Showing posts with label விளையாட்டு. Show all posts
Showing posts with label விளையாட்டு. Show all posts

Wednesday, October 1, 2014

ஆசிய விளையாட்டில் பதக்கத்தை ஏற்க மறுத்த இந்திய வீராங்கனை அதிகாரிகள் மீது சரமாரியாக சாடல்

சர்ச்சைக்குரிய அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய வீராங்கனை மிகவும் வேதனை அடைந்து தனக்கு அளித்த வெண்கலப் பதக்கத்தை ஏற்க மறுத்துவிட்டார். இதனால் பார்வையாளர்கள் மற்றும் அதிகாரிகள் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆசிய விளையாட்டில் பெண்களுக்கான குத்துச்சண்டையில் லைட்வெயிட் பிரிவின் (57-60 கிலோ) அரைஇறுதியில் அனுபவம் வாய்ந்த இந்தியாவின்

எல்.சரிதாதேவியும், தென்கொரியாவின் ஜினா பார்க்கும் நேற்று கோதாவில் இறங்கினர். இந்த ஆட்டத்தில் ஆரம்பத்தில் இருந்தே சரிதாதேவி ஆக்ரோஷம் காட்டினார். எதிராளி நிலைகுலையும் அளவுக்கு சரமாரி குத்துகளை விட்டார். சரிதாதேவியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் தடுமாறியதை காண முடிந்தது. ஆனால் 3 பேர் கொண்ட நடுவர்கள் குழு 2-வது ரவுண்டில் மட்டுமே சரிதாதேவிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது.

மற்ற மூன்று ரவுண்டுகளிலும் நடுவர்களின் அதிகபட்ச கருணை என்னவோ ‘உள்ளூர் வாசி’ மீது விழுந்து விட்டது. இதனால் சிறப்பாக செயல்பட்ட போதிலும் துரதிர்ஷ்டவசமாக 0-3 என்ற கணக்கில் சரிதா  தேவி வெற்றி வாய்ப்பை இழக்க நேரிட்டது. சரிதாதேவி தான் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களும், ஜினா பார்க்கின் கையை நடுவர் பிடித்து உயர்த்தியதை கண்டு வியப்படைந்தனர். நடுவர்களுக்கு எதிராக அங்கிருந்த நமது நாட்டு ரசிகர்கள் குரல் எழுப்பினார்கள். சிலர் தண்ணீர் பாட்டில்களையும் தூக்கி எறிந்தனர். ‘நீங்கள்  குத்துச்சண்டையை கொன்று விட்டீர்கள்’ என்று சரிதாவின் கணவர் கோஷமிட்டார்.

இந்திய குத்துச்சண்டை குழுவினரும் கடும் அதிருப்திக்குள்ளானர்கள். தனக்கு அநீதி இழைக்கப்பட்டதை நினைத்து வேதனை தாங்காமல் சரிதாதேவி கண்ணீர் விட்டு அழுதார். முன்னாள் ஆசிய சாம்பியனான 32 வயதான சரிதாதேவி மணிப்பூரைச் சேர்ந்தவர். இதைத் தொடர்ந்து இந்திய அதிகாரிகளும் நடுவர்களின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய செய்வதில் தோல்வி அடைந்துவிட்டனர். என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தொடந்து மனம் கலங்கிய நிலையிலே சரிதா தேவி காணப்பட்டார். போட்டி முடிந்த பின்னர் பரிசு அளிக்கப்பட்டது. பரிசு அளிக்கப்பட்ட இருந்த அரங்கிற்கு வந்த சரிதா தேவிக்கு பதக்கம் வழங்கப்பட்டது. ஆனால் அவர் பதக்கத்தை ஏற்க மறுத்துவிட்டார். பதக்கத்தை கழுத்தில் அணியவும் மறுத்துவிட்டார். பின்னர் பதக்கத்தை அங்கேயே வைத்துவிட்டு வந்துவிட்டார். பின்னர் பதக்கம் உரிய அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. பதக்கம் அளிக்கப்பட்ட அரங்கில் தொடர்ந்து அழுத வண்ணமே சரிதா தேவி இருந்தார். இது அங்கு இருந்தவர்கள் மனதை கலங்க செய்தது.

இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்கால குத்துச்சண்டை வீரர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் வண்ணம் போட்டியிட போகிறேன். இது ஏற்றுக் கொள்ள முடியாது. என்று சரிதா கூறினார். மேலும் அவர் இந்திய அதிகாரிகளை சரமாரியாக சாடியுள்ளார். "இச்சம்பவம் நடந்து 24 மணிநேரம் நடந்தும் எந்த ஒரு அதிகாரியும் என்னுடன் பேசவரவில்லை. நன்றாக இருக்கிறேனா என்று கூட கேட்கவில்லை. இந்திய அதிகாரிகள் பதக்கம் பெறுபவர்களுடன் போட்டோ எடுக்க மட்டும் அருகே வருகிறார்கள். வேறு எதுவும் செய்வது இல்லை." என்று சரமாரியாக தனது குற்றச்சாட்டை சரிதா தேவி முன்வைத்துள்ளார்.

Sunday, September 14, 2014

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் - வரலாறு, சாதனைகள்..!

ஐரோப்பிய நாடுகளில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையே நடைபெறும் யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் போட்டி சர்வதேச அளவில் புகழ்பெற்றது. அதே பாணியில் கிரிக்கெட்டில் உள்நாட்டில் 20 ஓவர் போட்டியில் சாதித்த அணிகள் வெளிநாடுகளில் வலுவாக உள்ள அணிகளுடன் மோதுவதே சாம்பியன்ஸ் லீக் போட்டி.

இந்தியாவில் ஐபிஎல் போட்டி பெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து சாம்பியன்ஸ் லீக் போட்டி அறிமுகப்படுத் தப்பட்டது. 2008-ம் ஆண்டில் முதல்முறை யாக சாம்பியன்ஸ் லீக் நடத்த திட்டமிடப் பட்டது. எனினும் மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து அந்த முயற்சி கைவிடப்பட்டது. இதையடுத்து 2009-ம் ஆண்டு முதல்முறையாக சாம்பியன்ஸ் லீக் போட்டி நடத்தப்பட்டது. இப்போது 6-வது ஆண்டாக போட்டி நடைபெறவுள்ளது.

இதுவரை நடைபெற்ற 5 சாம்பியன் லீக் போட்டிகளில் மும்பை இண்டியன்ஸ் இருமுறை சாம்பியன் பட்டம் வென்றுள் ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், நியூசவுத் வேல்ஸ் புளு, சிட்னி சிக்ஸர் ஆகிய அணிகள் தலா ஒருமுறை சாம்பியனா கியுள்ளன. இந்தியா, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அணிகள் தவிர பிற அணிகள் சாம்பியன் ஆனதில்லை. 2009, 2011, 2013 ஆகிய ஆண்டுகள் இந்தியாவிலும், 2010, 2012 ஆகிய ஆண்டுகளில் தென்னாப்பிரிக்காவிலும் சாம்பியன்ஸ் லீக் நடைபெற்றது. இப்போது தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்தியாவில் போட்டி நடைபெறவுள்ளது.

ரெய்னா முதலிடம்

சாம்பியன்ஸ் லீக் போட்டியில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுரேஷ் ரெய்னா முதலிடத்தில் உள்ளார். மொத்தம் 19 ஆட்டங்களில் களமிறங்கியுள்ள அவர் 608 ரன்கள் குவித்துள்ளார். 94 ரன்கள் அடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தது ஒரு இன்னிங்ஸில் அவரது அதிகபட்ச ரன் ஆகும். 4 அரை சதங்கள் எடுத்துள்ளார். அவரது சராசரி 33.77

மும்பை இண்டியன்ஸ், ட்ரினிடாட் அண்ட் டோபாக்கோ அணிகளுக்காக விளையாடியுள்ள போல்லார்ட் இப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார். அவர் 25 ஆட்டங்களில் 592 ரன்கள் எடுத்துள்ளார்.

