிரம்மாண்ட கட்-அவுட் விடயம் தான் இப்போது டுவிட்டரில் அஜித் ரசிகர்களின் அசத்தல் டுவீட்டாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

இந்திய அளவில் முதல் இடத்தைப் பிடித்த 'ஜில்லா'...!




 நேற்றிரவு 'ஜில்லா' படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டு, ட்விட்டர் தளத்தில் இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்தது.

விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும்ம் 'ஜில்லா' படத்தை வித்தியாசமாக விளம்பரப்படுத்த வேண்டும் என்று டிரெய்லரை வெளியிடாமல், சிறு சிறு டீஸர்களாக வெளியிடப்பட்டன.

படத்தின் முதல் டீஸர் வெளியிடப்பட்டு YOUTUBE தளத்தில் இந்திய அளவில் அதிகம் பேர் பார்க்கப்பட்ட வீடியோவாக முதல் இடத்தை பிடித்தது மட்டுமன்றி 10 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டுகளித்துள்ளனர். தொடர்ச்சியாக 2வது, 3வது டீஸரும் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், படத்தின் டிரெய்லர் இன்று (ஜனவரி 7) YOUTUBE தளத்தில் வெளியாகும் என்று அறிவித்தார்கள். அதனைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் அனைவருமே ஆர்வமாக காத்திருந்தார்கள்.

நேற்றிரவு (ஜன.7) டிரெய்லர் வெளியானவுடன் விஜய் ரசிகர்கள் அனைவருமே சமூக வலைத்தளங்களில் லிங்க்கை ஷேர் செய்திருந்தார்கள். இதனால், இரவு முதலே ட்விட்டர் தளத்தில் மோகன்லாலை விஜய் இமிடேட் செய்யும் காட்சி, விஜய்யின் காமெடி காட்சிகள், சூரியின் வசனம் என அனைவருமே 'ஜில்லா' படத்தைப் பற்றி பேசியதால் ட்விட்டர் தளத்தில் இந்திய அளவில் #Jilla என்ற டேக் முதலிடத்தை பிடித்தது.

தற்போது இந்திய அளவில் முதல் ஐந்து இடத்திற்குள் #Jilla டேக் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

விஞ்ஞானிகளாக பிரத்யேக படிப்பு - திறன்மிக்கவரின் வாழ்வில் பூரிப்பு ...!!!




 விஞ்ஞானியாகும் லட்சியம் கொண்டவர்களுக்கான பிரத்யேக படிப்பாக பி.எஸ்-எம்.எஸ். ஐந்தாண்டு படிப்பு உள்ளது. டூயல் டிகிரி புரோகிராமான இப் படிப்பில், பிளஸ் 2 முடித்தவர்கள் நேரடியாக நுழைவுத் தேர்வு எழுதி சேரலாம். இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் ஐ.ஐ.எஸ்.இ.ஆர். (இன்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சைன்ஸ் எஜுகேஷன் அண்டு ரிசர்ச்) கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது. போபால், கொல்கத்தா, மஹாலி, பூனே, திருவனந்தபுரம் ஆகிய ஐந்து பெரு நகரங்களில், ஐ.ஐ.எஸ்.இ.ஆர். இயங்கி வருகிறது.

இக் கல்வி நிறுவனத்தில் சாதாரணமாக சேர்ந்து விட முடியாது. அதி புத்திசாலித்தனம், படிப்பில் திறமை மிக்கவர்களை பல்வேறு கட்ட நுழைவுத் தேர்வின் அடிப்படையில் சோதித்து, சேர்த்துக் கொள்கின்றனர். பெரிய ஆராய்ச்சியாளராகவும், விஞ்ஞானியாகவும் கூடிய வாய்ப்பு கொண்ட படிப்பாக இது உள்ளது. அறிவியல் சார்ந்த பல்வேறு துறைகளிலும், இவர்களுக்கு அமோக வரவேற்பு காத்திருக்கிறது. கணிதம், வேதியியல், இயற்பியல், உயிரியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளில், நுணுக்கமான படிப்பு முறையை கற்பிக்கின்றனர்.

ஐந்தாண்டுகளில் முதல் இரண்டு ஆண்டுகள் பொறியியல் சார்ந்த அறிவியல் பாடத்தின் அடிப்படை விஷயங்களை ஆழமாக கற்பிக்கின்றனர். அடுத்த மூன்று, நான்காம் ஆண்டுகளில் அறிவியல் பாடத் திட்டத்தில் விரும்புகின்ற பிரிவை ஒவ்வொருவரும் தேர்வு செய்து படிக்க வேண்டும். இறுதி ஆண்டு ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட பாடத்திட்டத்தை முழு அளவில் கற்பிக்கின்றனர்.

பேராசிரியராகவும் அறிவியல் அறிஞராகவும் விஞ்ஞானியாகவும் ஆராய்ச்சியாளராகவும் அனைத்துவிதமான அறிவியல் துறை சார்ந்த தொழில்களில், இவர்களுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளதால், 100 சதவீத வேலைவாய்ப்பை உறுதி செய்யும் படிப்பாக அமைந்துள்ளது. அதிமுக்கியத்துவம் வாய்ந்த இந்த படிப்பில் சேர துடிப்பவர்களின் எண்ணிக்கையும் மிகுதி. இப்படிப்பை பொருத்தவரை இந்தியா முழுவதும் உள்ள மாணவ, மாணவியரிடையே பலத்த போட்டி நிலவுகிறது. கே.வி.பி.ஒய், ஜே.இ.இ. இன்ஸ்பியர் காலர்ஷிப் எக்ஸாம், ஆட்டிடியூட் தேர்வுகளில் வெளியிடும் தர வரிசை பட்டியலில்

முதலிடம் பிடிப்பவர்களுக்கு வாய்ப்பு ஒளிமயமாக உள்ளது. 5 கல்லூரிகளில் தலா 150 இடங்கள் வீதம் மொத்தம் 750 இடங்கள் உள்ளன. பி.எஸ்.எம்.எஸ். சேர விரும்புபவர்கள் இதற்கான தனி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். எந்தெந்த நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தால், இப் படிப்பில் சேர முடியும் என தெரிந்து கொள்ள வேண்டும். கே.வி.பி.ஒய் (கிஷோர் வைகியானிக் புரட்சான் யோஜ்னா) நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் தரவரிசை பட்டியலில் இருந்து 25 சதவீதத்தினரும், ஜே.இ.இ. (ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்ஸாம்) நுழைவுத் தேர்வின் தரவரிசை பட்டியலில் 50 சதவீதத்தினரும், மத்திய, மாநில பிளஸ் 2 தேர்வுகளில் முதலிடம் பிடிப்பவர்கள் மற்றும் இன்ஸ்பியர் காலர்ஷிப் தேர்விலும், ஆட்டிடியூட் நுழைவுத் தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்கள் 25 சதவீதத்தினர் என 100 சதவீத இடம் பூர்த்தி செய்யப்படுகிறது.

இவர்களுக்கு மாதம்தோறும் 5,000 ரூபாய் கல்வி உதவித்தொகை என ஆண்டுக்கு 60 ஆயிரம் ரூபாயும் ஆராய்ச்சி செய்வதற்காக 20 ஆயிரம் ரூபாயும் என மொத்தம் 80 ஆயிரம் ரூபாய் அரசு நிதி அளிக்கிறது. வரும் பிப்ரவரி மாதம் முதல் இதற்கான விண்ணப்பம் ஆன்லைன் மூலம் அனுப்பலாம். http://www.iser.admission.in என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து மேலும் தகவல் தெரிந்து கொள்ளலாம்.

அமெரிக்கன் சொன்னான்..




அமெரிக்கன் சொன்னான்..
எங்க நாட்டுல ஒருத்தன் கிட்டேருந்து கிட்னியை எடுத்து இன்னொருத்தனுக்கு வைப்போம்.. அவன் 2 மாசத்துல வேலை செய்ய ஆரம்பிச்சுடுவான்...!

ரஷ்யன் சொன்னான்..

எங்க நாட்டுல ஒருத்தன் கிட்டேயிருந்து பாதி ஈரலை எடுத்து இன்னொருத்தனுக்கு வைப்போம்.. ரெண்டு பேருமே 1 மாசத்திலே வேலை செய்ய ஆரம்பிச்சுடுவாங்க.. தெரியுமா..?

இந்தியன் சொன்னான்..

பூ... இதென்ன பிரமாதம்..? நாங்க ஒண்ணுத்துக்கும்ஆகாத ஒருத்தனை தூக்கி பார்லிமெண்ட்லே வைப்போம்.. உடனே மொத்த இந்தியாவும் அவன் சொல்றபடி வேலை செய்ய ஆரம்பிச்சுடும்..! இதுக்கு என்ன சொல்லுறீங்க..?

கார்களில் வருகிறது ஆண்ட்ராய்ட்...!





கோடிக்கணக்கான மொபைல் பயனாளிகளின் கைகளில் உலவும் ஆண்ட்ராய்ட் சேவை இனி கார்களிலும் வலம் வர உள்ளது. இதற்காக புதிய தொழில்நுட்ப கூட்டணி அமைக்கப்பட உள்ளது.

‘திறந்த வாகன கூட்டணி’ (OAA) என்ற இந்த அமைப்பில் ஹோண்டா, ஆடி, ஜி.எம்., கூகுள், ஹுண்டாய், ந்விடியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தொழில்நுட்ப சேவைகளை வழஙகுவுள்ளன. இந்தக் கூட்டணியானது புதிய கருவிகளை இயக்க உதவி புரிவதுடன், பாதுகாப்பான கார் சேவையுடன், அனைவருக்கும் எளிமையான சேவைகளை வழங்கவும் பாடுபடும்.

இந்த சேவையை வாகனங்களில் பொருத்துவதன் மூலம் த்டையற்ற சாலை பயணத்துடன், பாதுகாப்பான வாகன சேவையையும் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். வாகனத்தில் டிஜிட்டல் வாழ்க்கை முறையை அனுபவிக்க வகை செய்யும் இந்த தொழில்நுட்பத்தை நுகர்வோர் வரவேற்கிறார்கள்.

நீங்கள் கைது செய்யப்பட்டால் உங்கள் உரிமைகள் என்ன?





1. உங்கள் கைதுக்கான காரணங்கள் உங்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

2. பிடிப்பாணையின் (Warrant) பேரில் நீங்கள் கைது செய்யப்பட்டிருந்தால், பிடிப்பாணையை பார்க்க உங்களுக்கு உரிமை உண்டு

3. உங்கள் விருப்பத்திற்கேற்ப வழக்கறிஞரை கலந்தாலோசிக்கும் உரிமை உங்களுக்கு உண்டு

4. 24 மணி நேரத்திற்குள் அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் (Judicial Magistrate) முன்பாக நீங்கள் கொண்டு செல்லப்பட வேண்டும்

5. பிணையில் (Bail) விடுவிக்க பட கூடியவரா என்பது உங்களுக்கு தெரிவிக்கப்படவேண்டும்

விலங்கிடலாமா?

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி ஒருவர் வன்முறையாளராகவோ அல்லது மூர்க்கமான குண இயல்பு கொண்டவராகவோ அல்லது தப்பி ஓட முயல்பவராகவோ அல்லது தற்கொலைக்கு முயல்பராகவோ இருந்தால் ஒழிய கைது செய்யப்பட நபருக்கு விலங்கிட கூடாது. கைது என்பது தண்டனையல்ல. நீதி மன்ற தீர்ப்பு வரும் வரை குற்றம் இழைத்தவராக ( Convict ) கருத முடியாது

கைது செய்யப்பட நபரை காவலில் வைத்தல்

கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படும் எந்தவொரு நபரும் கைது செய்து 24 மணி நேரத்திற்குள்ளாக (கைதான இடத்திலிருந்து நீதி மன்றம் செல்ல தேவைப்படும் பயண நேரம் நீங்கலாக) அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜர் செய்யப்பட வேண்டும். கைது செய்யப்பட்ட நபரை 24 மணி நேரத்திற்கு மேல் காவலில் வைக்க குற்றவியல் நீதித்துறை நடுவருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. காவல் துறைக்கு இல்லை.

