Saturday, June 1, 2013

இந்தியாவின் வளர்ச்சிக்குரிய தங்கச்சாவி சூரிய மின்சாரம்!






ஆசியாவிலேயே மாபெரும் சூரிய மின் சக்திப் பண்ணை 5,000 ஏக்கர் கரட்டுநிலத்தில் “”சாரங்க பூங்கா” என்ற பெயரில் குஜராத்தில் பதான் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 500 மில்லியன் வாட் (மி.வா.) மின் உற்பத்தி, இதர மாவட்டங்களில் 105 மி.வா., ஒட்டுமொத்தமாக குஜராத்தில் 605 மி.வா. என்பது ஒட்டுமொத்த இந்திய சூரிய மின் உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கு.

ஒவ்வொரு நாளும் குஜராத் மாநிலத்தில் 30 லட்சம் வாட் மாசற்ற மின்சக்தி, சூரியஒளி மூலம் பெறப்பட்டு 10 லட்சம் வீடுகளுக்கு வழங்கப்படுகிறது.ஆண்டுதோறும் சுமார் 10 லட்சம் டன் அளவில் “கார்பன்-டை-ஆக்சைடு’ புகை, ஓசோன் மண்டலத்தை அடையாமல் பாதுகாக்கப்பட்டு அதற்குரிய “கார்பன் கிரெடிட்’ பெற்றுவர முயன்று வருகிறது.

குஜராத்தின் தலைநகரமான காந்திநகர் முழுவதுமாக சூரிய மின்சக்தி மூலம் மின்சார வழங்கல் பெறவும் திட்டமிடப் பட்டுள்ளது. காந்தி நகரில் மட்டும் வீட்டுக்கூரை மீது சூரிய ஒளிப்பலகை ஈர்ப்பு திட்டம் நிறைவேற்றப்பட்டு 1.4 மில்லியன் வாட் மின்சக்தி பெறப்படுகிறது. 150 இடங்களில் சூரிய ஒளி ஈர்க்கும் மின்பலகைகள் 1 கிலோ வாட் முதல் 200 கிலோ வாட் வரை “வீட்டுக் கூரை திட்டம்’ அநேகமாக ஒவ்வோர் அடுக்குமாடிக் கட்டட உச்சிகளிலும் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் தமிழ்நாடு, ஒடிசா, ஆந்திரப்பிரதேசம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் உள்ள கடற்கரைப் பிரதேசங்களின் சூழ்நிலை மட்டுமே காற்றாலை மின்திட்டத்திற்கு ஏற்றது என்பதைத் தமிழ்நாடு நிரூபித்தும்விட்டது. இந்தியாவிலேயே சூரிய மின்சக்தி உற்பத்தியில் குஜராத் முதலிடம் பெற்றுள்ளதைப்போல், தமிழ்நாடு காற்றாலை மின்திட்டத்தில் முதலிடம் பெற்றிருந்தாலும் சூரிய மின்சக்தி உற்பத்திக்கு சூரிய ஒளி இருந்தும் போதிய முன்னேற்றம் இல்லை.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் சூரிய ஒளிக்குப் பஞ்சமே இல்லை. சூரிய ஒளியை வீணாக்காமல் மின்சக்தியாக மாற்றும் திட்டங்களை துரிதகதியில் செயல்படுத்தினால் உலகத்திற்கே இந்தியா ஒளி வழங்கும் நாள் தூரத்தில் இல்லை.

குஜராத்துக்கு அடுத்தபடியாக சூரிய மின் உற்பத்தியில் ராஜஸ்தான் மாநிலம் உள்ளது. அதேசமயம் சுயதேவைப் பூர்த்தி நோக்கில் அவரவர் வீட்டுத்தேவையை அவரவர் நிறைவேற்றிக்கொள்ளும் வீட்டுக்கூரை மின் திட்டத்தில் பிகார், கர்நாடகம், அசாம், சத்தீஸ்கர், ஒடிசா வழிகாட்டலாம்.