டெல்லி டேர் டெவில்ஸ், நியூ சவுத் வேல்ஸ் அணிகளுக்காக விளையாடிய டேவிட் வார்னர் 556 ரன்களுடன் (13 ஆட்டங்கள்) 3-வது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய முரளி விஜய் 497 ரன்களுடன் (19 ஆட்டங்கள்) 4-வது இடத்திலும் உள்ளனர்.

வெற்றிகளை குவித்த சூப்பர் கிங்ஸ்

சாம்பியன்ஸ் லீக் போட்டியில் அதிக வெற்றிகளை குவித்த அணி என்ற பெருமையை சூப்பர் கிங்ஸ் பெற்றுள்ளது. இதுவரை 19 ஆட்டங்களில் களமிறங்கியுள்ள சூப்பர் கிங்ஸ் 11 வெற்றிகளையும் 7 தோல்விகளையும் பெற்றுள்ளது. ஓர் ஆட்டம் டையில் முடிந்துள்ளது.

இதற்கு அடுத்தபடியாக மும்பை இண்டியன்ஸ் உள்ளது. அந்த அணி 19 ஆட்டங்களில் பங்கேற்று 10 வெற்றிகளையும், 7 தோல்விகளையும் பெற்றுள்ளது. இரு ஆட்டங்களில் முடிவு கிடைக்கவில்லை. மூன்றாவது இடத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி உள்ளது. 15 ஆட்டங்களில் விளையாடியுள்ள இந்த அணி 7 வெற்றிகளையும், 8 தோல்விகளையும் சந்தித்துள்ளது. ஹைவேல்ட் லயன்ஸ், வாரியர்ஸ் ஆகிய அணிகள் தலா 6 வெற்றிகளை பெற்றுள்ளன.

அதிக விக்கெட் எடுத்தவர்கள்

சாம்பியன்ஸ் லீக் போட்டியில் அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இண்டியன்ஸ், டிரினிடாட் அண்ட் டோபாக்கோ அணிகளில் விளையாடிய டேயன் பிராவோ முதலிடத்தில் உள்ளார். அவர் 18 போட்டிகளில் பங்கேற்று 28 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடரஸ், டிரினிடாட் அண்ட் டோபாக்கோ அணிகளுக்காக விளையாடியுள்ள சுனில் நரைன் 15 ஆட்டங்களில் 27 விக்கெட் வீழ்த்திய 2-வது இடத்தில் உள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அஸ்வின் 25 விக்கெட்டுகளுடன் (19 ஆட்டங்கள்) 3-வது இடத்திலும், மும்பை இண்டியன்ஸ் வீரர் லசித் மலிங்கா 24 விக்கெட்டுகளுடன் (14 ஆட்டங்கள்) 4-வது இடத்திலும், டிரினிடாட் அண்ட் டோபாக்கோ அணி வீரர் ரவி ராம்பால் 23 விக்கெட்டுகளுடன் (18 ஆட்டங்கள்) 5-வது இடத்திலும் உள்ளனர்.

Thursday, September 4, 2014

முதல் முறை காதிலிருந்து ரத்தம்; 2ஆம் முறை கை ஒடிந்தது: மிட்செல் ஜான்சனின் ஆக்ரோஷம்

ஆஷஸ் தொடரில் ஜேம்ஸ் ஆண்டர்சன் களமிறங்கிய போது ‘அவர் கையை உடை’ என்றார் மைக்கேல் கிளார்க். ஜான்சன் அதனை ஆண்டர்சனுக்குச் செய்தாரோ இல்லையோ தென் ஆப்பிரிக்காவின் மெக்லாரனுக்குச் செய்து விட்டார்.

