Showing posts with label சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label சினிமா விமர்சனம். Show all posts

Thursday, October 2, 2014

யான் (2014) - திரைவிமர்சனம்

எம்.பி.ஏ., படித்துவிட்டு எந்த வேலைக்கும் போகாமல் மும்பையில் வசித்து வருகிறார் ஜீவா. நாயகி துளசி, மும்பையில் கார் டிரைவிங் ஸ்கூல் வைத்து நடத்தி வருகிறார். ஒருநாள் தீவிரவாதி ஒருவனை போலீஸ் அதிகாரியான ஜெயப்பிரகாஷ் என்கவுன்டர் செய்யும் வேளையில் இடையில் மாட்டிக் கொள்கிறார் துளசி. அவளை சாதுர்யமாக காப்பாற்றுகிறார் ஜீவா. அதோடு அவளை ஒருதலையாக காதலிக்கவும் செய்கிறார்.

அதன்பின்னர் அவள் பின்னாலேயே சுற்றி வரும் ஜீவா, ஒருநாள் துளசி தனது அப்பா நாசருடன் காரில் போய்க் கொண்டிருக்கும்போது அவளிடம் தனது காதலை சொல்லி விடுகிறார். இதனால் கோபமடையும் நாசர் தன்னை வந்து சந்திக்குமாறு ஜீவாவுக்கு அழைப்பு விடுக்கிறார்.

நாசரை சந்திக்கும் ஜீவாவுக்கு எந்த வேலைவெட்டியும் இல்லை என்பதை அறிந்ததும், மேலும் கோபமடைந்த நாசர் ஜீவாவை தகாத வார்த்தைகளால் திட்டி விடுகிறார். இதனால் மனமுடைந்த ஜீவா, எப்படியாவது ஒரு வேலையை தேடிக் கொள்ளவேண்டும் என்று கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்குகிறார். ஆனால், வேலை கிடைத்தபாடில்லை.

இறுதியில், டிராவல் ஏஜென்ட் வெங்கட் போஸ் மூலம் வெளிநாடு செல்ல திட்டமிடுகிறார். வெங்கட் போஸ் மூலம் கஜகஸ்தான் செல்கிறார் ஜீவா. அங்கு ஜீவாவுக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. கஜகஸ்தான் ஏர்ப்போட்டில் ஜீவாவின் உடமைகளை பரிசோதிக்கும் அந்நாட்டு போலீசார், அவரது சூட்கேசில் போதை மருந்து இருப்பதை கண்டறிகின்றனர். இதனால் ஜீவாவை கைது செய்து சிறையில் அடைக்கின்றனர்.

கஜகஸ்தானில் போதை மருந்து கடத்தினால் தலையை துண்டிப்பதுதான் தண்டனையாகும். அதனால் ஜீவாவுக்கும் தலையை துண்டிக்குமாறு தண்டனை வழங்கப்படுகிறது. இந்நிலையில், சிறையில் தம்பி ராமையாவின் அறிமுகம் கிடைக்கிறது ஜீவாவுக்கு. சக கைதியான தம்பிராமையா இவர் சென்ற சில நாட்களுக்குள் விடுதலையாகி வெளியே வருகிறார். அவரிடம் தனது நிலைமையை மும்பையில் உள்ள தனது குடும்பத்தாரிடம் சொல்லி தன்னை எப்படியாவது மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கூறுகிறார் ஜீவா.

தம்பி ராமையாவும் மும்பைக்கு சென்று ஜீவாவின் குடும்பத்தாரிடம் அவரது நிலைமையை எடுத்துக் கூறுகிறார். இதையறிந்த துளசி, தன்னால்தான் ஜீவாவுக்கு இந்த நிலைமை ஆனது என்று மனமுடைந்து போகிறார். தானே அங்கு சென்று அவனை மீட்டு வருவேன் என்று சபதமேற்று கஜகஸ்தான் புறப்பட்டுச் செல்கிறாள்.

இறுதியில், துளசி, ஜீவாவை மீட்டு இந்தியா திரும்பினாளா? அவனுடன் ஒன்று சேர்ந்தாளா? என்பதே மீதிக்கதை.

ஜீவா இப்படத்தில் கூடுதல் மெருகேறியிருக்கிறார். பார்க்க அழகாக இருப்பது மட்டுமின்றி நடிப்பிலும் கடினமான உழைப்பை போட்டு நடித்திருக்கிறார். அவரது நடிப்புக்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. இந்த படத்துக்காக இவர் இவ்வளவு காலம் காத்திருந்தது வீண் போகவில்லை. சண்டைக் காட்சிகளில் அற்புதமாக நடித்திருக்கிறார்.

துளசி திரையில் பார்க்க அழகாக தெரிகிறார். படத்தில் கதையின் தேவைக்கேற்ப கவர்ச்சி காட்டி, நடிப்பிலும் மிளிர்கிறார். தனது இரண்டாவது படத்திலேயே இவ்வளவு அனுபவமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டுக்களை பெறுகிறார்.

துளசியின் அப்பாவாக வரும் நாசர் பாசமுள்ள அப்பாவாக மனதில் பதிகிறார். ஜெயப்பிரகாஷ் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நம் கண்ணில் நிற்கிறார். தீவிரவாதியாக வரும் நவாப் ஷாவின் நடிப்பும் பலே. தம்பி ராமையா, கருணாகரன், வெங்கட் போஸ் ஆகியோர் ஒருசில காட்சிகளே வந்தாலும், அனைவருக்கும் அழுத்தமான கதாபாத்திரம். அந்த கதாபாத்திரத்தை செவ்வனே செய்து நம்மை கவர்ந்திழுக்கிறார்கள்.

புதுமையான கதையுடன் இயக்குனராக களமிறங்கியிருக்கும் ரவி.கே.சந்திரனுக்கு பாராட்டுக்கள். படத்தின் கதைக்கு தகுந்தாற்போல் லொக்கேஷன்களை தேர்வு செய்வதில் வென்றிருக்கிறார். கதையோட்டத்தில் படம் ரசிக்க வைத்தாலும், ரசிகர்களை கவர்ந்திழுக்கக் கூடிய விஷயங்கள் படத்தில் இல்லாதது படத்திற்கு சற்று பலவீனம்தான். அவற்றை பின்வரும் படங்களில் ரவி.கே.சந்திரன் பின்பற்றுவார் என நம்புவோம். மனுஷ் நந்தனின் ஒளிப்பதிவு அபாரம். பாடல் காட்சிகளுக்கு கூடுதல் கவனம் கொடுத்திருக்கிறார். அது திரையில் அழகாக பளிச்சிடுகிறது.

ஹாரிஸ் ஜெயராஜ் தனது இசையால் படத்திற்கு இன்னும் கொஞ்சம் பலம் கூட்டியிருக்கலாம். ஏனோ, இவரது பின்னணி இசை பரவாயில்லை. பாடல்களிலும் ஒன்றிரண்டு பாடல்களை தவிர, வேறு பாடல்கள் ரசிகர்களை முணுமுணுக்க வைக்காதது சற்று வருத்தமே.

மொத்தத்தில் ‘யான்’ சுறுசுறுப்பில்லை

Friday, September 26, 2014

ஜீவா (2014) - திரைவிமர்சனம்

ஜீவாவுக்கு சிறுவயதில் இருந்து கிரிக்கெட் என்றாலே அலாதி பிரியம். தாயை இழந்துவிட்ட ஜீவாவுக்கு தந்தை இருந்தாலும் பக்கத்து வீட்டில் வசிக்கும் அருள்பிரகாசம் (சார்லி) வீட்டிலேயே வளர்ந்து வருகிறார்.

தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் ஜீவாவுக்கு ஒருநாள் பள்ளி கிரிக்கெட் அணியில் விளையாட இடம் கிடைக்கிறது. பள்ளி கிரிக்கெட் அணியில் ஜீவாவின் திறமையைப் பார்த்த பீனிக்ஸ் கிளப்பின் கோச், அவனை தங்களது கிளப்பில் வந்து பயிற்சி எடுத்துக் கொள்ளுமாறு கூறுகிறார். ஆனால், அவனது அப்பா (மாரிமுத்து) இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

இந்நிலையில் ஜீவாவின் பக்கத்து வீட்டுக்கு புதிதாக குடிவரும் ஜெனி (ஸ்ரீதிவ்யா) இவனை காதலிக்க ஆரம்பிக்கிறாள். இவனும் அவளை காதலிக்கிறான். ஒருநாள் இவர்களுடைய காதல் ஜெனியின் அப்பா (டி.சிவா) வுக்கு தெரிந்துவிடுகிறது. இதனால் ஜெனியை வெளியூருக்கு சென்று படிக்க வைக்கிறார்.

அவளை பிரிந்த சோகத்தில் போதைக்கு அடிமையாகிறான் ஜீவா. அவனை போதையில் இருந்து மீட்டெடுக்க அவனுக்கு பிடித்த கிரிக்கெட் கிளப்பில் சென்று சேர்த்துவிடுகிறார் அவனது அப்பா.

அங்கு ரஞ்சித் (லஷ்மண்), டேவிட் (சூரி) இருவரும் இவருக்கு நண்பர்களாகிறார்கள். கஷ்டப்பட்டு திறமையை வெளிப்படுத்தும் ரஞ்சித்தும், ஜீவாவும் ரஞ்சி டிராபியில் விளையாட வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், அங்கு நடக்கும் அரசியலால் இவர்களது திறமை முடக்கப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த ரஞ்சித் ஒருகட்டத்தில் தற்கொலை செய்து கொள்கிறான்.

இதற்கிடையில், ஜெனி எங்கு படிக்கிறாள் என்பதை ஜீவா தேடிக் கண்டுபிடித்து, இருவரும் மீண்டும் காதலித்து வருகிறார்கள். இருவரும் திருமணம் செய்துகொள்ள பெற்றோரிடம் சம்மதம் கேட்கிறார்கள். ஜெனியின் அப்பாவோ கிரிக்கெட்டை விட்டு வந்தால் அவளை திருமணம் செய்துகொடுப்பதாக கூறுகிறார்.

இறுதியில், ஜீவா கிரிக்கெட்டில் சாதனை படைத்தாரா? கிரிக்கெட்டை தியாகம் செய்து ஜெனியை கரம்பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.

படத்தில் ஜீவாவாக வரும் விஷ்ணு, உண்மையான கிரிக்கெட் விளையாட்டு வீரருக்குண்டான தோற்றத்தை நம் கண்முன்னே நிறுத்தியிருக்கிறார். அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். கிரிக்கெட் விளையாட்டில் இவர் காட்டும் ஸ்டைல் எல்லோரையும் ரசிக்க வைக்கிறது.

இதுவரையிலான படங்களில் மீசை, தாடியுடன் பார்த்து ரசித்த விஷ்ணுவை, இப்படத்தில் பள்ளி சிறுவனாக காட்டுவதற்காக மீசையில்லாமல் காட்டியிருப்பதைத்தான் ரசிக்க முடியவில்லை.

ஜெனியாக வரும் ஸ்ரீதிவ்யா, குறும்புத்தனமான பள்ளி மாணவி கதாபாத்திரத்தில் ரசிக்க வைக்கிறார். படம் முழுக்க குட்டைப் பாவடையுடன் வலம்வந்தாலும் அதிக கவர்ச்சி இல்லாமல் நடித்து அனைத்து தரப்பினரையும் கவர்கிறார். கல்லூரி மாணவியாக வரும்போது பொறுப்பான பெண்ணாக அனைவர் மனதில் இடம்பிடிக்கிறார்.

ஜீவாவின் நண்பன் ரஞ்சித் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லஷ்மணுக்கு அழகான கதாபாத்திரத்தை வழங்கியிருக்கிறார் இயக்குனர். அந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி, அழகாக நடிக்கவும் செய்திருக்கிறார் லஷ்மண். கிரிக்கெட்டில் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு, அரசியலால் மழுங்கடிக்கப்பட்ட நேரத்தில் இவர் முகத்தில் காட்டும் உணர்ச்சி நம்மையே கலங்க வைக்கிறது.

சூரியின் காமெடி படத்தில் பெரிதாக எடுபடவில்லை. ஒருசில காட்சிகள் சிரிக்க முடிகிறதே தவிர, பெரும்பாலான காட்சிகள் போரடிக்கத்தான் வைக்கின்றன. நீண்ட இடைவெளிக்கு பிறகு சினிமாவில் தலைகாட்டியிருக்கும் சார்லிக்கு அழுத்தமான கதாபாத்திரம். அதை திறம்பட நடித்து கைதட்டல் பெறுகிறார்.

விஷ்ணுவின் அப்பாவாக வரும் மாரிமுத்து, கோச் ரவி, ஸ்ரீதிவ்யாவின் அப்பாவாக வரும் டி.சிவா ஆகியோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

விளையாட்டை கதைக்களமாக கொண்ட படம் என்றாலே சுசீந்திரனுக்கு லட்டு சாப்பிடுகிற மாதிரி. கபடியை மையப்படுத்தி எடுத்த வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த சுசீந்திரன், ஜீவா படத்தின் மூலம் உச்சம் தொட்டுவிட்டார்.

கிரிக்கெட் பின்னணியில் எவ்வளவு அரசியல் இருக்கிறது. திறமையானவர்கள் எவ்வாறு புறக்கணிக்கப்படுகிறார்கள். அவர்களின் கனவுகள் எப்படியெல்லாம் சிதறடிக்கப்படுகிறது என்பதை தைரியமாக எடுத்துக் காட்டிய இயக்குனருக்கு சபாஷ்.