குற்றவியல் நீதித்துறை நடுவரின் முன் ஆஜர் செய்யப்பட்டு அவர் காவலில் தொடர சொன்னால் ஒழிய 24 மணி நேரத்திற்கு மேல் ஒரு நிமிடம் கூட காவலில் வைக்க கூடாது.

கைது குறித்து உச்ச நீதி மன்றத்தின் கட்டளைகள்

1. கைது செய்கின்ற அதிகாரி அடையாள அட்டை பொருத்தியிருக்க வேண்டும்.

2. கைது செய்தவுடன் அந்த இடத்திலேயே கைது குறிப்பு தயார் செய்ய வேண்டும்

3. கைது செய்யப்படும் தகவலை உறவினர், நண்பர், தெரிந்தவருக்கு தெரிவிக்க வேண்டும்.

4. கைது செய்யப்பட்ட விபரம் 8 முதல் 12 மணி நேரத்திற்குள் உறவினருக்கு அறிவிக்க வேண்டும்.

5. தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிப்பதற்கான உரிமை உண்டு என்பதை கைது செய்யப்பட்டவருக்கு தெரிவிக்க வேண்டும்

6. கைது செய்யப்பட்டவர் உடல் நிலையை பரிசோதித்து சோதனை குறிப்பு தயார் செய்ய வேண்டும்.

7. கைது செய்யப்பட்டவரை 48 மணி நேரத்திற்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.

8. கைது செய்யப்பட்டவரை விசாரிக்கும் போது வழக்கறிஞர் உடனிருக்க வேண்டும்.

நிற்க. இவையெல்லாம் நிஜத்தில் காவல் துறை செய்கிறதா அப்படி அவர்கள் இதன் படி நடக்காவிடில் என்ன செய்வது ?

முடிந்த வரை காவல்துறை இவற்றை செய்யும். அல்லது அவர்கள் ரிக்கார்ட் அப்படி இருக்கும் ! இவற்றில் சில முக்கிய விஷயங்கள் அவர்கள் செய்ய தவறினால் வழக்கறிஞர் மூலம் அதனை கோர்ட் கவனத்துக்கு கொண்டு செல்ல முடியும். அத்தகைய நேரங்களில் காவல் துறை அதிகாரியை கோர்ட் கண்டிக்கலாம். சில நேரங்களில் சில நடைமுறைகள் பின்பற்றா விட்டால் அதன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை கூட செய்யலாம்.

புற்று நோய் பரவுவதை தடுக்கும் சோதனை முயற்சி வெற்றி!




மருத்துவ ஆய்வில் வியத்தகு சாதனையாக புற்று நோய் பரவுவதை தடுக்கும் சோதனை முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.சோதனை முயற்சியாக நடத்தப்பட்ட இந்த முதல்கட்ட ஆய்வு இன்னும் பலகட்ட சோதனைகளையும் மேம்பாடுகளையும் கடந்து, வெற்றிகரமான செயல் வடிவத்தை பெறும் போது புற்று நோய் சார்ந்த மரணங்கள் முற்றிலுமாக குறைந்து விடும் என்பதை உறுதியாக நம்பலாம்.

உயிர்கொல்லி வியாதியான புற்றுநோய்க்கு இலக்கானவர்களுக்கு மரணத்தை தவிர மருந்து ஏதும் இல்லை என பேசப்பட்டு வந்த பழைய வேதாந்தம் இதன் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது.

அதிலும், மார்பக புற்று நோய் மிக வேகமாக பரவக்கூடியது என்பதால் இந்நோயால் தாக்கப்பட்ட கோடிக்கணக்கான பெண்களின் ஆயுட்காலத்தின் பெரும்பகுதி பயத்திலும், பீதியிலும், வலியிலும், வேதனையிலும் தான் கழிந்து வந்தது. பெரும்பாலான புற்று நோய் சார்ந்த மரணங்களுக்கு நோய் கிருமிகள் மனித உடலுக்குள் வேகமாக பரவி ரத்த அணுக்களை சிதைத்து அழிப்பதே காரணம் என கண்டறியப்பட்டது.

இவ்வகையிலான புற்றுக் கட்டியில் இருக்கும் கிருமிகள் வேகமாக பரவுவதை தடுக்கும் தீவிர ஆராய்ச்சியில் அமெரிக்காவில் உள்ள கார்னெல் மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நீண்ட காலமாக ஈடுபட்டு வந்தனர்.இவர்களின் பல ஆண்டு கால உழைப்புக்கு தற்போது முதல்கட்ட பலன் கிடைத்துள்ளது.

புற்று நோயினால் பாதிக்கப்பட்ட மனித ரத்தம் மற்றும் எலிகளின் ரத்தத்தில், ஒட்டும் தன்மை கொண்ட ஒருவித ‘நானோ’ துகள்களை செலுத்தி ஆய்வு செய்ததில் அதிசயிக்கத்தக்க வகையில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது.

இதன் மூலம் புற்றுக் கிருமிகள் வேறு இடத்திற்கு பரவுவது முற்றிலுமாக தடுக்கப்பட்டதுடன் புற்று கிருமிகளும் கொல்லப்பட்டன. 2 மணி நேரத்திற்குள் இந்த அரிய மாற்றம் நிகழ்ந்ததாக ஆராய்ச்சியாளர்கள் பெருமிதத்துடன் குறிப்பிட்டனர்.

இணைந்தனர் சிம்பு - நயன்தாரா.....




பசங்க புகழ் பாண்டிராஜ் இயக்கிவரும் புதிய படத்தில் சிம்பு மற்றும் நயன்தாரா ஆகியோர் இணைந்து நடிக்க ஆரம்பித்திருப்பதாகச் செய்திகள்
வெளியாகியுள்ளன.

சிம்புவுடனான காதல் முறிவிற்குப் பின்னர் வீண் வதந்திகளைத் தவிர்ப்பதற்காக நயன்தாரா, சிம்பு இருவரும் இணைந்து நடிப்பதைத் தவிர்த்து
வந்தனர்.

சுமார் 7 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சிம்பு - நயன்தாரா ஜோடி பாண்டிராஜ் படத்தில் இணைந்து நடிப்பார்கள் என்று ஏற்கெனவே
அறிவிக்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம். பாண்டிராஜ் இயக்கிவரும் இப்புதிய படத்திற்கு நயன்தாராவை விடவும் பொருத்தமான ஹீரோயின்
கிடைக்கமாட்டார் என்பதால் படக்குழு நயன்தாராவை அணுகியது. நயன்தாராவும் சிம்புவுடன் இணைந்து நடிக்க ஒப்புக் கொண்டதாகக் கூறப்பட்டது. காதல் நகைச்சுவையை மையப்படுத்தி இப்படம் தயாராகிவருகிறது.

சிம்பு தயாரிக்கும் இப்படத்தில், சிம்புவின் தம்பியான குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

தொட்டபெட்டாவில் மனிதர்களை கொன்று தின்னும் மர்ம விலங்கு?






நீலகிரி மாவட்டம், தொட்டபெட்டா மலைச்சரிவில் உள்ள சோலாடா கிராமத்தைச் சேர்ந்த கவிதா (வயது-30), என்ற பெண் அருகிலுள்ள ஆடாசோலை குக்கிராமத்தில் உள்ள மளிகை கடையில் பொருட்கள் வாங்கிவர் சனிக்கிழமை மாலை நடந்து சென்றபோது வழியில் புதரில் பதுங்கியிருந்த சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்தார். இவரை இரு சிறுத்தைகள் சேர்ந்து தாக்கியதாக அப்பகுதி மக்களும், புலி தாக்கியிருக்கலாம் என வனத்துறையினரும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தொட்டபெட்டா அருகிலுள்ள சின்கோனா பகுதியை அடுத்த அட்டபெட்டு பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பன் (வயது-58) மர்ம விலங்கால் கொல்லப்பட்டுள்ளார். இவர் திங்கள்கிழமை மாலை அருகிலுள்ள வனப்பகுதிக்குள் சென்றவர் இரவு 7 மணி வரை வீடு திரும்பவில்லை.


இதையடுத்து அவரது குடும்பத்தாரும், அருகிலுள்ளோரும் அவரைத் தேடி வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர். வனப்பகுதிக்குள் மர்ம வனவிலங்கு ஒரு உடலைக் கடித்துக் கொண்டிருந்தது தெரிந்தது.  ஆனால்,  சின்னப்பனை தேடிக்கொண்டு தீப்பந்தத்துடன் போன பொதுமக்களின்  சத்தத்தைக் கேட்டவுடன் அவ்விலங்கு தின்றுகொண்டிருந்த உடலை போட்டுவிட்டு புதருக்குள் மறைந்துவிட்டது.


பொதுமக்கள் அருகில் சென்று பார்த்தபோது, அது சின்னப்பன் தான் என்பது உறுதியானது. இதுகுறித்த தகவல் வனத்துறையினருக்குத் தெரிவிக்கப்பட்டது. இறந்த சின்னப்பன் குடும்பத்திற்கு அரசின் உடனடி நிவாரண உதவியாக ரூ. 25,000 வழங்கப்பட்டுள்ளது.


சோலாடா, அட்டபெட்டு பகுதிகளைச் சேர்ந்தவர்களின் உயிரிழப்பிற்குக் காரணமான ஆட்கொல்லி வனவிலங்கு, சிறுத்தையா அல்லது புலியா என்பதில் குழப்பம் உள்ளது. அந்த ஆட்கொல்லி வனவிலங்கை உயிருடன் பிடிக்கத் தேவையான நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.


இதன் ஒரு கட்டமாக, முதுமலை புலிகள் காப்பகம், ஆனைமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மற்றும் நீலகிரி வடக்கு மற்றும் தெற்கு வனக்கோட்டங்களிலிருந்து தலா ஒரு கூண்டுகள் கொண்டுவரப்பட்டு, சந்தேகத்திற்கிடமான இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.


இந்த 5 இடங்களிலும் இரகசியமாக காமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இனம் காணப்படாத இவ்விலங் கைப் பிடிக்கும் பணியில் 30 பேர் கொண்ட சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டபெட்டு முதல் கல்லட்டி பகுதி வரை தொடர் ரோந்துப்பணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஒலிபெருக்கி மூலம் இப்பகுதிகளில் வனப்பகுதிகளுக்குள் யாரும் அனுமதியின்றி செல்லக் கூடாது என்றும் அறிவித்து வருகின்றனர்.

‘இலவச தாய் சேய் வாகனம்‘ – தமிழக அரசின் புதிய திட்டம்!





சாலை விபத்து, தீக்காயம் மற்றும் பிரசவங்களுக்காக மருத்துவ மனைகளுக்கு அழைத்துச் செல்ல ‘108 இலவச ஆம்புலன்ஸ் சேவை‘ தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் முதலுதவி குறித்த தகவல்கள், மருத்துவ ஆலோசனைகள், ஊட்டச்சத்து குறித்த தகவல்கள், மனநல ஆலோசனைகள், எச்.ஐ.வி., பால்வினை நோய்கள் பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற 24 மணிநேர தொலைபேசி ‘104 மருத்துவ சேவை‘ திட்டத்தை கடந்த 30ம் தேதி ஜெயலலிதா துவங்கி வைத்தார். இந்நிலை யில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தையை தனி வாகனம் மூலம் வீட்டிற்கே கொண்டு சென்று விடும் புதிய திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா கடந்த 30ம் தேதி துவக்கி வைத்தார்.

