Wednesday, January 15, 2014

என்ன மனுஷன் இவர்..! அஜீத் பற்றி நெகிழ்கிறார் பாலா..!



பொங்கல் படமாக வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிற படம் 'வீரம்'.இப்படத்தில் அஜீத்தின் தம்பியாக நடித்துள்ள நடிகர் பாலாவுக்கு இத்தனை நாளாக நெஞ்சில் உறுத்திக் கொண்டிருந்த நெருடலை 'வீரம்' பட வெற்றி அறுவை சிகிச்சை இல்லாமேலேயே அகற்றியிருக்கிறது.

இந்த பாலா நம் மண்ணின் மைந்தன். தமிழில்தான் 'அன்பு' படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து 'காதல்கிசுகிசு' 'அம்மா அப்பா செல்லம்' போன்ற சில படங்களில் நடித்தார். இங்கே படங்கள் வெற்றி பெறாததால் மலையாளப் பக்கம் போனார்.

'பிக்'பி' என்கிற மலையாளப் படத்தில் மம்மூட்டியுடன் நடித்தார் முதல் படத்திலேயே வெற்றியும் பாராட்டும் விருதும் கிடைத்தன.அதன் பிறகு மளமளவென படங்கள். மம்மூட்டி, மோகன்லால், சுரேஷ் கோபி,ப்ருத்விராஜ் என பெரிய நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார். பிறகு தனி நாயகனாகவும் நடிக்கத் தொடங்கி வெற்றி பெற்றார். ஒரே ஆண்டில் 9 படங்கள் நடிக்கும் அளவுக்குப் பரபரப்பானார். மலையாளத்தில் தொடர்ச்சியாக 40 படங்கள் நடித்துள்ளார். 'வீரம்' இவரது 44 வது படம் என்றால் பாருங்கள்.

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மட்டுமே மணம் உண்டு என்று நம்புகிறவர்கள் நம்மவர்கள். வேற்று மொழியினர் எவரையும் எளிதில் உள்ளே விடாதவர்கள் மலையாளத் திரையுலகினர். பாலாவுக்கு எப்படி அங்கு ஒரு இடம் கிடைத்தது?

"அதை என் விதி என்பதா தலையில் எழுதப்பட்ட வாய்ப்பு என்பதா அதிர்ஷ்டம் என்பதா பாக்யம் என்பதா? எனக்குச் சொல்லத் தெரியவில்லை.

நான் அறிமுகமாகி தமிழில் நடித்த படங்கள் ஓடவில்லை. அதனால் எனக்கு இங்கே வாய்ப்பு வரவில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நடிப்பு, திறமை எல்லாம் இரண்டாம்பட்சம்தான். வெற்றி பெற்றால்தான் மறு பேச்சு. வெற்றி பெறவில்லை என்றால் அவ்வளவுதான். இதுதான் இங்கு உள்ள நிலைமை. ஆனால் மலையாளத்தில் நிலைமையே வேறு. அங்கு வெற்றியைப் பார்ப்பதில்லை. வேலையைத்தான் பார்க்கிறார்கள். திறமைக்குத்தான் அங்கு மரியாதை.நடிகரைவிட நடிப்புத் திறமையைத்தான் பார்ப்பார்கள். நிஜமான திறமைசாலியை அங்கீகரிப்பார்கள். ஆதரிப்பார்கள். அதனால்தான் என்னை ஏற்றுக் கொண்டார்கள். " என்கிற பாலா,"எனக்கு மொழி ஒரு தடையில்லை. இருந்தாலும் பிற மொழியிலிருந்து, என்னை மாதிரி பிற மாநிலத்திலிருந்து வருபவர்களுக்கு அவ்வளவு சுலபமாக மலையாளத்தில் வரவேற்பும் அங்கீகாரமும் கிடைக்காது. இது யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு.என்னை ஏற்றுக்கொண்டு தங்களில் ஒருவராக பார்க்கிற அவர்களின் அன்புக்கு நான் எப்படி நன்றி சொல்வது? என் ஒவ்வொரு படத்திற்கும் அவர்கள் கொடுத்த வரவேற்புக்கும் விமர்சனத்துக்கும் என்னால் நன்றி என்று மட்டும் கூறி விட முடியாது." என்று நெகிழ்கிறார்.

பாலாவின் தந்தை ஜெயக்குமார் 426 ஆவணப் படங்கள் மற்றும் விளம்பரப் படங்கள் இயக்கியவர். தாத்தா ஏ. கே. வேலன் தயாரிப்பாளர். சகோதரர் சிவா இயக்குநர். இருந்தாலும் இவருக்குள் ஒரு சங்கடம் தொண்டைக்குள் பந்தாக இதுநாள் வரை உருண்டு கொண்டிருந்தது. அதை 'வீரம்' படம் அகற்றியுள்ளது. சங்கடத்தைத் துடைத்து இருக்கிறது.

"நான் தமிழில்தான் அறிமுகமானேன். இங்கு சரிவர படங்கள் அமையாததால்தான் மலையாளப் பக்கம் போனேன். அங்கு பலதரப்பட்ட படங்கள். வியாபாரரீதியில் வெற்றி பெற்ற 'பிக் பி', 'புதியமுகம்' 'ஸ்தலம்' 'திஹிட்லிஸ்ட்' 'அலெக்சாண்டர்' தி கிரேட் போன்ற படங்களாகட்டும்

'வேனல்மரம்' 'பத்தாம் அத்தியாயம்' யோன்ற ஆர்ட் பிலிம் களாகட்டும் ஒவ்வொருபடமும் ஒவ்வொரு அனுபவமாக என்னை செதுக்கியது உண்மை. அப்போதெல்லாம் நான் நினைப்பதுண்டு இங்கு நம்மைப் பாராட்டுகிறார்கள். வரவேற்கிறார்கள். திறமைக்கு இங்கு மரியாதைஉ.ள்ளது.ஆனால் தாய் மொழியில் நமக்கென்ன மரியாதை உ.ள்ளது என்று நினைப்பதுண்டு.அப்படிப்பட்ட நேரத்தில்தான் 'வீரம்' படவாய்ப்பு வந்தது.