சூரிய மின்சக்தித் திட்டத்தில் தமிழ்நாடு தாமதமாக நுழைந்துள்ளதால் மிகவும் பின்தங்கியுள்ளது. அதேசமயம் இன்று ஆட்சியில் உள்ள மாநில அரசு மிகவும் சிறப்பான ஒரு திட்டத்தை குஜராத்தை முன்னோடியாகக் கொண்டு செயலாற்றத் தொடங்கிவிட்டது.

முதலாவதாக, புதுவீடு, கட்டடம் எழுப்புவோர் சூரியமின் பலகையை நிறுவ வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது. ஆனால், இந்த நிபந்தனை சட்டமாக இயற்றப்படாமல் வேண்டுகோளாகவோ, கடமையாகவோ கட்டட உரிமையாளர்கள் ஏற்க வேண்டும். எனினும் இந்த வேண்டுகோள் நிபந்தனை தமிழ்நாட்டில் சூரிய சக்தி ஆற்றலின் தேவையை உணரச்செய்து சூரிய மின்சக்தி சாதனங்களுக்குப் போதுமான தேவையை உணரச் செய்யும். சூரிய சக்தி மின் உற்பத்தியை நான்கு வகையாக மாநில அரசு ஒழுங்குபடுத்தியுள்ளது.

முதல் வகையில் தற்சார்புள்ள சூரிய மின் சக்தி உற்பத்தியாளர்கள். இவர்கள் பெரிய முதலீட்டுத் திட்டத்தின்கீழ் இயங்குவார்கள். இவர்கள் தாம் உற்பத்தி செய்த மின்சாரத்தை வெளியில் விற்கலாம். “கிரிட்’டுக்கும் வழங்கலாம்.

இரண்டாவதாக தொழிற்சாலை உரிமையாளர்கள் – மாநில அரசின் நிபந்தனையை ஏற்றுத் தங்களின் சொந்த உபயோகத்திற்காக உற்பத்தி செய்யலாம்.

மூன்றாவதாகக் கல்வி நிலையங்கள், பல்கலைக்கழகம், கல்லூரிகள், பள்ளிகள் அவரவர் தங்கள் மாடிக்கு மேல் சூரிய ஒளி மின் பலகைகளை நிறுவிக்கொண்டு சொந்தத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதுடன் மாணவர்களுக்கு சூரிய மின் உற்பத்தி தொடர்பான தொழில்நுட்ப அறிவைக் கற்பிக்கலாம்.

நான்காவதாக ஒவ்வொரு வீட்டிலும் மின்தேவையை நிறைவேற்ற மின்பலகைக் கூரைகளை நிர்மாணித்துக் கொள்ளலாம்.

கடந்த அக்டோபரில் மாநில அரசின் சூரிய மின் உற்பத்தி திட்டம் வடிவமைக்கப்பட்டு இன்றைய நிலையில் மாநிலத்தின் சூரிய மின் உற்பத்தி 7 மெகாவாட் மட்டுமே. எனினும் மின்வாரியத்தின் ஓர் அங்கமான “டாஞ்சட்கோ’ 226 மெகாவாட் சூரிய மின்உற்பத்திக்குரிய திட்டங்களை ஏலம் எடுத்துள்ளது.

2014-இல் இந்த இலக்கை அடைவது என்பது தமிழ்நாட்டின் திட்டம். தனிப்பட்ட முறையில் “இந்தியா கிரீன் பவர்’ நிறுவனம் மூலம் 300 மெகாவாட் சூரிய மின் உற்பத்திக்குரிய சூரியப் பூங்கா நிறுவப்பட்டுள்ளது. முதலில் கூறியபடி தமிழ்நாட்டின் சூரிய மின்உற்பத்திக் கொள்கையின் நான்கு அங்கங்களும் இணைந்து, இரண்டே ஆண்டுகளில் தமிழ்நாட்டின் சூரிய மின் உற்பத்தி 1,000 மெகாவாட் இலக்கை அடையும். நாளையை யோசிப்பது நன்றே, இன்றைய நிலை என்ன?

