Thursday, October 2, 2014

விஷன் தமிழ்நாடு 2023 ஆப்ஸ் அறிமுகம்..!


தமிழ்நாட்டின் வளர்ச்சியை உயர்த்துவதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் தொலைநோக்குத் திட்டம் “விஷன் தமிழ்நாடு 2023”. போக்குவரத்து, விவசாயம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட 11 துறைகளிலும் இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தால் அதிகமாகப் பயனடைய விருக்கும் இளைஞர்களுக்காக அருண்தத்தன் என்ற பொறியியல் மற்றும் சட்ட பட்டதாரி இளைஞர் விஷன் 2023 பற்றிய தகவல்களை செல்போனில் காணும் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனாக வெளியிட்டுள்ளார்.

இந்த அப்ளிகேஷன் அனைத்துத் திட்டங்களையும் துறைவாரியாகப் பிரித்து, விரிவான புள்ளிவிவரங்களுடன், படிப்பதற்கு எளிமையான முறையில் விளக்குகிறது.

இவர் விழுப்புரம் மாவட்டம், எய்யில் கிராமத்தைச் சேர்ந்தவர். இந்த அப்ளிகேஷனை “விஷன் தமிழ்நாடு 2023 திட்டத்தைப் பற்றி இன்றைய இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். அது இளைஞர்களைச் சென்றடைவதற்காகவே செல்போனில் பார்க்கும்படியான இந்த அப்ளிகேஷனாக உருவாக்கி யிருக்கிறேன்” என்கிறார் இவர்.

போனில் விளையாடுவதற்கும் பாட்டு கேட்பதற்கும் அரட்டை அடிப்பதற்கும் நடுவே இந்த நலத் திட்டத்தைப் பற்றியும் இளைஞர்கள் தெரிந்துகொள்ளலாம். விஷன் தமிழ்நாடு 2023 திட்டத்தைப் பொறுத்தவரை, அடுத்த 11 ஆண்டுகளில் இரண்டு கோடிப் பேருக்குப் பயிற்சி வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது. தனிநபர் சாராசரி ஆண்டு வருமானத்தை

2023ல் 6 மடங்காக உயர்த்தி 4,50,000 ரூபாய் என்ற இலக்கை அடையத் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. “தற்போது ஆண்ட்ராய்ட் போன்களுக்கு உருவாக்கப்பட்ட அப்பிளிகேஷனை விரைவில் விண்டோஸ், ஐ போன்களுக்கும் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்” என்கிறார் அருண்.

விஷன் தமிழ்நாடு 2023 பற்றிய சமீபத்திய செய்திகளையும், திட்டங்களின் தற்போதைய நிலவரங்களையும் இந்த அப்ளிகேஷனில் காணலாம்.

யான் (2014) - திரைவிமர்சனம்

எம்.பி.ஏ., படித்துவிட்டு எந்த வேலைக்கும் போகாமல் மும்பையில் வசித்து வருகிறார் ஜீவா. நாயகி துளசி, மும்பையில் கார் டிரைவிங் ஸ்கூல் வைத்து நடத்தி வருகிறார். ஒருநாள் தீவிரவாதி ஒருவனை போலீஸ் அதிகாரியான ஜெயப்பிரகாஷ் என்கவுன்டர் செய்யும் வேளையில் இடையில் மாட்டிக் கொள்கிறார் துளசி. அவளை சாதுர்யமாக காப்பாற்றுகிறார் ஜீவா. அதோடு அவளை ஒருதலையாக காதலிக்கவும் செய்கிறார்.

அதன்பின்னர் அவள் பின்னாலேயே சுற்றி வரும் ஜீவா, ஒருநாள் துளசி தனது அப்பா நாசருடன் காரில் போய்க் கொண்டிருக்கும்போது அவளிடம் தனது காதலை சொல்லி விடுகிறார். இதனால் கோபமடையும் நாசர் தன்னை வந்து சந்திக்குமாறு ஜீவாவுக்கு அழைப்பு விடுக்கிறார்.

