Saturday, September 13, 2014

சிகரம் தொடு (2014) - திரைவிமர்சனம்

போலீஸ் அதிகாரியான சத்யராஜ் வேலையில் இருக்கும்போதே தனது ஒரு காலை இழந்து விடுகிறார். போலீசாக தன்னால் சாதிக்க முடியாததை தனது மகனை வைத்து சாதிக்க வேண்டும் என்று விக்ரம் பிரபுவை போலீசாக்க துடிக்கிறார். ஆனால், விக்ரம் பிரபுவுக்கோ போலீசாக வேண்டும் என்பதில் துளியும் ஆசையில்லை. இருந்தாலும் அப்பாவின் ஆசைக்காக அவ்வப்போது ஜிம்முக்கு சென்று பயிற்சி செய்து வருகிறார்.

இந்நிலையில், விக்ரம் பிரபுவும் அவரின் தாத்தாவும் புனித யாத்திரையாக வடநாடு செல்கிறார்கள். அங்கு நாயகி மோனல் கஜ்ஜாரை பார்த்ததும் அவள்மீது காதல் வயப்படுகிறார். முதலில் மோதலில் ஆரம்பிக்கும் இவர்களது சந்திப்பு பிறகு காதலில் முடிகிறது.

விக்ரம் பிரபுவுக்கு எப்படி போலீசாக வேண்டும் என்பது பிடிக்கவில்லையோ, அதேபோல் மோனல் கஜ்ஜாருக்கும் போலீசை கண்டாலே பிடிக்காது. இருவருடைய எண்ணமும் ஒத்துப்போவதால் இருவரும் தொடர்ந்து காதலித்து வருகின்றனர். இந்நிலையில், பயணத்தை முடித்துவிட்டு ஊர் திரும்பும் விக்ரம் பிரபுவுக்கு போலீஸ் செலக்ஷனுக்கு அழைப்பு வருகிறது. என்னசெய்வதென்று தெரியாமல், அப்பாவின் விருப்பத்திற்காக அதில் கலந்து கொள்கிறான்.

மோனல் கஜ்ஜாரிடம் பொய் சொல்லிவிட்டு போலீஸ் கலந்தாய்வில் கலந்து கொள்ள செல்கிறான். ஆனால், அங்கு மோனல் கஜ்ஜாரை பார்த்ததும் அதிர்ச்சியடைகிறான். மோனல் கஜ்ஜாரின் அப்பாவும் போலீஸ் என்பதால் அவரை பார்க்க வந்திருப்பதாக கூறுகிறாள். இருவரும் பேசிக்கொண்டிருப்பதை பார்க்கும் மோனல் கஜ்ஜாரின் அப்பா இவர்கள் காதலை பிரிக்க நினைக்கிறார். மாறாக, தனது நண்பனான சத்யராஜுக்கு துரோகம் செய்ய நினைக்கவில்லை.

இதற்காக விக்ரம் பிரபுவை அழைத்து போலீஸ் செலக்ஷனில் பாஸாகிவிட்டு, சில நாட்கள் கழித்து அந்த வேலையை விட்டுவிடுமாறு கூறுகிறார். அதன்பிறகு தனது மகளை அவனுக்கு கல்யாணம் செய்து கொடுப்பதாகவும் கூறுகிறார். இதனால், விக்ரம் பிரபு அந்த போலீஸ் செலக்ஷனில் பாஸாகி போலீசாகிறார்.

இந்நிலையில் ஒருநாள் சத்யராஜ் வீதியில் நடந்து போய்க் கொண்டிருக்கும்போது ஒரு ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடித்துச் செல்லும் கும்பலை பிடித்து விக்ரம் பிரபுவின் ஸ்டேஷனில் வந்து ஒப்படைத்துவிட்டு செல்கிறார். அந்த நேரத்தில் மோனல் கஜ்ஜார் விக்ரம் பிரபுவுக்கு போன் செய்து படத்துக்கு கிளம்பி வரும்படி வற்புறுத்துகிறாள். விக்ரம் பிரபுவும் படத்திற்கு கிளம்பி போய்விடுகிறார்.

அப்போது சிறையில் இருக்கும் ஏடிஎம் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பித்துப்போக பார்க்கிறார்கள். அப்போது எதேச்சையாக அங்கு வரும் சத்யராஜ் அவர்களை தடுத்து நிறுத்த பார்க்கிறார். ஆனால், அவர்கள் சத்யராஜை அடித்துப் போட்டுவிட்டு தப்பித்து சென்றுவிடுகிறார்கள்.