மதியின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். மைதானத்தில் வீரர்களுடன் இவருடைய கேமராவும் இறங்கி விளையாடியிருக்கிறது. டி.இமான் இசையில் பாடல்கள் எல்லாம் அருமை. பின்னணி இசையிலும் வெளுத்து வாங்கியிருக்கிறார்.

மொத்தத்தில் ‘ஜீவா’வில் ஜீவன் உண்டு.

Sunday, September 21, 2014

அரண்மனை (2014) - திரைவிமர்சனம்

ஜமீன்தார் குடும்ப வாரிசுகளான சித்ரா லட்சுமணன், கோவை சரளா மற்றும் வினய் ஆகியோர் தங்களின் பாரம்பரிய அரண்மனையை விற்க முயற்சி செய்கிறார்கள். இவர்கள் மூவரும் கையெழுத்திட்டால் தான் அந்த அரண்மனையை விற்கமுடியும் என்பதால் அனைவரும் ஒன்று கூடுகிறார்கள். இந்த அரண்மனையை வாங்க நீண்ட நாட்களாக முயற்சி செய்து வருகிறார் சரவணன்.

அரண்மனையை விற்பதற்காக பத்திரம் ரெடியாகும் வரை வாரிசுகள் அனைவரும் அங்கு தங்க முடிவு செய்கிறார்கள். அதன்படி வினய் மற்றும் அவரின் மனைவி ஆண்ட்ரியா, மனோபாலா-கோவை சரளா இவர்களின் மகன் நிதின் சத்யா, சித்ரா லட்சுமணன் மற்றும் அவரின் மகள் ராய் லட்சுமி ஆகியோர் அந்த அரண்மனையில் தங்குகிறார்கள். இதற்கிடையில் அந்த அரண்மனையை விற்பனைக்கு வருவதை அறிந்து அதே ஊரைச் சேர்ந்த சந்தானம், தனக்கும் சொத்தில் பங்குண்டு என்பதை அறிகிறார். ஆனால் ஆதாரம் இல்லாததால் வேலைக்காரனாக அங்கு நுழைகிறார்.

இந்த அரண்மனையில் ஏதோ மர்மம் இருப்பதாக அனைவரும் அறிகிறார்கள். இந்நிலையில் ஆண்ட்ரியாவின் அண்ணனான சுந்தர்.சி அரண்மனைக்கு வருகிறார். இந்த அரண்மனையில் பேய் இருப்பதாகவும் அந்த பேய் ஆண்ட்ரியாவின் மீது இருப்பதாகவும் அறிந்து கொள்கிறார்.

இறுதியில் அந்த பேய் யார்? எதற்காக ஆண்ட்ரியாவின் உடலில் புகுந்திருக்கிறது? பேயின் பிடியில் இருந்து அனைவரும் மீண்டார்களா? என்பதை காமெடி கலந்து திரில்லராக மீதிக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர்.

சுந்தர்.சி அண்ணன் கதாபாத்திரத்தை ஏற்று பொறுப்பான அண்ணாக நடித்திருக்கிறார். கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார் வினய். இரண்டு கதாநாயகன்கள் இருந்தாலும் நாயகிகளின் ராஜ்ஜியமே படத்தில் மேலோங்கி இருக்கிறது. நாயகிகளாக வரும் ஆண்ட்ரியா படத்தில் பேயாட்டம் ஆடுகிறார். இவர் உடம்பில் பேய் புகுந்தவுடன் இவர் செய்யும் செய்கைகள் அருமை. ராய் லட்சுமி கவர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார் ஹன்சிகா.

சந்தானத்தின் காமெடி ரசிகர்களை வயிறு வலிக்க செய்கிறது. மனோபாலா, கோவை சரளா, நிதின் சத்யா, சித்ரா லட்சுமணன் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

பரத்வாஜ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார். செந்தில்குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். இதுவரை காமெடி படங்களில் வெற்றி கண்டு வந்த இயக்குனர் சுந்தர்.சி, இப்படத்தில் காமெடியுடன் திரில்லரையும் சேர்த்து வெற்றி கண்டிருக்கிறார். ரசிகர்களுக்கு போரடிக்காத வகையில் திரைக்கதை அமைத்து காமெடி விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர். அரண்மனை செட்டை அருமையாக அமைத்த கலை இயக்குனரை பாராட்டலாம்.

மொத்தத்தில் ‘அரண்மனை’ கலகலப்பான திகில் வீடு.

ஆள் (2014) - திரைவிமர்சனம்

ஆமீர். சிக்கிமில் ஒரு என்ஜினியரிங் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். தந்தையை இழந்த இவருக்கு எல்லாமே சென்னையில் இருக்கும் அவருடைய அம்மா, தம்பி, தங்கைதான். அம்மாவுக்கு அடுத்தபடியாக அதிக அளவு பாசத்தை மீனாட்சி மீதும் வைத்திருக்கிறார். மீனாட்சி வேறு யாருமல்ல... அவருடைய காதலி.

சிக்கிமில் தனியாக வசித்து வரும் ஆமீருக்கு எப்படியாவது தனது குடும்பத்தை சிக்கிமிற்கு கொண்டு வந்து செட்டிலாகி விடவேண்டும் என்று கஷ்டப்பட்டு உழைத்து வருகிறார்.

இந்நிலையில், இவர் பணியாற்றி வரும் கல்லூரியில் படிக்கும் சில மாணவர்கிடையே சண்டை வருகிறது. முஸ்லீம் மாணவனான ரிஸ்வானை சிலர் அடித்து துன்புறுத்துகிறார்கள். அவன், தான் முஸ்லீம் என்பதால்தான் தன்னை சக மாணவர்கள் கேலியாகவும், அடித்தும் துன்புறுத்துகிறார்கள் என்று ஆமீரிடம் கூறுகிறான்.

இதனால் அவன்மீது இரக்கம் காட்டும் ஆமீர், அவனை தன்னுடன் வந்து தங்குமாறு கூறுகிறார். ரிஸ்வானும் அவருடன் வந்து தங்குகிறான். இருவரும் ஆசிரியர்-மாணவன் பாகுபாடு இல்லாமல் நட்புடன் பழகி வருகின்றனர்.

இதற்கிடையில் ஆமீர்-மீனாட்சியின் காதல் மீனாட்சியின் பெற்றோருக்கு தெரிய வருகிறது. அவர்கள் ஆமீரை சென்னை வந்து தங்களை சந்திக்குமாறு அழைக்கின்றனர். அதன்படி, ஆமீர் சென்னை போக ஆயத்தமாகிறான். தன்னுடைய காதலி பரிசாக அளித்த கோட்-சூட்டுடன் சென்னை புறப்பட்டு வருகிறான்.

சென்னை ஏர்ப்போர்ட்டில் வந்திறங்கும் ஆமீருடைய செல்போன் சார்ஜ் இல்லாததால் தன்னை வரவேற்க வந்தவர்களை கண்டுபிடிக்க முடியாமல் தவிக்கிறான். அப்போது, ஒரு பைக்கில் ஹெல்மெட் அணிந்த இருவர் வந்து ஒரு செல்போனை இவரிடம் தூக்கிப் போட்டுவிட்டு சென்று விடுகின்றனர்.

அப்போது, அந்த செல்போனுக்கு ஒரு நம்பர் தெரியாத போனில் இருந்து ஒரு அழைப்பு வருகிறது. அந்த அழைப்பை எடுத்து பேசும் ஆமீருக்கு அதிர்ச்சியான செய்தி கிடைக்கிறது. அந்த அதிர்ச்சியான செய்தி என்ன? அந்த செல்போனால் அவன் என்னென்ன அவதிப்பட்டான்? என்பதே மீதிக்கதை.

ஆமீர் கதாபாத்திரத்தில் விதார்த், வித்தியாசமான நடிப்பால் கவர்கிறார். இதுவரை விதார்த்தை பார்த்திராத கதாபாத்திரத்தில் நடித்துள்ள அவருக்கு கோர்ட்டும் சூட்டும் கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. கோபம், சோகம், அழுகை என இவரது முகத்தில் எல்லாமே சரளமாக வருகிறது.

ஆனால், தனக்கு இடையூறாக வரும் நபர்களை இவர் துரத்தும் காட்சிகளில்தான் ஓடமுடியாமல் தவித்திருக்கிறார். கடைசி காட்சியில் இவரது நடிப்பு கைதட்டல் பெறுகிறது.

நாயகி கார்த்திகா ஷெட்டிக்கு படத்தில் சிறு வேடம்தான். ஒரு சில காட்சிகளே வருகிறார். அதனால் மனதில் நிற்கவில்லை. படத்தில் வில்லனாக வரும் விடியல் ராஜூவின் நடிப்புதான் பலே. உட்கார்ந்த இடத்தில் இருந்தே மிரட்டி பேசி, தன்னுடைய காரியத்தை சாதித்துக் கொள்ளும் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். அதேபோல், படத்தில் வரும் ஒவ்வொரு சிறிய கதாபாத்திரமும் நம்மை மிரட்டியிருக்கிறது.

ஒரு சாதாரண மனிதனின் பலவீனத்தை புரிந்து வைத்துக்கொண்டு அவனை வைத்து தீவிரவாதிகள் தங்கள் காரியங்களை எப்படி சாதித்துக் கொள்கிறார்கள் என்பதை அப்பட்டமாக தோலுரித்து காட்டியுள்ள இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணாவுக்கு சபாஷ். படத்தின் முதல்பாதி சற்று தொய்வுதான். ஆனால், இரண்டாம் பாதியில் விறுவிறுப்பு தொற்றிக் கொள்கிறது. அதே விறுவிறுப்பை இறுதிவரை மாறாமல் கொடுத்திருப்பது இயக்குனரின் தனி சிறப்பு.

உதய்குமார் ஒளிப்பதிவில் சிக்கிமின் அழகை அழகாக படமாக்கியிருப்பது சிறப்பு. மலையில் அடுக்குமாடி வீடுகளை தனது கேமராவால் அழகாக படமாக்கியிருக்கிறார். கதையை விறுவிறுப்பாக நகர்த்த இவரது கேமராவும் உதவியிருக்கிறது. ஜான் இசையில் பாடல்கள் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசை பரவாயில்லை.

மொத்தத்தில் ‘ஆள்’ அழகுராஜா.

Saturday, September 13, 2014

சிகரம் தொடு (2014) - திரைவிமர்சனம்

போலீஸ் அதிகாரியான சத்யராஜ் வேலையில் இருக்கும்போதே தனது ஒரு காலை இழந்து விடுகிறார். போலீசாக தன்னால் சாதிக்க முடியாததை தனது மகனை வைத்து சாதிக்க வேண்டும் என்று விக்ரம் பிரபுவை போலீசாக்க துடிக்கிறார். ஆனால், விக்ரம் பிரபுவுக்கோ போலீசாக வேண்டும் என்பதில் துளியும் ஆசையில்லை. இருந்தாலும் அப்பாவின் ஆசைக்காக அவ்வப்போது ஜிம்முக்கு சென்று பயிற்சி செய்து வருகிறார்.

இந்நிலையில், விக்ரம் பிரபுவும் அவரின் தாத்தாவும் புனித யாத்திரையாக வடநாடு செல்கிறார்கள். அங்கு நாயகி மோனல் கஜ்ஜாரை பார்த்ததும் அவள்மீது காதல் வயப்படுகிறார். முதலில் மோதலில் ஆரம்பிக்கும் இவர்களது சந்திப்பு பிறகு காதலில் முடிகிறது.

விக்ரம் பிரபுவுக்கு எப்படி போலீசாக வேண்டும் என்பது பிடிக்கவில்லையோ, அதேபோல் மோனல் கஜ்ஜாருக்கும் போலீசை கண்டாலே பிடிக்காது. இருவருடைய எண்ணமும் ஒத்துப்போவதால் இருவரும் தொடர்ந்து காதலித்து வருகின்றனர். இந்நிலையில், பயணத்தை முடித்துவிட்டு ஊர் திரும்பும் விக்ரம் பிரபுவுக்கு போலீஸ் செலக்ஷனுக்கு அழைப்பு வருகிறது. என்னசெய்வதென்று தெரியாமல், அப்பாவின் விருப்பத்திற்காக அதில் கலந்து கொள்கிறான்.

மோனல் கஜ்ஜாரிடம் பொய் சொல்லிவிட்டு போலீஸ் கலந்தாய்வில் கலந்து கொள்ள செல்கிறான். ஆனால், அங்கு மோனல் கஜ்ஜாரை பார்த்ததும் அதிர்ச்சியடைகிறான். மோனல் கஜ்ஜாரின் அப்பாவும் போலீஸ் என்பதால் அவரை பார்க்க வந்திருப்பதாக கூறுகிறாள். இருவரும் பேசிக்கொண்டிருப்பதை பார்க்கும் மோனல் கஜ்ஜாரின் அப்பா இவர்கள் காதலை பிரிக்க நினைக்கிறார். மாறாக, தனது நண்பனான சத்யராஜுக்கு துரோகம் செய்ய நினைக்கவில்லை.

இதற்காக விக்ரம் பிரபுவை அழைத்து போலீஸ் செலக்ஷனில் பாஸாகிவிட்டு, சில நாட்கள் கழித்து அந்த வேலையை விட்டுவிடுமாறு கூறுகிறார். அதன்பிறகு தனது மகளை அவனுக்கு கல்யாணம் செய்து கொடுப்பதாகவும் கூறுகிறார். இதனால், விக்ரம் பிரபு அந்த போலீஸ் செலக்ஷனில் பாஸாகி போலீசாகிறார்.