நாசரை சந்திக்கும் ஜீவாவுக்கு எந்த வேலைவெட்டியும் இல்லை என்பதை அறிந்ததும், மேலும் கோபமடைந்த நாசர் ஜீவாவை தகாத வார்த்தைகளால் திட்டி விடுகிறார். இதனால் மனமுடைந்த ஜீவா, எப்படியாவது ஒரு வேலையை தேடிக் கொள்ளவேண்டும் என்று கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்குகிறார். ஆனால், வேலை கிடைத்தபாடில்லை.

இறுதியில், டிராவல் ஏஜென்ட் வெங்கட் போஸ் மூலம் வெளிநாடு செல்ல திட்டமிடுகிறார். வெங்கட் போஸ் மூலம் கஜகஸ்தான் செல்கிறார் ஜீவா. அங்கு ஜீவாவுக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. கஜகஸ்தான் ஏர்ப்போட்டில் ஜீவாவின் உடமைகளை பரிசோதிக்கும் அந்நாட்டு போலீசார், அவரது சூட்கேசில் போதை மருந்து இருப்பதை கண்டறிகின்றனர். இதனால் ஜீவாவை கைது செய்து சிறையில் அடைக்கின்றனர்.

கஜகஸ்தானில் போதை மருந்து கடத்தினால் தலையை துண்டிப்பதுதான் தண்டனையாகும். அதனால் ஜீவாவுக்கும் தலையை துண்டிக்குமாறு தண்டனை வழங்கப்படுகிறது. இந்நிலையில், சிறையில் தம்பி ராமையாவின் அறிமுகம் கிடைக்கிறது ஜீவாவுக்கு. சக கைதியான தம்பிராமையா இவர் சென்ற சில நாட்களுக்குள் விடுதலையாகி வெளியே வருகிறார். அவரிடம் தனது நிலைமையை மும்பையில் உள்ள தனது குடும்பத்தாரிடம் சொல்லி தன்னை எப்படியாவது மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கூறுகிறார் ஜீவா.

தம்பி ராமையாவும் மும்பைக்கு சென்று ஜீவாவின் குடும்பத்தாரிடம் அவரது நிலைமையை எடுத்துக் கூறுகிறார். இதையறிந்த துளசி, தன்னால்தான் ஜீவாவுக்கு இந்த நிலைமை ஆனது என்று மனமுடைந்து போகிறார். தானே அங்கு சென்று அவனை மீட்டு வருவேன் என்று சபதமேற்று கஜகஸ்தான் புறப்பட்டுச் செல்கிறாள்.

இறுதியில், துளசி, ஜீவாவை மீட்டு இந்தியா திரும்பினாளா? அவனுடன் ஒன்று சேர்ந்தாளா? என்பதே மீதிக்கதை.

ஜீவா இப்படத்தில் கூடுதல் மெருகேறியிருக்கிறார். பார்க்க அழகாக இருப்பது மட்டுமின்றி நடிப்பிலும் கடினமான உழைப்பை போட்டு நடித்திருக்கிறார். அவரது நடிப்புக்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. இந்த படத்துக்காக இவர் இவ்வளவு காலம் காத்திருந்தது வீண் போகவில்லை. சண்டைக் காட்சிகளில் அற்புதமாக நடித்திருக்கிறார்.

துளசி திரையில் பார்க்க அழகாக தெரிகிறார். படத்தில் கதையின் தேவைக்கேற்ப கவர்ச்சி காட்டி, நடிப்பிலும் மிளிர்கிறார். தனது இரண்டாவது படத்திலேயே இவ்வளவு அனுபவமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டுக்களை பெறுகிறார்.