படத்திற்கு போய்விட்டு திரும்பும் விக்ரம் பிரபு, தனது அப்பா ஏடிஎம் கொள்ளையர்களால் தாக்கப்பட்டது தெரிந்ததும் அவர்களை கண்டுபிடித்து, தண்டிக்க முடிவெடுக்கிறார். இதுவரை போலீஸ் வேலையின் மீது பிடிப்பு இல்லாமல் இருந்தவருக்கு அன்று முதல் அந்த பணியின்மீது ஒருவித வெறி வருகிறது.

இறுதியில், விக்ரம் பிரபு அந்த ஏடிஎம் கொள்ளையர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

படத்தில் சத்யராஜ் பொறுப்பான தந்தையாகவும் நேர்மையான போலீஸ் அதிகாரியாகவும் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சத்யராஜை போலீசாக பார்ப்பது சிறப்பு.

முதன்முதலாக போலீஸ் கதாபத்திரத்தை ஏற்று அதற்கு தகுந்தார்போல் சிறப்பாக நடித்திருக்கிறார் விக்ரம் பிரபு. அப்பா மீதுள்ள சென்டிமெண்ட் காட்சிகளிலும், காதல் காட்சிகளிலும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நாயகியான மோனல் கஜ்ஜார் தன் துறுதுறு நடிப்பால் அனைவரையும் கவர்கிறார். திரையில் பார்க்க அழகாக இருக்கும் இவர் வெகுவாக ரசிகர்களை கவர்கிறார். மகேஷ், சதீஷ் இருவரும் காமெடி கதாபாத்திரத்தை ஏற்று கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ஏடிஎம் கொள்ளையராக நடித்திருக்கும் இயக்குனர் கௌரவ் சிறப்பாக நடித்திருக்கிறார். ஏடிஎம்மில் கொள்ளையடிப்பதை மிகவும் ஆராய்ந்து அழகாக திரைக்கதை அமைத்திருக்கும் இவர் முதற்பாதியில் ஏடிஎம் கொள்ளையர்களை பிடிக்க நிறைய போலீஸ் அதிகாரிகள் திட்டமிடுவதுமாக காட்சிகளை அமைத்து பிற்பாதியில் விக்ரம்பிரபு மட்டும் தன் தந்தையின் நிலைமைக்காக பழிவாங்க தனிநபர் முயற்சி செய்வது சினிமாதனம். மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஏடிஎம்மில் கொள்ளை நடப்பதை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் படமாக்கிய இயக்குனரை பாராட்டலாம்.

இமான் இசையில் பாடல்கள் எல்லாம் ரசிக்கும் ரகம். பின்னணியில் இசையில் வெளுத்து வாங்கியிருக்கிறார். விஜய் உலகநாத்தின் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகளை எடுத்த விதம் அருமை.

மொத்தத்தில் ‘சிகரம் தொடு’ சிறந்த முயற்சி.

வானவராயன் வல்லவராயன் (2014) - திரைவிமர்சனம்

பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தில் செல்வந்தரான பாண்டவராயன் (தம்பி ராமையா)-மீனாட்சி (கோவை சரளா) தம்பதியருக்கு வானவராயன் (கிருஷ்ணா) வல்லவராயன் (மா.கா.பா.ஆனந்த்) என இரண்டு மகன்கள். இருவரையும் ரொம்பவும் செல்லம் கொடுத்து வளர்த்தால் பொறுப்பு இல்லாமல் ஊர் சுற்றி வருகின்றனர்.

வானவராயன் அதே ஊரில் பல பெண்களை காதலிக்கிறார். ஆனால், எந்த பெண்ணும் இவரை காதலிக்கவில்லை. ஒருநாள் தனது தம்பி வல்லவராயனுடன் பக்கத்து ஊரில் நடக்கும் திருமணத்துக்கு போகிறார் வானவராயன்.

அந்த திருமணத்தில் அஞ்சலி (மோனல் கஜ்ஜார்)யை பார்க்கிறார். பார்த்தவுடனேயே அவள்மீது காதல்வயப்பட்டு விடுகிறார். அவளையே சுற்றி சுற்றி வருகிறார். ஒருகட்டத்தில் தனது காதலை அவளிடம் சொல்கிறார். அவளும் அந்த காதலை ஏற்றுக் கொள்கிறாள்.

இருவரும் காதலிக்கும் விஷயம் அஞ்சலியின் அண்ணன் சிவராஜு(எஸ்.பி.சரண்)க்கு தெரிய வருகிறது. அஞ்சலியை அடித்து கண்டிக்கிறான். இதையறிந்த வானவராயன் அஞ்சலியின் வீட்டுக்கு இரவோடு இரவாக சென்று அவளை சந்திக்கிறான்.

