Wednesday, August 20, 2014

குண்டு உடலுக்கு ஆசைப்பட்டு சென்னை வந்த வாலிபரின் கண்ணீர் கதை

ஒல்லியாக இருப்பவர்களுக்கு எப்போதுமே அடி மனதுக்குள் ஒரு சோகம் அப்பிக் கிடக்கும். கொஞ்சம்... குண்டானால் நல்லா இருக்குமே என்று அவர்கள் ஆதங்கப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். இதற்காக ஒரு சிலர் கண்டதையும் சாப்பிடுவார்கள். டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் உடலை குண்டாக்குவதற்காக சிகிச்சை மேற்கொள்பவர்களும் உண்டு.

இப்படி குண்டு உடலுக்கு ஆசைப்பட்டு சென்னை வந்த சூடான் வாலிபர் ஒருவர், பாஸ்போர்ட்–விசாவுடன், ஆடைகளையும் பறி கொடுத்து ஜட்டியுடன் சுற்றித் திரிந்துள்ளார்.

கிண்டியில் வந்து இறங்கிய அவர், மாதவரத்தில் வைத்து போலீசில் சிக்கினார். சென்னை மாநகரில் ஜட்டியுடன் சுற்றி திரிந்த அவரது கண்ணீர் கதையை பார்ப்போம்.

கடந்த மாதம் 26–ந் தேதி சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மாதவரம் பகுதியில் இருந்து ஒருவர் போன் செய்தார். மாதவரம் பஸ் நிலையத்தில் ஜட்டியுடன் வெளிநாட்டுக்காரர் ஒருவர் சுற்றித் திரிவதாக கூறிவிட்டு அவர் போனை துண்டித்து விட்டார்.

இது பற்றி தகவல் கிடைத்ததும் மாதவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் அங்கு விரைந்து சென்று, ஜட்டியுடன் திரிந்த அந்த வாலிபரை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தார். மிகவும் ஒல்லியான தேகத்துடன் காணப்பட்ட அவர் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர் போல இருந்தார்.

அவரிடம் மாதவரம் துணை கமிஷனர் விமலாவும் விசாரணை நடத்தினார்.

கருப்பின வாலிபரிடம் ஆங்கிலத்தில் போலீசார் பேசிப் பார்த்தார்கள். ஆனால் மொழிப்பிரச்சினையால் திண்டாடிய அவர் புரியாத ஒரு மொழியில் பேசினார். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த போலீசார், அதே பகுதியில் வசித்து வந்த நைஜீரிய வாலிபர் ஒருவரை அழைத்து வந்து பேச வைத்தனர். அப்போது தான் ஜட்டியுடன் சிக்கியவர் சூடான் வாலிபர் என்பதும், அவர் பேசுவது சூடான் மொழி என்பதும் தெரிய வந்தது. இருப்பினும் நைஜீரிய வாலிபரால் சூடான் மொழியை முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை.

இதையடுத்து சென்னையில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வரும் சூடான் வாலிபர்களை போலீசார் தேடிப் பிடித்தனர். அதில் ஒருவரை கல்லூரி நிர்வாகத்தின் அனுமதி பெற்று அழைத்து வந்து சூடான் வாலிபரிடம் பேச வைத்தனர்.இதன் பிறகே அவர் பற்றிய அனைத்து தகவல்களும் தெரிய வந்தன.

சூடான் வாலிபரின் பெயர் நேவல்கூப் என்பதும், அவர் உடலை குண்டாக்கும் சிகிச்சைக்காக புரோக்கர் ஒருவர் அங்கிருந்து அனுப்பி வைத்ததும் தெரிய வந்தது.

சூடானில் 30 மாடுகளை வைத்து பிழைப்பு நடத்தி வந்த இவரை அங்குள்ள மோசடி ஆசாமி ஒருவன் சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளான்.

கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றின் முகவரியை கொடுத்து, அங்கு போய் தங்கி இருந்து சிகிச்சை எடுத்தால் உடல் குண்டாகிவிடும் என்று கூறியுள்ளான். இதனை நம்பி, மொழிப் பிரச்சினையை பற்றியெல்லாம் அறியாத நேவல் கூப் விமானம் மூலம் இங்கு வந்து சேர்ந்துள்ளார்.

கிண்டியில் நேராக குறிப்பிட்ட ஓட்டலுக்கு சென்று தங்குவதற்கு இடம் கேட்டுள்ளார். அப்போது அவரிடம் 200 அமெரிக்க டாலர் (இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.9 ஆயிரம்) மட்டுமே இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை.

இதனால் அங்கு தகராறில் ஈடுபட்டார். இது பற்றி கிண்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று நேவல் கூப்பை பிடித்து விசாரித்தனர். அப்போது அவரிடம் பாஸ்போர்ட், விசா ஆகிய அனைத்து ஆவணங்களும் இருந்துள்ளன.

அவர் பேசுவதை புரிந்து கொள்ள முடியாத நிலையில், ஓட்டல் ஊழியர்களிடம் சொல்லி, விமான நிலையத்தில் கொண்டு அவரை விட்டு விடுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

இதன்படி விமான நிலையத்தில் கொண்டு நேவல் கூப் இறக்கிவிடப்பட்டார். ஆனால் சொந்த நாட்டுக்கு செல்லாமல், அப்பகுதியில் சுற்றித் திரிந்துள்ளார்.

இந்த நேரத்தில்தான் வழிப்பறி கொள்ளையர்களிடம் சிக்கி பாஸ் போர்ட்–விசா, அமெரிக்க டாலர், ஆகியவற்றுடன் ஆடைகளையும் பறிகொடுத்துள்ளார்.

இதையடுத்து எங்கு செல்வது என்று தெரியாமல் ஜட்டியுடன் சுற்றி திரிந்த நேவல்கூப் கடைசியில் மாதவரத்தில் வைத்து பிடிபட்டுள்ளார்.

வழிப்பறி கொள்ளையர்கள் தாக்கியதில் தலையில் காயத்துடன் காணப்பட்ட அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்த மாதவரம் போலீசார், பின்னர் டெல்லியில் உள்ள தூதரகத்தின் உதவியுடன் மாற்று பாஸ்போர்ட், விசா ஆகியவற்றை தயார் செய்தனர். கையில் பணம் இல்லாமல் தவித்த சூடான் வாலிபரின் கையில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ரூ.10 ஆயிரம் கொடுத்து சொந்த நாட்டுக்கு அனுப்பி வைத்தார்.

சென்னையில் படிக்கும் சூடான் மாணவர் ஒருவரும், அவருடன் சென்று சொந்த ஊரில் விட்டு விட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

கிண்டியில் போலீசிடம் சிக்கியவுடனேயே, தூதரகம் அலுவலகத்தில் பேசி அவரை அனுப்பி வைத்திருந்தால் இத்தனை பிரச்சினைகளையும் நிச்சயம் தவிர்த்து இருக்கலாம்.

விழா மேடையில் தூங்கி வழிந்த ஏ.ஆர்.ரகுமானை மேடையில் காட்டி கொடுத்த சித்தார்த்

வெயில், அங்காடித்தெரு, அரவான் போன்ற படங்களை இயக்கிய வசந்தபாலன் இயக்கியுள்ள புதிய படம், காவியத்தலைவன். இந்த படத்தின் பிரஸ்மீட் நேற்று மதியம் சென்னையில் நடைபெற்றது. விழாவுக்கு, படத்தின் இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான், சித்தார்த், வசந்தபாலன், ஜெயமோகன், நாசர், பா.விஜய், வேதிகா, அனைகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவை நாசர் தொகுத்து வழங்கினார். மதியம் 1.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது காவியத்தலைவன் படம் பற்றி விரிவாக பேசத் தொடங்கிய நாசர், ரஹ்மான் பற்றி பேசுகையில், ரோஜா படத்தின் பாடலை தான் முதன்முதலில் கேட்ட அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார். அதோடு, ஆஸ்கர் விருது பெற்றபோது, எல்லா புகழும் இறைவனுக்கே என்று தான் வணங்கும் கடவுளை நினைவுகூர்ந்த அவர், அதை தனது தாய்மொழியான தமிழிலேயே சொன்னதையும் மீண்டும் பதிவு செய்து கொண்டார்.