துளசியின் அப்பாவாக வரும் நாசர் பாசமுள்ள அப்பாவாக மனதில் பதிகிறார். ஜெயப்பிரகாஷ் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நம் கண்ணில் நிற்கிறார். தீவிரவாதியாக வரும் நவாப் ஷாவின் நடிப்பும் பலே. தம்பி ராமையா, கருணாகரன், வெங்கட் போஸ் ஆகியோர் ஒருசில காட்சிகளே வந்தாலும், அனைவருக்கும் அழுத்தமான கதாபாத்திரம். அந்த கதாபாத்திரத்தை செவ்வனே செய்து நம்மை கவர்ந்திழுக்கிறார்கள்.

புதுமையான கதையுடன் இயக்குனராக களமிறங்கியிருக்கும் ரவி.கே.சந்திரனுக்கு பாராட்டுக்கள். படத்தின் கதைக்கு தகுந்தாற்போல் லொக்கேஷன்களை தேர்வு செய்வதில் வென்றிருக்கிறார். கதையோட்டத்தில் படம் ரசிக்க வைத்தாலும், ரசிகர்களை கவர்ந்திழுக்கக் கூடிய விஷயங்கள் படத்தில் இல்லாதது படத்திற்கு சற்று பலவீனம்தான். அவற்றை பின்வரும் படங்களில் ரவி.கே.சந்திரன் பின்பற்றுவார் என நம்புவோம். மனுஷ் நந்தனின் ஒளிப்பதிவு அபாரம். பாடல் காட்சிகளுக்கு கூடுதல் கவனம் கொடுத்திருக்கிறார். அது திரையில் அழகாக பளிச்சிடுகிறது.

ஹாரிஸ் ஜெயராஜ் தனது இசையால் படத்திற்கு இன்னும் கொஞ்சம் பலம் கூட்டியிருக்கலாம். ஏனோ, இவரது பின்னணி இசை பரவாயில்லை. பாடல்களிலும் ஒன்றிரண்டு பாடல்களை தவிர, வேறு பாடல்கள் ரசிகர்களை முணுமுணுக்க வைக்காதது சற்று வருத்தமே.

மொத்தத்தில் ‘யான்’ சுறுசுறுப்பில்லை

அதிக நேரம் தூங்குவது நல்லதா..? - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்..!


அதிக நேரம் தூங்குவது சில நேரம் நல்லது தான் என்றாலும் கூட, அது அதிகரிக்கையில் நம் உடலில் மோசமான பக்க விளைவுகளை உண்டாக்கி விடும். அதிகமாக தூங்கினால் உடலில் சோம்பல் ஏற்படும்.

இதனால் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என ஆய்வுகள் கூறுகிறது.

மேலும் கண்களுக்கு கீழ் கனத்த வீக்கங்கள் ஏற்படும். அளவுக்கு அதிகமாக தூங்குவது இதயத்திற்கு நல்லதல்ல. அதற்கு காரணம் ஒரே இடத்தில் மணிக்கணக்கில் இருப்பதாலே. நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், அளவுக்கு அதிகமாக நீங்கள் தூங்குவதை கடைப்பிடிக்க கூடாது.

சர்க்கரை நோய், உடல் பருமன், மன அழுத்தம் மற்றும் இதய நோய்களே அதிகமாக தூங்குவதற்கு காரணமாக உள்ளது. நீங்கள் அளவுக்கு அதிகமாக தூங்கும் போது, உங்கள் உடல் ஒரே நிலையில் தான் பல மணி நேரம் இருக்கும். நாளடைவில் உங்கள் உடல் இதற்கு பழக்கமாகி விடும்.

அதனால் ஆரோக்கியமான வாழ்க்கையை கொள்வது கடினமாகி விடும். அதிகமாக தூங்குவதால் ஏற்படும் பொதுவான பக்க விளைவுகளில் ஒன்று தான் தலைவலி. அதிகமாக தூங்குவதால் மூளையில் உள்ள நரம்பியக்கடத்திகளில் தாக்கம் ஏற்படும்.

அதிகமாக தூங்குவதால் முக்கியமாக பாதிக்கப்பட போவது உங்கள் இதயமே. ஆய்வுகளின் படி, அளவுக்கு அதிகமான மணி நேரம் தூங்குபவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படுவதற்கான இடர்பாடு அதிகம்.