இந்நிலையில் ஒருநாள் சத்யராஜ் வீதியில் நடந்து போய்க் கொண்டிருக்கும்போது ஒரு ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடித்துச் செல்லும் கும்பலை பிடித்து விக்ரம் பிரபுவின் ஸ்டேஷனில் வந்து ஒப்படைத்துவிட்டு செல்கிறார். அந்த நேரத்தில் மோனல் கஜ்ஜார் விக்ரம் பிரபுவுக்கு போன் செய்து படத்துக்கு கிளம்பி வரும்படி வற்புறுத்துகிறாள். விக்ரம் பிரபுவும் படத்திற்கு கிளம்பி போய்விடுகிறார்.

அப்போது சிறையில் இருக்கும் ஏடிஎம் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பித்துப்போக பார்க்கிறார்கள். அப்போது எதேச்சையாக அங்கு வரும் சத்யராஜ் அவர்களை தடுத்து நிறுத்த பார்க்கிறார். ஆனால், அவர்கள் சத்யராஜை அடித்துப் போட்டுவிட்டு தப்பித்து சென்றுவிடுகிறார்கள்.

படத்திற்கு போய்விட்டு திரும்பும் விக்ரம் பிரபு, தனது அப்பா ஏடிஎம் கொள்ளையர்களால் தாக்கப்பட்டது தெரிந்ததும் அவர்களை கண்டுபிடித்து, தண்டிக்க முடிவெடுக்கிறார். இதுவரை போலீஸ் வேலையின் மீது பிடிப்பு இல்லாமல் இருந்தவருக்கு அன்று முதல் அந்த பணியின்மீது ஒருவித வெறி வருகிறது.

இறுதியில், விக்ரம் பிரபு அந்த ஏடிஎம் கொள்ளையர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

படத்தில் சத்யராஜ் பொறுப்பான தந்தையாகவும் நேர்மையான போலீஸ் அதிகாரியாகவும் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சத்யராஜை போலீசாக பார்ப்பது சிறப்பு.

முதன்முதலாக போலீஸ் கதாபத்திரத்தை ஏற்று அதற்கு தகுந்தார்போல் சிறப்பாக நடித்திருக்கிறார் விக்ரம் பிரபு. அப்பா மீதுள்ள சென்டிமெண்ட் காட்சிகளிலும், காதல் காட்சிகளிலும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நாயகியான மோனல் கஜ்ஜார் தன் துறுதுறு நடிப்பால் அனைவரையும் கவர்கிறார். திரையில் பார்க்க அழகாக இருக்கும் இவர் வெகுவாக ரசிகர்களை கவர்கிறார். மகேஷ், சதீஷ் இருவரும் காமெடி கதாபாத்திரத்தை ஏற்று கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ஏடிஎம் கொள்ளையராக நடித்திருக்கும் இயக்குனர் கௌரவ் சிறப்பாக நடித்திருக்கிறார். ஏடிஎம்மில் கொள்ளையடிப்பதை மிகவும் ஆராய்ந்து அழகாக திரைக்கதை அமைத்திருக்கும் இவர் முதற்பாதியில் ஏடிஎம் கொள்ளையர்களை பிடிக்க நிறைய போலீஸ் அதிகாரிகள் திட்டமிடுவதுமாக காட்சிகளை அமைத்து பிற்பாதியில் விக்ரம்பிரபு மட்டும் தன் தந்தையின் நிலைமைக்காக பழிவாங்க தனிநபர் முயற்சி செய்வது சினிமாதனம். மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஏடிஎம்மில் கொள்ளை நடப்பதை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் படமாக்கிய இயக்குனரை பாராட்டலாம்.

இமான் இசையில் பாடல்கள் எல்லாம் ரசிக்கும் ரகம். பின்னணியில் இசையில் வெளுத்து வாங்கியிருக்கிறார். விஜய் உலகநாத்தின் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகளை எடுத்த விதம் அருமை.

மொத்தத்தில் ‘சிகரம் தொடு’ சிறந்த முயற்சி.

வானவராயன் வல்லவராயன் (2014) - திரைவிமர்சனம்

பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தில் செல்வந்தரான பாண்டவராயன் (தம்பி ராமையா)-மீனாட்சி (கோவை சரளா) தம்பதியருக்கு வானவராயன் (கிருஷ்ணா) வல்லவராயன் (மா.கா.பா.ஆனந்த்) என இரண்டு மகன்கள். இருவரையும் ரொம்பவும் செல்லம் கொடுத்து வளர்த்தால் பொறுப்பு இல்லாமல் ஊர் சுற்றி வருகின்றனர்.

வானவராயன் அதே ஊரில் பல பெண்களை காதலிக்கிறார். ஆனால், எந்த பெண்ணும் இவரை காதலிக்கவில்லை. ஒருநாள் தனது தம்பி வல்லவராயனுடன் பக்கத்து ஊரில் நடக்கும் திருமணத்துக்கு போகிறார் வானவராயன்.

அந்த திருமணத்தில் அஞ்சலி (மோனல் கஜ்ஜார்)யை பார்க்கிறார். பார்த்தவுடனேயே அவள்மீது காதல்வயப்பட்டு விடுகிறார். அவளையே சுற்றி சுற்றி வருகிறார். ஒருகட்டத்தில் தனது காதலை அவளிடம் சொல்கிறார். அவளும் அந்த காதலை ஏற்றுக் கொள்கிறாள்.

இருவரும் காதலிக்கும் விஷயம் அஞ்சலியின் அண்ணன் சிவராஜு(எஸ்.பி.சரண்)க்கு தெரிய வருகிறது. அஞ்சலியை அடித்து கண்டிக்கிறான். இதையறிந்த வானவராயன் அஞ்சலியின் வீட்டுக்கு இரவோடு இரவாக சென்று அவளை சந்திக்கிறான்.

இருவரும் தனிமையில் சந்தித்து பேசும்போது ஊர்க்காரர்கள் திரண்டு வரும் சத்தத்தை கேட்டு இருவரும் ஓடுகிறார்கள். இருவரும் ஊரைவிட்டுத்தான் ஓடுகிறார்கள் என்று தவறாக புரிந்துகொண்ட ஊர்க்காரர்கள் அவர்களை சுற்றி வளைக்கின்றனர். வானவராயனை அடித்து அந்த ஊரை விட்டே அனுப்புகிறார்கள்.

இந்நிலையில் அஞ்சலியின் அப்பாவான வேலு நாயக்கர் (ஜெயபிரகாஷ்) வெளியூரிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பி வருகிறார். வந்ததும் வீட்டில் நடந்த விஷயங்களை கேட்டறிந்த வேலு நாயக்கர், தனது மகளை சமாதானப்படுத்தும் விதமாக வானவராயனையே அவளுக்கு திருமணம் செய்துவைப்பதாக கூறுகிறார்.

இதற்கிடையில், தனது அண்ணன் வானவராயனை அடித்து அவமானப்படுத்தியதால் அஞ்சலி குடும்பத்தை எப்படியாவது அவமானப்படுத்த வேண்டும் என்று நினைத்த வல்லவராயன் குடித்துவிட்டு அஞ்சலியின் வீட்டுக்கு சென்று அவளது அப்பா மற்றும் அவளது குடும்பத்தாரை தகாத வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்துகிறான்.

இதனால் கோபமடைந்த வேலு நாயக்கர் தனது மகளை வானவராயனுக்கு திருமணம் செய்து கொடுக்கமாட்டேன் என்று உறுதி எடுக்கிறார். இருந்தாலும் வானவராயன் நினைவாகவே இருந்து வருகிறாள் அஞ்சலி. ஒருகட்டத்தில் தன் தவறை உணர்ந்த வல்லவராயனும் வேலுநாயக்கரை சமாதானம் செய்ய எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைகிறது.

இறுதியில், வேலுநாயக்கரை சமாதனம் செய்து வானவராயன்-அஞ்சலி காதலில் இணைந்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

வானவராயன் வல்லவராயனுமாக வரும் கிருஷ்ணாவும், மா.கா.பா.ஆனந்தும் படம் முழுக்க செய்யும் சேட்டைகள் தாங்க முடியவில்லை. அண்ணனுக்காக எதையும் செய்யக்கூடிய தம்பியாக நம் கண்முன்னே நிற்கிறார் மா.கா.பா. ஆனந்த். அறிமுக படத்திலேயே அசத்தலாக நடித்து இருக்கிறார். கிருஷ்ணாவுக்கு ரொம்ப ஜாலியான கதாபாத்திரம். அதை செவ்வனே செய்திருக்கிறார்.

அஞ்சலியாக வரும் மோனல் கஜ்ஜார் திரையில் அழகாக பளிச்சிடுகிறார். கிராமத்து பெண் வேடத்துக்குத்தான் சரியாக பொருந்தவில்லை. நடிப்பிலும் கூடுதல் முயற்சி எடுக்கவேண்டும்.

நாயகியின் அண்ணனாக வரும் எஸ்.பி.சரணுக்கு இந்த படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம். கண்டிப்பான அண்ணனாக மனதில் பதிகிறார். தம்பி ராமையா, கோவை சரளா வரும் காட்சிகள் கலகலக்க வைக்கின்றன. கோவை தமிழில் இருவரும் வெளுத்து வாங்கியிருக்கிறார்கள். ஜெயப்பிரகாஷ் பாசக்கார அப்பாவாக பளிச்சிடுகிறார்.

படத்தில் 15 நிமிட காட்சிகளில் சந்தானம் வருகிறார். இவர் வரும் அந்த 15 நிமிடத்தையும் கலகலப்பாக்கிவிட்டு போயிருக்கிறார்.

குடும்ப பின்னணியில் ஒரு காதல் கதையை காமெடி, சென்டிமெண்ட் கலந்து சொல்ல வந்திருக்கிறார் இயக்குனர் ராஜமோகன். காமெடி ஓரளவுக்கு இருந்தாலும் படத்தில் சில காட்சிகளை தவிர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது. குறிப்பாக, நாயகியின் அப்பாவை அவமானப்படுத்தும் காட்சிகள் ரொம்பவும் அருவருக்கத்தக்க வகையில் இருக்கிறது. மற்றபடி பார்த்தால் படத்தை கலகலப்பாக கொண்டு போயிருக்கிறார் இயக்குனர்.

யுவன்சங்கர் ராஜா இசையில் இரண்டு பாடல்கள் அருமை. மற்ற பாடல்கள் சுமார் ரகம். பழனிகுமார் ஒளிப்பதிவில் பொள்ளாச்சி அழகை அழகாக படமாக்கியிருப்பது குளுமை.

மொத்தத்தில் ‘வானவராயன் வல்லவராயன்’ போட்டியில்லை

Friday, September 12, 2014

கள்ளசாவி (2014) - திரைவிமர்சனம்

பெரிய செல்வந்தரான ராகேஷ் தனது மனைவி மற்றும் திருமண வயதை எட்டிய மகளுடன் சென்னையில் வசித்து வருகிறார். இவருடைய மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை பார்த்துக்கொள்ள நண்பர் மூலமாக வர்ஷாவை நியமிக்கிறார். வர்ஷாவின் அணுகுமுறை மற்றும் மனைவி மீது காட்டும் பாசம் ராகேஷ் மட்டுமில்லாது அந்த வீட்டில் உள்ள அனைவருக்கும் அவளை பிடித்துப் போய்விடுகிறது.

நெடுநாளாக தனது மனைவி உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் தாம்பத்ய சுகம் கிடைக்காமல் பரிதவித்து வருகிறார் ராகேஷ். இவருடைய வீட்டிலேயே இருந்து மனைவிக்கு பணிவிடை செய்துவரும் வர்ஷா மீது இவரது பார்வை விழுகிறது. ஒருநாள் மது குடித்துவிட்டு போதையில் அவளை பலாத்காரம் செய்துவிடுகிறார் ராகேஷ்.

மறுநாள் காலையில் தனது கற்பு போய்விட்டதாக சொல்லி புலம்பும் வர்ஷாவை சமாதானம் செய்கிறார் ராகேஷ். ஆனால், வர்ஷா சமாதானமாக மறுக்கிறாள். தன்னுடைய மானம் அவளால் பறிபோய்விடுமோ என பயப்படும் ராகேஷ் அவளை வேலையிலிருந்து தூக்கிவிட முடிவெடுக்கிறார். ஆனால், அவளுடைய மனைவி அவள் மீது அதிக பாசமாக இருப்பதால் அவளை வேலையிலிருந்து தூக்க முடியவில்லை.

இறுதியில் ராகேஷ் என்ன முடிவெடுத்தார்? என்பதே மீதிக்கதை.

‘திருடா திருடி’ படத்தில் தனுஷுடன் கவர்ச்சி ஆட்டம் போட்ட வர்ஷா, இந்த படத்தில் சற்று உடல் பெருத்து கூடுதல் கவர்ச்சியுடன் களமிறங்கியிருக்கிறார். ஆனால் நடிப்புதான் வரவில்லை. செல்வந்தருடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகளில் இவருடைய முகபாவணைகள் நம்மையும் கிரங்க வைக்கின்றன. படம் முழுக்க சேலையுடன் வந்தாலும் கவர்ச்சியில் ரசிகர்களை ஏமாற்றவில்லை.

ராகேஷ் கதாபாத்திரத்தில் வரும் கவின் மற்றும் அவரது மனைவியும் ஓரளவுக்கு நடித்திருக்கிறார். ராகேஷின் மகளாக வருபவர் மாடர்ன் உடைகளில் அழகாக இருக்கிறார். ஒரு சில காட்சிகளில் இவர் அணிந்திருக்கும் உடை நம்மை கிளுகிளுப்பாக்குகிறது.

