Wednesday, January 15, 2014

‘இசை’ - புது அவதாரம்.?




‘தமிழில் நான் படம் இயக்கி எட்டு ஆண்டுகள் ஆகிறது. ஏன் இந்த இடைவெளி என்பதற்கான காரணம் என்னிடம் இல்லை. ஆனால் ஒன்று மட்டும் உள்ளுக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது. என் படத்தை, என் மீது கொண்ட நம்பிக்கையை கொண்டாடிய ரசிகர்களை மீண்டும் சந்தோஷப்படுத்த வேண்டும். பனி படர்ந்திருக்கும் இந்த அழகான குளிர் காலத்தைப்போல என் மீது படிந்திருக்கும் கவனத்திற்கு ‘இசை’ திரைப்படத்தின் வழியே கொஞ்சமும் குறைவில்லாமல் திருப்தியை கொடுப்பேன்!’’ என்று உறுதியாகச் சொல்கிறார் இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா.

மே முதல் தேதி தன் ‘இசை’ படத்தை வெளியிட பம்பரமாய் உழைத்துக் கொண்டிருந்த  அவரை,  சந்தித்து பேசியதிலிருந்து…

இசையமைப்பாளர் ஆனதால்தான் ‘இசை’ படத்தின் ரிலீஸ் தாமதமாகி வருகிறதா?

கதை தயாராக இருந்தது. இதை தற்போது கையில் எடுக்கவேண்டுமா என்ற முடிவுக்காக 6 மாதங்கள் எடுத்துக்கொண்டேன். படத்தின் சில முக்கியமான காட்சிகளை கொடைக்கானலில் சர்ஜ் செட் போட்டு படம் பிடித்திருக்கோம். அங்கே என் கதைக்கு வேண்டிய குளுமைக்காக 6 மாதங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது. அந்த குளுமைக்காகவும், மலையின் அழகியலுக்காகவும் வேண்டி கொஞ்சம் காலத்தை செலவழித்தேன். மொத்தமாக ஒன்றரை ஆண்டுகள் படப்பிடிப்புக்காக மட்டுமே எடுத்துக்கொண்டேன்.

இசையை கற்றுக்கொள்வதற்காக 8 மாதங்கள். இப்போது எடிட்டிங் 4 மாதங்கள். எடிட்டர் ரியாஸுடன் அமர்ந்து தினம்தினம் செதுக்கிக்கொண்டிருக்கிறேன். அற்புதமான எடிட்டர், இவர். ஆண்டனியின் உதவியாளர். படம் வந்தால் உங்களுக்கு நிச்சயம் பிடித்தவராக இருப்பார். இப்படித்தான் கடந்த 4 ஆண்டுகளை எடுத்துக்கொண்டு என்னுடைய ‘இசை’ தயாராகி வருகிறது. எதிலும் என்னை காம்ப்ரமைஸ் பண்ணிக்கொள்ளாமல் வேலையை தொடர்ந்தேன். அதற்கான பலன், படத்தில் தெரியும்.

எஸ்.ஜே.சூர்யாவை ஒர் இயக்குநராகவே பார்க்க விரும்புவதாக வரும் விமர்சனத்தை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?

ஒரு விஷயத்தை ஆசைப்பட்டு தொடர்கிறோம். இன்னொரு இடத்தை ஆண்டவன் வேற ஒரு மாதிரி கொடுக்கிறான். ‘நியூ’ படத்தில் ஒரு நல்ல நடிகனாகத்தான் என்னை நிரூபித்திருக்கிறேன். வெளியில் நமக்கு கிடைக்கும் வெற்றியை எல்லோரோடும் சேர்ந்து ஷேர் பண்ணிக்க வேண்டும். தோல்வியை நாம் மட்டும் வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நல்ல நடிகனாக நிரூபிக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். இந்தப்படத்தில் அதற்கான போராட்டம் நிறைய இருக்கும். இயக்குநர் ஒரு பயிற்சியாளர் மாதிரி. வீரர் நடிகர்தான். என் விளையாட்டு ‘இசை’ யில் புதிதாக இருக்கும். அதன்பின் இப்படியான விமர்சனங்களுக்கு அவசியம் இருக்காது.

படத்தில் இளையராஜாவாக சத்யராஜும், ஏ.ஆர்.ரஹ்மானாக நீங்களும் நடித்திருப்பது உண்மை தானா?

வாழ்வில் ஒவ்வொரு பகுதியும் நம்மை ஏதாவது ஒன்று ஆட்சிசெய்யும். அது அரசியல், விளையாட்டு ஏன்.. அது ஒரு பள்ளிக்கூடமாகக்கூட இருக்கும். அந்த துறையில் ஒருவர் சீனியர், ஜீனியர் என்றும் இருப்பார்கள். அந்த சூழலில் ஒரு பயணம். அதில் சில அனுபவங்கள் உண்டு. அப்படியான காலகட்டத்தில் அந்த சீனியர், ஜூனியருக்குள் ஒரு பொறாமை உணர்வு உண்டாகும். அந்த உணர்வால் நிகழும் மாற்றங்கள்தான் என் கதை. எனக்கு இசை பிடிக்கும். பார்த்து பழகிய அனுபவம் இருப்பதால் இதை கதையின் களமாக ஆக்கிக்கொண்டேன். இதில் இவர்கள் இருவரையும்தான் குறிப்பிட்டுள்ளேன் என்பதெல்லாம் முற்றிலுமான வதந்தி.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால் ராஜா சார் இசைப்பயணத்தைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. அவர் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர். என் படத்தில் சித்தரிப்பதால்தான் அவரது வெற்றி இருக்கிறதா என்ன? நான் இங்கே யார் மனதையும் புண்படுத்த வரவில்லை. எனக்கு படம் செய்ய ஒரு களம் தேவைப்பட்டது. அவ்வளவுதான். இந்தப்படத்துக்கும், என் கதைக்கும் அப்பார்ப்பட்ட ஜீனியஸ் ராஜா சார். மற்றவை எல்லாம் நான் முன் சொன்னதைப்போல வதந்தி.