தீபாவளி வெளியீட்டில் இருந்து பின் வாங்குகிறதா 'ஐ'..?

தெலுங்கு மற்றும் இந்தி பதிப்பின் இசை வெளியீட்டை முன்வைத்து 'ஐ' படத்தின் வெளியீடு தீபாவளியில் இருந்து நவம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், ஏமி ஜாக்சன் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் 'ஐ'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கும் இப்படத்தினை தயாரித்திருக்கிறார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தெலுங்கு பதிப்பின் இசை வெளியீடு அக்டோபர் 2-ஆம் வாரத்தில் நடைபெற இருக்கிறது. இதில் ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான், முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் தலைமையில் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக 'ஐ' தெலுங்கு பதிப்பினை வாங்கியிருக்கும் பிரசாத், "ஜாக்கிசான் வருகை குறித்து இன்னும் 2 நாட்களில் முடிவு தெரிந்து விடும். பிரம்மாண்டமான விழாவாக விரைவில் நடைபெற இருக்கிறது. பாதுகாப்பு காரணங்களால் மேலும் எதுவும் தெரிவிக்க முடியாது" என்று கூறியிருக்கிறார்.

மேலும், 'ஐ' இந்தி பதிப்பு இசை வெளியீட்டு விழாவிற்கு சில்வஸ்டர் ஸ்டலோன் வரவிருக்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

அக்டோபர் 22ம் தேதி தீபாவளி வரவிருக்கும் பட்சத்தில், அம்மாதத்தின் இரண்டாம் வாரத்தில் தெலுங்கு இசை வெளியீடு, அதனைத் தொடர்ந்து இந்தி இசை வெளியீடு என்று இருக்கும் போது தீபாவளிக்கு 'ஐ' வெளிவர வாய்ப்பில்லை என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும், திரையரங்க விநியோகஸ்தர்கள் உள்ளிட்டவர்களிடம் தீபாவளி படங்களுக்கு இரண்டு வாரங்கள் கழித்து, நவம்பர் 14ம் தேதி 'ஐ' வெளியாகும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

இது தொடர்பாக 'ஐ' தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனைத் தொடர்பு கொண்ட போது, "இன்னும் இரண்டு நாட்களில் அனைத்தும் முடிவாகி விடும். பெரிய பட்ஜெட் படம் என்பதால், பல்வேறு செய்திகள் வெளியாகிக் கொண்டே தான் இருக்கும். அனைத்திற்கும் பதில், இன்னும் இரண்டு நாட்களில் தெரியும்" என்று கூறினார்.

நீங்கள் எப்படிப்பட்ட புத்திசாலி..? - இதைப்படிச்சு பாருங்க..!

நான் 12வது வகுப்பு படித்துக் கொண்டிருந்த நேரம். தாவரவியல் வகுப்பு நடந்து கொண்டிருந்தது. எனது வகுப்புத் தோழி பிரீத்தி செம்பருத்தி பூ வரைந்து கொண்டு வந்திருந்தாள். அதன் பூவின் காம்பில் இருந்த சின்னஞ்சிறு நெளிவுகளைக் கூடத் தத்ரூபமாக வரைந்திருந்தாள். அது இன்னும் என் கண் முன் அப்படியே இருக்கிறது.

உயிரோடு செம்பருத்தி:- 32 மாணவர்களும் அதே செம்பருத்திப் பூவைத்தான் வரைந்திருந்தோம். ஆனால் எங்களுடையது எல்லாம் வெறும் காகிதப் பூக்களாக மட்டுமே இருந்தன. அவள் வரைந்ததோ கருப்பு, வெள்ளையாக இருந்தாலும் இன்று காலை பூத்த அழகிய செம்பருத்தியாகவே மலர்ந்து நின்றது. அவளுடைய செம்பருத்திப் பூவை நான் மிகவும் ரசித்தேன். ஆனாலும் எது என் நோட்டிலிருக்கும் பூவையும் அவளுடையதையும் வேறுபடுத்துகிறது என எனக்குப் புரியவில்லை.