காமம் என்பது ஒரு மனிதனுடைய வாழ்வில் அவசியமான ஒன்று. ஆனால், அந்த காமம் அளவுக்கு மீறி சென்றால் அது நமக்கே ஆபத்தில் முடியும் என்ற ஆழமான கருத்தை சொல்ல வந்த இயக்குனர் ராஜேஷ்வரன், கதையில் ஆங்காங்கே தடுமாறியிருக்கிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகளை நீளமாக வைத்து போரடிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக ராகேஷ் மது குடிக்கும் காட்சிகளை ரசிக்க முடியவில்லை.

ராஜ் பாஸ்கர் இசையில் பாடல்களை கேட்கவே முடியவில்லை. பின்னணி இசை ஓரளவுக்கு பரவாயில்லை. என்.கிருஷ் ஒளிப்பதிவு ஓரளவு பரவாயில்லை.

மொத்தத்தில் கள்ளசாவி களவாடவில்லை

Monday, September 8, 2014

அமர காவியம்(2014) - திரைவிமர்சனம்

நடிகர் ஆர்யாவின் சொந்தப் படம்.. ஆர்யாவின் தம்பி சத்யா ஹீரோ.. என எதிர்பார்ப்புகளுடனும், ‘படத்தின் கிளைமாக்ஸை பார்த்து நடிகை நயன்தாரா கண்ணீர்’ என இலவச விளம்பரத்துடனும் வந்திருக்கும் படம் அமர காவியம். புதிய இயக்குநர் ஜீவா சங்கரின் இந்த படம் அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்ததா?

பார்த்துப் பார்த்து அலுத்துப்போன விடலைப் பருவத்துக் காதல்தான் கதையின் கரு. ஜீவாவும் கார்த்திகாவும் (மியா ஜார்ஜ்) ஒரே பள்ளியில் படிக்கிறார்கள். ஜீவாவின் நண்பன் கார்த்திகாவைக் காதலிக்கிறார். நண்பனின் காதலுக்குத் தூது போகிறான் ஜீவா. அங்கு அவனுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. “நான் உன்னைக் காதலிக்கிறேன்” என்று ஜீவாவைப் பார்த்துச் சொல்கிறார் கார்த்திகா. நண்பனை ஏமாற்றலாமா என்னும் குழப்பம் இருந்தாலும் கார்த்திகாவின் காதலை ஏற்கிறார் ஜீவா.

காதல் பறவைகளின் பயணத்தில் ஏற்படும் திடீர் திருப்பத்தால் காதலர்கள் பிரிக்கப்படுகிறார்கள். கட்டுப்பாட்டை மீறித் திமிறும் காதலால் விஷயம் மேலும் சிக்கலாகி இரு குடும்பங்களுக்கு இடையே பிரச்சினையில் போய் முடி கிறது. ஜீவாவின் அதீதமான போக்கி னால் ஏற்படும் விபரீதங்கள் அவனைக் காவல் நிலையத்துக்கும் மனநல ஆலோ சகரிடமும் கொண்டுசெல்கின்றன. கார்த்திகாவின் குடும்பம் ஜீவாவுக்குத் தெரியாமல் ஊரைவிட்டுப் போகிறது. ஜீவா தன் காதலியை விடாமல் துரத்துகிறான். அதனால் ஏற்படும் விளைவுகள்தான் மீதிக் கதை.

படத்தின் கடைசியில் வரும் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்துக்காக இரண்டரை மணி நேரம் படத்தை இழுத்திருக்கிறார் இயக்குநர். விடலைப் பருவத்துக் காதலை இவ்வளவு வலிந்து சொல்லியிருக்கத் தேவையில்லை. படத்தில் காதலர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் எல்லாம் செயற்கையான இடைச்செருகல்களாகவே உள்ளன.

நாயகியின் அப்பா நாயகனை அடிக்கிறார். அதற்காக அவரது வீட்டுக்கு நாயகன் தீ வைக்கிறான். நெருப்பு பற்றியெரியும்போது அதே வீட்டின் இன்னொரு அறையில் நாயகனும் நாயகியும் உருகி மருகுகிறார்கள். இப்படிப் பல காட்சிகள் நம்பகத்தன்மை பற்றிய கவலையே இல்லாமல் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஜீவா உத்தரவாதம் கேட்கும்போது அதைக் கொடுப்பதில் கார்த்திகாவுக்கு என்ன பிரச்சினை என்று சரியாகச் சொல்லப்படவில்லை.

கிளைமாக்ஸ் காட்சி நிஜ சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது. நிஜமாக நடந்ததா, இல்லையா என்பது படத்துக்கு முக்கியம் இல்லை. படத்தில் அது வலுவாகவும் நம்பகத்தன்மையுடனும் சித்தரிக்கப்பட்டிருக்கிறதா என்பதுதான் முக்கியம். அந்த அடிப்படையில் கிளைமாக்ஸ் பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது.

மெதுவாக நகரும் படங்கள் கவித்துவமாகவோ, ஆழமான தன்மை கொண்டதாகவோ இருந்தால் பாராட்டலாம். அமர காவியம் கவித்துவமும் இல்லாமல் விறுவிறுப்பும் இல்லாமல் இருக்கிறது.

கதை 1988-89களில் நடப்பதுபோல் காட்டப்படுகிறது. ஆனால், 25 ஆண்டுகளுக்கு முந்தைய ரசனை, மேக்கப், உடைகள் ஆகியவற்றைக் காணமுடியவில்லை.

சத்யா நன்கு நடித்திருக்கிறார். மிகத் தீவிரமாக ஒன்றை விரும்பும் ஒருவன் என்னென்ன செய்வானோ, அதையெல்லாம் செய்யும் பாத்திரத்தை நம்பகத்தன்மையோடு சித்தரிக்கிறார். எப்போதும் ஒரே விதமான இறுக்கத்துடன் முகத்தைக் காட்டுவதை தவிர்த்திருக்கலாம்.

மியா அழகாக இருப்பதோடு நன்றாக நடிக்கவும் செய்கிறார். இப்போது வழக்கொழிந்துவரும் மூக்குத்தி எவ்வளவு அழகு என்பதை மூக்குத்தி அணிந்த அவர் முகம் உணர்த்துகிறது.

மைனா, கும்கி போன்ற காதல் படங்களில் அழுத்தமான பாத்திரங்களில் நடித்த தம்பி ராமய்யாவை உப்பு இல்லாத ஊறுகாய்போல பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

ஜிப்ரானின் பின்னணி இசை படத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறது. ஓரிரு பாடல்கள் வசீகரிக்கின்றன. ‘ஏதேதோ எண்ணம் வந்து’ பாடல் மனதில் நிற்கிறது.

முதல் காட்சியில் வெண்மேகங்களின் பின்னணியில் வெள்ளை உடை அணிந்த பெண் கருங்கூந்தல் அலைபுரள மிதந்து செல்லும் காட்சி தரும் அழகியல் எதிர்பார்ப்பை ஒளிப்பதிவாளர் படம் முழுவதிலும் பூர்த்திசெய்கிறார். இதே காட்சி தரும் எதிர்பார்ப்பை கதை விஷயத்தில் பூர்த்திசெய்ய இயக்குநர் தவறுகிறார். இருவரும் ஒருவரே என்பதுதான் நகைமுரண்.

‘காவியம்’ என்ற பெயரைத் தாங்கி வந்திருப்பதாலோ என்னவோ.. நாயகனும், நாயகியும் துன்பியல் முடிவைத் தேடிக்கொள்வதை மட்டும் ஏமாற்றாமல் தந்திருக்கிறது ‘அமர காவியம்’.

Saturday, August 30, 2014

மேகா (2014) - திரைவிமர்சனம்

நாயகன் அஸ்வின் படித்து முடித்துவிட்டு படிப்புக்கேற்ற வேலை கிடைக்காமல் போட்டோ கிராபராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய தந்தை போலீஸ் அதிகாரியான விஜயகுமாரிடம் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

ஒருநாள் அஸ்வின் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருக்கும்போது எதேச்சையாக நாயகி சிருஷ்டியை பார்க்கிறான். அவளைப் பார்த்தவுடனேயே அவள் மீது காதலும் கொள்கிறான். அப்போது பெய்யும் மழையில் இருவரும் நெருக்கமாக நின்று ஒருவரையொருவர் அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர்.

இந்நிலையில், சிருஷ்டியின் அண்ணன் திருமணத்துக்கு அஸ்வின் போட்டோ எடுக்க போகிறார். சிருஷ்டிக்கு 2 அண்ணன்கள். 2-வது அண்ணனுக்கு நடக்கும் கல்யாணத்திற்கு வந்திருக்கும் மூத்த அண்ணன், குடும்பத்தின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டதால் அந்த குடும்பமே அவரை வெறுத்து ஒதுக்குகிறது.

இதுதெரியாத அஸ்வின், அவர்கள் எல்லோரையும் ஒன்றாக நிற்க வைத்து போட்டோ எடுக்கிறார். இதனால், சிருஷ்டியின் குடும்பத்திற்கு மூத்த அண்ணன் மீதிருந்த கோபம் சற்று தணிகிறது. இதற்கு காரணமாக இருந்த அஸ்வின் மீதும் தனிஈர்ப்பு உருவாகிறது.

இதை தனக்கு சாதகமாக வைத்துக்கொண்டு சிருஷ்டியிடம் சென்று காதலை சொல்கிறார் அஸ்வின். அவளும் அஸ்வினின் உண்மையான காதலை புரிந்துகொண்டு ஒத்துக்கொள்கிறார். இருவரும் காதல் ஜோடிகளாக உலா வருகின்றனர்.

ஒருநாள் இவர்களை சிருஷ்டியின் மூத்த அண்ணன் நேரில் பார்த்துவிடுகிறார். அப்போது, இவர்களை கண்டித்து செல்கிறார். இருந்தாலும், இருவரும் யாருக்கும் தெரியாமல் காதல் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், விஜயகுமார் மூலமாக போலீசில் தடவியல் நிபுணர் பணி அஸ்வினுக்கு கிடைக்கிறது. வேலை கிடைத்த மாத்திரத்தில் விஜயகுமாருக்கு கமிஷனராகும் அறிவிப்பு வருகிறது. மறுநாள் விஜயகுமார் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வருகிறது.

ஊடகங்கள் தற்கொலை என்று சொல்லி வரும்வேளையில், தடவியல் நிபுணரான அஸ்வின் அது தற்கொலை இல்லை கொலைதான் என்று கண்டுபிடிக்கிறார். அதை நிரூபிப்பதற்காக அவரை கொலை செய்யப்பட்டதற்கான காரணங்களை கண்டுபிடிக்கிறார் அஸ்வின்.

இந்த தகவல்களையெல்லாம் திரட்டி உயரதிகாரியிடம் சமர்பிக்க ரெடியாக இருக்கும்போது சிருஷ்டியை மர்ம கும்பல் ஒன்று கடத்துகிறது. அஸ்வின் திரட்டி தகவல்களை எங்களிடம் ஒப்படைத்தால்தான் சிருஷ்டியை விடுவிப்போம் என்று மிரட்டல் விடுக்கின்றனர்.

இறுதியில் அஸ்வின் தான் திரட்டிய தகவல்களை அந்த கும்பலிடம் ஒப்படைத்து சிருஷ்டியை மீட்டாரா? அந்த மர்ம கும்பலுக்கும் அஸ்வின் திரட்டிய தகவல்களுக்கும் என்ன சம்பந்தம்? என்பதை விளக்கி கூறியிருக்கிறார்கள்.

நாயகன் அஸ்வினுக்கு இந்த படத்தில் முழுநீள கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார். காதல் காட்சிகளாகட்டும், ஆக்ஷன் காட்சிகளாகட்டும் நடிப்பில் மிளிர்கிறார்.

நாயகி சிருஷ்டி திரையில் பார்க்க அழகாக இருக்கிறார். இவர் கன்னத்தில் விழும் குழியில் இளைஞர்கள் தடுக்கி விழுவது நிச்சயம். மேலும், போலீஸ் அதிகாரியாக வரும் விஜயகுமார், அஸ்வினுக்கு உயரதிகாரியாக வரும் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

படத்தின் திருப்புமுனையாக வரும் ‘ஆடுகளம்’ நரேனுக்கு இப்படத்தில் சிறப்பான கதாபாத்திரம். அதை திறம்பட செய்திருக்கிறார்.

இயக்குனர் கார்த்திக் ரிஷி படத்தில் ரசிக்கும்படியாக காட்சிகளை வைக்காதது படத்திற்கும் பெரும் பின்னடைவை கொடுத்திருக்கிறது. கதையை வேகமாக நகர்த்தக்கூடிய அளவுக்கு காட்சிகள் இல்லாதது மிகவும் போரடித்திருக்கிறது.

இசைஞானி இளையராஜா இசைதான் படத்திற்கு மிகப்பெரிய பலமே. இவருடைய இசையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு படமாக்கப்பட்டிருக்கும் ‘புத்தம் புது காலை’ பாடல் கேட்கவும், பார்க்கவும் குளுமை.

மொத்தத்தில் ‘மேகா’ மயக்கம்.

