Sunday, December 1, 2013

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கெட்ட ரத்தத்தைக் குடிக்க அட்டைப் பூச்சி!


என் வயது 35. கடந்த பத்து வருடங்களாக முழங்கால் வலியால் அவதிப்படுகிறேன். எவ்வளவோ சிகிச்சைகள் எடுத்தும் பயன் இல்லை. உள்ளங்காலில் எரிச்சலும், குடைச்சலும் வேறு இருக்கிறது. இதனால் நான் மனதளவில் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறேன். தூக்கமின்மையாலும் தவிக்கிறேன். இதற்கு ஆயுர்வேத மருத்துவம் உள்ளதா?

உள்ளங்கால் எரிச்சல் என்பது சூடு எனும் குணத்தைக் கொண்ட பித்த தோஷத்தின் சீற்றம், ரத்தத்தில் கலப்பதால் ஏற்படக் கூடும். இந்தக் கலப்பினால் ரத்தம் கெட்டுவிடக் கூடும். அவரைக்காய், நீர் வாழ் பிராணிகளின் மாமிசம், கொள்ளு, புளிப்பான மதுபானம், மோர், தயிர், உணவில் அதிக காரம், புளி, உப்பு ஆகியவற்றின் சேர்க்கை, சாப்பாட்டிற்குப் பிறகு பகலில் படுத்து உறங்குவது, குடையும் காலில் செருப்பில்லாமலும் கடும் வெயிலில் அலைந்து திரிவது போன்ற செய்கைகளாலும், அவ்வாறு அலைந்துவிட்டு உடனே குளிர்பானங்களைக் குடிப்பது ஆகியவற்றால் ரத்தத்தில் பித்த சீற்றம் கூடி எரிச்சலை உண்டாக்குகிறது.

பேருந்தில் நின்று கொண்டே பயணம் செய்வது, இரு சக்கர வாகனத்தில் குண்டும் குழியுமாக உள்ள பாதைகளில் பயணம் செய்வது, குளிர்ச்சியான நீரில் நீந்துவது, குளிப்பது, கால்களால் அதிகம் மிதித்து தையல் மிஷினில் வேலை செய்வது போன்றவற்றால் இடுப்பிற்குக் கீழே வாயுவின் சஞ்சார விசேஷம் கூடுகிறது.

ஆனால், தமனிகளில் சஞ்சரிக்கும் கேடுற்ற ரத்தத்தினால் வாயுவின் ஓட்டத்திற்குத் தடை ஏற்படுகிறது. அதன் கதி முடக்கம், மூட்டுகளில் வலியும், உள்ளங்கால் எரிச்சலுக்கும் காரணமாகின்றன.

இதற்கு வாத ரத்தம் என்று ஆயுர்வேதம் பெயரிட்டுள்ளது. முதலில் சருமம், மாம்ஸம் ஆகிய தாதுக்களில் தங்கி உண்டாகும் வாத ரத்தம், உத்தானம் அதாவது வெளிப்படையானது எனப்படும். பிறகு எல்லாத் தாதுக்களிலும் பரவும். இந்த நிலைக்குக் கம்பீரம் அதாவது ஆழ்ந்தது எனப் பெயர்.

இந்நோயில் கெட்டுள்ள ரத்தத்தை வெளியேற்ற வேண்டும். காலில் பெருவிரல் பகுதிக்கும் அதற்கு அடுத்துள்ள விரலுக்கும் நடுவே உள்ள பகுதிக்கு க்ஷிப்ர மர்மம் என்று பெயர். அதிலிருந்து 2 அங்குலம் மேலே அட்டைப் பூச்சியை வைத்து கடிக்கச் செய்தால், கெட்ட ரத்தத்தைக் குடித்துவிடும். உடலில் நெய்ப்புத் தரும் நெய் மஜ்ஜை முதலியவற்றைக் கொடுத்து எண்ணெய்ப் பசையை உருவாக்கிய பிறகு, மேற்குறிப்பிட்ட அட்டைப் பூச்சி வைத்தியம் சிறந்தது. கெட்ட ரத்தத்தை வெளியேற்றிய பிறகு, ஆயுர்வேத கஷாய மருந்துகளாகிய பலாகுடூதசச்யாதி, கோகிலாக்ஷம், ப்ருகத்யாதி, தசமூலம் போன்றவற்றில் உங்களுக்கு எது உகந்ததோ அதை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடலாம்.

பிண்ட தைலம், மஞ்ஜிஷ்டாதி தைலம் போன்றவை மேல் பூச்சாக உபயோகிப்பது, ஆஸன வாய் வழியாக மலப்பையில் சேர்க்கப்படும் எண்ணெய் வஸ்தி, குடல் கழிவுகளை அகற்றும் கஷாய வஸ்தி, முட்டி வலியைப் போக்கும் ஜடாமயாதி, கொட்டம் சுக்காதி போன்ற மேல்பூச்சு பற்று மருந்துகள், மூலிகைத் தைலத்தைத் தாரையாக முட்டி மற்றும் பாதங்களில் ஊற்றுவது போன்ற சிறப்பான மருத்துவ முறைகளால் நீங்கள் விரைவில் குணம் பெறலாம்.

0 comments:

Post a Comment

காப்பகம்