இதையடுத்து பேசியவர்களும் ரஹ்மானை புகழ்கிறோம் என்று அனைவருமே தங்களது பங்குக்கு அவரது இசையைப்பற்றியே எடுத்து விட்டனர். இதன்காரணமாக விழா முடிவதற்கு கிட்டத்தட்ட 4 மணி ஆகி விட்டது. இதனால் பொறுமையாக மேடையில் அமர்ந்திருந்த ரகுமான், ஒரு கட்டத்தில் தூங்கத் தொடங்கி விட்டார். அவரது முகத்தில் கடுமையான தூக்க கலக்கம் இருந்தது.

இதை அவருக்கு முன்னதாக மைக் பிடித்து பேச வந்த சித்தார்த், விழா தொடங்கி அதிக நேரமாகி விட்டதால், ரகுமான் சாருக்கு தூக்கம் வந்து விட்டது. அதனால் நான் ரொம்ப நேரம் பேச மாட்டேன் என்று சொல்லி விட்டே பேசினார். அதையடுத்து, வந்த ரகுமான் தூக்க கலக்கத்தில இருந்ததாலோ என்னவோ, ஒரு நிமிடம மட்டுமே பேசிவிட்டு விடைபெற்று சென்றார்.

அவர் பேசுகையில், நான் 3 தலைமுறைக்கு இசையமைத்திருக்கிறேன். மேலும், ஈரானிய இயக்குனர் மஸித் மஸித் என்பவரை ஒரு முறை சந்தித்தேன். அப்போது அவர், ஏன் உங்கள் கலாசாரத்தை விட்டு விட்டு மேற்கத்திய கலாச்சாரத்திலேயே இசையமைக்கிறீர்கள் என்று கேட்டார். அதனால் நம்முடைய கலாச்சாரத்தில் இசையமைத்துள்ள இந்த காவியத்தலைவன் படத்தை அவருக்கு நான் போட்டு காண்பிப்பேன் என்று சுருக்கமாக பேசி விட்டு சென்றார்.

வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கில் திடீரென லட்சக்கணக்கில் பணம்

வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கில் திடீரென லட்சக்கணக்கில் பணம்: ஏடிஎம்-ல் பணம் எடுக்க சென்றவர்களுக்கு ஏமாற்றம்:-

வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரின் கணக்கிலும் திடீரென லட்சக் கணக்கில் பணம் போடப்பட்டதாக வந்த தகவலையடுத்து, பணத்தை எடுக்க ஏடிஎம் சென்றவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

சென்னை சென்ட்ரல் அருகே பார்க் டவுனில் அரசுடைமை வங்கி ஒன்று உள்ளது. உலகமெங்கும் அதிக கிளைகளை உடைய இந்த வங்கியில் ஏராளமானோர் கணக்கு வைத்துள்ளனர். சென்னை மாநகர ஆயுதப்படை போலீஸார் பலரும் இந்த வங்கியில்தான் கணக்கு வைத்துள்ளனர். ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் பணம் போடும்போதும், எடுக்கும்போதும் அதுகுறித்த விவரங்கள் அவரவர் செல்போனில் எஸ்எம்எஸ் மூலம் வரும். அதன்படி கடந்த 16-ம் தேதி சனிக்கிழமை அந்த வங்கியில் கணக்கு வைத்துள்ள போலீஸாருக்கு வங்கியில் இருந்து ஒரு மெசேஜ் வந்தது. அதில் லட்சக்கணக்கான பணம் அவரது கணக்கில் போடப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தது. இதைப்பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்த போலீஸார் பலர், சக போலீஸா ருக்கு போனில் விவரம் கேட்க அவர்களும் தங்களது வங்கி கணக்கிலும் பணம் போடப்பட்டிருப்பதாக மெசேஜ் வந்தது என்று கூறியுள்ளனர்.