அத்திட்டத்தின்படி, சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள அரசு கஸ்தூரிபா காந்தி தாய்சேய் நல மருத்துவமனையில் பிறந்த 51 குழந்தைகள் மற்றும் அதன் தாய் ஆகியோரை வாகனங்கள் மூலம் வீட்டிற்கே கொண்டு விடும் ‘இலவச தாய்-சேய் வாகனம்‘ திட்டத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் நேற்று துவக்கி வைத்தார்.

அப்போது மருத்துவ கல்வி இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் கனகசபை, கஸ்தூரிபா காந்தி தாய்சேய் மருத்துவமனை டாக்டர் விஜயா மற்றும் டாக்டர்கள் உடன் இருந்தனர்.மேலும் தேசிய ஊரக நல வாழ்வு இயக்கத்தின் மூலமாக மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்படுத்துகின்ற ‘அவசர பேறுகால சிகிச்சைக்கான பயிற்சி‘ திட்டமும் கஸ்தூரிபா காந்தி தாய்சேய் மருத்துவமனையில் நடைபெறுகிறது. இத்திட்டத்தின்படி, எம்பிபிஎஸ் படித்த டாக்டர்களுக்கு, அவசர பேறுகால சிகிச்சை குறித்து 24 வாரங்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த பயிற்சியின்போது, ஆரம்ப சுகாதார மையம் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் எம்பிபிஎஸ் டாக்டர்கள்தான் பிரசவம் பார்க்கிறார்கள். மிகவும் ஆபத்தான நிலையில் வரும் கர்ப்பிணி பெண்களுக்கு எப்படி பிரசவம் பார்ப்பது என்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்படுவதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்தார்.

ஐ திரைப்படத்தின் கதை இதுதானா?






அந்நியன் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு மறுபடியும் ஷங்கர், விக்ரம் இணையும் திரைப்படமாதலால் ‘ஐ’ திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

இயக்குனர் ஷங்கர் ‘ஐ’ திரைப்படத்தைப் பற்றிய எவ்வித தகவல்களையும் வெளியிடாமல் படப்பிடிப்பு நடத்தியதால் ’ஐ’ திரைப்படத்தின் கதை என்று பல கதைகள் பேசப்பட்டன. ஆனால் தற்போதோ ஐ திரைப்படத்தின் கதை இதுதான் என்று அடித்து சொல்கிறது கோடம்பாக்கம். விஷ இரசாயணங்களால் பாதிக்கப்பட்ட 5 நபர்களின் கதை தான் ஐ திரைப்படமாம்.

ஐ திரைப்படத்திற்காக விக்ரம் பல்வேறு கெட்-அப்புகளில் தன்னை மாற்றிக்கொண்டிருந்த படங்களைப் பார்த்த ரசிகர்கள், ஐந்து கதாபாத்திரத்திலும் விக்ரமே நடிக்கிறாரா? அல்லது ஒரே கதாபாத்திரத்திற்கு மாறுபட்ட தோற்றமா? இது தான் ஐ திரைப்படத்தின் கதையா? என்ற குழப்பத்தில் இருக்கின்றனர்.

வருகிறது 3 டி -தொலைபேசி வீடியோ..!

வருகிறது 3 டி -தொலைபேசி வீடியோ...!


“ஸ்டார் வார்ஸ்’ ஹாலிவுட் திரைப்படத்தில் வந்தது போல, தொலைபேசியின் மறு முனையில் உள்ளவர்களின் முப்பரிமாண பிம்பங்களுடன் பேசும் தொழில்நுட்பத்தை போலந்து நாட்டு நிறுவனம் ஒன்று உருவாக்கி வருகிறது.

இது குறித்து லண்டனிலிருந்து வெளியாகும் “தி டைம்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில்,”1977-ஆம் ஆண்டு வெளிவந்த “ஸ்டார் வார்ஸ்’ திரைப்படத்தில், கதாநாயகியான இளவரசி லேயா, தொலைதூரத்தில் இருந்து லூக் ஸ்கைவாக்கர் என்பவரிடம் முப்பரிமாண வடிவில் தோன்றி பேசுவதாக காட்சி இடம் பெற்றிருந்தது.

இந்நிலையில், கதாநாயகி லேயாவின் பெயரில் தொடங்கப்பட்ட “லேயா டிஸ்ப்ளே சிஸ்டம்ஸ்’ என்ற நிறுவனம், அந்தக் கற்பனை தொழில்நுட்பத்துக்கு செயல்வடிவம் கொடுத்து வருகிறது.

அந்நிறுவனம் தயாரித்து வரும் முப்பரிமாண தொலைபேசியில் பேசுவதற்கு, இரட்டை லென்ஸ் கொண்ட ஒரு சிறப்பு கேமரா முன்பு அழைப்பாளர் அமர வேண்டும்.அவரது உருவத்தை உள்வாங்கிக் கொள்ளும் கேமரா, மறு முனையிலுள்ள நீராவி நிரம்பிய முப்பரிமாணத் திரையில், அழைப்பாளரின் உருவத்தை முப்பரிமாண வடிவில் திரையிடும்.

அந்தத் திரையில், அழைப்பாளரின் அசைவுகளையும், பேச்சுகளையும் எதிர்முனையில் இருப்பவர்கள் உடனுக்குடன் காணவும், கேட்கவும் முடியும். அடுத்த ஆண்டுக்குள் முப்பரிமாணத் தொலைபேசியின் மாதிரியைத் தயாரிக்கவும், ஐந்து ஆண்டுகளுக்குள் வர்த்தக ரீதியாக அவற்றைத் தயாரித்து சந்தையில் விற்பனை செய்யவும் லேயா டிஸ்ப்ளே சிஸ்டம்ஸ் திட்டமிட்டுள்ளது” என “தி டைம்ஸ்’ தெரிவித்துள்ளது.

வீடியோ லிங்க் : https://www.youtube.com/watch?v=F3KIjrDfgI8

ஏழரைச் சனி என்ன செய்யும்..?

ஏழரைச் சனி என்ன செய்யும்..?



  காலத்தை கி.மு.& கி.பி. என வரலாறு பிரிக்கிறது. அதுபோல வாழ்க்கையை ஏ.மு.& ஏ.பி. என ஜோதிடம் பிரித்துக் காட்டுகிறது. அதாவது ஏழரைச் சனிக்கு முன், ஏழரைச் சனிக்குப் பின் என்று வாழ்வு கனிகிறது. ஏழரைக்குப் பிறகு வரும் தெளிவும் நிதானமும் ஆச்சரியமானது.
இந்த ஏழரைச் சனி என்னதான் செய்யும்? உங்கள் ராசிக்குப் பின் ராசியிலும் உங்கள் ராசிக்குள்ளும் உங்கள் ராசிக்கு அடுத்த ராசியிலும் சனி சஞ்சரிக்கும் காலத்தையே ஏழரைச் சனி என்கிறோம். சிறு வயதில் வரும் முதல் சுற்றை மங்கு சனி என்றும் வாலிப மற்றும் மத்திம வயதின்போது வரும் இரண்டாம் சுற்றை பொங்கு சனி என்றும் கொஞ்சம் வயதான காலத்தில் வரும் மூன்றாம் சுற்றை கங்கு சனி என்றும் அழைப்பர்.

முதல் சுற்று: 

பிறந்ததிலிருந்து இருபது வயதுக்குள் ஏற்படும் ஏழரைச்சனியின் தாக்கம் சிறுவர்களிடம் மிகத் தெளிவாகக்  காணலாம். சனியின் முழுத் திறனும் இவர்களிடம் ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படும். முதல் சுற்று, முடக்கி முயற்சியை தூண்டும். ‘‘எதுக்கெடுத்தாலும் கத்தி கலாட்டா பண்றான்; எத்தனை தடவை அடிச்சாலும் துடைச்சுப் பொட்டுட்டு மறுபடி மறுபடி தப்பு பண்றான்; எத்தனை தடவை டாக்டர் கிட்ட காண்பிச்சாலும் மூக்கு ஒழுகிட்டே இருக்கு...’’ என்று பலவிதத்தில் பாதிப்புகள் இருக்கும். ஏழரைச் சனியின்போது பிறக்கும் குழந்தைகளின் பெற்றோரிடம் டாக்டர் கையெழுத்து வாங்கிக் கொள்ளும் அளவுக்கு உடல்நிலை பாதிக்கும்.

குழந்தைப் பருவம் முதல் டீன் ஏஜ் வரையிலான இந்த சுற்றில் பெற்றோருக்குள் கருத்து மோதல், பிரிவு, சந்தேகத்தால் சண்டை என்று பிரச்னைகள் வந்து நீங்கும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், கணவன் மனைவிக்குள் நேரடியாக எந்தப் பிரச்னையும் இருக்காது. ‘‘அவங்க சொன்னாங்க, இவங்க சொன்னாங்க’’ என்று மூன்றாவது நபர் தலையீட்டால்தான் பிரச்னை உருவாகும். அதிலும் முக்கியமாக குறுகிய காலத்தில் அறிமுகமாகி நெருங்கிய நண்பராக மாறுவோரால்தான் கருத்து மோதல் பெரிதாகும். தேன் கூடாக இருந்த குடும்பம் தேள் கொட்டின மாதிரி ஆகும் சூழ்நிலை நேரும். 13லிருந்து 19 வரையுள்ள ஏழரைச் சனி நடக்கும் பிள்ளைகளுக்கு செல்போன் தராதீர்கள். கூடா நட்பினில் சிக்குவார்கள். திணறி வெளியே வருவார்கள். அவர்களை கண்கொத்தி பாம்பாக பாதுகாக்கவேண்டும்.

மந்தம், மறதி, தூக்கம் என்று இருப்பார்கள்.‘‘அடங்காதே, அலட்சியப்படுத்து’’ என்ற மனநிலை! பிறகு, ‘‘அப்பவே அம்மா சொன்னாங்க. அப்பா சொன்னாங்க நான் கேட்கலை’’ என்று வருந்துவார்கள். ‘‘வீட்ல அடங்காத பிள்ளை ஊர்ல அடங்கும்.’’ இதுதான் சனிபகவானின் திருத்தும் முறை. தடவித் தடவி சொன்னால் கேட்காத பிள்¬ளயை தடியெடுத்து திருத்தும் வாத்தியார்தான் சனிபகவான். ‘‘சுவாமிக்கு நமஸ்காரம் பண்ணிட்டுப்போடா’’ என்றால், ‘‘எங்கயோ இருக்கற சாமி என் பிரேயருக்குத்தான் வெயிட் பண்ணிகிட்டிருக்காரா’’ என்பார்கள். ஆனால், இடரும்போதும், சிக்கலில் சிக்கும்போதும் தாயின் சொற்கள் நினைவுக்கு வரும். ‘‘மத்தவங்க சொல்றபோது செய்யக் கூடாது; தனக்குன்னு எப்போ தோணுதோ அப்போ செய்யணும்’’ என்று முரண்டு பிடிப்பார்கள். தாமதித்து எதையும் செய்ய வைக்கும்.