சென்னைக்கு வெளியே எல்லா மாவட்டங்களிலும் காற்றாலை மின்சாரம் தடையுற்றால் மணிக்கு ஒருமுறை சுத்தமாக மின்சாரம் இருக்காது. நாள் ஒன்றுக்கு 12 மணிநேரம் வரை இருள் சூழ்ந்த வாழ்வுதான். இரவில் மின் விசிறி ஓடாதபோது கொசுத் தொல்லை. நாம் கொசுக்கடி தாங்காமல் காலைச் சொறிவோம். அரசு விவரம் புரியாமல் தலையைச் சொறியும். “இன்வர்ட்டர் சார்ஜ்’ ஆகாமல் வேலை செய்யாது. மின்சார அமைச்சர் காரணம் சொல்வார். இன்னும் 1 மாதம், 2 மாதம், 3 மாதம், 4 மாதம் என்று இழுத்து இழுத்து ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.

சூரிய மின் உற்பத்தித் திட்டங்கள் எல்லாம் அச்சடித்த காகிதங்களாக, அடுக்கு அடுக்காக, அலமாரிகளில் உள்ளன. ஏட்டில் எழுதப்பட்டவற்றை எப்படி நிறைவேற்ற முடியும்? ஒவ்வொரு கட்டத்திலும் எழக்கூடிய பிரச்னைகள் எவை? மாநில அரசை நம்பி சூரிய மின் திட்ட ஏலம் எடுத்தவர்களுக்கு சூரிய மின் உற்பத்தி சாதனங்களை மானிய விலையில் பெற்றுத்தர முடிந்ததா? மைய அரசு ஒதுக்கிய மானியங்களை வழங்க முடிந்ததா? ஒரு பிரபல நிறுவனம், வாங்கப்பட்ட சூரிய மின் உற்பத்தி சாதனங்களுக்குரிய மானியம் பெற முடியாமல் தத்தளிப்பதாகக் கூறப்படுகிறது. கிரிட்டுக்கு அனுப்பப்படும் சூரிய மின் சக்திக்கு லாபகரமான விலை உடனுக்குடன் கிடைக்க எதுவும் உறுதிமொழி உள்ளதா? எனினும் மாநில அரசு சூரிய மின்சக்தி ஆற்றலை உயர்த்த அறிவிப்புகளைச் செய்து வருகிறது. விவசாயத்தில் சூரிய ஆற்றலைக்கொண்டு மின்மோட்டார் குழாய்களை இயங்க வைப்பதில் முழு அளவு மானியம் வழங்குவதாகத் திட்டம் உள்ளது. புதிய திட்டம் இருக்கட்டும். நீர்ச்சிக்கன நடவடிக்கைக்காக நுண்ணீர்ப் பாசனம் வழங்கக்கூடிய சொட்டுநீர்க்குழாய், “ஸ்பிரிங்க்ளர்’, “ரைன்-கன்’ இணைப்புகளுக்கும் அவ்வாறே திட்டம் அறிவித்து இரண்டாண்டுகள் கழிந்துவிட்டன. எத்தனை விவசாயிகள் பயன்பெற்றனர்? எவ்வளவு இணைப்புகள் வழங்கப்பட்டன? எவ்வளவு பாசன நீர் மிச்சமானது? திட்டமிடுவதோ, அறிவிப்புகளை வழங்குவதோ பெரிதல்ல. அவை செயல்படும் முறையில் வேகம் வேண்டும்.

வேளாண்மை அலுவலர்கள் அரும்பாடுபட்டு அரசுப் பதவியைப் பெற்றுள்ளனர். மானிய விலையில் சான்றிதழ் விதைகள் வழங்கப்படுவதைப் பார்க்கும்போது புதிய பல விவசாயத் திட்டங்களால் நன்மை விவசாயிகளுக்கா, விவசாய அலுவலர்களுக்கா என்று யோசிக்க வேண்டியுள்ளது.