ஹிந்தியில் சல்மான்கானிடம் வைக்கும் கேள்வியை உங்களிடமும் வைக்கிறோம். கல்யாணம் எப்போது?

இத்தனை ஆண்டுகளாக ஏன் செய்துகொள்ளவில்லை என்பதற்கான பதில் என்னிடம் இல்லை. நம் அலைவரிசைக்கு ஏற்றவரை தேர்ந்தெடுப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. மனதுக்கு பிடித்த வேலையை இத்தனை ஆண்டுகளாக தொடர்கிறேன். இப்போது கூட 8 மாதங்கள் மாணவனாக மாறி இசையையும் புதிதாக எடுத்திருக்கேன். அதேபோல மனதிற்கு பிடித்த பெண்ணை இதுவரைக்கும் தேட முயற்சி எடுக்கவில்லை. அது இயல்பாக அமையும்போது பார்த்துக்கொள்ளலாம்.

சூர்யா, ஆர்யா, சிவகார்த்திகேயன் வரைக்கும் சினிமாவில் வளர்ந்து வருகிறார்களே. இவர்களை வைத்து எப்போது படம் கொடுக்கப் போகிறீர்கள்?
ஒவ்வொரு காலத்திலும் யாராவது ரெண்டு பேர் ரூல் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி ரஜினி, கமல், அஜித், விஜய் வரைக்கும் தொடர்ந்துகொண்டு இருக்கிறது. ஒரு கதை யாரைத்தேடுகிறதோ அவர்களுடன் சேர்ந்து அதை சரியாக செய்ய வேண்டியதுதான். இப்போ அந்த வேலையை நானே செய்வதால் அதற்குள் போக விருப்பமில்லை. என்னோட இடத்தை தக்க வைத்துக்கொள்வதற்கான தேடலில் என் வேலைகளை கவனித்து வருகிறேன். சினிமா எப்பவுமே நன்றாக இருக்கிறது. அதில் நாம இருக்கிறோமா? இல்லையா என்பதை செக் பண்ணி பார்த்துக்கொள்ள வேண்டும்.

டிஜிட்டல், மியூசிக்கில் அட்வான்ஸ் என்று வளர்ந்துகொண்டே போகிறது. அதை அப்டேட் பண்ணிக்கொள்ளும் வேலையே இங்கு அதிகம் இருக்கே. அதை நோக்கி என் பயணமும் இருக்கு. வெளிநாட்டோடு ஒப்பிட்டு பார்க்கும்போது நாம் இன்னும் 10 ஆண்டுகள் பின்னுக்குத்தான் இருக்கிறோம். இங்கே, இப்போ பேசப்பட்டு வரும் புதிய தொழில்நுட்பங்கள், மாடர்ன் டி.டி.எச். சினிமா வெளியிடும் நுட்பங்கள் எல்லாம் அங்கு வந்தாச்சு. ஒரு படத்தை வீட்டிலும் பார்க்கிறார்கள், தியேட்டர்களிலும் பார்க்கிறார்கள். காலத்துக்கு தகுந்த விஷயங்கள் அவ்வபோது மாறிக்கொண்டேதான் இருக்கும். சினிமாவும் அதில் ஒன்றுதானே.

தமிழ் சினிமாவுக்கு இன்னொரு சாவித்ரி என்று அறிமுக நாயகியை சொல்லியிருக்கிறீர்களே?
நாயகிக்காக 124 பேரை ஆடிஷன் எடுத்து அதில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவங்க இந்த சாவித்ரி. மும்பை பெண். தமிழ்நாட்டில் சாவித்ரியாகவே வலம் வரட்டும் என்று அவங்களோட நிஜ பெயரைக்கூட யார்கிட்டயும் சொல்லவில்லை. யூத்ஸ் பலர் நோகப்போறாங்க. முதல் பாகத்தோட காதல், ரெண்டாவது பகுதியின் கதை எல்லாவற்றிலும் அழகா அசத்தியிருக்காங்க… அந்தப்பொண்ணு.

இசையை அடுத்து?

அடுத்த படம் கதை ரெடி. முக்கால்வாசி இசையில் பயணித்த அதே டீமாகக்கூட இருக்கலாம். அது இயல்பாகவே அமைந்தால் சந்தோஷப்படுவேன். இனி தாமதம் இருக்காது. இசை வெளியான ஆறாவது மாதத்தில் அடுத்த காதல் பயணமும் திரைக்கு வந்துவிடும்.

0 comments:

Post a Comment

காப்பகம்