செவ்வாயன்று ஆஸ்திரேலியாவிடம் தென் ஆப்பிரிக்க தோல்வி அடைந்த போட்டியின் போது மிட்செல் ஜான்சன் பவுன்சரில் முன்கையில் அடிபட்டு நூலிழை எலும்பு முறிவினால் மெக்லாரன் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் சென்சூரியன் மைதானத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மிட்செல் ஜான்சன் பவுன்சர் ஒன்றை வீச அதை எதிர்கொள்ள முடியாது தடுமாறிய மெக்லாரனின் ஹெல்மெட்டை பந்து தாக்க, ஹெல்மெட்டைக் கழற்றினால் காதிலிருந்து ரத்தம் கொட்டியது.

அதன் பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மெக்லாரன் அந்தத் தொடரை தொடர்ந்து விளையாட முடியாமல் போனது.

இப்போது கடந்த செவ்வாய் கிழமை நடைபெற்ற ஒருநாள் போட்டியில் கிட்டத் தட்ட அதே பவுன்சர்தான், ஆனால் ஹராரே பிட்ச் அவ்வளவு வேகம் இல்லாததால் ஜான்சனின் பவுன்சர் அவர் முன்கையைப் பதம் பார்த்து எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இறுதிப் போட்டியில் அவர் விளையாட முடியாது என்பதோடு அடுத்து எப்போது களமிறங்குவார் என்பதிலும் சந்தேகம் எழுந்துள்ளது.

வலது முன்கையில் அடிபட்ட அவர் தொடர்ந்து ஆடினாலும் பெவிலியன் சென்றவுடன் வலியால் துடித்துள்ளார். பிறகு ஸ்கேனில் சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. அடுத்த 3 வாரங்களுக்கு அவர் ஓய்வு எடுக்க வேண்டியதுதான்.

பேட்டிங்கில் ஜான்சன் வர்ணனையாளர் அறைக் கண்ணாடியைப் பதம் பார்த்தார். ஜிம்பாப்வே வீரர் பன்யாங்கரா இவர் ஆஷஸ் தொடரில் வீசிய ஆக்ரோஷத்தைக் காண்பிக்கும் விதமாக ஜிம்பாப்பே வீரர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் வீடியோ ஒன்றைப் பகிர்ந்து கொண்டு அணியை விட்டு நீக்கப்பட்டுள்ளார்.

மிட்செல் ஜான்சனின் திருவிளையாடல்களை நிறுத்தப்போகும் அந்த பேட்ஸ்மென் யார்? என்பதே இப்போதைய கேள்வி

Saturday, August 23, 2014

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான அணிகள் அறிவிப்பு

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான அணிகள் நேற்று அறிவிக்கப்பட்டது. 8 வீரர்கள் தங்கள் சொந்த நாட்டு அணிக்கு விளையாடாமல் தவிர்த்துள்ளனர்.

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்:- 6-வது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 17-ந் தேதி முதல் அக்டோபர் 4-ந் தேதி வரை ராய்ப்பூர், மொகாலி, ஐதராபாத், பெங்களூர் ஆகிய இடங்களில் நடக்கிறது.

இந்த போட்டியில் விளையாட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (இந்தியா), டால்பின்ஸ் (தென் ஆப்பிரிக்கா), பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் (ஆஸ்திரேலியா), சென்னை சூப்பர் கிங்ஸ் (இந்தியா, ஏ பிரிவு), கிங்ஸ் லெவன் பஞ்சாப் (இந்தியா), கேப் கோப்ராஸ் (தென் ஆப்பிரிக்கா), ஹோபர்ட் ஹரிகேன்ஸ் (ஆஸ்திரேலியா), பார்படோஸ் டிரைடென்ஸ் (வெஸ்ட் இண்டீஸ், பி பிரிவு) ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.

அணிகள் அறிவிப்பு:- முன்னதாக தகுதி சுற்று ஆட்டங்கள் செப்டம்பர் 13-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நடக்கிறது. இதில் லாகூர் லயன்ஸ் (பாகிஸ்தான்), மும்பை இந்தியன்ஸ்(இந்தியா), நார்த்தன் நைட்ஸ் (நியூசிலாந்து), சதர்ன் எக்ஸ்பிரஸ் (இலங்கை) அணிகள் மோதுகின்றன. இதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் பிரதான சுற்றில் எஞ்சிய 8 அணிகளுடன் இணையும்.