விவசாயிகளைத் தேடி விவசாய அலுவலர்கள் வந்து தேவைகளை நிறைவேற்றிய காலமெல்லாம் காமராஜர் ஆட்சிக்குப் பின் தொடரவே இல்லை. சரி, இவற்றையெல்லாம் மறந்துவிடலாம். மறப்பதைத் தவிர நம்மால் வேறு என்ன செய்ய முடியும்? அதேசமயம் சூரிய மின் சக்திப் பயன்பாட்டில் சில ஆக்கப்பூர்வமானவற்றை வரவேற்போம்.

சென்னையில் உள்ள ஐ.ஐ.டி. (இந்தியன் இன்ஸ்ட்யூட் ஆஃப் டெக்னாலஜி) சில ஆண்டுகளுக்கு முன்பு, டாக்டர் குமாரவேலால் தொடங்கப்பட்ட “சூரியஜால’ திட்டத்தின் சாதனைகளை நினைத்து மகிழ்வோம். சென்னை – மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள முத்துக்காட்டில் சூரிய சக்தி கொண்டு உவர் நீரை நன்னீராக மாற்றும் திட்டம் தொடங்கப்பட்டுப் போதிய நிதி உதவியில்லாமல் நின்றுபோனது. இப்போது சோலார் சாதனங்களின் விலை வீழ்ச்சியால், நின்றுபோன சூரியஜால திட்டம் பேராசிரியர் ஜகதீஷ்குமாரால் மீண்டும் தொடங்கப்பட்டு சோலார் நன்னீர்த்திட்டம் வெற்றியுடன் செயலாற்றுவதாகச் செய்தி.

சோலார் ஃபோட்டோ ஓல்ட்டிக் பேனல், கிரிட்டுடனோ டீசல் ஜெனரேட்டருடனோ இணைக்கப்படுவதால் சூரிய ஒளி இல்லாத நேரத்திலும், இரவிலும் தொடர்ந்து நன்னீர் எந்திரம் வேலை செய்யும். மலிவான “சோலார் செல்’ தயாரிப்பு, “சோலார் ஹீட்டர்’, “சோலார் ஃபிரிட்ஜ்’ போன்றவையும் ஐ.ஐ.டி. சூரிய ஜால திட்டத்தில் உள்ளது. இப்படிப்பட்ட தொழில்நுட்ப அறிவை மாநில அரசு அல்லது தனியார் நிறுவனங்கள் பயன்படுத்துமானால் மக்கள் மகிழ்வர்.

இந்தியாவிலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி – மின்சாரம் இல்லையென்றால் தொழில் இல்லை, விவசாயம் இல்லை. இதுநாள்வரை வழக்கமான மின்சக்தியைப் பெரும்பாலும் அனல் மின்சாரமாகப் பெற்றோம். அனல் மின்சாரம் நிலக்கரியை நம்பியுள்ளது. நிலக்கரி ஊழல் இந்தியத் தாய் மீது பூசிய கரியாகிவிட்டது. நிலக்கரி இருந்தும் வழங்கலில் தடங்கல் நீங்கவில்லை. கரி மின்சாரம் மாசுடையது. அணு மின்சாரம் ஆபத்தானது. இயற்கை எரிவாயுவும் பூமியைக் குடைந்து எடுக்கப்படுவதால் பூகம்ப ஆபத்து ஏற்படலாம். மரபுசாரா எரிசக்தியில் சூழல் கேடு இல்லாத மாசற்ற பொன்னாகக் கிடைப்பது சூரிய மின்சாரமும் காற்றாலை மின்சாரமும் என்பதில் ஐயம் இல்லை.