இயக்குநர் சிவா என் அண்ணன்தான். நானும் மலையாளத்தில் ஒரு படம் இயக்கிவிட்டடேன். ஆனாலும் நான் அவரிடம் வாய்ப்பு கேட்டதில்லை. அவரும் என்னைப்பற்றி விசாரித்து பேசியதில்லை. அப்படிப்பட்ட சுதந்திர வெளியில் இருந்தோம்.

'வீரம்' படத்தில் நடிக்கக் கேட்ட போது அண்ணனின் படத்தில் நடிக்கும் தம்பி என்கிற வகையிலும் அஜீத் சாரின் தம்பியாக நடிக்கிறேன் என்கிற வகையிலும் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.. பல நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஒவ்வொரு நாளும் இனிமையாகக் கழிந்தது. படமும் வெற்றி பெற்றது எனக்கு நீண்டநாள் நெஞ்சுக்குள் கிடந்த ஏக்கம், சங்கடம், உறுத்தல், விலகிய உணர்வில் இருக்கிறேன். "என்கிறார்

வீரம் படத்தில் அஜீத்துடன் நடித்த அனுபவம் பற்றிக் கேட்ட போது ' நிறைய சொல்லலாம் சொல்வது அவ்வளவையும் எழுத முடியாதே' என்ற படி தொடங்கினார்.

"அஜீத் சார் பற்றி நிறைய சொல்லலாம். நானும் 44 படங்கள் முடித்து விட்டேன். அஜீத்சார் மாதிரி அற்புதமான மனிதரைப் பார்த்ததில்லை. அப்படி இயல்பாகப் பேசிப் பழகுவார். 'வீரம்' படம் தொடங்க 4 நாட்கள் இருக்கும் போது எங்களை எல்லாம் படப்பிடிப்புக்கு முன்பே ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டிக்கு அழைத்தார்.

அழைத்தவர் எல்லாருடனும் அன்பாக மனம் விட்டு அன்னியோன்யமாகப் பேசிப் பழகினார். 'நாம் அண்ணன் தம்பியாக நடிக்கப் போகிறோம். நமக்குள் நல்ல ஹெமிஸ்ட்ரி வரவேண்டும் என்றால் நாம் சகஜமாகப் பேசிப் பழகவேண்டும். இடைவெளி இருக்கக் கூடாது'. என்றார்.

நாள் முழுக்க நாங்கள் அவருடன் இருக்கும்படி பார்த்துக் கொண்டார். காலையில் எழுவது சாப்பிடுவது ஒர்க் அவுட் செய்வது ஸ்விம்மிங் என்று எல்லாவற்றிலும் கூடவே இருக்கவைத்தார். சில நாட்களில் நிஜ அண்ணன் தம்பிகள் போலாகி விட்டோம். 110 நாட்கள் இப்படியே போனது. அது ஜாலியான சந்தோஷமான அனுபவம்.

அஜீத் சார் நல்ல குக். பிரமாதமாக சமைப்பார்.சிக்கன் பிரியாணி அருமையாக சமைத்துப் போட்டார். 'ஆரம்பம்' படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.அதுபற்றி எந்த சலனமும் இல்லாமல் எங்களுக்கு மீன் வறுவல் செய்து கொடுத்துக் கொண்டிருந்தார். என்ன மனுஷன் இவர் என்று வியப்பாக இருந்தது. அவர் பலருக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார். ஆனால் வெளியில் தெரியக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பார். நான் இது பற்றிக் கேட்ட போது மனிதர் செய்வது மனிதருக்குத் தெரியக் கூடாது என்பார். கடவுளுக்கு மட்டும் தெரிந்தால் போதும் என்பார். 'இது எனக்கும் கடவுளுக்கும் உள்ள கணக்கு' என்பார்.'இப்போது அவரை மிஸ் பண்ணுவதாக உணர்கிறேன்.''இப்படி அஜீத் பற்றிக் கேட்டால் மூச்சு விடாமல் பேசுகிறார் பாலா.

'வீரம்' படத்தின் மூலம் அஜீத் ரசிகர்களின் அன்பையும் பெற்றுள்ள கூடுதல் பூரிப்பு பாலாவுக்கு.

பாலா தான் இயக்கிய 'தி ஹிட் லிஸ்ட்' பட அனுபவம் பற்றிக் கூறும் போது, "இது எனக்கு 30 வயதில் கிடைத்த வாய்ப்பு. நானே தயாரித்தேன். 40 நடிகர்கள் என் மீதுள்ள அன்புக்காக நடித்தார்கள். ஒரு பத்தாண்டுகால அனுபவம் ஒரு படத் தயாரிப்பில் கிடைத்தது. எல்லா நடிகர்களும் ஒரு படம் தயாரித்தால் நல்ல மனிதராக மாறிவிடுவார்கள். "என்கிற பாலாவின் மனைவி அம்ருதா, பாடகியாக வந்து காதலியானவர். இவர் நினைக்கிற ஸ்வரத்தில் தாம்பத்யசங்கீதம் பாடுகிற பாடகி. ஒரே மகள் அவந்திகா.இதுதான் பாலா.

0 comments:

Post a Comment

காப்பகம்