காதல் 2014 (2014) - திரைவிமர்சனம்

நாயகன் பாஸ்கரின் (ஹரிஷ்) அப்பாவும், நாயகி ரஞ்சனியின் (நேகா) அப்பாவும் நெருங்கிய நண்பர்கள். அந்த உரிமையில் பாஸ்கர், ரஞ்சனியை தினமும் காலேஜூக்கு அழைத்துச் சென்று விடுவது, வருவதுமாக இருக்கிறார்.

பாஸ்கருக்கு வேலை வெட்டி எதுவுமில்லை. படித்துவிட்டு வேலைகிடைக்காமல் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவது, பொழுதுபோக்குவதுமாக இருக்கிறார். ஆனால், ரஞ்சனியோ ஓட்டப்போட்டியில் மாநில அளவில் இடம்பிடித்து பெரிய ஓட்டப்பந்தய வீராங்கனையாக ஆகவேண்டும் என்ற லட்சியம் இருக்கிறது. இதற்கு அவரது பெற்றோரும் உறுதுணையாக இருக்கின்றனர்.

தினமும் ரஞ்சனியை காலேஜூக்கு அழைத்துச் செல்லும் பாஸ்கர், ஒருகட்டத்தில் அவள்மீது காதல் கொள்கிறான். அந்த காதலை அவளிடம் சொல்லவும் செய்கிறான். அவளும் அதை ஏற்றுக்கொண்டு இருவரும் காதல் செய்ய ஆரம்பிக்கிறார்கள்.

மறுமுனையில், ரஞ்சனியின் தாய்மாமனான ராசுக்குட்டி (அப்புக்குட்டி) ஒருதலையாக ரஞ்சனியை காதலித்து வருகிறார். கட்டினால் அவளைத்தான் கட்டிக்கொள்வேன் என பிடிவாதமாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், பாஸ்கர்-ரஞ்சனியின் காதல் இருவருடைய பெற்றோருக்கும் தெரியவருகிறது. இரண்டு பேர் வீட்டிலும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதனால் காதல் ஜோடி தற்கொலை செய்துகொள்ள மலை உச்சிக்கு செல்கிறார்கள்.

அங்கு சென்றதும் பாஸ்கர், ரஞ்சனியிடம் ஒரு முத்தம் கேட்கிறார். முத்தத்திற்கு அவளும் ஒத்துக்கொள்கிறாள். அந்த ஒரு முத்தத்தால் அவளுடன் நீண்டநாள் வாழவேண்டும் என்ற ஆசை நாயகனுக்கு வந்துவிடுகிறது. எனவே தற்கொலை முடிவை ஒதுக்கி வைத்துவிட்டு வீடு திரும்புகிறார்கள்.

ஒருவரையொருவர் மறந்துவிட்டதாக அவர்கள் பெற்றோர்களிடம் பொய் கூறிவிட்டு, தனிமையில் சந்தித்து வருகிறார்கள். இதை நோட்டமிடும் ராசுக்குட்டி அவர்களது காதலை பிரிக்க நினைக்கிறார்.

இந்நிலையில், தனிமையில் நெருக்கமாக இருக்க நினைக்கும் பாஸ்கரின் விருப்பத்துக்கு சம்மதம் தெரிவித்து, ரஞ்சனியும்-பாஸ்கரும் ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு நாவல்பழ காட்டுக்குள் செல்கிறார்கள். அங்கு எந்நேரமும் குடித்துக் கொண்டிருக்கும் குமார் (மணிகண்டன்) மற்றும் அவரது நண்பர்களின் கண்களில் இந்த காதல் ஜோடி சிக்குகிறது.

அவர்கள் பாஸ்கரை அடித்துப் போட்டுவிட்டு அவன் கண்முன்னாலேயே குமார் மற்றும் அவரது நான்கு நண்பர்களும் ரஞ்சனியை பலாத்காரம் செய்துவிட்டு சென்றுவிடுகின்றனர். பின்னர் இருவரும் வீடு திரும்புகின்றனர். தோட்டத்தில் நடந்தது எதையுமே வீட்டுக்கு தெரியாமல் மறைக்கின்றனர்.

தன் கண் முன்னாலேயே தன்னுடைய காதலி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டும் ஒரு ஆண் மகனாக தன்னால் எதுவுமே செய்யமுடியவில்லை என மிகுந்த வேதனை கொள்கிறான் பாஸ்கர். ரஞ்சனியை பார்க்கவோ, அவளுடன் பேசவோ கூச்சப்படுகிறான். மறுபக்கம் தனது காதலியை கெடுத்தவர்களை பழிவாங்கவும் துடிக்கிறான்.

மறுமுனையில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது ரஞ்சனிக்கு அடிக்கடி நினைவில் வருவதால் ஓட்டப்பந்தயத்தில் சரிவர கவனம் செலுத்தமுடியாமல் போய்விடுகிறது.

இறுதியில் ரஞ்சனி இதையெல்லாம் மீறி தனது லட்சியத்தில் வெற்றிபெற்றாரா? தனது காதலியை கெடுத்தவர்களை பாஸ்கர் பழிவாங்கினானா? என்பதே மீதிக்கதை.

பாஸ்கராக வரும் நாயகன் ஹரிஷுக்கு அழுத்தமான கதாபாத்திரம். காதல் காட்சிகளில் அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆக்ஷன் ஹீரோவுக்குண்டான தோற்றம் இருந்தாலும், இவருக்கென்று படத்தில் சண்டைக்காட்சிகள் வைக்காதது குறையே.

ரஞ்சனியாக வரும் நேகா, தோற்றத்தில் அச்சு, அசல் சினேகாவை நினைவுபடுத்துகிறார். சினேகாவை அடிக்கடி திரையில் பார்க்கமுடியவில்லையே என வருத்தப்படுகிறவர்கள் இவரை பார்த்து சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம். ஓட்டப்பந்தய வீராங்கனையாக வரும் இவருடைய நடிப்பு அபாரம். காதல் காட்சிகளிலும் உருக்கமான நடிப்பை கொடுத்திருக்கிறார். பழிவாங்கும் வீரப்பெண்மணியாக உருவெடுக்கையில் கைதட்டல் பெறுகிறார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தில் தலைகாட்டியிருக்கும் பாய்ஸ் மணிகண்டன் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். நாயகியின் தாய்மாமனாக வரும் அப்புக்குட்டி வரும் காட்சிகள் கலகலப்புக்கு பதில் வெறுப்பையே தருகிறது. இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை இன்னும் கொஞ்சம்கூட குறைத்திருக்கலாம்.

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் தன்னம்பிக்கை இருந்தால் தற்கொலை செய்துகொள்ள மாட்டாள். லட்சியத்தில் ஜெயிக்க தனது உயிரைக் கொடுத்தேனும் போராடுவாள் என்ற மையக்கருத்தை வலியுறுத்தி எடுத்திருக்கும் இயக்குனர் சுகந்தனுக்கு பாராட்டுக்கள்.

ஆனால், படத்தில் ஆரம்ப காட்சிகளை நகர்த்த ரொம்பவும் சிரமப்பட்டிருக்கிறார். தேவையில்லாத காட்சிகளை புகுத்தி கொஞ்சம் போரடித்திருக்கிறார். ஆனால், இரண்டாம் பாதியை கொஞ்சம் விறுவிறுப்பு கூட்டி கொண்டு சென்றிருக்கிறார். முடிவு எதிர்பார்த்ததுதான் என்றாலும் அருமை.

பைசல் இசையில் கானா பாலா பாடிய ‘ஓ ஜங்கிலி’, ‘மானப்போல ஓடுறவ’ ஆகிய பாடல்கள் ஆட்டம் போட வைக்கின்றன. ‘பத்திக்கிச்சே’ பாடல் நமக்குள்ளும் காதல் தீயை பற்றவைக்கிறது. பின்னணி இசை பரவாயில்லை. ரித்திஷ் கண்ணாவின் ஒளிப்பதிவு கண்களுக்கு குளுமையாக இருக்கிறது.

மொத்தத்தில் ‘காதல் 2014’ புதுமை.

புதியதோர் உலகம் செய்வோம் (2014) - திரைவிமர்சனம்

‘லஞ்சத்தை முதலில் வீட்டிலிருந்து ஒழி. நாடு தானாக திருந்திவிடும்’ என்ற அப்துல்கலாமின் பேச்சிலிருந்து ஒரு வரியை மட்டும் எடுத்து முழு திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள்.

ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில் படிக்கும் நான்கு நண்பர்களாக ஆஜித், அனு, யாழினி, சூர்யேஸ்வர். இவர்கள் நால்வரில் அனு, யாழினி இருவரும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஆஜித், சூர்யேஸ்வர் இருவரும் பெரிய பணக்காரர்கள். இருந்தும் நால்வரும் நண்பர்களாக பழகி வருகின்றனர்.

நான்கு பேரில் யாழியின் அம்மாவுக்கு திடீரென உடம்பு சரியில்லாமல் போகிறது. அவரது சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தை வீடு கட்டும் இன்ஜினியரான ஆஜித்தின் அப்பாவிற்கு லஞ்சமாக கொடுக்கிறார் யாழினியின் அப்பா. இதனால் யாழினியின் அம்மாவுக்கு சிகிச்சை அளிக்கமுடியவில்லை.

அந்த லஞ்சத்தை வாங்கியது தனது அப்பாதான் என்று தெரிந்ததும், ஆஜீத் அந்த பணத்தை எடுத்துவந்து யாழினியிடம் கொடுத்து விடுகிறார். இதேபோல் போலீசாக இருக்கும் சூர்யேஸ்வரின் அப்பாவும் லஞ்சம் வாங்கி திளைக்கிறார்.

தனது அப்பாக்கள் லஞ்சம் வாங்குவதை தட்டிக் கேட்க நினைக்கும் இவர்கள், இதை நேரடியாக தங்களுடைய மியூசிக் மாஸ்டரான பிரவீணிடம் சென்று முறையிடுகின்றனர். அவர், லஞ்சம் வாங்கி கொழுத்து போயிருக்கும் பண முதலைகளிடமிருந்து பணத்தை அடித்து இல்லாத ஏழைகளிடம் கொடுக்கும் இமான் அண்ணாச்சியை கைகாட்டுகிறார்.

இமான் அண்ணாச்சியை இவர்கள் சந்தித்து, தங்கள் அப்பாக்கள் லஞ்சம் வாங்காமல் தடுத்து நிறுத்தினார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

படத்தில் சின்னத்திரையில் பாடகர்களாக வலம்வந்த ஆஜித், அனு, யாழினி, பிரவீன், அல்கேட்ஸ் அழகேசன் உள்ளிட்ட பலர் நடிகர்களாக உருமாறியிருக்கிறார்கள். அனைவரும், ஓரளவுக்கு நடித்திருத்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.

நம் நாட்டின் முதுகெலும்பை உடைத்துக் கொண்டிருப்பதே லஞ்சம் தான். குழந்தையை கொஞ்சும் அப்பாக்களைவிட லஞ்சத்துக்காக கெஞ்சுபவர்கள்தான் அதிகம். அந்த லஞ்சத்தை ஒழிக்க வேண்டுமானால்   இப்படியொரு படம் மாதத்திற்கு ஒன்று ரிலீஸ் ஆகவேண்டும். அப்போதுதான் லஞ்சம் வாங்கும் பெற்றோர்களை வீட்டிலிருக்கும் குழந்தைகள் தட்டிக் கேட்பார்கள். இதை எடுத்துச் சொன்ன இயக்குனர் நித்தியானந்தனுக்கு பாராட்டுக்கள்.

பண முதலைகளிடமிருந்து பணத்தை அடித்து ஏழைகளிடம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் வரும் இமான் அண்ணாச்சி, சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் செய்யும் சேட்டைகளை ரசிக்க முடியவில்லை. படத்தின் இசையமைப்பாளரான பிரவீண் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். படத்தில் இவருக்கு காதலியும் இருக்கிறார். இவர் காதலிக்கும் காட்சிகளில் வரும் பிண்ணனி இசை அருமை. பாடல்களும் அலுப்பு தட்டவில்லை.

மொத்தத்தில் ‘புதியதோர் உலகம் செய்வோம்’ பாடம்

இரும்பு குதிரை (2014) - திரைவிமர்சனம்

அதர்வா படித்து முடித்துவிட்டு பீட்சா கடையில் டெலிவரி பாயாக வேலை பார்த்து வருகிறார். இவர் பைக் ஓட்டுவதென்றால் ரூல்ஸை கடைப்பிடிக்கிற கேரக்டர். ஒருநாள் பஸ்ஸில் போகும்போது பிரியா ஆனந்தை பார்க்கிறார். பார்த்தவுடனயே அவள் அழகில் மயங்கிவிடுகிறார்.

மறுநாளும் பஸ்ஸில் போகும்போது பிரியா ஆனந்தை பார்க்கிறார். அப்பொழுது பிரியா ஆனந்த் நேரடியாக இவரிடம் வந்து, அவரை காதலிப்பதாக கூறிவிட்டு சென்றுவிடுகிறார். அதைக்கேட்டதும் அதர்வா அதிர்ச்சியில் உறைந்து போகிறார். மறுபக்கம் சந்தோஷமும் அடைகிறார்.

ஒருநாள் பிரியா ஆனந்தின் வீட்டுக்கே பீட்சா டெலிவரி பண்ணப்போகும் அதர்வாவிடம், பிரியா ஆனந்த் தான் அன்று பஸ்ஸில் தனது பிரெண்டோட பாய் பிரெண்டை கலாய்ப்பதற்கு பதில், தவறுதலாக உன்னிடம் கூறிவிட்டேன் என்று சொல்கிறாள். இதனால் சோகத்துடன் திரும்பும் அதர்வா, அவளுடைய போன் நம்பரை கண்டுபிடித்து அவளுடன் பேசத்துடிக்கிறார்.