ஏழரைச் சனியில் பெறக்கூடிய அனுபவங்களும் அவமானங்களும் காயங்களும் வடுக்களாகி, வாழ்க்கை முழுதும் மறக்க முடியாதபடி இருக்கும். இப்படி வருத்தப்பட வைத்தே வாழ்க்கையை வளர்ப்பார், சனிபகவான். அப்போ என்னதான் செய்யறது?‘‘குழந்தைகளை விட்டுப் பிடியுங்கள். நீ இப்படிப் பண்ணா இதுதான் ரிசல்ட்’’ என்று அன்பை மனதிற்குள் பூட்டி, வெளியே கண்டிப்பு காட்டுங்கள். சனி நேர்மறையாக மாறுவார். சனி தர்மதேவன். அதர்மத்தில் திருப்பி விட்டு சோதிப்பார். வலையில் மாட்டாது வெளியேற வேண்டும்; அதற்கு சில உபாயங்களையும் சொல்லித் தருவார்; இவற்றை நாம்தான் சரியாகப் புரிந்துகொண்டு கெட்டியாகப் பிடித்துக் கொள்ளவேண்டும். ‘‘நீ படிக்கறியோ இல்லையோ. வாராவாரம் அந்த கோயிலுக்கு மட்டும் போயிட்டு வந்துடு. காலையில சீக்கிரமா எழுந்திரு. பத்து நிமிஷம் சுவாமிகிட்ட உட்கார்ந்து நான் சொல்ற சுலோகத்தை மட்டும் சொல்லு’’ என்று பழக்குங்கள். சனி என்கிற கரி, வைரமாக மாறும் அதிசயம் நிகழும்.


இரண்டாவது சுற்று:

இருபத்தேழு வயதுக்கு மேல் யாருக்கு ஏழரைச் சனி நடந்தாலும் அதற்கு பொங்கு சனி என்று பெயர். பறித்தல், பாதுகாத்தல், பலமடங்காக பெருக்கித் தருதல் & இதுதான் இரண்டாவது சுற்றின் கான்செப்ட். உள்ளுக்குள் கிடந்த திறமைகளை பூவாணம்போல பொங்க வைக்கும். செல்வத்தை அள்ளிக் கொடுக்கும். ஆனால், கொஞ்சம் கெடுக்கும். அதனால்தான் கொடுத்துக் கெடுப்பவர்; கெடுத்து கொடுக்கிறவர் என்ற பெயர் சனிக்கு உண்டு. ‘‘சும்மா, ஒண்ணுமே இல்லாத ஒட்டாண்டியா வந்தான். இப்போ உசரத்துக்கு போயிட்டான்’’ என்பார்கள். காசு, பணம், பதவி, கல்யாணம், சொத்து, சுகம் எல்லாவற்றையும் கொடுப்பார். ஆனால், நடுவில் பிடுங்கிக் கொள்வார். ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்?

‘‘என்னால்தான் எல்லாமும் நடக்கிறது, எனக்கு மிஞ்சி என்ன இருக்கு!’’ என்று ஆணவத்தோடு பேசுவோரின் அனைத்து செல்வங்களையும் பறிக்கிறார். ஏனெனில், இந்த இரண்டாவது சுற்றின்போது சில மிதமிஞ்சிய செல்வ வளத்தால் தாமே சில பிரச்னைகளை உருவாக்கிக் கொள்வார்கள். ‘‘நான் யார் தெரியுமா?’’ என்று ஆணவத்துடன் தன் செல்வாக்கை நிரூபிக்க துணிவார்கள். தான்தான் பெரிய ஆள் என்று அடக்கமற்ற மனோநிலையில் திரிவார்கள். அப்படி மாறிய அடுத்த நிமிடமே சனி உங்களை ஆட்டம் காண வைக்கும் முயற்சியில் இறங்குவார். ஆகவே பேச்சிலோ, செயலிலோ கர்வக் கொம்பு முளைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

சனிபகவானால்தான் நம் அறிவுக்கும் சக்திக்கும் அப்பாற்பட்ட பல விஷயங்கள் இருக்கிறது என்பதை உணருவோம். ‘‘நம்ம கையில எதுவும் இல்லை’’ என்கிற சரணாகதி தத்துவமும் புரியும். ஏழரைச் சனியின்போது முடிந்தவரை கோர்ட் கேஸ் என்று போகக் கூடாது. பத்து லட்ச ரூபாய் பொருளுக்காக காக்கிக்கும் கருப்புக்கும் இருபது லட்ச ரூபாய் செலவு செய்வீர்கள். எல்லா வி.ஐ.பி.யையும் தெரிந்து வைத்திருப்பீர்கள். ஆனால் ‘‘இந்த விஷயத்தைப்போய் நாம எப்படி சொல்றது! அவர் என்னை தப்பா நினைச்சிட்டா...?’’ என்று தயங்குவீர்கள்.

அப்போது எப்படித்தான் இருக்க வேண்டும்?  

வசதி இருக்கும்போது எதையும் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் இருங்கள். கூழ் கிடைத்தாலும் குடியுங்கள். ஸ்டார் ஹோட்டலில் இருந்தாலும் கூழ் குடிக்கும் மனோநிலையிலேயே இருங்கள். அத்தனைக்கும் ஆசைப்பட்டு அத்தனையும் தனக்கே என்று வாரி சுருட்டும்போது சனிபகவான் சும்மாயிருக்க மாட்டார். அமைதியாக இருந்தால் வேலை பார்க்கும் நிறுவனத்தையே விலை பேசும் நிலைக்கு உயர்த்துவார்.

 இந்த இரண்டாவது சுற்றில்தான் வியாபாரம் விருத்தியாகும். அதனால் தைரியமாக தொழில் தொடங்கலாம். ‘‘ரெண்டாவது ரவுண்டுல ரெட்டை வருமானம்’’  என்றொரு வாக்கியம் உள்ளது. ஆனால், பாதை மாறினால் அதல பாதாளம்தான். ‘‘சார், நம்ம பிராண்டுக்கு மார்க்கெட்ல தனி மவுசு இருக்கு. அதனால டூப்ளிகேட்டையும்நாமே விடுவோம்’’ என்று சனி சிலரை அனுப்பி சோதிப்பார். ஏனெனில், ஒரு மனிதனின் மனதை சோதித்துப் பார்ப்பதில் இவருக்கு நிகர் எவருமிலர்.

‘‘சாப்பாட்டுக்கே வழியில்லாம வந்து சேர்ந்தான். சரின்னு சேர்த்துகிட்டேன். அவன் கொடுத்த ஐடியாவை நம்பினேன். இப்போ அம்போன்னு நிக்கறேன். தப்பான வழியை காட்டிட்டு என்னையும் காட்டிக் கொடுத்துட்டான்’’ என்பீர்கள். நேர்மை என்கிற வார்த்தையை கல்வெட்டாக பதித்துக் கொள்ளுங்கள். ஏழரைச் சனியின் முடிவில் நீங்கள்தான் அந்த வட்டாரத்தின் முக்கியஸ்தர். செல்வந்தர்.

கோடிகோடியாக வைரம், வைடூரியம் குவிந்திருக்கும் திருப்பதியில், வெங்கடாஜலபதிக்கு மண் சட்டியில், தயிர் சாதம்தான் நிவேதனம். பெருமாளே அத்தனை எளிமையெனில் நாமெல்லாம் எப்படியிருக்க வேண்டும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

இன்னொரு விஷயம். நம்பிக்கை துரோகம் செய்தவர்களைப் பார்த்து துடிக்காதீர்கள். டென்ஷன் ஆகாதீர்கள். ஆரோக்யம் பாதிக்கும். ஏழரைச் சனியில் யார் உங்கள் காசை சாப்பிட்டாலும் அது ஏற்கனவே நீங்கள்பட்ட கடன் என்று நினைத்துக் கொள்ளுங்கள். அது பூர்வ ஜென்ம தொடர்பு என்பதாகவே எடுத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக இந்த இரண்டாவது சுற்று ஜென்ம சனியின்போது பார்ட்டி, கேளிக்கைகளையெல்லாம் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் தானே அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்படக் கூடாது.

 சனிபகவான், ‘‘நீ போய் கேளு. அவர் தறாரா இல்லையான்னு பார்க்கறேன்’’ என்று சிலரை அனுப்பி வைப்பார். அதனால் பிரதிபலன் பாராத உதவிகள் செய்தால் பொங்கு சனி நல்ல பலன்களை கொடுக்கும்.

மூன்றாவது சுற்று: 

கிட்டத்தட்ட ஐம்பது வயதைத்தாண்டி வரும் ஏழரைச் சனி. இதுதான் உங்களுக்கு கடைசி சனி என்று யாராவது பயமுறுத்தினால் பயப்படாதீர்கள். படபடப்பையும், பயத்தையும் தரும் சுற்று இது. உங்களை முடக்க முயற்சி செய்யும். அதற்குள், உங்களை மீறி உங்களிடத்தில் ஒரு கட்டுப்பாடு வந்துவிட வேண்டும். ‘‘காலையில நாலு இட்லி சாப்பிடுவேன்’’ என்றால் அதை மூணாக்கி அப்புறம் இரண்டே போதும் என்று நிறுத்திக் கொள்ளும் தெளிவு வேண்டும்.

அவ்வளவுதான். அதீத இயக்கத்தை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். தன்னை தாழ்த்தியே உயர்த்திக் கொள்ள தயாராக இருக்க வேண்டும். மருமகள் மார்க்கெட்டிற்கு போக தயாராக இருந்தால் நீங்கள்போய் வாங்கிக் கொண்டு வரவேண்டும்.

எது நடந்தாலும் குற்றத்தை கண்டுபிடித்துக் கொண்டிருக்கக் கூடாது. இள வட்டங்கள் ஏளனமாகப் பேசும். இந்த மூன்றாவது சனியில் முதல் மரியாதையை எதிர்பார்க்கக் கூடாது. ‘‘எங்க போறாங்கன்னு எங்கிட்ட சொல்றதேயில்லை’’ என்று அடிக்கடி சொல்லக் கூடாது. வீட்டில் தனக்குத் தெரியாமல் எதுவும் நடக்கக் கூடாது என்று நினைக்கக் கூடாது. ‘‘நான் எவ்ளோ பெரிய போஸ்ட்டுல இருந்தேன்’’ என்றெல்லாம் பேசிக்கொண்டு வீட்டை அலுவலகமாக்கக் கூடாது. ஆடையைத் துறந்தால் மகாத்மாவாகலாம். ஆசையைத் துறந்தால் புத்தனாகலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 எல்லோருக்கும் எல்லா பணிகளிலும் உதவியாக இருங்கள். உங்களை சனி உயர்ந்த இடத்தில் வைத்து அழகு பார்ப்பார். ஏழரைச் சனியில் எப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று திரும்பத் திரும்ப சந்தேகம் வருகிறதா? ஏழரையில் மனசாட்சிக்கு பயப்படுங்கள். மனசாட்சியை மீறி எது செய்தாலும் சனியின் பாதிப்பிற்கு ஆளாவீர்கள். உங்கள் மனசாட்சி வேறல்ல... சனிபகவான் வேறல்ல என்பதை நீங்களே அறிவீர்கள்.

பூமிக்கடியில் ஓடும் ஏரி..மெய்சிலிர்க்க வைக்கும் இயற்கை அதிசயம்..!






அண்டார்டிகாவில் உள்ள ரஷ்யாவின் வாஸ்டாக் நிலையத்தின் கீழே ஓடும் வாஸ்டாக் ஏரி சுமார் 250 கி.மீட்டர் நீளமும், 40 கி.மீட்டர் அகலமும் கொண்டது. ஆனால் இந்த ஏரியின் நீரை இதுவரை எவரும் தொட்டதில்லை. ஏனெனில் இந்த ஏரி சுமார் நான்கு கி.மீட்டர் ஆழமுள்ள பனிக்கட்டிகளின் அடியில் உள்ளது.

அப்போதும் இந்த ஏரி தண்ணீராகவே அவ்வளவு ஆழத்தில் ஓடுவதுதான் இதன் சிறப்பம்சம். பூமியின் மையக் கருவிலிருந்து வரும் வெப்பமே, இந்த ஏரி அவ்வளவு ஆழத்திலும் உறையாமல் தண்ணீராகவே ஓடுவதற்குக் காரணமாகும்….!