“பயோ-மாஸ்’ மின்சாரமும் (விறகு, உரிமட்டை) மாசற்றது. மாசற்ற மின்சாரத்தில் மலிவானது சூரிய மின்சாரமே, ஆரம்பச் செலவுதான் அதிகம். ஒவ்வொரு வீட்டிலும் சூரிய மின்சாரம் செயல்படுமானால் (ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் முறையில், சூரியஒளி குறைந்த நேரத்திலும், இருட்டு நேரத்திலும் கிரிட் அல்லது டீசல் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் பெறும் மாற்று ஏற்பாட்டுடன் இணைந்த சோலார் சிஸ்டம் ) வீட்டில் “ஒளி பிறக்கும்’. ஒவ்வொரு தொழிற்சாலைகளிலும் மேற்கூறிய வழியில் சூரிய மின்சாரம் செயல்படுமானால் உற்பத்தியும் வேலைவாய்ப்பும் பெருகும்.

ஒவ்வொரு விவசாயப் பண்ணையிலும் “சோலார் மோட்டார்’ குழாய் இணைப்பு இருந்தால் பசுமை வளம் பெறும். இந்தியாவின் வளர்ச்சிக்குரிய தங்கச்சாவி சூரிய மின்சாரம். குஜராத் நல்ல வழிகாட்டி. சூரிய மின்சார உற்பத்தியில் இந்திய மாநிலங்கள் குஜராத்தை முன்மாதிரியாக வைத்துக் காகிதத் திட்டம் தீட்டுவதுடன், தீட்டப்பட்ட காகிதத் திட்டங்களை நல்ல முறையில் நிறைவேற்ற முயலவும் வேண்டும். “”ஞாயிறு போற்றுதும்”, “”ஞாயிறு போற்றுதும்”. வாழ்க பாரதம்.



நன்றி! ஆர்.எஸ். நாராயணன்!


லிட்டருக்கு 300 கி.மீ., வரை செல்லும் புது கார் தயார் – மும்பை மாணவர்களின் சாதனை!








இன்றைய நிலையில் தங்கமும் பெட்ரோலும்தான் விலை அதிகரித்துக் கொண்டே போகிறது. இதில் பெட்ரோல் விலையை சமாளிக்கும் விதத்தில் லிட்டருக்கு 300 கி.மீ., வரை செல்லும் புதிய வகை காரை தயாரித்து மும்பை மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.



இன்றும் கூட பெட்ரோலியப் பொருட்களின் தொடர் விலையேற்றத்தால் கார் விற்பனை படு மந்தமாக இருப்பதாக சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. இதற்கிடையில்தான், மும்பை சோமானியா கல்லூரி மாணவர்கள் சிலர் லிட்டருக்கு 300 கி.மீ., செல்லும் கார் ஒன்றை தயாரித்துள்ளனர். முன்புறம் இரண்டு சக்கரங்களுடனும் பின்புறம் ஒரு சக்கரத்துடனும் ரேஸ் கார் போன்று இருக்கும் இந்த காரின் பெயர் ஜூகாட். சோமானியா கல்லூரியில் உள்ள நூலகத்தில் ஜூகாட் இன்னொவேஷன் என்ற பெயரில் இருந்த புத்தகம் ஒன்றை படித்த மாணவர்கள் அதில் இண்ட்ரஸ்ட் வந்து புதிய கார் ஒன்றை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினர்.




கடந்த சில மாதங்களாகவே கல்லூரி முடிந்து நாள் ஒன்றிற்கு 8 முதல் 9 மணி நேரம் செலவிட்டு இந்த காரை உருவாக்கியுள்ளனர் இந்த மாணவர்கள். 60 கிலோ எடை கொண்ட இந்த காரை உருவாக்க அவர்களுக்கு ஆன செலவு ரூ. 4 லட்சம். ஆனால் ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டால் கார் செல்லும் தூரமோ 300 கி.மீ., தற்சமயம் இந்த கார் மலேசியாவில் வரும் ஜூலை மாதம் நடக்கவுள்ள ஷெல் ஈகோ மராத்தான் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.




 கூடுதல்  தகவல்களுக்கு இங்கே வரவும்




காப்பகம்