ஒருகட்டத்தில் பிரியா ஆனந்தின் போன் நம்பரை கண்டுபிடித்து அவளிடம் பேச ஆரம்பிக்கிறார் அதர்வா. அவளும் அதர்வாவுடன் பேசத்தொடங்குகிறாள். இருவரும் நட்பாக பழகிக்கொண்டிருக்கும்போது அதர்வா மனதுக்குள் மட்டும் காதல் துளிர்விடுகிறது.

பிரியா ஆனந்த்துக்கு பைக் என்றால் கொள்ளை பிரியம். ஒரு பைக்கின் சத்தத்தை வைத்தே அது எந்த பைக் என்று கண்டுபிடிக்கக்கூடிய ஆற்றல் படைத்தவள். அவள் நமக்கென்று ஒரு பைக் இருந்தால் எப்படி இருக்கும் என்று அதர்வாவிடம் தனது ஆசையை கூறுகிறாள். பிரியா ஆனந்திற்கு விருப்பமான பைக்கை வாங்க முடிவெடுத்து ஒரு ஷோரூமுக்கு செல்கிறார்கள்.

அங்கு சில பைக்குகளை பார்த்து திருப்தியடையாத பிரியா ஆனந்த், குடோனுக்குள் வைக்கப்பட்டிருக்கும் ரேஸ் பைக்கான டிகார்டி பைக்கை வாங்கவேண்டும் என்று அதர்வாவிடம் கூறுகிறாள். அதர்வாவோ அந்த பைக் வேண்டாம் என்று கூறுகிறார். ஆனால், பிடிவாதமாக பிரியா ஆனந்த் அந்த பைக்தான் வாங்கவேண்டும் என்று கூறிவிட்டு சென்றுவிடுகிறார்.

வேறு வழியின்றி அதர்வாவும் அந்த பைக்கை வாங்கிக்கொண்டு பிரியா ஆனந்தை சந்திக்கிறார். அதனால் சந்தோஷமடையும் பிரியா ஆனந்த், அதர்வாவை கூட்டிக்கொண்டு தான் படித்த கல்லூரிக்கு சென்று சுற்றி காட்டுகிறாள். அப்போது அவள்மீதுள்ள காதலை சொல்லும் அதர்வாவிடம், நட்பாகத்தான் பழகுகிறேன் என்று சொல்லி அவன்மீது கோபப்படுகிறாள்.

இருவரும் அங்கிருந்து கோபத்துடனேயே திரும்பி வரும்வேளையில் இவர்களை ஜானி மற்றும் அவருடைய ஆட்கள் ரேஸ் பைக்கில் வந்து அவர்களை சுற்றி வளைத்து ஒரு குடோனுக்குள் அழைத்துச் செல்கின்றனர். அங்கு அதர்வாவை அடித்துப் போட்டுவிட்டு, பிரியா ஆனந்தை கடத்தி சென்றுவிடுகின்றனர்.

ஜானி, பிரியா ஆனந்தை கடத்திச் செல்ல காரணம் என்ன? பிரியா ஆனந்தை ஜானியிடம் இருந்து அதர்வா மீட்டாரா? என்பதை சுவாரஸ்யத்துடன் பிற்பாதியில் சொல்லியிருக்கிறார்கள்.

‘பரதேசி’ படத்திற்கு பிறகு அதர்வாவுக்கு இப்படத்தில் நடிக்க நல்ல வாய்ப்பு. அதை சரியாகவும், செம்மையாகவும் செய்திருக்கிறார். பைக் ஓட்டுவதில் ரூல்ஸ் ராமானுஜராக வரும் அதர்வா, பிற்பாதியில் எடுக்கும் விஸ்வரூபம் அனைவரையும் ஆச்சர்யப்பட வைக்கிறது. இந்த படத்தில் எதற்காக சிக்ஸ் பேக் வைத்தார் என்பதுதான் தெரியவில்லை.

பிரியா ஆனந்த்-அதர்வாவுடன் இணைந்து வரும் காட்சிகளில் அழகாக நடித்திருக்கிறார். அதர்வாவின் நண்பியாக வரும் லட்சுமிராய் நடிப்பிலும், கவர்ச்சியிலும் சமமாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். வில்லனாக வரும் ஏழாம் அறிவு ஜானி, அதர்வாவுடன் சண்டை போடும் காட்சியில் ஆக்ரோஷம் காட்டுகிறார்.

படத்தின் கதை ஓ.கேதான் என்றாலும் அதை திரைக்கதையாக்குவதில்தான் இயக்குனர் யுவராஜ் போஸ் கொஞ்சம் தடுமாறியிருக்கிறார். படத்தின் முன்பாதியை நகர்த்துவதற்கு ரொம்பவும் சிரமப்பட்டிருக்கிறார். பிற்பாதியில், கொஞ்சம் விறுவிறுப்பு காட்டியிருக்கிறார். இருந்தாலும் ஒருசில காட்சிகளை நீளமாக வைத்திருப்பதால் கொஞ்சம் போரடிக்க வைத்திருக்கிறது.

படத்தில் பாராட்டப்பட வேண்டியது கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவுதான். இறுதிக்காட்சியையும், படத்தின் பாடல்களையும் படமாக்கியது அருமை. ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசை பரவாயில்லை.

மொத்தத்தில் ‘இரும்பு குதிரை’ முரட்டுத்தனம்

Friday, August 15, 2014

கதை திரைக்கதை வசனம் இயக்கம் - திரைவிமர்சனம்

நாயகன் சந்தோஷ் இயக்குனராக வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். இவருடன் கதை விவாததத்திற்கு உதவியாக விஜய் ராம், தினேஷ், லல்லு மற்றும் தம்பி ராமையா இருக்கிறார்கள். நாயகன் சந்தோஷ் நாயகி அகிலா கிஷோரை காதலித்து வருகிறார்.

இவர்கள் காதலிக்கும்போது சந்தோஷ் இயக்குனர் ஆன பிறகுதான் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்கிறார். ஆனால் அகிலா கட்டாயத்தின் பெயரில் அகிலாவின் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துக் கொள்கிறார்கள்.

அகிலா தனியார் கம்பெனியில் வேலை செய்வதால் சந்தோஷை வீட்டிலேயே இருந்துக்கொண்டே இயக்குனர் ஆவதற்கு முயற்சி செய் என்று கூறுகிறார். சந்தோஷும் தன் நண்பர்களுடன் வீட்டில் கதை விவாதத்தில் ஈடுபடுகிறார். இது அகிலாவிற்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதனால் இவர்களுக்குள் சண்டை ஏற்படுகிறது.


சந்தோஷ் ஒரு கதையை தயார் செய்து தயாரிப்பாளரின் சம்மதத்திற்குகாக காத்துக்கொண்டிருக்கும் வேலையில், சந்தோஷ் அகிலா இருவரின் சண்டை மேலும் வலுவடைந்து சினிமா உலகில் இயக்குனராவது கடினம் என்பதை அறிந்து அகிலா, சந்தோஷிடம் நீங்கள் இயக்குனர் ஆகும் வரை நாம் பிரிந்து வாழலாம் என்று கூறிவிட்டு பிரிந்து செல்கிறார்.

பிறகு சந்தோஷ் தயாரிப்பாளரிடம் சென்று கதையை கூறி இயக்குனரானாரா? அகிலாவுடன் சேர்ந்தாரா? என்பதே மீதிக்கதை.

இயக்குனர் பார்த்திபன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நிதானாமாக யோசித்து ஒரு கதையை உருவாக்க முயற்சி செய்து, அதில் கதையே இருக்கக் கூடாது என்று முடிவு செய்து படமாக்கியிருக்கிறார். குறிப்பாக இடைவேளை முடியும்போது இப்படத்தை பற்றி திரையரங்குகளில் படம் பார்த்த ரசிகர்கள் என்ன பேசிக் கொள்வார்கள், சமூக வளைய தளங்களில் கொடுக்கும் கமண்டுகளை மிக சாதுர்யமாக குழப்பி கமண்டு கொடுக்க முடியாதளவிற்கு தடுத்திருக்கிறார். இறுதிவரை இப்படத்தைப் பார்த்தப் பிறகுதான் கருத்தை சொல்ல முடியும் என்ற அளவிற்கு படத்தை இயக்கியிருக்கிறார்.

இன்றைய சினிமாவுலகில் ரசிகர்கள் எப்படி படம் பார்க்கிறார்கள் என்பதை மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார். கதையே இல்லாத ஒரு திரைப்படம் என்று சொல்லி தனக்கே உள்ள வித்தியாசமான பாணியில் ரசிகர்கள் பார்க்கும்படி செய்திருப்பது இவருக்கே உரிய சிறப்பு.

தம்பிராமையா மட்டுமே பழகிய முகமாக வைத்து மற்ற அனைவரையும் புது முகங்களாக வைத்து அவர்களை பழகிய முகமாக தெரியும்படி செய்திருப்பது பார்த்திபனின் மேலும் ஒரு சிறப்பு.

நாயகன் சந்தோஷ், நாயகி அகிலா கிஷோர் ஆகியோர் கதாப்பாத்திரத்தை உணர்ந்து புதுப்படம் என்று சொல்லமுடியாதளவிற்கு சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மேலும் விஜய் ராம், தினேஷ், லல்லு ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். தம்பிராமையா ரசிகர்களுக்கு சோர்வடையவிடாமல் ஆங்காங்கே சிரிக்க வைத்திருக்கிறார். இளைஞர்களுடன் சேர்ந்துக் கொண்டு படம் முழுக்க இளைஞராகவே வலம் வருகிறார்.

இசையமைப்பாளர்கள் ஷரத், விஜய் ஆண்டனி, தமன், அல்ஃபோன்ஸ் ஜோசப் ஆகியோர் சிறப்பாக இசையமைத்திருக்கிறார்கள். ராஜ ரத்னம் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.

மனித இனம் அழியப் போவது பூமியில் அல்ல..!: இப்படியும் ஒரு சினிமா..!

நவம்பர் மாதத்தில் வெளியாகப் போகும் ஒரு படத்துக்கு இப்போதே உலகெங்கும் பெரும் எதிர்பார்ப்பு துவங்கிவிட்டது. 'அந்த' ஸ்டார் படமா?, அதுல அவ்வளவு நல்ல பாட்டு இருக்கா..?.. 2 'கீரோயினியா' (ஹீரோயின்), பரோட்டா சூரி இருக்காரா? என்று கேட்காதீர்கள்.

அழிந்து கொண்டிருக்கும் பூமியிலிருந்து கிளம்பி அண்ட சராசரங்களை எல்லாம் கடந்து, அழுக்கில்லாத, ஒரு அழகிய பூமியைத் தேடும் படம் இது. படத்தின் பெயர் "இன்டர்ஸ்டெல்லார்".

"Mankind was born on Earth. It was never meant to die here''

இது தான் "இன்டர்ஸ்டெல்லார்" படத்தின் பஞ்ச் லைன்..!

கிறிஸ்டோபர் நோலன். பேட்மேனை மையமாக வைத்து டார்க் நைட் வரிசையில் 3 படங்களை இயக்கிய மெகா டைரக்டர். இவரது படங்களில் பேட்மேன் தான் ஹீரோ என்றாலும் அவர் 100 பேரை அடித்து துவம்சம் எல்லாம் செய்ய மாட்டார். வில்லன் கதாபாத்திரம் தான் பேட்மேனை விட பலம் வாய்ந்ததாக இருக்கும். மிரட்டலான பின்னணிக் காட்சிகள், பயமுறுத்தும் இசையுடன் உளவியல்ரீதியில் நம்மை பல கேள்விகளுக்கு உள்ளாக்கி, அடி மனதில் அச்சத்தை ஊட்டி திரைக் கதையை நகர்த்துவதில் அசகாய சூரர் நோலன்.

கனவுகளுக்குள் ஊடுருவி ஒருவரின் வாழ்க்கையை கடந்த காலத்தை, நிகழ்காலத்தை, எதிர்காலத்தை மாற்றிப் போடும் கதையான இன்ஸப்ஷன் என்ற திரைப்படத்தைப் பார்த்தவர்கள் கிறிஸ்டோபர் நோலனை நன்றாக புரிந்து கொள்ள முடியும். லியானர்டோ டி காப்ரியோ நடித்த இந்தப் படத்தில் 3 அடுக்குகளாய் ஒருவரின் கனவுக்குள் புகுந்து (a dream within a dream within a dream) நிகழ்வுகள் வசப்படுத்தப்படும். இப்படி பிறரால் நுழைய முடியாத, யூகிக்க முடியாத தளத்தில் நின்று மெஸ்ஸி மாதிரி பந்தாடுபவர் தான் கிறிஸ்டோபர் நோலன். இவர் தான் 'இன்டர்ஸ்டெல்லார்' படத்தை இயக்கியுள்ளார்.

மாத்யூ மெக்கொன்னாகி, ஆன்னி ஹேதவே, ஜெஸ்ஸிகா சாஸ்டெய்ன், பில் இர்வின், எல்லன் பர்ஸ்டின், மைக்கேல் கேன் ஆகியோர் நடித்துள்ளனர் இப்படத்தில்.