அவரவர் மாத சம்பளத்திற் கேற்ப ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் போடப் பட்டிருந்தது. உடனே சில போலீஸார் ஏடிஎம் சென்டருக்கு சென்று பணத்தை எடுக்க முயன்றபோது அவர்களின் மகிழ்ச்சி முடிவுக்கு வந்து விட்டது. அனைவரின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டிருந்தன. அவர்கள் தங்களது கணக்கில் இருந்த சம்பள பணத்தை கூட எடுக்க முடியவில்லை.

இதுகுறித்து வங்கி நிர்வாகத் திடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, "கம்ப்யூட்டரில் ஏற்பட்ட பிரச்சினையால் போலீஸார் உட்பட வங்கியின் வாடிக்கையாளர்கள் அனைவரின் வங்கி கணக்கிற்கும் லட்சக்கணக்கில் பணம் போடப்பட்டதாக மெசேஜ் சென்று விட்டது. உண்மையில் பணமும் வங்கியில் இருந்து அவர்களின் கணக்கிற்கு சென்று விட்டது. ஆனால் 3 நிமிடத்தில் இந்த கோளாறை நாங்கள் கண்டுபிடித்து சரிசெய்து விட்டோம். பணம் போடப் பட்டதாக தகவல் கிடைத்த சில விநாடிகளில் 10-க்கும் குறைவான சிலர் ஏடிஎம் மூலம் சில ஆயிரம் பணத்தை எடுத்துள்ளனர். அவர் களுக்கு தகவல் கொடுத்து பணத்தை திரும்ப ஒப்படைக்க கூறியிருக்கிறோம்" என்று தெரிவித்தனர்.

5 மாதங்களில் வழுக்கை தலையில் முடி வளர புதிய மருந்து...!

தலையில் முடி உதிர்ந்து வழுக்கை விழுவது ஆண்களை மிகவும் கவலை அடைய செய்கிறது. குறிப்பாக இளைஞர்களை அது பெரும் கவலையில் ஆழ்த்துகிறது. வழுக்கையை போக்க பல விதமான எண்ணைய்கள், மருந்துகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இருந்தும் அதற்கு முழுயைமான தீர்வு காண முடியவில்லை. அனால் தற்போது வழுக்கை தலையில் முடி வளரக்கூடிய வகையில் புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் மெடிக்கல் சென்டர் ஆராய்ச்சியாளர்கள் இந்த மருந்தை கண்டுபிடித்துள்ளனர். தலையில் வழுக்கை விழுதல் ஒரு நோயாகும்.

மயிர் காம்புகள் அழிவதால் இந்த வழுக்கை உருவாகின்றன. எனவே இது குறித்து சுண்டெலிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அதில் மயிர்க்காம்புகளை அழிக்கும் ‘டி’செல்கள் கண்டறியப்பட்டன.

அந்த செல்களை அழித்து புதிய தலைமுடிகள் வளர செய்யும் வகையில் மருந்து கண்டு பிடித்துள்ளனர். அதற்கு ‘ஜாக்’ என பெயரிட்டுள்ளனர். இந்த மருந்தை வழுக்கை விழுந்த இடத்தில் தேய்த்து வந்தால் போதும். அந்த இடத்தில் 5 மாதத்தில் மீண்டும் முடி வளருகிறது.