இருவரும் தனிமையில் சந்தித்து பேசும்போது ஊர்க்காரர்கள் திரண்டு வரும் சத்தத்தை கேட்டு இருவரும் ஓடுகிறார்கள். இருவரும் ஊரைவிட்டுத்தான் ஓடுகிறார்கள் என்று தவறாக புரிந்துகொண்ட ஊர்க்காரர்கள் அவர்களை சுற்றி வளைக்கின்றனர். வானவராயனை அடித்து அந்த ஊரை விட்டே அனுப்புகிறார்கள்.

இந்நிலையில் அஞ்சலியின் அப்பாவான வேலு நாயக்கர் (ஜெயபிரகாஷ்) வெளியூரிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பி வருகிறார். வந்ததும் வீட்டில் நடந்த விஷயங்களை கேட்டறிந்த வேலு நாயக்கர், தனது மகளை சமாதானப்படுத்தும் விதமாக வானவராயனையே அவளுக்கு திருமணம் செய்துவைப்பதாக கூறுகிறார்.

இதற்கிடையில், தனது அண்ணன் வானவராயனை அடித்து அவமானப்படுத்தியதால் அஞ்சலி குடும்பத்தை எப்படியாவது அவமானப்படுத்த வேண்டும் என்று நினைத்த வல்லவராயன் குடித்துவிட்டு அஞ்சலியின் வீட்டுக்கு சென்று அவளது அப்பா மற்றும் அவளது குடும்பத்தாரை தகாத வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்துகிறான்.

இதனால் கோபமடைந்த வேலு நாயக்கர் தனது மகளை வானவராயனுக்கு திருமணம் செய்து கொடுக்கமாட்டேன் என்று உறுதி எடுக்கிறார். இருந்தாலும் வானவராயன் நினைவாகவே இருந்து வருகிறாள் அஞ்சலி. ஒருகட்டத்தில் தன் தவறை உணர்ந்த வல்லவராயனும் வேலுநாயக்கரை சமாதானம் செய்ய எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைகிறது.

இறுதியில், வேலுநாயக்கரை சமாதனம் செய்து வானவராயன்-அஞ்சலி காதலில் இணைந்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

வானவராயன் வல்லவராயனுமாக வரும் கிருஷ்ணாவும், மா.கா.பா.ஆனந்தும் படம் முழுக்க செய்யும் சேட்டைகள் தாங்க முடியவில்லை. அண்ணனுக்காக எதையும் செய்யக்கூடிய தம்பியாக நம் கண்முன்னே நிற்கிறார் மா.கா.பா. ஆனந்த். அறிமுக படத்திலேயே அசத்தலாக நடித்து இருக்கிறார். கிருஷ்ணாவுக்கு ரொம்ப ஜாலியான கதாபாத்திரம். அதை செவ்வனே செய்திருக்கிறார்.

அஞ்சலியாக வரும் மோனல் கஜ்ஜார் திரையில் அழகாக பளிச்சிடுகிறார். கிராமத்து பெண் வேடத்துக்குத்தான் சரியாக பொருந்தவில்லை. நடிப்பிலும் கூடுதல் முயற்சி எடுக்கவேண்டும்.

நாயகியின் அண்ணனாக வரும் எஸ்.பி.சரணுக்கு இந்த படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம். கண்டிப்பான அண்ணனாக மனதில் பதிகிறார். தம்பி ராமையா, கோவை சரளா வரும் காட்சிகள் கலகலக்க வைக்கின்றன. கோவை தமிழில் இருவரும் வெளுத்து வாங்கியிருக்கிறார்கள். ஜெயப்பிரகாஷ் பாசக்கார அப்பாவாக பளிச்சிடுகிறார்.

படத்தில் 15 நிமிட காட்சிகளில் சந்தானம் வருகிறார். இவர் வரும் அந்த 15 நிமிடத்தையும் கலகலப்பாக்கிவிட்டு போயிருக்கிறார்.

குடும்ப பின்னணியில் ஒரு காதல் கதையை காமெடி, சென்டிமெண்ட் கலந்து சொல்ல வந்திருக்கிறார் இயக்குனர் ராஜமோகன். காமெடி ஓரளவுக்கு இருந்தாலும் படத்தில் சில காட்சிகளை தவிர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது. குறிப்பாக, நாயகியின் அப்பாவை அவமானப்படுத்தும் காட்சிகள் ரொம்பவும் அருவருக்கத்தக்க வகையில் இருக்கிறது. மற்றபடி பார்த்தால் படத்தை கலகலப்பாக கொண்டு போயிருக்கிறார் இயக்குனர்.