எதிர்காலம். சுற்றுச்சூழல் நாசமாகி, உலக நாடுகளின் பொருளாதாரங்கள் சீர்குலைந்து, பசியும் பட்டினியுமாக உலகம் அழிந்து கொண்டிருக்கிறது. இதற்கு நாம் வாழும் இந்த 20ம் நூற்றாண்டு மனிதர்கள் தான் மிக முக்கிய காரணம். இந்த அழிந்து போன உலகிலிருந்து தொடங்குகிறது 'இன்டர்ஸ்டெல்லார்' பயணம். Interstellar என்பது 'இரு வேறு நட்சத்திரங்களுக்கு அல்லது உலகங்களுக்கு இடையிலான' என்று பொருள்.

Universe எனப்படும் நமது பேரண்டம் நம்மால் யூகிக்க முடியாத அளவுக்குப் பெரியதாய், விரிந்ததாய், விரிந்து கொண்டே இருப்பதாய் இருக்கிறது. இதில் தான் பல ட்ரில்லியன் நட்சத்திர மண்டலங்களும், சூரிய குடும்பங்களும், கிரகங்களும், தூசு மண்டலமும் பரவிக் கிடக்கின்றன. இதில் wormhole என்று ஒரு கொள்கையை சமீபகாலமாக முன் வைக்கின்றனர் விஞ்ஞானிகள். அதாவது, இதற்கு சரியான அர்த்தத்தை நமது பாஷையில் சொன்னால், 'குறுக்கு சந்து' என்று பொருள் வரும். (துபாய் மெயின் ரோடு, துபாய் குறுக்கு சந்து மாதிரி)

யுனிவர்ஸை ஒரு பேப்பராக நினைத்து விரித்துக் கொள்ளுங்கள். இந்த பேப்பரின் ஒரு முனையில் ஒரு புள்ளியை வையுங்கள். இன்னொரு முனையில் இன்னொரு புள்ளியை வையுங்கள். இந்த தூரத்தை குறித்துக் கொள்ளுங்கள். இப்போது இரு புள்ளிகளும் ஒன்றின் மேல் ஒன்று வருவது போல பேப்பரை அப்படியே மடியுங்கள். இப்போது இரு புள்ளிகளுக்கும் இடையே உள்ள தூரம் பல மடங்கு குறைந்திருக்கும். இது தான் wormhole!. அண்டத்தின் மிகப் பரந்து விரிந்த தூரத்தை wormhole மூலம் துரிதமாய் கடக்கலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

அப்ப யுனிவர்ஸை மடக்க முடியுமா, வார்ம் ஹோல் இருக்கா என்று கேள்விகள் எழும். இவையெல்லாம் நானோ, கிறிஸ்டோபர் நோலனோ சொல்லும் கதை அல்ல. ஜெனரல் ரிலேட்டிவிட்டி தியரியைச் சொன்ன ஐன்ஸ்டீனும் அவருடன் இணைந்து ஹைட்ரஜன் அணு ஆராய்ச்சிகளைச் செய்த நேதன் ரோசனும் சொன்னவை. wormholeக்கு ஐன்ஸ்டீன்- ரோசன் பிரிட்ஜ் என்ற பெயரும் உண்டு. இவை வெறும் கற்பனையான் குறுக்கு சந்துகள் அல்ல, இயற்பியல் விதிகளின்படி இந்த சந்து சாத்தியமே என்கின்றனர் ஐன்ஸ்டீனும் ரோசனும்.

'இன்டர்ஸ்டெல்லார்' சினிமாவைப் பத்தி ஆரம்பித்துவிட்டு பிஸிக்ஸ் பாடம் நடத்துறியே என்று கோபமா?. வரும், தப்பில்லை. ஆனால், நாக்கையும் மூளையையும் 'நாக்குமுக்கா' போட வைக்கும் 'இஞ்சிமரபா' இயற்பியல் விஷயங்களை கொஞ்சம் புரிந்து கொண்டு இந்தப் படத்தைப் பார்த்தால் மேலும் ரசிக்க முடியும் என்பது நிச்சயம். இந்தப் படத்தின் கதை நாயகர்கள் wormhole மூலம் வேறோரு உலகைத் தேடி பயணிப்பதே 'இன்டர்ஸ்டெல்லார்' கதை.

சமீபத்தில் தான் இயக்குனர் அல்போன்ஸோ க்யூரோனின் கிராவிட்டி படம் வெளி வந்து, விண்வெளி வீரர்கள் பூமிக்கு வெளியே அல்லாடுவதை தத்ரூபமாகக் காட்டியிருந்தார். இதுவரை வந்த விண்வெளிப் படங்களிலேயே மிகச் சிறந்த, உண்மையிலேயே விண்வெளி எப்படி இருக்கும் என்பதைக் காட்டியவர் அல்போன்ஸோ க்யூரோன். கிராவிட்டி படத்தைப் பார்த்த உலக மக்களுக்கு அதைவிடச் சிறப்பான காட்சிகளுடன் படம் தந்தால் மட்டுமே கிறிஸ்டோபர் நோலனின் மானம் தப்பும். இது அவருக்குத் தெரியாதா.. இதனால் விண்வெளிக் காட்சிகளில் பின்னி எடுத்திருக்கிறார் என்கிறார்கள்.

'இன்டர்ஸ்டெல்லார்' படத்தில் உலகம் வாழ லாயக்கில்லாத இடமாகிவிட, வேறு ஒரு உலகைத் தேடி கிளம்புகிறது நாஸா விஞ்ஞானிகள் குழு. இது ஏதோ விண்வெளி மையத்துக்கு போவது போல 2 நாள் வேலை அல்ல. நமது சூரிய மண்டலத்தை, புளுட்டோவை எல்லாம் தாண்டிச் செல்ல வேண்டிய பல வருடப் பயணம். வார்ம்ஹோலில் பயணித்து மனிதர்கள் வசிக்கக் கூடிய மாதிரி ஏதாவது கிரகம் இருக்கிறதா என்பதைத் தேடும் முயற்சியில் ஈடுபடுகிறது இந்த விஞ்ஞானிகள் குழு. இதற்காக என்டூரன்ஸ் என்ற விண்கலத்தில் பயணிக்கின்றனர்... இவர்களது முயற்சி வெல்கிறதா... தேடலின் முடிவு என்ன என்பதே படத்தின் கதை.

கனடாவின் பனிப் பிரதேசமான அல்பெர்ட்டா மற்றும், லாஸ் ஏஞ்சலெஸ் ஆகிய இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்தது. தியேட்டர்களில் வரும் நவம்பர் மாதம் இப்படம் திரைக்கு வரவுள்ளது. பெல்ஜியம், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் நவம்பர் 5ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறதாம். நவம்பர் 6ம் தேதி இங்கிலாந்திலும், 7ம் தேதி அமெரிக்காவிலும் படம் திரைக்கு வருகிறது.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. படம் பார்ப்பவர்களை அந்தக் கதையுடனேயே முழு அளவில் கலக்க வைத்து, சம்பவங்களை நாம் நேரில் அனுபவிப்பது மாதிரி உணர வைக்கும் கலையில் கை தேர்ந்தவர் 

‘அஞ்சான்’ - திரைவிமர்சனம்

கன்னியாகுமரியில் இருந்து மும்பை செல்கிறார் கிருஷ்ணா. அங்கு தன் அண்ணனான ராஜூவை தேடி அலைகிறார். அப்போது சந்துரு, ராஜூ இருவரும் தன் அடியாட்களுடன் அந்தேரி இடத்தில் கடத்தல் தொழில் செய்து வந்தாக ராஜூவின் கூட்டாளியான கரீம்பாய் கூறுகிறார். கரீம் பாய் மூலம் மற்ற விவரங்களை கேட்டு அறிகிறார் கிருஷ்ணா.

அப்போது அந்தேரிக்கு புதிய கமிஷனராக வரும் அசோக் குமார், சந்துரு, ராஜூவின் ஆட்களை கைது செய்து விடுகிறார். இதனால் கோபமடையும் ராஜூ கமிஷனரின் மகளான நாயகி ஜீவாவை திருமணத்தின்போது கடத்தி விடுகிறார்.

கமிஷனரிடம் தன் கூட்டாளிகளை விடுவிக்கும்படி பேரம் பேசுகிறார் ராஜூ. அதன்படி கூட்டளிகளை கமிஷ்னர் விடுவிக்க, ராஜூவும் ஜீவாவை விடுவிக்கிறார். இதைத்தொடர்ந்து நடக்கும் சில சந்திப்புகளில் ராஜூ, ஜீவா இருவருக்கும் காதல் ஏற்படுகிறது.

இதற்கிடையில் மும்பையின் மிகப்பெரிய தாதாவான இம்ரான் பாய் சந்துருவையும் ராஜூவையும் விருந்துக்கு அழைக்கிறார். அங்கு இருவரையும் கொன்று விடுவேன் என்று மிரட்டுகிறார் இம்ரான் பாய். இதனால் கோபம் அடையும் சந்துரு புலம்பியபடி இருக்க, ராஜூ இம்ரான் பாயை கடத்தி வந்து நண்பன் சந்துருவிடம் காண்பிக்கிறார். இருவரும் சேர்ந்து இம்ரான் பாயை மிரட்டி அனுப்புகின்றனர். இதனால் சந்தோஷம் அடையும் சந்துரு, ராஜூவுக்கு புதியதாக கார் ஒன்றை வாங்கி கொடுத்து ஜீவாவுடன் ஜாலியாக சுற்றிவிட்டு வர அணுப்புகிறார்.

இருவரும் மும்பையை சுற்றி வரும்போது திடீர் என்று துப்பாக்கி சத்தம் கேட்கிறது. ராஜூவை நோக்கி துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து வருகிறது. அதிலிருந்து ராஜூ தப்பிக்கிறார். அப்போது ராஜூவுக்கு ஒரு இடத்திற்கு வரும்படி போன் வருகிறது. அங்கு சென்று பார்க்கும் போது சந்துரு வெட்டுக் காயங்களுடன் இறந்துகிடக்கிறார். இதைக்கண்டு கொதிக்கும் ராஜூ, இம்ரான்பாய் தான் சந்துருவை கொன்று இருப்பான் என்று கூறிக்கொண்டு இம்ரானை தீர்த்துக்கட்ட கூட்டாளி அமர் உடன் காரில் செல்கிறார்.

கார் பாலத்தில் சென்று கொண்டிருக்கும்போது ராஜூவின் கூட்டாளியான அமர் காரை நிறுத்தி விட்டு, ராஜூவையும் துப்பாக்கியால் சுட்டுவிடுகிறார். குண்டு பாய்ந்த ராஜூ பாலத்தில் இருந்து நீரில் விழுந்து விடுகிறார். இந்தக் கதையை கரீம் பாய் சொல்ல கிருஷ்ணா கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது ராஜூவை சுட்டுக்கொன்ற அமர் தனது கூட்டாளிகளுடன், கரீம் பாயை சந்திக்க வருகிறான்.

அங்கு கிருஷ்ணாவை சந்திக்கிறான். நான்தான் ராஜூவை கொன்றதாக கிருஷ்ணாவிடம் கூறுகிறான். இதைக் கேட்டு கோபமடையும் கிருஷ்ணாவையும் சுட்டுக் கொல்லுமாறு தன் கூட்டாளியிடம் துப்பாக்கியை தருகிறான் அமர். இங்கேதான் படத்தில் திரும்புமுனை ஏற்படுகிறது. மீதிக்கதையை திரையில் காண்க....

படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் கலக்கலாக அமைந்திருக்கிறது. சண்டைக்காட்சிகளில் அதகலபடுத்தியிருக்கிறார். படத்தில் பேசும் பஞ்ச் வசனங்கள் சூர்யாவின் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருக்கிறது. ஜீவாவாக நடித்திருக்கும் சமந்தா சில காட்சிகளே வந்தாலும் நன்றாக நடித்திருக்கிறார், கவர்ச்சியில் தாராளம் காட்டியிருக்கிறார். சந்துருவாக வரும் வித்யூத் ஜாமல் சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக இருவரையும் சுற்றுலா அனுப்பும் காட்சிகளில் தன்னுடைய நடிப்பு திறனை காட்டியிருக்கிறார்.

யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் விதமாக உள்ளது. யுவன் பாடிய  ‘காதல் ஆசை...’ பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் வகையில் உள்ளது. சூர்யா பாடிய  ‘ஏக் தோ தீன் சார்...’ பாடல் சூர்யா ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. பாடல்களில் வரும் நடனக் காட்சிகள் நடன இயக்குனர் ராஜூ சுந்தரத்தின் தனித்துவம் தெரிகிறது.

மும்பை நகரத்தின் இரவு காட்சியை சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு மிக அழகாக காட்டியிருக்கிறது. சண்டைக்காட்சிகளையே மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் சூர்யா ரசிகர்களுக்கு குறை ஏதும் வைக்கவில்லை இயக்குனர் லிங்குசாமி. சூர்யாவை மையமாக வைத்து லிங்குசாமி கதையில் வைத்திருக்கும் திருப்புமுனை இயக்குனரின் சாமார்த்தியத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. நாயகியின் பெயரில் கூட திருப்புமுனை வைத்திருக்கிறார்.

மொத்தத்தில் ‘அஞ்சான்’ சூப்பர்..!

Saturday, March 1, 2014

''தெகிடி'' - திரை விமர்சனம்…!



எம்.ஏ,க்ரிமினாலஜி முடிக்கும் ஹீரோவுக்கு ஒரு டிடெக்டிவ் நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது. சில நபர்களைப் பின் தொடர்ந்து அவர்களைப் பற்றி ரிப்போர்ட் சப்மிட் பண்ணும்படி அசைன்மெண்ட் தரப்படுகிறது. அந்த நபர்களில் ஹீரோயினும் ஒருவர். இவரும் ரிப்போர்ட் தர, அடுத்தடுத்து அந்த நபர்கள் வரிசைப்படி கொல்லப்படுகிறார்கள். ஹீரோ ஹீரோயினை காப்பாற்றினாரா? யார் அவர்களைக் கொல்வது? விசாரிக்கச் சொன்ன க்ளையண்ட் யார்? என ஹீரோ துப்பறிவதே கதை.