சோதனை முறையில் இது பலருக்கு முழுமையாக பலன் அளித்துள்ளது என ஆராய்ச்சி குழுவின் தலைவர் ரபேல் கிளைனெஸ் மற்றும் ஏஞ்சலா கிறிஸ்டியானோ ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

'கத்தி' படத்தை திரையிட விட மாட்டோம் - 65 அமைப்புகள் அறிவிப்பு

'கத்தி', 'புலிப்பார்வை' ஆகிய படங்களை திரையிட விட மாட்டோம் என 65 அமைப்புகள் இன்று சென்னையில் அறிவித்தது.

தமிழர் வாழ்வுரிமைக்கான கூட்டமைப்பின் ஏற்பாட்டில் அரசியல் கட்சிகள், தமிழர் அமைப்புகள், மாணவர் அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் 65 பேர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் 'கத்தி' மற்றும் 'புலிப்பார்வை' படங்களை திரையிட விட மாட்டோம் என்ற அறிவித்தார்கள்.

'கத்தி', 'புலிப்பார்வை' ஆகிய படங்களை ஏன் எதிர்க்கிறோம் என்று கூட்டாக அறிக்கை ஒன்றிணை வெளியிட்டார்கள். அந்த அறிக்கையில் கூறியிருப்பது..

'புலிப்பார்வை' படத்தில் பாலசந்திரன் போராளியாக சித்தரிக்கப்பட்டு இருக்கிறார். இது உண்மைக்கு மாறானது. மேலும், இலங்கை எதிராக பொருளாதார தடை விதிக்க வலியுறுத்தி தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்த் திரையுலகில் ஐங்கரன் கருணாவை அனைவரும் அறிவர். ஆனால் அவருடன் மெல்ல மெல்ல லைக்கா என்ற நிறுவனம் இணைந்து கோடம்பாகத்தில் கால்பதித்தது. அத்துடன் இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் 'கத்தி' திரைப்படத்தை தயாரிக்கிறது லைக்கா நிறுவனம்.

இந்த தகவல்கள் வெளியானது முதலே லைக்கா நிறுவனத்துக்கும் ராஜபக்சே குடும்பத்துக்குமான உறவுகள் என்ன என்பது குறித்து நீண்ட பட்டியல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. லைக்கா நிறுவனமே இந்தியாவில் இல்லை என்று சொன்னபோது சென்னையிலே அதன் அலுவலகம் இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

ராஜபக்சேவிற்கு மிகவும் நெருக்கம் கொண்டவர் தான் சுபாஸ்கரன் என்பது உலகத் தமிழினம் அறியும். முருகதாஸ், விஜய் என்ற தமிழர்கள் செய்யும் இனத்துரோகத்தை யாராலும் ஏற்க முடியாது. ராஜபக்சேவுடன் யார் கை குலுக்கினாலும் மன்னிக்க முடியாது. இப்படி புலிப் பார்வை, கத்தி போன்ற திரைப்படங்கள் தமிழினத்தின் உளவியல் சிந்தனை மீது நடத்தப்படுகிற போரின் வெளிப்பாடே! சிறீலங்காவை புறக்கணிப்போம், அதன் மீது பொருளாதார தடைவிதிப்போம்! என்ற முழக்கம் தமிழகத்திலும் உலகெங்கிலும் எழுந்து வரும் நிலையில் தமிழகத்துக்குள்ளேயே சிங்களம் தலை நுழைத்து தொழில், வணிகம் செய்கிற முயற்சியை தமிழர்கள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. சிங்களத்தின் உளவியல் போரை வெல்ல தமிழர்களாய் ஓரணியில் ஒன்று திரள்வோம்! " என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உங்கள் ஸ்மார்ட்போன் உங்களை கண்காணிக்கிறதா..? - அதிர்ச்சித் தகவல்

நீங்கள் உங்கள் துணையுடன் செலவழிக்கும் இனிமையான வார இறுதியை ரகசியமாக உங்கள் ஸ்மார்ட்போன் கண்காணிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

அப்படி கண்காணிக்க வாய்ப்பிருப்பது உண்மைதான் என்கிறது கூகுள்.