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் போட்டியில் விளையாடும் அணிகளின் வீரர்கள் பட்டியலை போட்டி அமைப்பு குழு நேற்று அறிவித்துள்ளது. இந்த போட்டியில் 8 வீரர்கள் தங்கள் நாட்டின் உள்ளூர் கிளப் அணி தகுதி பெற்று இருந்தாலும் அதில் விளையாடுவதை தவிர்த்து, ஐ.பி.எல். அணிகளில் விளையாட முடிவு செய்துள்ளனர்.

சென்னை அணியில் சுமித்:- நியூசிலாந்து அதிரடி மன்னன் கோரி ஆண்டர்சன், வெஸ்ட் இண்டீஸ் ஆல்-ரவுண்டர் பொல்லார்ட், இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா ஆகியோர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும், ஆஸ்திரேலிய வீரர் ஜார்ஜ் பெய்லி, தென் ஆப்பிரிக்க அதிரடி ஆட்டக்காரர் டேவிட் மில்லர் ஆகியோர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காகவும், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், தென் ஆப்பிரிக்க ஆல்-ரவுண்டர் காலிஸ் ஆகியோர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காகவும், வெஸ்ட் இண்டீஸ் வீரர் வெய்ன் சுமித் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் தங்கள் சொந்த அணியை துறந்து ஐ.பி.எல். அணிக்காக ஆடுகிறார்கள்.

சாம்பியன்ஸ் லீக் போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வருமாறு:-

டோனி (கேப்டன்), சுரேஷ்ரெய்னா, நெஹரா, மிதுன் மன்ஹாஸ், அஸ்வின், ஈஸ்வர் பாண்டே, பவான் நெஜி, ரவீந்திர ஜடேஜா, மொகித் ஷர்மா, வெய்ன் சுமித், வெய்ன் பிராவோ, ஜான் ஹேஸ்டிங்ஸ், பிரன்டன் மெக்கல்லம், சாமுவேல் பத்ரீ, பாப் டுபிளிஸ்சிஸ்.

Sunday, August 17, 2014

125 ஆண்டு கால சாதனையை முறியடித்தார், ஹெராத்

* கொழும்பில் நடந்து வரும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத் 33.1 ஓவர்களில் 127 ரன்கள் விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளை அள்ளினார். இதன் மூலம் இடக்கை பவுலர்களில் ஒரு இன்னிங்சில் அதிக விக்கெட்டுகளை சாய்த்த வீரர் என்ற அபூர்வமான சிறப்புக்கு சொந்தக்காரர் ஆனார். இதற்கு முன்பு 1889–ம் ஆண்டு இங்கிலாந்து இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஜானி பிரிக்ஸ் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 11 ரன்கள் விட்டுக்கொடுத்து 8 விக்கெட் எடுத்ததே இந்த வகையில் உலக சாதனையாக இருந்தது. 125 ஆண்டு காலமாக ஜானி பிரிக்ஸ் வசம் இருந்த இச்சாதனையை நேற்று 36 வயதான ஹெராத் முறியடித்தார்.

* 137 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தப்படுவது இது 18–வது நிகழ்வாகும். இதில் இங்கிலாந்தின் ஜிம் லாகெர், இந்தியாவின் அனில் கும்பிளே ஆகியோர் இன்னிங்சில் தலா 10 விக்கெட்டுகளை வீழ்த்தியதும் அடங்கும்.

* சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் முரளிதரனுக்கு பிறகு (2 முறை 1998–ம் ஆண்டு மற்றும் 2002–ம் ஆண்டுகளில்) இன்னிங்சில் 9 விக்கெட் கைப்பற்றிய 2–வது இலங்கை பந்து வீச்சாளர் என்ற சிறப்பையும் ஹெராத் பெற்றார்.

