Saturday, December 7, 2013

குட்டீஸ்களுக்கு உணவு ஊட்டும் போது பொறுமை முக்கியம்!

 


குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது என்பது ஒரு கலை. ஆனால் அதையே மிகவும் கஷ்டமான காரியமாக நினைத்து குழந்தைகளை உண்ணவைக்க பாகீரத பிரயத்தனம் செய்கின்றனர் சில பெற்றோர்கள். ஏனெனில் கொடுக்கும் உணவை, வயிறு நிறையும் வரையில் சமர்த்தாக சாப்பிடும் குழந்தைகள் மிகக்குறைவு. சில குழந்தைகள் உணவை விழுங்காமல் அப்படியே வெளியே தள்ளிவிடுவார்கள். குழந்தைகளின் உண்ணும் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்ய அவர்களுக்கு ஏற்ற உணவுகளை தயாரித்து அளிக்கவேண்டும் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள். அவர்கள் தரும் ஆலோசனைகள் உங்களுக்காக.

ருசியான உணவு

குழந்தைகளுக்கு மூன்று மணிநேரத்திற்கு ஒருமுறை சிறிதளவு ஆகாரம் கொடுப்பது அவசியம். அதில் மூன்று முறை சாதம், காய்கறி உள்ளிட்ட உணவுகளும், இருமுறை சிநாக்ஸ்வகையாகவும், பின்னர் ஜூஸ், பால் போன்றவகையாகவும் இருப்பது அவசியம். தயிர் சாதம், காரட் மசியல், பழக்கூழ் என குழந்தைகளுக்கு பிடித்தமாதிரியான உணவுகளை தயாரித்து அளிப்பது அவர்களின் உண்ணும் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும்.

தானியங்கள், பயிறு, பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள் என குழந்தைகளின் உணவுகளை திட்டமிட்டு தயாரித்து அளிக்கவேண்டும். புரதச்சத்து நிறைந்த மாமிச உணவுகள், சீஸ், பீன்ஸ் போன்றவைகளைக் கொண்டு தயாரித்த உணவுகளை அளிக்கவேண்டும். பிரட், ஆப்பிள், சூப், போன்றவைகளை இரவு நேரங்களில் கலர்புல்லாக தயாரித்து அளித்தால் குழந்தைகள் ஆர்வமுடன் சாப்பிடுவார்கள்.

சரியான அளவு

குழந்தைகளின் வாய்க்குள் எந்த அளவிற்கு உணவு பிடிக்குமோ அந்த அளவிற்கு மட்டுமே உணவுப்பொருளை வைக்கவேண்டும். அதிகமாக சாப்பிடவேண்டும் என்பதற்காக எக்கச்சக்க உணவுகளை திணிப்பதால் தொண்டைக்குழியில் சிக்கி குழந்தைகள் சிரமப்படும். அதுவே உணவின் மீதான வெறுப்பை ஏற்படுத்திவிடும்.

ஊட்டச்சத்து உணவுகள்

புதிய வகை உணவுகளை அறிமுகப்படுத்தும் போது குறைந்த அளவு கொடுத்து குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுகிறதா? என்பதை கவனித்து பின்னர் உணவை அளிக்கவேண்டும். குழந்தைகளுக்கு வறுத்த, பொரித்த உணவுகளை கொடுப்பதை விட நார்ச்சத்துள்ள உணவுகளை அறிமுகப்படுத்தினால் அவர்களுக்கு வயிறு தொடர்பான நோய்கள் ஏற்படுவது தவிர்க்கப்படும்.

ஜங்க் ஃபுட் வகைகளைகளை அதிகம் தருவதற்கு பதிலாக மாலை நேரங்களில் பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள் உணவுகளை பழக்கப்படுத்துவது அவர்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்க வழி ஏற்படும்.

பொறுமை அவசியம்

குழந்தைகள் இயல்பிலேயே வாயில் படும் பொருட்களை வெளியில் தள்ள முயற்சி செய்யும். நாளடைவில் அந்த பழக்கம் மாறிய பின்னர் உணவை விழுங்கத் தொடங்கும். அதனால், நாம்தான் பொறுமையாக உணவை அவர்களுக்கு ஊட்டிவிட வேண்டும்.

குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டிக்கொண்டே மெதுவாக உணவு ஊட்டவேண்டும். குழந்தையில் நாவில் உள்ள சுவை நரம்புகளுக்கு ஏற்ப உணவை ருசியாக தயாரித்து அளித்தால் குழந்தைகள் உணவு உட்கொள்வார்கள்.

ஸ்பூன் எச்சரிக்கை

இன்னும் சில குழந்தைகளுக்கு முதன் முறையாக ஸ்பூன் கொண்டு உணவை கொடுக்கும் போது பிடிக்காமல் போகலாம். உணவை சாப்பிட மறுத்தால், நமது ஆள்காட்டி விரலை நன்கு சுத்தமாக கழுகி அதில் உணவை சிறிய அளவில் தடவி குழந்தைக்கு கொடுக்கலாம். உணவு சுவை பழகிய பின்னர் ஸ்பூன் கொண்டு கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கு ஸ்பூன்கள் கொண்டு உணவு ஊட்டும் போது மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். சிறு குழந்தைகள் மிக வேகமாக கையால் தட்டிவிடும். அப்போது குழந்தையின் வாயில் அல்லது முகத்தில் ஸ்பூன் பட்டு காயம் ஏற்பட்டுவிட வாய்ப்பு உள்ளது.

அதனால், எக்காரணம் கொண்டும் கூர்மையான, வெட்டும்படி உள்ள சில்வர் ஸ்பூன்களை உபயோகிக்கக் கூடாது. குழந்தைகளுக்கு என்றே உள்ள பிரத்தியோக குட்டி ப்ளாஸ்டிக் ஸ்பூன்களை பயன்படுத்துவதுதான் பாதுகாப்பானது.

முன் உதாரணம்

நம்முடைய உணவுப் பழக்கமே குழந்தைகளை தொற்றிக்கொள்ளும். ஊட்டச்சத்து எதுவும் இல்லாத உணவுகளை பெற்றோர்களே ருசிக்காக வாங்கி உண்ணும் போது அந்த பழக்கம் குழந்தைகளை தொற்றிக்கொள்கிறது. எனவே வீடுகளில் நாம் சத்தான உணவுகளை தயாரித்து உண்பதனால் அதனை குழந்தைகளுக்கு வழங்க முடியும். அவர்களுக்கும் சரிவிகித சத்துணவு கிடைக்கும். எனவே குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு நம்முடைய உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்வது நலம் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள்.

0 comments:

Post a Comment

காப்பகம்