ஒருவர் ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வைத்திருந்தலோ அல்லது அவரது கூகுள் கணக்கில் லாக்-இன் செய்திருந்தாலோ, அவர்களின் ஒவ்வொரு தகவல்களும் கூகுள் கணக்கில் கண்காணிக்கப்பட்டு, மாத கணக்கில் சேகரித்து வைத்திருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூகுளில் உள்ள ‘மாப்பிக்கிங் சாதனம்’ (Mapping Device) நீங்கள் சமீபத்தில் எங்கு பயணம் மேற்கொண்டிறீர்கள் என்பதை துல்லியமாக காட்டும். இந்த நடவடிக்கைகளை உங்களின் இடத்தை குறிக்கும் வரைப்படத்தில் (location history map) காணமுடியும்.

ஒருவர் கூகுள் கணக்கில் ஒருமுறை லாக்-இன் செய்துவிட்டால், அதிலுள்ள வரைபடத்தில் சிவப்பு நிற சிறிய ஒளியும், கோடுகளும் தென்பட்டு, நீங்கள் எங்கு இருந்தீர்கள் என்பதையும், எங்கு இருக்கிறீர்கள் என்பதையும் காட்டும்.

இது குறித்து கூகுள் தெரிவிக்கையில், இந்த சேவை கட்டாயம் பயன்படுத்த வேண்டியதல்ல. இதனை உங்கள் ஸ்மார்ட்போனில் எப்படி ஆஃப் செய்வது என்ற வழிமுறைகள் அளித்துள்ளேம் என்று குறிப்பிடுக்கிறது.

மேலும், பயன்பட்டாளர்கள் தங்களது ஸ்மார்ட்போனில் உள்ள பழைய தகவல்களை அழிக்கவும் கூகுள் நிறுவனம் வகை செய்து தந்திருக்கிறது.

‘யோவ், இது என் படம்யா… உங்களுக்கு என்னய்யா பிரச்சினை..?

'இது நம்ம ஆளு' என் படம், அப்படம் தாமதமாவதால் உங்களுக்கு என்ன பிரச்சினை என்று சிம்பு காட்டமாக தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, சூரி உள்ளிட்ட பலர் நடிக்க தயாராகி வந்த படம் 'இது நம்ம ஆளு'. சிம்பு தயாரித்து வரும் இப்படத்திற்கு அவரின் தம்பி குறளரசன் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் டீஸரை விரைவில் வெளியிட இருக்கிறார்கள்.

இப்படத்தை இயக்கிக் கொண்டு இருக்கும் போதே, சூர்யாவின் தயாரிப்பு நிறுவனத்திற்காக பாண்டிராஜ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இதனால் சிம்பு - பாண்டிராஜ் இருவருக்கும் மோதலால் படப்பிடிப்பு ரத்தனாது என்று செய்திகள் பரவின.

இந்நிலையில் 'இது நம்ம ஆளு' படம் குறித்து சிம்பு அளித்துள்ள பேட்டியில், "கிடைச்ச 20 நாள் கேப்ல கிராப் வெட்டினேன். ‘அய்யோ! படம் அவ்வளவுதான். கன்டினியூட்டி போச்சு’ன்னு செய்திகள். அய்யா, என் ஹேர்கட்டை கொஞ்சம் திருத்தினா, அதுதான் ‘இது நம்ம ஆளு’ க்ளைமாக்ஸ் லுக். போதுமா? ‘யோவ், இது என் படம்யா… உங்களுக்கு என்னய்யா பிரச்சினை?’ன்னு கத்தத் தோணுது." என்று கூறியுள்ளார்.

தற்போது, ஆகஸ்ட் 18ம் தேதி முதல் 'இது நம்ம ஆளு' படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

காப்பகம்