* பாகிஸ்தானுக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இலங்கை பவுலர் என்ற பெருமையை முரளிதரனிடம் (16 டெஸ்டில் 80 விக்கெட்) ஹெராத் தட்டிப்பறித்துள்ளார். அவர் அந்த அணிக்கு எதிராக இதுவரை 17 டெஸ்டில் விளையாடி 83 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். மொத்தத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நிறைய விக்கெட்டுகள் எடுத்தவர்களின் வரிசையில் இந்தியாவின் கபில்தேவ் (29 டெஸ்டில் 99 விக்கெட்), ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே (15 டெஸ்டில் 90 விக்கெட்) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் ஹெராத் இருக்கிறார்.

Sunday, January 19, 2014

2005 உலக தடகள பைனல்: அஞ்சு ஜார்ஜுக்கு தங்கம்!


மொனாக்கோவில் 2005-ல் நடைபெற்ற உலக தடகள பைனலில் நீளம் தாண்டுதலில் தங்கம் வென்ற ரஷிய வீராங்கனை தத்யானா கோட்டோவா ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து அவருடைய சாதனை அழிக்கப்பட்டு, அந்தப் போட்டியில் 2-வது இடத்தைப் பிடித்த இந்திய வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ், முதலிடத்தைப் பிடித்ததாக இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இது சர்வதேச தடகள சம்மேளனத்தின் இணைய தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவின் அஞ்சு பாபி ஜார்ஜ் தங்கப் பதக்கமும், அமெரிக்காவின் கிரேஸ் உப்ஷா வெள்ளிப் பதக்கமும், பிரான்ஸின் யூனிஸ் பர்பர் வெண்கலப் பதக்கமும் வென்றதாக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் உலக தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அஞ்சு பாபி ஜார்ஜ் பெற்றுள்ளார்.

இது தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்துள்ள அஞ்சு பாபி ஜார்ஜ், “2005 உலக தடகள பைனல் போட்டியில் நான் தங்கப் பதக்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டிருப்பதாக இந்திய தடகளம் சம்மேளனம் தெரிவித்தது.

அதனால் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளேன். எனது 9 ஆண்டுகால காத்திருப்புக்கு இப்போது பலன் கிடைத்திருக்கிறது. எனது காலத்தில் நீளம் தாண்டுதலில் பங்கேற்ற ரஷிய வீராங்கனைகள் சிலர் மீது எனக்கு சந்தேகம் இருந்தது. அவர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தியிருக்கலாம் என நினைத்தேன்” என்றார்.

Tuesday, January 7, 2014

ஏழு அணிகள், ஏழு வீரர்கள் கொண்ட ஏழு ஓவர் கிரிக்கெட்!



துபையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று ஐசிசி மற்றும் பிசிசிஐ ஆதரவுடன் 7 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரை நடத்த முடிவு செய்துள்ளது. இந்த தொடருக்கு 7பிஎல் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 7 அணிகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர்.

7 அணிகளுக்கும் அபுதாபி, அஜ்மான், துபை, புஜைரா, சார்ஜா, ரசல்-ஹைமா, உம் அல்-கைவாய்ன் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த போட்டியில் ஒவ்வொரு அணியிலும் 7 வீரர்கள் மட்டும் தான் இடம் பெறுவார்கள். போட்டியும் 7 ஓவர்களை கொண்டதாக இருக்கும்.

இந்த கிரிக்கெட் போட்டி அறிமுக விழா இந்த வார இறுதியில் துபையில் நடக்கிறது. இதற்கான விழாவில் இந்திய அணியின் கேப்டன் டோனி, நட்சத்திர வீரர் ரெய்னா ஆகியோர் கலந்துகொண்டு போட்டி தொடர்பான அறிவுப்புகளை வெளியிடுகின்றனர். போட்டிகள் வரும் மார்ச் மாதம் துபையில் நடக்கிறது.

காப்பகம்