Thursday, September 4, 2014

முதல் முறை காதிலிருந்து ரத்தம்; 2ஆம் முறை கை ஒடிந்தது: மிட்செல் ஜான்சனின் ஆக்ரோஷம்

ஆஷஸ் தொடரில் ஜேம்ஸ் ஆண்டர்சன் களமிறங்கிய போது ‘அவர் கையை உடை’ என்றார் மைக்கேல் கிளார்க். ஜான்சன் அதனை ஆண்டர்சனுக்குச் செய்தாரோ இல்லையோ தென் ஆப்பிரிக்காவின் மெக்லாரனுக்குச் செய்து விட்டார்.

செவ்வாயன்று ஆஸ்திரேலியாவிடம் தென் ஆப்பிரிக்க தோல்வி அடைந்த போட்டியின் போது மிட்செல் ஜான்சன் பவுன்சரில் முன்கையில் அடிபட்டு நூலிழை எலும்பு முறிவினால் மெக்லாரன் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் சென்சூரியன் மைதானத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மிட்செல் ஜான்சன் பவுன்சர் ஒன்றை வீச அதை எதிர்கொள்ள முடியாது தடுமாறிய மெக்லாரனின் ஹெல்மெட்டை பந்து தாக்க, ஹெல்மெட்டைக் கழற்றினால் காதிலிருந்து ரத்தம் கொட்டியது.

அதன் பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மெக்லாரன் அந்தத் தொடரை தொடர்ந்து விளையாட முடியாமல் போனது.

இப்போது கடந்த செவ்வாய் கிழமை நடைபெற்ற ஒருநாள் போட்டியில் கிட்டத் தட்ட அதே பவுன்சர்தான், ஆனால் ஹராரே பிட்ச் அவ்வளவு வேகம் இல்லாததால் ஜான்சனின் பவுன்சர் அவர் முன்கையைப் பதம் பார்த்து எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இறுதிப் போட்டியில் அவர் விளையாட முடியாது என்பதோடு அடுத்து எப்போது களமிறங்குவார் என்பதிலும் சந்தேகம் எழுந்துள்ளது.

வலது முன்கையில் அடிபட்ட அவர் தொடர்ந்து ஆடினாலும் பெவிலியன் சென்றவுடன் வலியால் துடித்துள்ளார். பிறகு ஸ்கேனில் சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. அடுத்த 3 வாரங்களுக்கு அவர் ஓய்வு எடுக்க வேண்டியதுதான்.

பேட்டிங்கில் ஜான்சன் வர்ணனையாளர் அறைக் கண்ணாடியைப் பதம் பார்த்தார். ஜிம்பாப்வே வீரர் பன்யாங்கரா இவர் ஆஷஸ் தொடரில் வீசிய ஆக்ரோஷத்தைக் காண்பிக்கும் விதமாக ஜிம்பாப்பே வீரர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் வீடியோ ஒன்றைப் பகிர்ந்து கொண்டு அணியை விட்டு நீக்கப்பட்டுள்ளார்.

மிட்செல் ஜான்சனின் திருவிளையாடல்களை நிறுத்தப்போகும் அந்த பேட்ஸ்மென் யார்? என்பதே இப்போதைய கேள்வி

நெற்றியில் விபூதி.. மடாதிபதியுடன் சந்திப்பு.. நாத்திகத்தை மறந்தாரா கமல்..?

பிரிக்கமுடியாத விஷயங்களில் ஒன்று கமல்ஹாசனும் சர்ச்சைகளும். வழக்கமாக கமலின் திரைப்படங்கள்தான் சர்ச்சைகளில் சிக்கும். ஆனால் இப்போது கமலின் ஒரு புகைப்படம்!

மலையாளத்தில் மோகன்லால்,மீனா நடிப்பில், ஜீது ஜோசப் இயக்கத்தில் வெளியாகி வசூலை வாரிக் குவித்த படம் ‘த்ரிஷ்யம்’. த்ரில்லர் படமாக ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்த இது, கமலின் நடிப்பில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் தமிழில் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது

அண்மையில் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் ‘பாபநாசம்’ படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது நாங்குநேரி ஸ்ரீ வானமாமலை மடத்தின் ஜீயர் ஸ்ரீ மதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயரை அவரது மடத்துக்கே சென்று கமல் சந்தித்ததுதான் இப்போது இணையதளங்களில் ஹாட் டாபிக்.