வீட்டு கடன் வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்




தனியார் வங்கிகள் சில வீட்டு கடன்களுக்கு எதிராக,  அடமானம் என்ற பெயரில் சொத்துகளுக்கு எதிராக தனி நபர் கடன்களை வழங்கும். இக்கடனை திரும்ப செலுத்துபர் இ.எம்.ஐ மூலம் கடனையும், அதற்கான வட்டியையும் கட்டலாம்.  இ.எம்.ஐ யில் உள்ள நிபந்தனைகள் வங்கிகளுக்கு ஏற்ப மாறுபடலாம். எனவே, குறைந்த வட்டியில் தங்களுக்கு ஏற்ற போல்  வீட்டு கடன் பெற, தகுந்த சேவையை கொண்ட வங்கிகளை சரியான நேரத்தில் தேர்ந்தெடுக்க வேண்டும்.

கடன் வாங்க தகுதியானவர்

தொழில்,குறைந்த பட்ச வருமானம், வேலைவாய்ப்பு, வயது வரம்பு.

விண்ணப்பம்

விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யும் போது சரியான முறையில் பூர்த்தி செய்ய வேண்டும். தகவல்கள் சரியானதாக இருக்க வேண்டும். அதனுடன் லோன் வேண்டி சொல்லப்படும் இடத்திற்கான சரியான டாக்குமென்ட்களை  கொடுக்க வேண்டும்

தேவையான ஆவணங்கள்

தேவயான சம்பள சான்றிதல்,  வருமான வரி செலுத்திய விவரம் அடங்கிய சான்றிதழ், அடையாள அட்டை, முகவரி சான்று, கடைசி
6 மாத பேங்க் ஸ்டேட்மென்ட் அல்லது ஃபாஸ்புக், புகைப்படம். மனைப்பத்திரம், தாய்பத்திரம், சட்டகருத்து, அங்கீகரிக்கப்பட்ட ஃப்ளான், வயது சான்று, வருமான சான்று,

லோன் தொகை

மனை விலை  மதிப்பு ஏற்ப அளிக்கப்படும் லோன் , அதற்கு உண்டான பரிசீலனை கட்டணம்  மற்றும் அதற்கு உண்டான சேவை வரி

ஜில்லா பஞ்ச்...!



இளைய தளபதி விஜய் படங்களில் பஞ்ச் வசனங்களுக்கு என்றுமே குறைவிருக்காது. அவரது படங்களில் பெரும்பாலும் எதிர்பார்க்கப்படுபவை சண்டைக்காட்சிகள், நடனங்கள் மற்றும் பஞ்ச் டயலாக்குகளாகும்.

சூப்பர் ஸ்டார் ரஜினியை அடுத்து தமிழில் அதிக பஞ்ச் வசனங்கள் இளைய தளபதியின் படங்களில் இருக்கும். விஜய் ரசிகர்களும் இந்தப் பஞ்ச்
டயலாக்குகளைப் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

“ ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா என் பேச்சவே நானே கேட்க மாட்டேன்” என்ற பஞ்ச் வசனம் இன்றளவும் பிரபலமாக உள்ளது. அதைப் போலவே ஜில்லா படத்திலும் ஒரு பஞ்ச் வசனம் வெளியாகவுள்ளது.

ஜில்லா படத்தில் “ ஒரு வாட்டி எங்கிட்ட வாங்கிட்டான்னா, இங்க இல்ல இந்த ஜில்லாவுலயே இருக்க மாட்டான்” என்ற பஞ்ச் வசனம் இப்படத்தில்
இடம்பெறுகிறது. இப்படத்தின் டீசரில் வெளியாகியிருக்கும் இந்தப் பஞ்ச் டயலாக் ஏற்கெனவே ரசிகர்களால் பெரும் வரவேற்புக்கு உள்ளாகியிருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் ஏற்கெனவே அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் ஒருவரையொருவர் கிண்டல் செய்து எழுத ஆரம்பித்துவிட்டனர் என்பது கூடுதல் செய்தி.

விஜய், மோகன்லால் மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில், நேசன் இயக்கத்தில்,
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்திருக்கும் ஜில்லா திரைப்படம் வருகிற ஜனவரி
10ல் வெளியாகிறது.

லைஃப் இன்ஷூரன்ஸ்: சிறந்த பாலிசி எது..?



இன்று பெரும்பாலோர் மற்றவர்களின் வற்புறுத்தலின் மூலமே ஆயுள் காப்பீடு (லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி) எடுக்கிறார்கள்.

காப்பீடு செய்து கொள்வதில் உள்ள பயனை இன்னும் முழுமையாகத் தெரிந்துகொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

இன்ஷூரன்ஸ் ஒரு போதும் முதலீடு ஆக முடியாது அது ஒரு பாதுகாப்பே.

மேலும் இன்சூரன்ஸ் ஒரு நீண்ட கால திட்டம். இடையில் வெளியேற முடியாது. உதாரணமாக இது 20 முதல் 25 வருட திட்டம்

 நமக்கு கிடைப்பதோ 5.5% முதல் 6% வரை தான். இதனால் பண வீக்கத்தை கட்டுப்படுத்த முடியாது. முன்பே சொன்ன மாதிரி இன்ஷூரன்ஸ் என்பது நம்முடைய ரிஸ்க்கினை மற்றவருக்கு மாற்றுவதே.

பொதுவாக மக்களுக்கு ஒரு சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மட்டுமே பாதுகாப்பு என்ற எண்ணமும்,  மற்ற இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் அந்த அளவுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஒரு கருத்து இருக்கிறது.

அது மிகவும் தவறானது ஏனென்றால் எல்லா இன்ஷூரன்ஸ் நிறுவனமும் இன்ஷூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையத்தின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளதால் கவலைப்படத் தேவையில்லை.

நிறைய பேருக்கு நம்மிடம் தான் போதுமான பணம் உள்ளதே எதற்கு நமக்கு இன்ஷூரன்ஸ் என்ற கேள்வி உள்ளது.

அதற்கான பதில் இது தான்.

ஒரு வேளை நாம் இறந்தால், நம்முடைய குடும்பம் தற்போது உள்ள நிலையிலே இருக்கும் என்று சொல்ல முடியாது. அந்த நிதிச் சிக்கலில் இருந்து விடுபட நம் எல்லாருக்கும் தேவையான ஒன்று என்பதில் சந்தேகமே இல்லை.

இன்று பெரும்பாலானவர்கள் இன்ஷூரன்ஸ் வைத்திருக்கிறார்கள் ஆனால் தேவையான இன்ஷூரன்ஸ் இருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை. மேலும் பலருக்கு எவ்வளவு இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும் என்பதும் தெரியவில்லை.

சிலர் 10 பாலிசிகள் கூட வைத்திருப்பார்கள், ஆனால் போதுமான தொகைக்கு எடுத்திருக்க மாட்டார்கள். இன்ஷூரன்ஸில் பல வகை உள்ளது.

மிகவும் பிரபலமானது என்றால் அது எண்டோவ்மென்ட் பாலிசி மற்றும் மணிபேக் பாலிசி. இது நீண்ட கால பிளான் 20 முதல் 25 வருடம் வரை. ஆனால் வட்டி குறைவு மேலும் சரண்டர் செய்தால் நாம் நிறைய பணம் இழக்க வேண்டி வரும்.

உதாரணமாக நம்முடைய காலில் சிறிய கட்டி வந்தவுடன் அதை அப்புறப்படுத்தாமல் பின்பு பார்த்துக் கொள்ளலாம் என்றால் காலையே எடுக்கவேண்டி வரும்.

முதலிலே இந்த மாதிரி எண்டோவ்மென்ட் பாலிசியை புரிந்து கொண்டால் சரண்டர் செய்வது நல்லது. தெரிந்தும் 20 வருடம் கட்டுவது காலை இழப்பதற்குச் சமமாகும்.

பணத்தை இழக்க விரும்பாமல் 20 வருடம் கட்டிய பின்பு வரும் தொகை மிகக் குறைவு. எனவே இந்த மாதிரி பாலிசியைத் (traditional) தவிர்ப்பது நல்லது.

அடுத்ததாக ULIP பாலிசி இது. இது பங்குச் சந்தையின் போக்கிற்கேற்ப நம்முதலீடு இறங்குவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது. இந்த பாலிசியில் ப்ரீமியம் அதிகம் ஆனால் லைப் இன்ஷுரன்ஸ் கவரேஜ் குறைவு. இதையும் தவிர்ப்பது நல்லது.

பின்பு எதுதான் நல்ல பாலிசி என்கிறீர்களா..?
டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி தான்.

உதாரணமாக ஒருவருக்கு 30 வயது என்று எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு 60 வயது வரை கவர் செய்யக்குடிய டேர்ம் இன்சூரன்ஸ் பாலிசியில் ஒரு கோடி ரூபாய்க்கு பாலிசி எடுக்கும்பட்சத்தில், பிரீமியமாக 18,000 ருபாய் செலுத்தினால் போதும்.

அவசியம் எடுக்க வேண்டிய ஐந்து பாலிசிகள்..!



பரபரப்பாக இயங்கும் உலகமிது. இதில் யாருக்கு எப்போது எப்படி பிரச்னை வரும் என்று சொல்ல முடியாது. குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடியவர்கள் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி மரணமடைந்தால் அந்தக் குடும்பத்தின் நிலை தலைகீழாக மாறிவிடும். அதாவது, உயிரிழப்பு அல்லது உடல்பாதிப்பினால் குடும்பத் தலைவர் மூலம் குடும்பத்திற்கு கிடைக்கும் வருமானம் தடைபடும். குடும்பத் தலைவர் ஏற்கெனவே கடன் வாங்கியிருந்தால் அதைத் திரும்பக் கட்டவேண்டிய கட்டாயம் அந்தக் குடும்பத்தினரின் மேல் விழுந்து, மேலும் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை உருவாகும்.

இப்படி ஒரே சமயத்தில் பணநெருக்கடியும், மனநெருக்கடியும் ஏற்பட்டு அந்தக் குடும்பத்தினரின் வாழ்க்கையே நரகமாக மாறிவிடும். எனவே, இதுபோன்ற சூழ்நிலையில் பிரச்னைகளுக்கு தீர்வாக அமைவது இன்ஷூரன்ஸ் ஒன்றாக மட்டுமே இருக்கும் என்பது அனைவராலும் மறுக்க முடியாத உண்மை.

எனவே, ஒவ்வொரு தனி மனிதனும் கட்டாயம் வைத்திருக்கவேண்டிய இன்ஷூரன்ஸ் பாலிசிகள் என்னென்ன? இவை எந்த வகையில் வாழ்க்கைக்கு உதவும் என்பது குறித்து விளக்குகிறார் நிதி ஆலோசகர் வி.சங்கர்.

லைஃப் இன்ஷூரன்ஸ்!

திருமணமானவர்கள் அவசியம் எடுக்கவேண்டிய பாலிசி இது. இதற்காக திருமணமாகாதவர்களுக்கு இந்த பாலிசி தேவையில்லை என்பதல்ல அர்த்தம். தனிநபரைச் சார்ந்து பெற்றோர் மற்றும் சகோதர, சகோதரிகள் இருந்தால் கட்டாயம் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக்கொள்வது அவசியம்.

லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியில் டேர்ம் பாலிசி, முழு ஆயுள் பாலிசி, எண்டோவ்மென்ட் பாலிசி, யூலிப் பாலிசி, சைல்டு ப்ளான் பாலிசி என பலவகைகள் உள்ளன. இதில் டேர்ம் இன்ஷூரன்ஸ்தான், குறைவான பிரீமியத்தில் அதிக கவரேஜ் தரும் பாலிசியாக இருக்கும். இந்த டேர்ம் இன்ஷூரன்ஸைப் பொறுத்தவரை, அசம்பாவிதம் ஏற்பட்டால் மட்டும்தான் இழப்பீடு கிடைக்கும். பாலிசி முடிவில் எந்த முதிர்வுத் தொகையும் பாலிசிதாரருக்குக் கிடைக்காது.

வங்கி வாடிக்கையாளராக இருந்தாலும் கூட இனிமேல்..?

ஏடிஎம் பாதுகாப்புக்காக மட்டும் மாதம் ரூ.4,000 கோடி செலவு..!


வங்கி வாடிக்கையாளராக இருந்தாலும் கூட இனிமேல் ஏடிஎம் மிஷினில் ஐந்து முறைகளுக்கு மேல் பண பரிவர்த்தனை மேற்கொண்டால் அவர்களிடம் கட்டணம் வசூலிக்க வங்கிகள் முடிவு செய்துள்ளன. இந்த முறை இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்றாலும்  இந்த விவகாரம் ஆர்பிஐ, வங்கிகள் மற்றும் அரசாங்கத்தாரால் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

வங்கிகள் தங்களுக்கு ஏற்படும் நஷ்டங்களை தவிப்பதற்காகவே இந்த நடவடிக்கைகயை மேற்கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்திருக்கின்றன. இவர்களின் இந்த நடைமுறைக்கு ஆர்பிஐ துணைகவர்னர் ''வங்கிகள் வசூலிக்கும் கட்டணம் ஏற்றுக் கொள்ளதக்க வகையில் இருந்தால் வங்கிகளின் பொருளாதார நிலை கருதி ஏற்றுக் கொள்ளப்படும் எனவும், அத்தகைய கட்டண வசூல் குறித்து ரிசர்வ் வங்கிக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை’’ எனவும் தெரிவித்திருந்தார். இன்று இந்தியன் பேங்க் அஸோஸியேஷனும் வங்கிகளின் முடிவுக்கு ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்துள்ளது.

அது மட்டுமல்லாமல் அவர்களின் அறிக்கையில், ''இந்தியா முழுவதும் ஒரு லட்சம் ஏடிஎம்கள் இருக்கின்றன ஒவ்வொரு ஏடிஎம் பாதுகாப்பிற்காக மட்டும் மாதம் 40,000 ரூபாயை வங்கிகள் செலவு செய்ய வேண்டி இருக்கிறது. இந்த செலவினம் மொத்தம் ரூ. 4,000 கோடியாக உள்ளது. இந்த செலவினங்களை கட்டுப்படுத்தவே வங்கிகள் இந்த நடவடிக்கையில் இறங்கி உள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி ஏன்? எதற்கு? எப்போது? - குழந்தையின் ஆரோக்கியம்

தடுப்பூசி ஏன்? எதற்கு? எப்போது?


குழந்தையின் ஆரோக்கியம் என்பது, தாயின் கர்ப்பபையில் குழந்தை கருவாக உருகொள்ளும் காலத்தில் இருந்தே கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது கட்டாயம்! குழந்தைகளின் உடல் ஆரோக்கியம்தான் அவர்களின் மன ஆரோக்கியத்துக்கு அடிப்படை. குழந்தை பிறந்தவுடன் நோய்க் கிருமிகளும் அவர்களைத் தாக்க ஆரம்பித்துவிடுகின்றன. அவற்றில் இருந்து குழந்தைகளைக் காப்பது எப்படி? நோய்த் தொற்றில் இருந்து குழந்தைகளைக் காக்க இந்திய அரசாங்கத்தின் சுகாதாரத் துறையும், இந்திய குழந்தைகள் நல மருத்துவக் கூட்டமைப்பும் பரிந்துரைக்கும் தடுப்பூசிகள் என்னென்ன? அவற்றை எந்தெந்தக் காலகட்டங்களில் மருத்துவர்களின் ஆலோசனைகளோடு பயன்படுத்த வேண்டும்


  • தடுப்பூசி


நோய்த் தடுப்பு என்பது, தினசரி நம்முடைய உடலில் நடந்துகொண்டிருக்கும் ஒரு செயல்பாடு. நோய்க் கிருமிகள் அல்லது உடலைச் சாராத ஏதேனும் பொருள் உடலுக்குள் நுழையும்போது அதை அழிக்கிற வேலையைப் பார்ப்பவை இயற்கையாகவே நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு செல்கள்தான். சில செல்கள் தன்னால் அழிக்கப்பட்ட கிருமியை நினைவில் வைத்துக்கொண்டு, மீண்டும் அதுபோன்று ஏதேனும் உடலுக்குள் நுழைந்தால் அவற்றின் தாக்குதலில் இருந்து என்று விழிப்புடன் நம்மைப் பாதுகாக்கிறது.

சில நோய்த் தாக்குதலைச் சமாளிக்க செயற்கையான நோய்த் தடுப்பு மருந்துகளும் உடலுக்குள் செலுத்தப்படுகின்றன. அவைதான் தடுப்பூசிகள்! இப்படி உடலுக்குள் செலுத்தப்படும் நோய்த் தடுப்பானது நோய்க் கிருமி தொற்றில் இருந்து நம்மைக் காக்கிறது. முதன் முதலில் பெரியம்மைக்குத்தான் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது. அது முதல் தொடர்ந்து பல்வேறு நோய்களுக்கு தடுப்பூசிகள், தடுப்பு மருந்துகள் வந்துகொண்டே இருக்கின்றன.

தடுப்பூசிகள் போடுவதற்கான காரணங்கள் தடுப்பூசி நம் குழந்தைகளின் ஆரோக்கியமான வாழ்வை உறுதி செய்கிறது! தவிர, நோய்த் தொற்றுக்கிருமிகளுக்கு எதிராகச் செயல்பட்டு வரும்கால தலைமுறையைப் பாதுகாக்கிறது. நம் குடும்பத்தின் நேரம், பணத்தை மிச்சப்படுத்துகிறது.

ஒரு காலத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்த போலியோ, அம்மை போன்ற நோய்கள் தடுப்பூசிகளால் பெருமளவு ஒழிக்கப்பட்டன! குழந்தைகளைத் தாக்கும் நோய்த் தொற்றில் இருந்து காப்பதோடு மட்டுமல்ல, குழந்தைகள் ஊனமாகி உயிர் இழப்பதில் இருந்தும் தடுப்பூசிகள்தான் தற்காக்கின்றன.


  • தடுப்பூசி அட்டவணை


ஒரு காலத்தில் உலக அளவில் தட்டம்மை, ரண ஜன்னி, காச நோய், இளம்பிள்ளை வாதம், தொண்டை அழற்சி போன்ற நோய்களால் ஒவ்வொரு நிமிடத்துக்கும் 10 குழந்தைகள் இறந்தனர். ஆனால் இன்றோ, பிறந்த உடனேயே இந்த நோய்களுக்கான தடுப்பு மருந்துகள் அளிக்கப்படுகின்றன. இதனால், இந்த நோயால் குழந்தைகள் இறப்பு இல்லை என்ற அளவுக்கு மருத்துவம் முன்னேறிவிட்டது!

இந்திய அரசு குழந்தைப் பிறந்தது முதல் போடவேண்டிய தடுப்பூசி, சொட்டு மருந்துகள் பற்றிய அட்டவணையை வெளியிட்டுள்ளது. இருப்பினும், இந்திய குழந்தைகள் நல மருத்துவர் கூட்டமைப்பு குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதில், இந்திய அரசு வெளியிட்டுள்ள அட்டவணையில் உள்ள தடுப்பூசிகளுடன் சேர்த்து கூடுதலாக மேலும் சில தடுப்பூசி மருந்துகளைப் பரிந்துரைக்கிறது.

என்னென்ன தடுப்பூசிகள் போட வேண்டும்? பிறந்தவுடன்…

குழந்தைப் பிறந்ததும் காசநோய்க்கு பி.சி.ஜி., போலியோவுக்கு ஓ.பி.வி., ஹெபடைடிஸ் பி வைரஸுக்கு எச்.பி.வி. அளிக்கப்படுகின்றன. குழந்தை பிறந்ததும் மருத்துவமனைகளே குழந்தைகளுக்கு இந்தத் தடுப்பு மருந்துகளை அளித்துவிடுவதால் கவலையில்லை.


  • பி.சி.ஷி. தடுப்பூசி (கட்டாயம்)


பி.சி.ஜி.(BCG – Bacille Calmette-Guerin) – குழந்தைக்கு காசநோய் வராமல் தடுக்கும் தடுப்பூசி. குழந்தையின் இடது கையில் தோள்பட்டைக்கு அருகில் (புஜத்தில்) போடப்படும். இது நோயை முற்றிலும் தடுத்துவிடும் என்று சொல்ல முடியாது. குழந்தையின் தனிப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தே இது வேலை செய்யும்.

எச்சரிக்கை:

தடுப்பூசி போடப்பட்ட இடத்தில் சிறு வீக்கம் உண்டாகலாம். அது உடைந்து புண்ணாகி லேசான நீர்க்கசிவுகூட ஏற்படலாம். இதில் பயம் ஒன்றும் இல்லை. சில நாட்கள் வரை இருந்துவிட்டு பின்னர் அதுவாகவே சரியாகி அந்த இடத்தில் நிரந்தரத் தழும்பு உருவாகும். புண் ஆறாமல் இருந்தால் அல்லது அதிகமான வீக்கம் இருந்தால் குழந்தை நல மருத்துவரைக் கலந்தாலோசிப்பது நல்லது. புண் ஆற வேண்டும் என்று எந்த ஒரு மருந்தையும் அதன் மீது தடவக்கூடாது.


  • இளம்பிள்ளைவாதத்துக்கு ஓ.பி.வி. சொட்டு மருந்து (கட்டாயம்)


போலியோ கிருமி, குழந்தையின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து, கால்கள் சூம்பிப்போகச் செய்யக்கூடியது. இதனால் நிரந்தர ஊனம் ஏற்படும். இதைத் தவிர்க்க பல கட்டமாக அரசாங்கமே இலவச மருந்தை அளிக்கிறது.

குழந்தைப் பிறந்தவுடன் வாய் வழியாக ஓ.பி.வி. (OPV- oral polio vaccine) மருந்து அளிக்கப்படும். இதை ‘ஜீரோ டோஸ்’ என்பர். போலியோ நோய்த் தடுப்பில் சொட்டு மருந்து / ஊசி என்று இரண்டு இருக்கின்றன. பொதுவாக நம் ஊரில் போலியோ சொட்டு மருந்துதான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.


  • ஹெபடைடிஸ் பி (எச்.பி.வி.) தடுப்பூசி (விருப்பத்தின் பேரில்)


உலக அளவில் பொதுவாகக் காணப்படும் நோய்த் தொற்று ‘ஹெபடைடிஸ் பி’. இது கல்லீரலைப் பாதிக்கிறது. எதிர்காலத்தில் கல்லீரல் சுருக்கம் (லிவர் சிரோசிஸ்), கல்லீரல் செயல் இழப்பு போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தை உண்டாக்கும். இதைத் தவிர்க்க பிறந்ததும் ‘ஹெபடைடிஸ் பி முதல் டோஸ்’ தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது. அரசு வெளியிட்டுள்ள அட்டவணையில் ஹெபடைடிஸ் பி தடுப்பூசியைப் பரிந்துரைக்கவில்லை. ஆனால், இதைப் போட்டுக்கொள்வது நல்லது என்று குழந்தைகள் நல மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.