எங்கள் ஆசிரியர் நிச்சயம் அவளுக்கு எக்ஸலண்ட் போட்டு அவர் பாணியில் 5 குட்டி நட்சத்திரங்கள் போடுவார் என்ற எண்ணம் என் மனதில் ஓடியது. எல்லாரும் ரெக்கார்ட் நோட்டுகளைச் சமர்ப்பித்தோம்.

காகிதப் பூ போதும்:- எல்லோருடைய நோட்டுகளையும் ஆசிரியர் பார்த்தார். ஒவ்வொருவராக அழைத்துத் தன் கருத்தைச் சொல்லி ரெக்கார்ட் நோட்டுகளைக் கொடுத்தார். கடைசியாகப் பிரீத்தியின் செம்பருத்தி வரைந்த பக்கத்தைத் திறந்து வைத்துக் கொண்டு “பிரீத்தி…. இங்கே வா” என்றார். நானும் பிரீத்தியும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டோம். பெருமிதத்தோடு பிரீத்தி அருகில் சென்றாள். “நீ வரைந்த படம் தவறு. ஆங்காங்கே தவறு குறி போட்டிருக்கிறேன். புத்தகத்தைப் பார்த்து அவற்றை எல்லாம் சரி செய்து மீண்டும் வரைந்து கொண்டு வா” எனக் கோபமாகச் சொல்லி நோட்டைக் கையில் திணித்தார்.

அப்பொழுதுதான் நாங்கள் வரைந்த செம்பருத்திக்கும் பிரீத்தியின் செம்பருத்திக்கும் இடையே உள்ள வித்தியாசம் எனக்குப் புரிந்தது. நாங்களோ புத்தகத்திலுள்ள மலரை அச்சு வார்த்தாற் போல வரைந்திருந்தோம். அவளோ தன் வீட்டுத் தோட்டத்தில் பூத்திருந்த செம்பருத்தியைப் பார்த்து, பார்த்து ரசித்துத் தன் பென்சிலால் ஷேடிங் எல்லாம் கொடுத்துத் தத்ரூபமாக வரைந்திருந்தாள்.

அதைக் கண்ட ஆசிரியர் பூரித்துப் போய் அவளைப் பாராட்டியிருக்க வேண்டும். ஆனால் அவருடைய ஒரு வட்டத்துக்குள் மட்டும் சிந்திக்கும் மனசால் பிரீத்தியின் தனித்துவத்தை அங்கீகரிக்க முடியவில்லை. அவளுடைய அபாரத் திறமையை அடையாளம் கண்டு ஊக்குவிக்கவில்லை. அந்த ஆசிரியர்க்குத் தன்னுடைய கற்பிதங்களுக்கு அப்பால் பரந்து விரிந்த முறையில் காணும் பார்வை இல்லை.

எது புத்திசாலித்தனம்..? - இப்படித்தான் பொதுவான அளவுகோல்களால்தான் புத்திசாலித்தனம் வரையறை செய்யப்படுகின்றது. புத்திசாலித்தனம் என்பது கற்றுக்கொண்டதை ஞாபகத்தில் வைத்து ஒரு எழுத்து பிசகாமல் பரீட்சையில் எழுதுவது, மனப்பாடம் செய்து ஒப்பிப்பது, பாடப்புத்தகக் கணக்கை நன்கு போடுவது, ஆங்கிலத்தில் பேசுவது என ஒரு சில அளவுகோல்களால்தான் தீர்மானிக்கப்படுகிறது.