யுவன்சங்கர் ராஜா இசையில் இரண்டு பாடல்கள் அருமை. மற்ற பாடல்கள் சுமார் ரகம். பழனிகுமார் ஒளிப்பதிவில் பொள்ளாச்சி அழகை அழகாக படமாக்கியிருப்பது குளுமை.

மொத்தத்தில் ‘வானவராயன் வல்லவராயன்’ போட்டியில்லை

வாலிபர் வயிற்றில் இருந்த செருப்பு ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டது

வாலிபர் வயிற்றில் இருந்த செருப்பை, ஆபரேஷன் செய்து டாக்டர்கள் அகற்றினார்கள். அந்த வாலிபருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றிய விவரம் வருமாறு:–

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா கூடங்குளம் அருகே உள்ள வைராவிகிணறு கிராமத்தைச் சேர்ந்தவர், தங்கத்துரை. அவருடைய மகன் பாலகிருஷ்ணன் (வயது 26). வாய் பேச முடியாத, கேட்கும் திறனற்ற மாற்றுத்திறனாளி. பாலகிருஷ்ணனுக்கு திருமணம் ஆகவில்லை. அவர் வேலைக்கும் செல்லவில்லை.

காலையில் எழுந்ததும் வீட்டில் இருந்து வெளியே சென்றுவிடுவாராம். சாப்பிடும் நேரத்துக்கு மட்டும் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.

4 நாட்களுக்கு முன்பு பகலில் சிலருடன் ஊர் சுற்றிவிட்டு, இரவில் பாலகிருஷ்ணன் வீட்டுக்கு வந்தார். அன்று முழுவதும் அவர் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு இருக்கிறார். அவருடைய தாயார் பத்திரம் மற்றும் வீட்டில் உள்ளவர்கள் என்னவென்று விசாரித்துள்ளனர். வாய் பேச முடியாதவர் என்பதால், எதையும் அவரால் சொல்ல முடியவில்லை.

ஆஸ்பத்திரியில் அனுமதி

மறுநாள் காலையில் நாகர்கோவிலில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு பாலகிருஷ்ணனை அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, வயிற்றில் கட்டி போன்று ஏதோ ஒரு பொருள் இருப்பதை டாக்டர்கள் அறிந்தனர்.

மாலையில் அந்த ஆஸ்பத்திரியில் இருந்து பாலகிருஷ்ணனை அழைத்து வந்துவிட்டனர். அதன்பின்பு அவருக்கு வயிற்றுவலி அதிகமாகிவிட்டது. சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்டார். சாப்பிடவும் இல்லை. எனவே அவரை லெவிஞ்சிபுரத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, பாலகிருஷ்ணன் வயிற்றில் இருக்கும் பொருளை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடிவு செய்தனர். நேற்று அதிகாலை 3 மணி அளவில் அறுவை சிகிச்சை தொடங்கி, 2 மணி நேரம் நடந்தது.

அதன் பின்பு டாக்டர்கள் தெரிவித்த கருத்துகள், பாலகிருஷ்ணன் குடும்பத்துக்கு மட்டுமின்றி, எல்லாருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது. அதாவது, பாலகிருஷ்ணன் வயிற்றில் கட்டியோ, உணவுப் பொருட்களோ இல்லை. பெண்கள் அணியும் செருப்பு ஒன்று அவரது வயிற்றில் இருந்து அகற்றப்பட்டது தெரியவந்தது.

அது அவரது வயிற்றுக்குள் சென்றது எப்படி? என்பது குறித்து டாக்டர் பி.தமிழரசு கூறியதாவது:–

வயிற்று வீக்கம், கடுமையான வயிற்று வலியாலும் பாலகிருஷ்ணன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த போது, வயிற்றில் கட்டி போன்று இனம்காண முடியாத பொருள் இருந்ததை அறிந்தோம்.

மயக்க மருந்து கொடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சை செய்ததில், வயிற்றில் செருப்பு இருந்தது தெரியவந்தது. ஆசனவாய் வழியாக அந்த செருப்பை திணித்து இருக்கிறார்கள். அது பெருங்குடலை சென்றடைந்ததால், பெருங்குடலில் ஓட்டை விழுந்துவிட்டது. இதனால் பெருங்குடல் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறோம்.

இவ்வாறு டாக்டர் தமிழரசு கூறினார்.

விசாரணை

பாலகிருஷ்ணனுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்து, ஆசனவாய் மூலம் செருப்பை திணித்தது குறித்து அவருடைய குடும்பத்தினர், கூடங்குளம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் அதுபற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காப்பகம்