Friday, November 15, 2013

தற்கொலையைத் தடுக்க உதவிய ஃபேஸ்புக்!



எதையுமே ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொள்வது இளம் தலைமுறைக்கு வழக்கமாக இருக்கிறது. இதனால் சில நேரங்களில் பாதகமான விளைவுகள் ஏற்படலாம் என்றாலும், சில நேரங்களில் எதிர்பாராத விதமாக நல்ல பலனும் உண்டாகலாம். இதற்கு அழகான உதாரணமாக, அமெரிக்காவில் தற்கொலை மனநிலையில் இருந்த இளைஞர் ஒருவரை காவலர்கள் ஃபேஸ்புக் மூலம் காப்பாற்றியுள்ளனர்.

18 வயதான அந்த இளைஞர், நியூஜெர்சியில் உள்ள வாஷிங்டன் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதனுடன் பாலம் அமைந்துள்ள ஹட்சன் நதி படத்தையும் இணைத்திருந்தார்.

இந்தச் செய்தியை பார்த்து பதறிய ஃபேஸ்புக் நண்பர் ஒருவர், நியூஜெர்சி காவலர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் துறைமுக ஆணைய காவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

துறைமுக ஆணைய காவலர்கள் குறிப்பிட்ட அந்த இளைஞரின் ஃபேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்து, அவர் புகைப்படத்தை எடுத்துக்கொண்டு பாலத்தில் தேடிப்பார்த்தனர். பின்னர் வாலிபரின் செல்போன் மூலமும் தேடினர். ஆனால் பயனில்லை. உடனே காவல் துறை அதிகாரி மைகேல்ஸ், ஃபேஸ்புக் வழியே அந்த இளைஞரைத் தொடர்பு கொண்டார். நண்பர்கள் யாரையாவது தொடர்பு கொள்ளவும் எனும் அவரது வேண்டுகோளுக்கு பதில் இல்லை.

இதையடுத்து அதிகாரி மைக்கேல்ஸை அழைக்குமாறு தொடர்ந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டது. நல்ல வேளையாக கொஞ்ச நேரம் கழித்து அந்த இளைஞர், அதிகாரி மைக்கேல்சை செல்போனில் தொடர்பு கொண்டார். பஸ் ஒன்றில் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தார். வீட்டில் பிரச்சினை என்றும் கூறியிருக்கிறார். மைக்கேல்ஸ் அவரிடம் ஆறுதலாகப் பேசி தன்னை நேரில் சந்திக்க வைத்தார். அதன் பிறகு அந்த இளைஞரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று ஆலோசனை பெற வைத்தார்.

தற்கொலை என்பதே அந்த கணத்தின் தடுமாற்றம் தானே. சரியான நேரத்தில் தலையிட்டதால் அந்த இளைஞர் தற்கொலைக்கு முயல்வது தடுக்கப்பட்டது.

கடந்த 2010 ம் ஆண்டு டைலர் கிலமண்டி எனும் இளைஞர் ,ஃபேஸ்புக் பக்கத்தில் வாஷிங்டன் பாலத்தில் இருந்து குதிக்கப்போகிறேன் என்று தெரிவித்து விட்டு, சொன்னதைப் போலவே தற்கொலை செய்து கொண்டார். ஆனால் இந்த முறை ஃபேஸ்புக் மூலம் தற்கொலை முயற்சி தடுக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தியை அமெரிக்காவின் நியூயார்க் போஸ்ட் வெளியிட்டுள்ளது.

சூறாவளிக்கு நேசக்கரம்

ஃபேஸ்புக் தொடர்பான மற்றொரு செய்தி. பிலிப்பைன்சில் பயங்கர சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிதி அளிக்கும் வசதியை ஃபேஸ்புக் ஏற்படுத்தித் தந்துள்ளது. சூறாவளி பாதித்த பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கும் செஞ்சிலுவை சங்கத்திற்கு நிதி அளியுங்கள் எனும் வேண்டுகோளை ஃபேஸ்புக் பயனாளிகளின் டைம்லைன் பகுதி மீது இடம் பெற வைத்துள்ளது. ஃபேஸ்புக் இப்படி நிதி திரட்ட வேண்டுகோள் விடுப்படுது இதுவே முதல் முறை என்று சொல்லப்படுகிறது. பயர்பாக்ஸ் (firefox) உலாவியில் அதன் தேடல் கட்டம் அருகே பிலிப்பைன்சுக்கு செஞ்சிலுவை சங்கம் மூலம் உதவுங்கள் எனும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விலகும் இளசுகள்

ஃபேஸ்புக் பற்றி மற்றொரு செய்தி, அதன் இளைய பயனாளிகள் பலரும் வாட்ஸ் அப் (whats app) போன்ற குறுஞ்செய்தி செயலி சேவைகளுக்கு மாறிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கிறது. பிரிட்டன் பயனாளிகள் மத்தியில் இந்த மாற்றம் நிகழ்ந்து வருகிறது. ஃபேஸ்புக்கில் பெரியவர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவது மற்றும் வாட்ஸ் அப் போன்ற சேவைகளில் நண்பர்களுடன் அந்தரங்கமாக உரையாட முடிவது போன்றவை இதற்கான காரணமாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் ,இளைஞர்கள் மத்தியில் பிரபலமான தளம் எனும் பெருமையை ஃபேஸ்புக்கிடம் இருந்து வீடியோ பகிர்வு தளமான யூடியுப் தட்டிபறித்துள்ளதாகவும் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

காப்பகம்