ஒரு துப்பறியும் படத்திற்கே உரிய நீட்டான திரைக்கதை. அமைதியாக ஆரம்பித்து, முதல் கொலை விழுந்தது முதல் பரபரப்பாகச் செல்கிறது. அதிக நடிகர் கூட்டம் இல்லாமல், முக்கிய பாத்திரத்தில் ஏழு பேர் மற்றும் துணைப்பாத்திரங்களாக இன்னும் ஏழுபேர் என சுருக்கமாக ஆட்களை நடிக்க வைத்திருப்பதே படத்திற்கு க்ரிப்பைக் கொடுக்கிறது.

ஹீரோ அசோக் செல்வனுக்கு முதல் வேலைக்கான ஆஃபர் வர, சென்னை வருகிறார். அவர் வேலையில் சேரும் டிடெக்டிவ் நிறுவனத்தின் பாலிசிகளில் ஒன்று, ஃபாலோ செய்யப்படும் நபருடன் டைரக்ட் காண்டாக் வைக்கக்கூடாது என்பது. அதன்படியே நடக்கும் ஹீரோ, ஹீரோயின் விஷயத்தில் மட்டும் காதலால் பாலிசியை மீறுகிறார். அதுவரைக்கும் சாதாரணமாகச் செல்லும்படம், அதன்பின் நடக்கும் சம்பவங்களால் சூடு பிடிக்கிறது.

கொஞ்சம் நடிகர்கள் தான் என்பதால் மெயின் வில்லன் இவராகத் தான் இருப்பார் என இரண்டு பேரை கெஸ் பண்ண முடிகிறது. ஆனாலும் படம் முடிகையில் கொடுக்கும் ட்விஸ்ட், அருமை. ஒரு ஹாலிவுட் பட ஸ்டைலில் நகரும் படத்தில் மிஸ் ஆவது, பரபரப்பான ஆக்சன் சீகுவென்ஸ் தான். வெறுமனே புலனாய்வும், தேடுவதும் ஒரு கட்டத்திற்கு மேல் சலிப்பைக் கொடுக்கிறது.

அதனால் தான் முதல்பாதியிலும் இரண்டாம்பாதியிலும் செமயான ஆக்சன் ஃபைட் அல்லது சேஸிங்கை ஹாலிவுட்டில் வைத்துவிடுவார்கள். ஆனால் அது இல்லாததால், ஹீரோ பெரிதாக ஒன்றுமே செய்யவில்லையோ என்று தோன்றிவிடுகிறது. வெறும் மைண்ட் கேம், படிக்க நன்றாக இருக்கலாம், விஷுவலுக்கு அது மட்டும் போதாதே!

இன்னொரு குறை, ஹீரோவையே ஓவர் டேக் பண்ணும் ஜெயப்ரகாஷ் கேரக்டர். பிறகு இயக்குநர் சுதாரித்து தனி ரூட்டில் ஹீரோவை துப்பறிய விட்டாலும் ஜெயப்ரகாஷ்க்கு முன் ஹீரோ பம்மிக்கொண்டு சப்பையாக தோன்றுவது, இத்தகைய த்ரில்லர் படங்களில் இருக்கக்கூடாத ஒரு விஷயம். ஹீரோவை சாமானியனாக காட்டியதைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், படம் விறுவிறுப்பாகச் செல்லும் நல்ல த்ரில்லர் தான். அதிலும் கடைசியில் சொதப்பாமல், லாஜிக்கலாக எல்லாக் கொலைகளுக்கும் காரணம் சொல்லி இருப்பது அருமை.

வில்லாவுக்கு அடுத்து தனி ஹீரோவாக இவருக்கு இரண்டாவது படம். அசோக் செல்வனுக்கு வில்லாவில் அடித்த பேய் இன்னும் தெளியவில்லை போல. எப்போதும் சீரியஸான ஆளாகவே வருகிறார். முகமே அப்படியா, அல்லது சீரியஸான கேரக்டர் என்று இயக்குநர் ரொம்ப மிரட்டி விட்டாரா என்று தெரியவில்லை. ஏ செண்டருக்கு இது போதும். பி அண்ட் சி செண்டரை ரீச் செய்ய வேண்டும் என்றால், இன்னும் இறங்கி அடிக்கணும் பாஸ்!

அவன் இவனில் நடித்து பின்னர் காணாமல் போன ஜனனிக்கு இது நல்ல ஒரு ரீ எண்ட்ரி. அவருக்கு ப்ளஸ்ஸே கண்கள்(மட்டும்?) தான். அதில் பலவித எக்ஸ்பிரசன்ஸ் காட்டி, நம்மைக் கவர்கிறார். அவருக்குத் தெரியாமலேயே ஹீரோ அவரைக் காப்பாற்ற முயல்வதால், த்ரில் ஏரியாவுக்குள் அவருக்கு பெரிதாக வேலையில்லை. காதல் போர்சன் மட்டும் என்பதால் கலர்ஃபுல்லாகவே வந்து போகிறார்.

மொத்தத்தில் ‘தெகிடி’ விறுவிறுப்பான படம்…..

Saturday, February 1, 2014

‘இங்க என்ன சொல்லுது’ – திரை விமர்சனம்..!



திரைப்படங்கள் வெற்றியடைவது என்பது இப்போதெல்லாம் அரிதான ஒன்றாகி விட்டது.இந்த சூழ்நிலையில்,இதுபோன்ற திரைப் படங்கள் வெளிவருவது ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வருவதற்கு போடப்படும் முட்டுக்கட்டை எனறே கூறலாம். படம் ஆரம்பித்து 20 நிமிடத்திலேயே ரசிகர்கள் தங்களின் பொறுமையை இழந்து புலம்ப ஆரம்பிக்கிறார்கள்.பெரிய நடிகர்களின் கால்ஷீட் கிடைத்துவிட்டால் படம் எடுத்துவிடலாம் என்று நினைக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் ரசிகர்களின் நிலைமையையும் புரிந்து படம் எடுக்கவேண்டும்.வேறென்ன சொல்ல?

இனி பார்த்துத் தொலைத்த படத்தின் கதையைப் பார்ப்போம்:கோத்தகிரியில் இருந்து சென்னைக்கு கிளம்பும் விடிவி கணேஷ் தனது வாழ்க்கையை கார் டிரைவரான சந்தானத்துடன் கூறுவதுபோன்ற காட்சியுடன் படம் நகர்கிறது. சிம்புவும், விடிவி கணேஷும் அண்ணன் தம்பிகள். ஒருநாள் இரவில் இருவரும் வந்து கொண்டிருக்கும்போது வழியில் மீரா ஜாஸ்மினிடம் ரகளை செய்யும் சிலபேரிடமிருந்து அவரை மீட்கிறார்கள்.

இதனால் இவர்களுக்குள் பழக்கம் ஏற்படுகிறது.
ஒருநாள் மீரா ஜாஸ்மின் தன்னுடைய பிறந்த நாளுக்கு கணேசையும், சிம்புவையும் அழைக்கிறார். அங்கு போகும் சிம்பு, மீரா ஜாஸ்மினுக்கு விலை உயர்ந்த வைர மோதிரத்தை அன்பளிப்பாக கொடுக்கிறார். அதை இன்முகத்துடன் வாங்கிக் கொள்ளும் மீரா ஜாஸ்மினுக்கு சிம்புவின் மீது காதல் வருகிறது. அதை அவரிடமே தெரிவிக்கிறார் மீரா ஜாஸ்மின்.

ஆனால், சிம்புவுக்கோ ஏற்கெனவே ஆண்ட்ரியாவுடன் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. இந்நிலையில் மீரா ஜாஸ்மின் தன்னிடம் காதல் கூறியதும், அதை ஏற்றுக்கொள்ள முடியாத அவர் கணேஷிடம் சொல்லி, தனக்கு நிச்சயதார்த்தம் நடந்ததை அவளிடம் கூறச் சொல்கிறார். ஒருநாள் தன்னை எப்பொழுது கல்யாணம் செய்துக்கொள்ளப் போகிறாய் என்று சிம்புவுக்கு மீரா ஜாஸ்மின் மெசேஜ் அனுப்புகிறார். அதை, சிம்புவின் வீட்டிற்கு வந்திருக்கும் ஆண்ட்ரியா பார்த்துவிடுகிறார். உடனே பதிலுக்கு மீரா ஜாஸ்மினுக்கு போன் செய்து அவரை திட்டிவிடுகிறார்.

ஏதும் அறியாத மீரா ஜாஸ்மின் கணேஷிடம் அவள் யார் என்று கேட்க, அவள்தான் சிம்புவை திருமணம் செய்துகொள்ளப் போகிறவள் என்பதை மீரா ஜாஸ்மினிடம் விளக்கிவிட்டு போனைத் துண்டித்துவிட்டுகிறார். மறுநாள் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து கணேஷுக்கு போன் வருகிறது. தன்னை திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக கூறிவிட்டு, தற்போது மறுப்பதாக மீரா ஜாஸ்மின் கணேஷ் மீது போலீஸ் ஸ்டேஷனில் புகார் கூறியுள்ளார். போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்லும் கணேஷ், அவளை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி அங்கிருந்து அழைத்து வருகிறார்.

இதற்கிடையில் கணேஷின் நெருங்கிய உறவினரான மயில்சாமி அவரை பார்க்க வருகிறார். இருவரும் சேர்ந்து ஒரு சினிமாப் படம் எடுக்க முடிவெடுக்கின்றனர். இதற்காக மீரா ஜாஸ்மினின் வீட்டை விற்கின்றனர். ஆனால், அந்த பணத்தை சினிமாவில் போடாமல் ரேஸில் போட்டு பணத்தையெல்லாம் விட்டுவிடுகின்றனர்.
இறுதியில் கணேஷ், திருந்தி மீரா ஜாஸ்மினுடன் சேர்ந்து வாழ்ந்தாரா? அவரது வாழ்க்கை என்னவாயிற்று? என்பதே மீதிக்கதை.

படத்தின் கதாநாயகன் விடிவி கணேஷ். தான் கதாநாயகன் ஆகவேண்டும் என்பதற்காகவே இந்த படத்தை தயாரித்தும் இருக்கிறார். தன்னுடைய குரலையே பலமாக நம்பி, கதாநாயகனாக வேண்டும் என்ற ஆசையில் தனக்குத்தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டார் என்றுதான் சொல்லவேண்டும்.

சிம்பு படத்தில் கால் மணி நேரம்தான் வருகிறார். இவரும் ஆண்ட்ரியாவும் காட்டும் நெருக்கும் நெகிழ்ச்சியடைய வைக்கிறது. இருந்தாலும் ஓகே சொல்லலாம். நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவில் தலைகாட்டியிருக்கும் மீரா ஜாஸ்மினுக்கு வெயிட்டான கதாபாத்திரம். ஆனால், கணேஷுக்கு ஜோடியாக நடிக்க எப்படித்தான் முடிவெடுத்தார் என்பது தெரியவில்லை. இருவரும் கணவன்-மனைவியாக இருந்தாலும் படத்தில் இருவரும் நெருங்கி நடிக்கும் காட்சிகள் எதுவுமே இல்லை. இவரே கணேஷிடம் அவ்வாறெல்லாம் நடிக்க முடியாது என்று கூறியிருப்பார் போலும்.

சந்தானம் இந்த படத்தில் கடவுளின் அவதாரம் போல் வருகிறார். ஒரு சில காட்சிகளே வந்தாலும் சிரிக்க வைக்கிறார். வழக்கம்போல் விடிவி கணேஷை கலாய்க்கும் காட்சிகள் அருமை. தரண் இசையில் ஒரு பாடல் கூட கேட்கும்படியாக இல்லை என்றே சொல்லலாம். ‘போடா போடி’ படத்திற்கு இசையமைத்தவர் இவரா என்று கேட்க தோன்றுகிறது. பின்னணி இசையும் படம் முழுக்க ஒரே மாதிரி உள்ளது.

இதற்கிடையில் ஆர்ம்பத்திலேயே சொன்னது மாதிரி திரைப்படங்கள் வெற்றியடைவது என்பது இப்போது அபரிதமான ஒன்று. இந்த சூழ்நிலையில், இதுபோன்ற திரைப்படங்கள் வெளிவருவது ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வருவதற்கு போடப்படும் முட்டுக்கட்டை என கூறலாம். படம் ஆரம்பித்து 20 நிமிடத்திலேயே ரசிகர்கள் தங்களின் பொறுமையை இழந்து புலம்ப ஆரம்பிக்கிறார்கள். பெரிய நடிகர்களின் கால்ஷீட் கிடைத்துவிட்டால் படம் எடுத்துவிடலாம் என்று நினைக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் ரசிகர்களின் நிலைமையையும் புரிந்து படம் எடுக்கவேண்டும். திரையில் நடப்பதைதான் விமர்சனமாக சொல்லப்படும். ஆனால், இந்த படத்தை பொறுத்தவரை தியேட்டருக்கு உள்ளே நடப்பதையே விமர்சனமாக சொல்லலாம்.

மொத்தத்தில் ‘இங்க என்ன சொல்லுது’ சொல்ற மாதிரி இல்ல.

காப்பகம்