ஆனால் இவை மட்டும்தான் புத்திசாலித்தனமா? சொல்லப் போனால் மனப்பாடத் திறனுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது என்கிறார் ஹாவர்ட் கார்னர் என்னும் உளவியல் நிபுணர். புத்திசாலித்தனம் என்ற ஒன்று தனித்துத் தோன்றுவதோ, இயங்குவதோ கிடையாது. அது ஒருவிதமான திறன். சிக்கல்களைச் சரி செய்யும் (problem solving) ஆற்றல், புதியவற்றை உருவாக்கும் படைப்பாற்றல், இவைதான் அந்தத் திறன் என 1983- ல் பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபித்தார் ஹாவர்ட் கார்னர். அவர் எழுதிய மனதின் சட்டகங்கள் (Frames of Mind) என்னும் புத்தகம் வழக்கமான கல்வித் திட்டங்களின் ஆன்மாவை உலுக்கும் வல்லமை படைத்தது. ஒருவருக்குக் கல்வி பல விஷயங்களைக் கற்றுத்தருவதை விடக் கற்பனைத் திறனை ஊக்குவிக்க வேண்டும் என்பதை வலுவாகப் பேசுகிறார் இவர்.

பன்முகப் புத்திக்கூர்மை:- மனித மூளையின் செயல்பாட்டின் பல நுணுக்கங்களைத் தன் ஆய்வில் கண்டறிந்தார் ஹாவர்ட். அவற்றுள் நம் அனைவரையும் அசரவைக்கும், மகிழ்விக்கும் ஒரு கண்டுபிடிப்பு உள்ளது. மனிதர்கள் எல்லோருக்கும் ஒன்றல்ல, இரண்டல்ல, பன்முகப் புத்திக்கூர்மை (Multiple Intelligence) நிச்சயமாக இருக்கின்றன. ஒவ்வொரு மனிதரிடத்திலும் எட்டு விதமான புத்திக் கூர்மைகள் காணப்படுகின்றன. நபருக்கு நபர் இதன் சதவீதம் வேண்டுமானால் மாறுபடும் என்றார் அவர். ஆனால் சந்தேகத்துக்கே இடமில்லாமல் அனைவரிடமும் பன்முகப் புத்திக்கூர்மைகள் இருக்கின்றன.

பன்முகப் புத்திக்கூர்மை தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருக்கலாம். அந்தத் திறன்களை வளர்த்தெடுத்துப் பலப்படுத்தவும் முடியும் அல்லது கவனிப்பார் இல்லாமல் நீர்த்துப்போகச் செய்யவும் முடியும். படித்தவற்றை மனதில் நிறுத்தி அதை அப்படியே எழுதுவதோ, ஒப்பிப்பதோ ஒரு வகை அறிவுத் திறன் மட்டுமே. அதைத் தவிர மேலும் பல விதமான அறிவுத் திறன்களும் இருக்கவே செய்கின்றன.

நீங்கள் எப்படிப்பட்ட புத்திசாலி..? - மொழித் திறன் (Verbal-Linguistic Intelligence), கணிதம் மற்றும் தர்க்கம் பற்றிய திறன்(Mathematical-Logical Intelligence), இசைத் திறன் (Musical Intelligence), காட்சி மற்றும் வெளித் திறன்(Visual-Spatial Intelligence), உடல்கூறு மற்றும் விளையாட்டுத் திறன் (Bodily-Kinesthetic Intelligence), மனிதர்களோடு தொடர்பு கொள்ளும் திறன் (Interpersonal Intelligence), சிந்தனைத் திறன் (Intrapersonal Intelligence), இயற்கை சார்ந்த திறன் (Naturalistic Intelligence) என எட்டு விதமான புத்திக்கூர்மைகளைப் பற்றி அவர் பேசுகிறார்.

இவை அனைத்தும் நம் மூளையில் குடிகொண்டுதான் இருக்கின்றன. ஒருவருக்குச் சில திறன்கள் பிரகாசமாக இருக்கும். மற்றொருவருக்கு வேறு சில திறன்கள் ஜொலிக்கும். இவற்றில் எது நம் பலம் என்பதை நாம் கண்டுபிடிக்கலாம். வரும் வாரங்களில் உங்கள் திறனைக் கண்டுபிடிப்போம் வாருங்கள்!

காப்பகம்