  • ஆறு வாரங்களுக்குப் பிறகு…


டி.பி.டி. (DPT) எனப்படும் முத்தடுப்பு ஊசி, போலியோ தடுப்பூசி அல்லது சொட்டு மருந்து இரண்டாவது டோஸ், ஹெபடைடிஸ் பி இரண்டாவது டோஸ், ரோட்டா வைரஸ், பி.சி.வி. முதல் டோஸ், எச்.ஐ.பி. முதல் டோஸ் அளிக்கப்படும்.


  • முத்தடுப்பு ஊசி (டி.பி.டி.) (கட்டாயம்)


‘டிப்தீரியா’ எனப்படும் தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், டெட்டனஸ் எனப்படும் ரண ஜன்னி ஆகிய மூன்று தொற்று நோய்களுக்கு எதிரான மருந்து இது.

எச்சரிக்கை:.

டி.பி.டி. தடுப்பூசி போடப்பட்ட சில மணி நேரத்தில், சில குழந்தைக்கு காய்ச்சல் வரலாம். அது சாதாரணமான காய்ச்சல்தான். பயப்படத் தேவையில்லை. ஒரே நாளில் குணமாகிவிடும். காய்ச்சல் ஒரு நாளுக்கும் மேலாகத் தொடர்ந்தால் உடனடியாக குழந்தையை டாக்டரிடம் காண்பித்து
ஆலோசனை செய்ய வேண்டும்


  • ஓ.பி.வி. சொட்டு மருந்து (கட்டாயம்)


போலியோவுக்கு அளிக்கப்படும் மருந்தின் இரண்டாவது டோஸ் இது. வாய் வழி சொட்டு மருந்தாகவும் இதை எடுத்துக்கொள்ளலாம்.


  •  ரோட்டா வைரஸ் தடுப்பூசி முதல் டோஸ் (விருப்பத்தின்பேரில்)


வயிற்றுப்போக்கை ஏற்படுத்தி உயிரைப் பறிக்கும் கொடிய கிருமி ரோட்டா வைரஸ். ஆண் குழந்தைகளைவிட பெண் குழந்தைகளையே இது அதிகம் பாதிக்கிறது. இந்த நோய்த் தொற்று ஏற்பட்டால் அதைக் குணப்படுத்த மருந்துகள் இல்லை. ஆனால் இந்தநோய் வராமல் தடுக்க தடுப்பூசிகள் உள்ளன.


  • எச்.ஐ.பி (ஹீமோபீலியஸ் இன்ஃபுளுவென்சா டைப் பி) தடுப்பூசி (விருப்பத்தின்பேரில்)


ஹிமோபீலியஸ் இன்ஃபுளுவென்சா டைப் பி நோய்த்தொற்று ஏற்பட்டால் குழந்தைகளுக்கு மூளை மற்றும் முதுகு தண்டுவடத்தைச் சுற்றியுள்ள சவ்வுகள் பாதிக்கப்படும். அதைத் தடுக்கவே இந்த தடுப்பு மருந்து அளிக்கப்படுகிறது.

கவனம்: இந்த ஊசி போட்ட இடத்தில் சிவந்துபோதல், வீக்கம் அல்லது வலி இருக்கலாம். ஆனால், கவலைப்படத் தேவையில்லை.


  • பென்டாவேலன்ட் தடுப்பூசி


முத்தடுப்பு ஊசி என்பது மூன்று நோய்களுக்கு எதிராக அளிக்கப்படுகிறது. தற்போது அதற்குப் பதிலாக ஐந்து நோய்களைத் தடுக்கும் ‘பென்டாவேலன்ட்’ என்ற ஊசியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிசிஜி, ஓபிவி, டிபிடி, தட்டம்மை, மஞ்சள் காமாலை… உள்ளிட்ட ஐந்து நோய்களுக்கான ஒரே தடுப்பூசிக்கு பென்டாவேலன்ட் என்று பெயர். இந்தத் தடுப்பூசிகளின் மூலம் குழந்தைகளுக்கு காசநோய், இளம்பிள்ளைவாதம், தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி, மஞ்சள் காமாலை பி, தட்டம்மை உள்ளிட்ட உயிர்க்கொல்லி நோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. ஏற்கெனவே தடுப்பூசி திட்டத்தில் வழங்கப்படும் தடுப்பூசிகளுக்குப் பதிலாக பென்டாவேலன்ட் என்ற ஒரே தடுப்பூசியே சிறப்பாகச் செயல்படுகிறது.

  • 10வது வாரம்


முத்தடுப்பு ஊசி, போலியோ, எச்.ஐ.பி., ரோட்டா வைரஸ், பி.சி.வி. இரண்டாவது டோஸ்… ஆகியவை குழந்தை பிறந்த 10-வது வாரத்தில் அளிக்கப்படும். இதில், முத்தடுப்பு ஊசி மற்றும் போலியோ மருந்தைத் தவிர மற்றவை விருப்பத்தின்பேரில் மட்டுமே போடப்படும்.


  • 14வது வாரம் (மூன்றரை மாதம்)


இந்தக் கால கட்டத்தில் போலியோ, முத்தடுப்பு ஊசி கட்டாயம் அளிக்கப்பட வேண்டும். இதுதவிர, ஹெபடைடிஸ் பி, எச்.ஐ.பி. ரோட்டா வைரஸ், பி.சி.வி மூன்றாவது டோஸ் போன்றவைகளும் அளிக்கப்பட வேண்டும்.


  • ஆறு மாதங்களுக்குப் பிறகு…


வாய்வழி போலியோ சொட்டு மருந்து மற்றும் ஹெபடைடிஸ் பி மூன்றாவது டோஸ் இந்தக் கால கட்டத்தில் அளிக்க வேண்டும். இன்ஃபுளுவென்சாவுக்கான தடுப்பூசி இந்த மாதம் முதல் கொடுக்க ஆரம்பிக்கவேண்டும். இதன்பிறகு ஆண்டுக்கு ஒரு முறை என்ற வகையில் இன்ஃபுளுவென்சாவுக்கு மருந்தும் கொடுக்க வேண்டும்.


  • ஒன்பதாவது மாதம்


போலியோ சொட்டு மருந்து, மற்றும் ஹெபடைடிஸ் பி 3-வது டோஸ் அளிக்கப்பட வேண்டும்.


  • தட்டம்மைத் தடுப்பூசி (கட்டாயம்)


குழந்தையின் ஒன்பதாவது மாதத்தில் தட்டம்மைக்கான தடுப்பூசி போட வேண்டும். இதை, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் போட்டுக்கொள்ளலாம். ஒன்பதாவது மாதத்தில் இந்தத் தடுப்பூசி போடப்படாத குழந்தைக்கு ஒரு வயதுக்குப் பின் எம்.எம்.ஆர் போடலாம்.

மேலும், 5 அல்லது 12 வயதிலும்கூட இந்தத் தடுப்பூசியைப் போடுமாறு டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள்.


  • ஒரு வயதுக்குப் பிறகு


இந்த காலகட்டத்தில் ஹெபடைடிஸ்- ஏ வைரஸுக்கான தடுப்பூசி முதல் டோஸ் அளிக்கப்பட வேண்டும். இதுவும் விருப்பத்துக்கு உட்பட்டது. ஹெபடைடிஸ் ஏ-வில் கொல்லப்பட்டது, உயிரோடு இருக்கக்கூடியது என இரண்டு வகையான டோஸ்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. இரண்டாவது (இறுதி) டோஸ், முதல் டோஸ் போட்டதில் இருந்து ஆறு முதல் 18 மாதங்களில் போடவேண்டும்.


  • காலரா தடுப்பூசி (விருப்பத்தின்பேரில்)


ஒரு வயது பூர்த்தியான குழந்தைகளுக்கு இந்த ஊசி பரிந்துரைக்கப்படுகிறது. காலரா என்பது ‘விப்ரியோ காலரே’ என்ற கிருமியால் ஏற்படுகிறது. இந்தக் கிருமி வயிற்றுப்போக்கை ஏற்படுத்தி உடலில் உள்ள நீரை வெளியேற்றிவிடும். நீருடன் சேர்ந்து உடலில் உள்ள உப்புக்களும் வெளியேறிவிடுவதால் நீர் இழப்பு காரணமாக குழந்தைகள் உயிரிழக்க நேரிடலாம். இந்த நேரத்தில் குழந்தைக்கு தாய்ப்பால், இளநீர் போன்றவற்றைக் கொடுக்கலாம். அல்லது உப்பு- சர்க்கரைக் கரைசல் கொடுக்க வேண்டும்.

எச்சரிக்கை:

குழந்தை வாந்தி எடுக்கிறது என்று தாய்ப்பால், இளநீர், உப்பு-சர்க்கரைக் கரைசல் கொடுக்காமல் இருந்துவிடக்கூடாது.


  • 15வது மாதத்தில்


எம்.எம்.ஆர். தடுப்பூசி முதல் டோஸ், வேரிசெல்லா தடுப்பூசி, பி.சி.வி. பூஸ்டர் தடுப்பூசி இந்தக் காலக்கட்டத்தில் பரிந்துரைக்கப்படுகின்றன.


  • எம்.எம்.ஆர். தடுப்பூசி (கட்டாயம்)


மீசல்ஸ், மம்ஸ் மற்றும் ரூபெல்லா எனப்படும் தட்டம்மை, புட்டாலம்மை (பொன்னுக்கு வீங்கி) மற்றும் ஜெர்மன் அம்மையை ஏற்படுத்தும் கிருமிகளுக்கு எதிராகப் போடப்படும் தடுப்பூசி இது.

எச்சரிக்கை: இந்தத் தடுப்பூசி போட்டதும் குழந்தைக்கு காய்ச்சல்போல உடல் சூடாகும், மூட்டு வலி அல்லது உடலில் விரைப்புத்தன்மை ஏற்படலாம். குழந்தைகள் நல மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெறவேண்டியது அவசியம்.


  • வேரிசெல்லா தடுப்பூசி (விருப்பத்தின்பேரில்)


வேரிசெல்லா சோஸ்டர் என்ற வைரஸ் கிருமியால் சின்னம்மை ஏற்படுகிறது. இதைத் தடுப்பதற்காக வேரிசெல்லா தடுப்பூசி 15-வது மாதத்தில் போட்டுக்கொள்ளும்படி பரிந்துரைக்கப்படுகிறது. இது ஒருவரை ஒருவர் தொடுவதன்மூலமும், சுவாசம், இருமல், தும்மல் மூலமும் காற்றில் பரவக்கூடியது. சிலருக்கு இந்தக் கிருமியால் பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆனால், சில குழந்தைகளுக்கு இது வலிப்பு நோயை ஏற்படுத்தி உயிரிழப்பைக்கூட உண்டாக்கலாம். சின்னம்மை வந்து சென்றபிறகும்கூட இந்தக் கிருமி உடலிலேயே இருந்து எதிர்காலத்தில் வேறு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இதைத் தவிர்ப்பதற்காக இந்தத் தடுப்பூசி அளிக்கப்படுகிறது. 12 முதல் 15 மாதக் குழந்தைகளுக்கு இது அளிக்கப்பட வேண்டும்.


  • 16 முதல் 18வது மாதங்களில்


டி.டி.பி., ஐ.பி.வி., ஹெச்.ஐ.பி. முதலாவது பூஸ்டர் அளிக்கப்பட வேண்டும். இதற்கு முன்பு இந்த நோய்க் கிருமிகள் தாக்காமல் இருப்பதற்காக தடுப்பூசி போட்டிருக்கலாம். குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அந்தக் கிருமிகளுக்குரிய நோய் எதிர்ப்புச் சக்தி குறையத் தொடங்கும். அந்த நேரத்தில் மீண்டும் அதே தடுப்பூசி போடப்பட வேண்டும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி தூண்டப்படும். இவ்வாறு நோய் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டுவதற்காக, மீண்டும் செலுத்தப்படும் தடுப்பூசிக்கு ‘பூஸ்டர் தடுப்பூசி’ என்று பெயர்.