பகுத்தறிவு கருத்துக்களையும், நாத்திக சிந்தனைகளையும் பேசி வரும் கமல் நாங்குநேரி ஜீயரை சந்தித் திருப்பது குறித்து இணையதளங்களில் பலரும் விமர்சித்துள்ளனர். இந்நிலையில் இந்த சந்திப்பின் நோக்கம் என்ன என்பதை தெரிந்து கொள்ள நாங்குநேரியில் வட்டமிட்டபோது...

நாங்குநேரி முழுக்க கமலின் ‘பாப நாசம்’ படத்தின் படப்பிடிப்பு நினைவில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. பேருந்து நிறுத்தத்தில், ஆட்டோ பயணத்தில், பாதசாரிகள் கூட்டத்தில், இப்படி மக்கள் அதிகமாக சந்தித்துக் கொள்ளும் இடங்களில் எல்லாம் இதைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள். “கமலு நல்ல எலுமிச்சம் பழ கலரு பாத்தியாடே!”, “என்னமா நடிக்கறாரு?” என்று நெல்லைச் சீமையின் மண் வாசனையோடு பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அதே நேரத்தில் மற்றொரு தரப்பினர், “அன்பே சிவம் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் அன்புதான் கடவுள் என்றும், தன்னை நாத்திகவாதி என்றும் காட்டிக் கொண்ட கமல் வான மாமலை மடத்தின் ஜீயரை ஏன் சந்திக்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

மரியாதை நிமித்தமான சந்திப்பு

இந்த சந்திப்பு குறித்து நாங்கு நேரியில் உள்ள வானமாமலை மடத்தின் 31வது ஜீயரான ஸ்ரீ மதுரகவி வான மாமலை ராமானுஜ ஜீயரிடம் கேட் டோம். “அவர் நடித்து வரும் படத்தின் ஆன்மீக காட்சி ஒன்றை நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் வைத்து எடுத்தார்கள். இந்த கோவில் மடத்தின் சொத்து என்பதால் மரியாதை நிமித்தமாகவே சந்தித்தார்.மொத்தம் 5 நிமிடங்கள் மட்டுமே இந்த சந்திப்பு நடைபெற்றது. இதில் ஆன்மிகம் குறித்து எதுவும் பேசிக் கொள்ளவில்லை.தொடர்ந்து மடத்தில் உள்ள பழங்கால பல்லக்குகள் போன்றவற்றையும் புகைப் படம் எடுத்து சென்றதாக மடத்தின் சிப்பந்திகள் தெரிவித்தனர்” என்றார் ஜீயர்.

உங்களுடனான சந்திப்புக்கு பின்பு அவர் ஆன்மிகப் பாதையில் திரும்ப வாய்ப்பு உள்ளதா என்று கேட்டபோது, “அவர் முகத்தோற்றமும், அதில் குடி கொண்டிருக்கும் அமைதியுமே இதற்கு பதில் சொல்லும்” என்று புதிர் போட்டு முடித்தார்.

இதற்கிடையே பாபநாசம் திரைப் படத்திற்கு வசனம் எழுதியுள்ள எழுத்தாளர் ஜெயமோகன், இந்த சந்திப்பு குறித்து தனது வலைதளத்தில் விளக்கம் அளித்திருக்கின்றார். அதில், “வானமாமலை ஆலயத்தில் படப்பிடிப்பு நடந்த போது நானும் அங்கிருந்தேன். நாங்குநேரி வானமா மலை ஆலயத்தில் வெளிப்பிரகாரத்தில் சில பகுதிகள் மட்டும் மடத்தின் கட்டுப் பாட்டில் உள்ளது. அங்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி கோரினோம். ஜீயர் அனுமதி அளித்தார்.அங்கு படப்பிடிப்பு நடந்த போது கமல் ஜீயரை சந்தித்து மரியாதை செலுத்தினார். அந்தப் புகைப்படம்தான் அது. நாத்திகர் என்றால் மரியாதை தெரியாதவர் என்பதாக நான் நினைக்கவில்லை.திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகளாரை காண ஒருமுறை ஈ.வெ.ரா. சென்றார். திரும்பும் போது அவர் அளித்த விபூதியை நெற்றியில் அணிந்து கொண்ட படமும் வெளியாகியது” என்று குறிப்பிட்டுள்ளார்.

நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு நயன்தாராதான் காரணம்..!

"நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு நயன்தாராதான் காரணம்" என்று நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம் நடித்து வரும் 'நண்பேன்டா' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. ராஜேஷின் உதவி இயக்குநர் ஜெகதீஷ் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது, நயன்தாராவுடன் காதல், உதயநிதி தற்கொலை முயற்சி என செய்திகள் பரவியது. இதற்கு உதயநிதி தரப்பில் இருந்து எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படவில்லை.

இந்நிலையில், முதன்முறையாக இச்செய்திக்கு விளக்கம் அளித்து பேட்டி ஒன்றில் உதயநிதி ஸ்டாலின் கூறும்போது, "நான் மருத்துவமனைக்குப் போக நயன்தாராவும் ஒரு விதத்தில் காரணம்தான். ஆனால், அது தற்கொலை முயற்சி இல்லை.

'நண்பேன்டா' படத்தில் ஒரு ஃபைட் சீன். அதில் நயன்தாராவை நான் சுத்திவிட, அவர் வில்லனை அறைந்துவிட்டு திரும்ப வருகிற மாதிரி ஒரு காட்சி. ஆனால், நான் சுத்திவிட்டதும் என்னையே அவர் அடித்துவிட்டார். அவரது நகம் என் இடது கண்ணில் குத்தி ரத்தம் வழிந்தது.

அதனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கட்டுப் போட்டு ரெஸ்ட் எடுக்கிற அளவுக்கு காயம். அதுதான் நயன்தாராவுக்கும் என் மருத்துவமனை விசிட்டுக்குமான தொடர்பு" என்றார் உதயநிதி ஸ்டாலின்.

Tuesday, September 2, 2014

உங்கள் CV, RESUME, BIO DATA என்ன வித்தியாசம்..? - இதைப்படிங்க..!

முதன் முதலில் இன்டர்வியூ செல்பவராக இருந்தாலும் சரி, இல்லை இதுவரை 10-15 முறை இன்டர்வியூவை சந்தித்தவராக இருந்தாலும் சரி. சிலருக்கு இன்னமும் நாம் கொடுக்கும் நம் தகவல்கள் அடங்கிய பக்கத்தை எப்படி பெயரிடுவது என்பது குழப்பமாகவே இருக்கும்! அதனை CV, RESUME, BIO DATA இப்படி மூன்றில் எப்படி குறிப்பிடுவது என்பது தீராத குழப்பமாக உள்ளது. சிலர் இது மூன்றும் ஒன்று தானே, இதில் பெயரிடுவது தான் வேறு என்கின்றனர். ஆனால் உண்மையில் இந்த மூன்றுக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது. அந்த வித்தியாசம் என்னவெனில்...

பயோ-டேட்டா (BIO-DATA)

*  ஒரு பக்க அளவில் நம் பண்புகள், பொழுதுபோக்குகள், எந்தத் துறையில் எந்தப் பிரிவில் ஆர்வம், கல்வி தகுதி அடங்கிய அறிக்கை ஆகியவற்றை குறிப்பிட்டு ஒரு பக்கத்திற்கு மிகாமல் அளிப்பது தான் பயோ-டேட்டா!

* இது ஒருவரை பற்றிய அடிப்படை தகவல்களை அளிக்க உதவும் ஒரு சிறு அறிக்கையாக இருக்கும். இதனை பெரும்பாலும் ஒரு சந்திப்பின் போது அறிமுகத்திற்காக பயன்படுத்துவார்கள்.

