Sunday, December 1, 2013

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு!

 

ஒன்றாக கல்லூரியில் படித்து, பட்டம் வாங்கி வேலை தேடி கொண்டிருக்கும் நண்பர்கள் நாங்கள். மாநகரில் மூலைக்கு மூலை வசித்தாலும், ஒரு குறிப்பிட்ட நாளில் சந்தித்து, உரையாடி, ஆறுதல் தேடுவது வழக்கம். எங்கள் குழு நண்பனொருவனை இரண்டு வாரங்களாக காணவில்லை. என்னமோ ஏதோவென்று பதறி, அவனைக் காண, அவன் வீட்டுக்கு சென்றோம். வீட்டில் அவன் இல்லை. இரண்டு தெரு தள்ளி, ஒரு வீட்டில் அவன் இருப்பதாக கூறினர். அங்கு சென்றோம்.

குறிப்பிட்ட வீடு பூட்டப்பட்டிருக்க, நண்பனும் இன்னும் சிலரும், கையில் உருட்டுக் கட்டைகளோடு காவல் காத்துக் கொண்டிருந்தனர்.
"என்னடா விஷயம்?' என வினவினோம்...

"அது ஒண்ணுமில்லடா... இந்த வீட்டுல இருக்கிறவங்க, ஒரு வாரம் வெளியூர் போயிருக்காங்க. அவுங்க திரும்பி வர்ற வரைக்கும், வீட்டோட பாதுகாப்பை, எங்க பொறுப்புல ஏத்துக்கிட்டிருக்கோம். சும்மா,வெட்டியா ஊரை சுத்தி, வம்பு பேசிகிட்டுத் திரியுற நேரத்துல, இது மாதிரி ஏதாவது உருப்படியா செஞ்சா, "அட்லீஸ்ட்' நாம அப்ளிகேஷன் போடுற செலவுக்காவது ஆகுமே... அதுக்குத் தான்...' என்றான்.

ஆச்சரியமடைந்து, "இதுக்கு எவ்ளோடா சார்ஜ் பண்ணுவீங்க?' என்றோம்
"அது ஆளோட வசதியை பொறுத்தது. இது மிடில் கிளாஸ் பேமிலி. அதனால், இரண்டாயிரம் ரூபா சார்ஜ். இதே, ஹை கிளாஸ் வீடாக இருந்தால், ஐயாயிரம் முதல் ஏழாயிரம் ரூபாய் வரை வாங்குவோம். மேலும், பாதுகாக்க வேண்டிய நாளுக்கு ஏத்த மாதிரி, சார்ஜ் பண்ணுவோம். உள்ளுர் பிள்ளைகளாதலால், நம்பிக்கையாக ஒப்படைக்கின்றனர்...' என்று சொன்னான்.

"மனம் இருந்தால் மார்க்கம் உண்டு'ன்னு சும்மாவா சொன்னாங்க... எங்கள் ஏரியாவில், நாங்களும் ஒரு காவல்படை துவங்க முடிவு செய்து விட்டோம்.

0 comments:

Post a Comment

காப்பகம்