  • முத்தடுப்பு பூஸ்டர் தடுப்பூசி (கட்டாயம்)


‘டிப்தீரியா’ எனப்படும் தொண்டை அடைப்பான், பெர்டூசிஸ் எனப்படும் கக்குவான் இருமல், டெட்டனஸ் எனப்படும் ரண ஜன்னி ஆகிய மூன்று தொற்று நோய்களுக் எதிரான பூஸ்டர் தடுப்பு மருந்து இது.

எச்சரிக்கை:

குழந்தைக்கு சிறிய அளவில் காய்ச்சல் மற்றும் ஊசி போட்ட இடத்தில் வலி, வீக்கம் இருக்கலாம். கவலைப்படத் தேவையில்லை. போலியோ பூஸ்டர் மருந்துபோலியோ தடுப்பு மருந்து.வாய் வழியே எடுத்துக்கொள்ளக்கூடியது.

குறிப்பிட்ட காலத்தில் போட்டுவிட்டோமே என்று இருந்துவிட வேண்டாம். போலியோ ஒழிப்பு தினத்தன்று அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அரசு சார்பில் இலவசமாக அளிக்கப்படுகிறது. அந்தநேரத்திலும் குழந்தைக்கு இந்தச் சொட்டு மருந்தை அளிக்கலாம்.




  • எச்.ஐ.பி. பூஸ்டர் (விருப்பத்தின்பேரில்)


எச்.ஐ.பி. பூஸ்டர் தடுப்பூசி போடும்போது ஊசிபோடும் இடத்தில் வலி, சிவந்துபோதல், வீக்கம் போன்றவை ஏற்படலாம். ஒன்றிரண்டு நாட்களில் சரியாகிவிடும்.

18வது மாதம்ஹெபடைடிஸ் ஏ தடுப்பூசி இரண்டாவது தவணை (விருப்பத்தின்பேரில்)

இதை அரசு பரிந்துரைப்பது இல்லை என்றாலும், இந்திய குழந்தைகள் மத்தியில் ஹெபடைடிஸ் ஏ வைரஸ் தொற்று பரவலாகக் காணப்படுவதால் ‘இந்திய குழந்தைகள் நல மருத்துவர்கள் கூட்டமைப்பு’ இதனைப் பரிந்துரைக்கிறது. முதல் தவணைபோலவே, வைரஸ் கிருமி உயிருடன் உள்ளது, இறந்தது என இரண்டு டோஸ்கள் பரிந்துரைக்கப்படுகின்றன.


  • இரண்டு வயது


இந்த வயதில் டைஃபாய்ட் மற்றும் ஹெபடைடிஸ் ஏ தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இதில் டைஃபாய்டு தடுப்பூசி மட்டும் கட்டாயம் போடப்படவேண்டும்!

டைஃபாய்டு காய்ச்சல் தடுப்பூசி (கட்டாயம்)டைஃபாய்டு பாசிலஸ் என்ற கிருமி மூலம் இந்தக் காய்ச்சல் ஏற்படுகிறது.

இந்தக் கிருமியானது பாதுகாப்பற்ற உணவு மற்றும் குடிநீர் மூலம் பரவும். பொதுவாக சுகாதார சீர்கேடு நிறைந்த பகுதிகளில் இந்தக் காய்ச்சல் வேகமாகப் பரவுகிறது. வளர்ந்த நாடுகளில் டைஃபாய்டு மிகவும் அரிதான நோய். ஆனால், இன்னும் வளரும் நாடுகள் சுகாதாரச் சீர்கேடு காரணமாக ஆண்டுக்கு ஆறு லட்சம் பேர் இந்த நோய்க்கு ஆளாகின்றனர். இந்தத் தடுப்பூசியை குழந்தைகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அளிக்க வேண்டும் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.

நான்கரை முதல் ஐந்து வயது வரைஇந்த வயதில் டி.டி.பி இரண்டாவது பூஸ்டர், ஓ.பி.வி. மூன்றாவது தவணை, எம்.எம்.ஆர். மற்றும் வேரிசெல்லா தடுப்பூசிகள் இரண்டாவது தவணை, டைஃபாய்டுக்கான தடுப்பூசி, மெனிங்கோக்கல் தடுப்பூசி போன்றவை அளிக்கப்பட வேண்டும்.

எம்.எம்.ஆர். இரண்டாவது தவணை (கட்டாயம்)

எம்.எம்.ஆர். இரண்டாவது தவணை தடுப்பூசி என்பது மீசல்ஸ், மம்ஸ், ரூபெல்லா நோய்க் கிருமிகளுக்கு எதிரானது.

எச்சரிக்கை: தடுப்பூசி கொடுத்ததும் குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் மூட்டு வலி ஏற்படலாம்.

ஓ.பி.வி. பூஸ்டர் (கட்டாயம்)

இது போலியோவுக்காக அளிக்கப்படும் வாய்வழிச் சொட்டு மருந்து.

டி.டி.பி. பூஸ்டர் இரண்டாவது தவணை(கட்டாயம்)

இந்த பூஸ்டர் தடுப்பு ஊசி போட்ட பிறகு காய்ச்சலும், ஊசி போட்ட இடத்தில் வலி மற்றும் வீக்கம் இருக்கலாம்.

தேவையெனில் போட வேண்டியது


  • ஷப்பான் மூளைக் காய்ச்சல் தடுப்பூசி


குறிப்பிட்ட பகுதியில் ஜப்பான் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் கிருமி பரவுகிறது என்றால், அந்தப் பகுதியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு மட்டும் ‘ஜப்பான் மூளைக் காய்ச்சல் தடுப்பூசி’ போட்டுக்கொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறது. அதுவும், எட்டு மாதங்கள் பூர்த்தியடைந்த குழந்தைகளுக்கு மட்டும் இந்தத் தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது.


  • கர்ப்பப்பைவாய் புற்று தடுப்பூசி


பெண்களுக்கு ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் என்ற கிருமியால் கர்ப்பப்பைவாய் புற்றுநோய் ஏற்படுகிறது. இதைத் தடுக்க ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது. குறைந்தது ஒன்பது வயது முதல் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம். மூன்று தவணைகளில் (0-2-6 மாதங்களில் அல்லது 0-1-6 மாதங்களில்) இந்த மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். இது பெண்களுக்கானது என்றாலும் ஆண்களும் 11 அல்லது 12 வயதுக்கு மேல் இந்தத் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம்.

தேசியக் குடும்ப நலத்துறை மேற்கொண்ட ஆய்வின்படி இந்தியாவில் 43.5 சதவிகிதக் குழந்தைகள் மட்டுமே 12 மாதங்களுக்குட்பட்ட அனைத்து தடுப்பூசிகளையும் பெறுகின்றனர். அரசு பரிந்துரைக்கும் அட்டவணைப்படி தடுப்பூசி மருந்துகளை அரசு ஆரம்ப சுகாதார மையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாகப் போட்டுக்கொள்ளலாம்.

இந்தியக் குழந்தைகள் நல மருத்துவர்கள் கூட்டமைப்பு பரிந்துரைக்கும் மற்ற மருந்துகளை தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். இதைச் செய்வதன் மூலம் குழந்தைகளின் ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தைப் பெற்றோர்கள் உறுதிப்படுத்த முடியும்.

இயற்கை நோய்த் தடுப்புபிறந்த குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாகவே இருக்கும். இந்த நேரத்தில் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம் முழுமையாக வளர்ச்சியடைந்திருக்காது.

குழந்தைக்கு தாய்ப்பாலே முழு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. எனவே, ஆறு மாதங்கள் வரை கட்டாயம் தாய்ப்பால் மட்டுமே அளிக்க வேண்டும்.

பிரசவத்துக்குப் பிறகு முதன்முதலில் சுரக்கும் சீம்பால் குறைவாகவே இருக்கும். ஆனால் இதில் அடங்கியுள்ள சத்துகளும், அது தரக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தியும் அளவிட முடியாதது. எனவே, எந்தக் காரணம் கொண்டும் குழந்தைக்கு சீம்பாலைப் புகட்டாமல் இருக்க வேண்டாம்!


  • குழந்தையின் எடை…


குழந்தைப் பிறந்த முதல் ஒரு வாரத்துக்கு எடை குறையும். பிறகு சரியானபடி பால் கொடுத்து, சரியான நேரக்கணக்குக்கு குழந்தை தூங்கி விழித்தால் வாரத்துக்கு 200 கிராம் வீதம் எடை கூடும்.


  • கவனிக்கவேண்டிய முக்கியமான விஜயங்கள்


சில தடுப்பூசி தருணத்தில் குழந்தை எதிர்கொள்ளும் சங்கடம் இயல்பானதே. தடுப்பூசி போட்டதுமே குழந்தைக்கு காய்ச்சல் மாதிரியான சிறு உபத்திரவங்கள் தலைகாட்டலாம். காய்ச்சல் அதிகமாக இருந்தால், டாக்டர் தரும் மாத்திரைகளைப் பயன்படுத்தினால் போதும்.

தடுப்பூசி போடவேண்டிய காலகட்டத்தில் குழந்தைக்கு ஏதேனும் சளி, காய்ச்சல் அல்லது வேறு எதாவது உடல் நலப் பிரச்னை இருந்தால் அதைப் பற்றிக் கவலை வேண்டாம். தடுப்பூசியைத் தள்ளிப்போடவும்வேண்டாம். குழந்தைக்கு உள்ள உடல் நலப்பிரச்னைக்கு ஏற்ப மருத்துவரின் ஆலோசனைபடி நடப்பதே நல்லது.

குழந்தைக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு இருக்கும்போது போலியோ சொட்டு மருந்து போடவேண்டாம். அதேபோல் கடுமையான காய்ச்சல் அல்லது அலர்ஜி ஏற்பட்டிருந்தால் தடுப்பூசி போடுவதைத் தவிர்க்கலாம்! டாக்டரின் ஆலோசனையைப் பெற்று, முதலில் அவற்றைச் சரிபடுத்திய பிறகு தடுப்பூசி அளிக்க வேண்டும்.

மருத்துவர்கள் பரிந்துரைக்கும் இடைவெளி மிகவும் முக்கியமானது. அதிலும் நான்கு வார இடைவெளியில் டி.பி.டி. தடுப்பூசி மற்றும் ஓ.பி.வி. சொட்டு மருந்து போடவேண்டும் என்பது அவசியம்.

எல்லா தடுப்பூசியும் முழுதாகப் போடப்பட்ட குழந்தைகளுக்கு சிறு சிறு காயங்களுக்கு டிடி (டெட்டனஸ் டாக்ஸாய்ட்) கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை. டி.பி.டி. பூஸ்டர் மீதம் இருக்கும்போது குழந்தைக்கு காயம் ஏற்பட்டால், ஏற்கெனவே போடப்பட்ட பூஸ்டர் டோஸ் டெட்டனசில் இருந்து உங்கள் குழந்தைக்குப் போதுமான பாதுகாப்பை அளிக்கும்.

குழந்தைக்கு ஊசி போட புட்டத்தை விட தொடையே சிறந்த இடம் என்கிறார்கள் மருத்துவர்கள். ஒரு முறை பயன்படுத்தப்பட்ட ஊசியைப் பயன்படுத்துதல் கூடாது. பெற்றோர்கள் இதை உறுதிப்படுத்துவது நல்லது. ஊசிப் போட்ட இடத்தில் சில குழந்தைகளுக்கு சிறு வீக்கம் தென்படும். இது பிரச்னையும் இல்லை. அதற்கு க்ரீம், மருந்து போடத்தேவையும் இல்லை.

காப்பகம்