Wednesday, January 15, 2014

ஆண்கள் அவசரக் குடுக்கையர்களாம் – பெண்களே எதையும் நன்கு திட்டமிடுவார்களாம்..!




பல வகையான வேலைகளை ஒரே நேரத்தில் கொடுக்கும் போது அதனை ஆண்களை விட பெண்களே மிகவும் வேகமாக செய்து முடிப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அதாவது பல வேலைகளை ஒன்றாக கொடுத்து இவற்றை முடியுங்கள் என்று கூறினால், அவற்றை திட்டமிட்டு, எதனை முதல் செய்வது எதனை பின்னர் செய்வது என்று ஒழுங்கு படுத்திச் செய்வதில் ஆண்கள் மிகவும் தாமதமாக இருக்கிறார்கள் என்று பிரிட்டிஷ் உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஆனால், இந்த விடயத்தில் இப்போது இரு கேள்விகள் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். முதலாவது கேள்வி இது ஏன் என்பதாகும். அடுத்தது எந்த வேலையை கொடுத்தாலும் இந்த நிலைமைதானா அல்லது சில வேலைகளில் மாத்திரந்தான் இந்த நிலைமையா என்பதாகும்.

இதற்கான விடைகளை கண்டுபிடிக்கும் போதுதான் வேலைத்தளங்களை எப்படி ஏற்பாடு செய்வது என்பதில் சரியான திட்டங்களைத் தீட்ட முடியும். பல வேலைகளை ஒன்றாக அடுத்தடுத்து முடிப்பது என்பது வேலைத்தளங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆனால், அதுதான் எமது வேலை தொடர்ச்சியாக நடப்பதிலும் தாமதத்தை ஏற்படுத்துகிறது.

முன்னைய ஆய்வுகள்


முன்னர் இந்த விடயங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் வெவ்வேறான முடிவுகளைத் தந்துள்ளன. சீனாவில் நடந்த ஒரு ஆய்வில் பெண்கள், ஆண்களை விட பல வேலைகளை ஒன்றாக முடிப்பதில் மிகவும் வேகமனவர்கள் என்ற பதில் வந்திருக்கிறது. ஆனால் சுவீடனில் நடந்த ஆய்வில் ஆண்கள்தான் வேகமானவர்கள் என்ற முடிவு வந்திருக்கிறது.

இதற்காக இன்னுமொரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் சில அலுவலக வேலைகளை, அதாவது மின்னஞ்சல்களை படிப்பது, அதற்கு பதிலளிப்பது, தொலைபேசிகளுக்கு பதிலளிப்பது, அடுத்தடுத்த கூட்டங்களில் கலந்துகொள்வது என பல வேலைகள் இருதரப்பாருக்கும் கொடுக்கப்பட்டது. அதேபோல வீட்டுவேலைகள், அதாவது, சமைப்பது, குழந்தைகளை பார்த்துக்கொள்ளவது, வீட்டு தொலைபேசி அழைப்புக்களுக்கு பதில் சொல்வது என்று பல வேலைகள் ஒன்றாக அவர்களுக்கு கொடுக்கப்பட்டது.

ஒற்றை வேலையைச் செய்வதில் இருவரும் சமம் இதில் ஒவ்வொரு வேலையாகச் செய்யச் சொன்னால், இரு தரப்பாரும் ஒரே வேகத்திலேயே செய்தார்கள். ஆனால் எல்லா வேலைகளை ஒன்றாகக் கொடுத்த போது, அவற்றை ஒவ்வொன்றாக செய்து முடிப்பதற்கும் ஒரு வேலையில் இருந்து அடுத்த வேலைக்கு மாறும் போதும் இருதரப்பாரும் சிரமப்பட்டார்கள், ஆனாலும் பெண்கள், ஆண்களை விட அவற்றை வேகமாக முடித்தார்கள். இந்த வேறுபாடு மிகவும் சிறியதுதான் என்றாலும், தொடர்ச்சியாக வாரக்கணக்கில் இவற்றைச் செய்யும்போது அது மிகவும் அதிகமாகிவிடும்.

நன்கு திட்டமிடும் பெண்களும் அவசரக்குடுக்கையான ஆண்களும்

அதன் பின்னர் 8 நிமிடத்துக்குள் சில வேலைகளை ஒன்றாக செய்ய வேண்டும் என்று இரு தரப்பாருக்கும் கொடுக்கப்பட்டது. உண்மையில் அந்த அனைத்து வேலைகளையும் 8 நிமிடத்தில் முடிக்க முடியாது. இப்போது, வேலைகளை ஆரம்பிப்பதற்கு முன்னதாக அவற்றை திட்டமிடுவதற்கு நீண்ட நேரத்தை பெண்கள் எடுத்துக்கொண்டார்கள், ஆனால் ஆண்கள் அவசரக் குடுக்கையாக, நிறைய யோசிக்காமல் வேலையில் குதித்துவிட்டார்கள்.

ஆனால் இங்கும் பெண்கள்தான்முன்னணியில் இருந்தார்கள். இதில் இருந்து எந்த அழுத்தமான நிலைமைகளிலும் நின்று நிதானமாகச் சிந்தித்து, திட்டமிட்டு, செயற்படும் திறன் பெண்களுக்கே அதிகம் என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்தார்கள்.

அதுமாத்திரமன்றி ஆண்களைப் பொறுத்தவரை அவர்கள், பல வேலைகளை ஒன்றாகக் கையாள்வதில் தாம் உண்மையில் எவ்வளவு திறமையானவர்களோ, அதனைவிட அதிகமாகவே தம்மிடம் திறமை இருப்பதாக அவர்கள் தம்மைப் பற்றி நினைத்துகொள்வதாகவும், ஆனால் பெண்களோ மறுபுறமாக, தமக்கு இந்த விடயங்களில் இருக்கும் உண்மையான திறமையின் அளவை விட குறைவாகவே தமக்கு திறமை இருப்பதாக அவர்கள் நினைத்துக்கொள்வதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

தம்மிடம் அதிக திறமை இருப்பதாக அளவுக்கு அதிகமாக ஆண்கள் நினைப்பதால்தான் அவர்கள் சிந்திக்காமலேயே வேலையைத் தொடங்கிவிட்டு முடிக்க முடியாமல் தடுமாறுகிறார்களாம்.

0 comments:

Post a Comment

காப்பகம்