* முதல் முறையாக இன்டர்வியூவிற்கு செல்லும் செல்பவர்கள் அதனை எடுத்து செல்வது தான் சிறந்தது. கல்லூரி மாணவர்கள் சிலர் ரெஸ்யூம் என்று இதனை குறிப்பிடுகிறார்கள் ஆனால் இது வெறும் பயோ-டேட்டா தான்.

ரெஸ்யூம் (RESUME)

* ரெஸ்யூம் என்பது ஒருவரது திறன், கல்வி தகுதி, அனுபவம் குறித்த தகவல்கள் அடங்கிய அறிக்கையாகும். இது ஒன்று முதல் இரண்டு பக்க அளவில் இருக்கலாம்.

* இதனை பெரும்பாலும் புதிய வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் அல்லது துறை மாறி விண்ணப்பிப்பவர்கள் பயன்படுத்தலாம். இதனை பயன்படுத்துவதன் மூலம் ஒருவரது தனித்திறன், அவரது கல்வித்தகுதி அடிப்படையில் முன்னுரிமை கிடைக்க இது வழிவகுக்கும். 

CV எனும் கரிக்குலம் விட்டே,

* இது சற்று பெரியது, பயோ-டேட்டா அல்லது ரெஸ்யூம்வை போல அல்லாமல் சற்று விரிவாக இருக்கும். இதில் ஒருவரை பற்றிய விரிவான சிறு விளக்கம் மற்றும் அவரது திறன், அனுபவம் பற்றிய சிறு விளக்கம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

* இதனை வேலைக்கு செல்பவர் அல்லது பெரிய பதவியில் இருப்பவர் இன்னொரு நிறுவனத்தில் பெரிய பதவிக்கு விண்ணப்பிக்கும் போதும் பயன்படுத்தப்படும்.

இவை தான் இந்த மூன்று தகவல் அறிக்கைகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம்! இதனை தேர்வு செய்யும் போது சரியாக தேர்வு செய்தாலே உங்களை மதிப்பிடுபவருக்கு உங்கள் மீது ஒரு நல்ல அணுகுமுறையை உண்டாக்கும். 

அதனால் இதனை தயார் செய்யும் போது கவனமாகவும், தெளிவாகவும், புரியும்படியும் உங்கள் தகவல்களை அளிக்க பழகுங்கள்.

தவறாக அனுப்பிய குறுஞ்செய்தியை படிக்கும் முன் அழிக்கலாம்...!

உங்கள் நண்பருக்கோ, காதலிக்கோ நீங்கள தவறாக அனுப்பிய குறுஞ்செய்தியைப் பற்றி இனி கவலைப்படவேண்டாம். அவர்கள் அதைப் படிக்கும் முன்னரே அழித்துவிடும் புது செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

"இன்விஸிபிள் டெக்ஸ்ட்" (“Invisible Text”) எனும் இந்த செயலி, பயனர்கள் அனுப்பிய குறுஞ்செய்தியை, பெறுபவர் படிக்கும் முன்னரே அழித்துவிடும் வசதியைக் கொண்டுள்ளது. இதில் ஒரே சிக்கல், செயலி அழிக்கும் வரை, அந்த குறுஞ்செய்தி படிக்கப்படாமல் இருக்க வேண்டும்.

இதே போல, வீடியோ மற்றும் குரல் பதிவுகள், புகைப்படங்கள் ஆகியவற்றை அனுப்பிவிட்டு, அவை குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே பெறுநர்களின் மொபைலில் இருக்குமாறு நேரத்தை நிர்ணயிக்கும் டைமர் வசதியும் இதில் உள்ளது.

ஆண்ட்ராய்ட், ஆப்பிள் ஐஓஎஸ் மற்றும் பிளாக்பெர்ரி மொபைல்களுக்கு தற்போது இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இளைய சமுதாயத்திற்கு மிகவும் பயனுள்ள செயலி அல்லவா! கூடவே ஒரு முக்கிய தகவல்: உங்கள் குறுஞ்செய்தி மற்றும் படங்களை பெறுபவரது மொபைலிலும், "இன்விஸிபிள் டெக்ஸ்ட்" செயலி இருந்தால்தான் இந்த அம்சம் வேலை செய்யும்.

காப்பகம்