Saturday, December 28, 2013

வெளிநாட்டுக் கல்வி - கொஞ்சம் திட்டமிட்டால் போதும்...


வெளிநாட்டுக் கல்வியானது பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே சாத்தியம் என்று நினைத்தது அந்தக் காலம். கொஞ்சம் திட்டமிட்டால் போதும்; படிப்பு தகுதிகொண்ட நடுத்தர குடும்பத்து மாணவன்கூட வெளிநாடு சென்று படிக்க முடியும் என்பது இந்தக் காலம். என்றாலும், இந்த உண்மை பலரையும் சென்று சேராததற்கு காரணம், அதுகுறித்த விழிப்பு உணர்வு பரந்த அளவில் மக்களிடம் சென்று சேராததே.


வெளிநாட்டில் கல்வி வாய்ப்புகள் எப்படி உள்ளது? என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும்?


''இந்தியாவில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் இருந்தாலும், உலகளவில் டாப் 100 கல்வி நிறுவனங்களில் நம் நாட்டைச் சேர்ந்தவை எதுவும் இல்லை. வேலையுடன் கூடிய கல்வி, உடனடி வேலை வாய்ப்பைத் தரும் கல்வி என்பது இந்தியாவில் குறைவுதான்.


ஆனால், அயர்லாந்து போன்ற மிகச் சிறிய மேற்கத்திய நாடுகளில்கூட கல்வி, வேலை வாய்ப்போடு பிரிக்க முடியாதவாறு உள்ளது. இந்தியாவில் கல்லூரியில் படித்து முடித்தவர்கள் அடுத்ததாக மேற்படிப்போ, ஆராய்ச்சியோ செய்யவேண்டுமெனில், வேறு கல்வி நிறுவனங்களைத்தான் நாடவேண்டும். ஆனால், வெளிநாடுகளில், கல்லூரியில் சிறப்பாக படிக்கும் மாணவர்களுக்கு அவர்களாகவே முன்வந்து மேற்படிப்பு வாய்ப்புகளை வழங்கு கின்றனர்.


உயர்கல்வி படிப்பிற்காக இங்கு செலவிடத்  தயாராக இருக்கும் தொகைக்குள் வெளிநாட்டுப் படிப்பும் சாத்தியம் என்பது பலருக்கும் தெரிவதில்லை. ஜப்பான் போன்ற நாடுகளில், சிறந்த மாணவர்களுக்கு 60-100 சதவிகிதம் வரை ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது. நான்கு வருட படிப்பில் முதல் இரண்டு வருடம் வகுப்பறை கல்வி எனில், அடுத்த இரண்டு வருடம் வேலை வாய்ப்புடன் கல்வி என்கிற வகையில், சில பாடத் திட்டங்களை எடுத்தால் கல்விக்கான செலவுகளை நாம் எளிதாக ஈடுகட்டிவிட முடியும்.


திட்டமிடல்!


ப்ளஸ் டூ ரிசல்ட் வந்தபிறகு மதிப்பெண் அடிப்படையில் வெளிநாட்டுக் கல்விக்கு திட்டமிடுவதைவிட, ப்ளஸ் டூ முடிப்பதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பிருந்தே திட்டமிடுவது நல்லது. எவ்வளவு மதிப்பெண் வரும் என்கிற எதிர்பார்ப்பு, எந்த கல்வி, எந்த நாடு என்கிற தெளிவு கிடைத்துவிட்டால், விசா நடைமுறைகள் மற்றும் முன்தயாரிப்பு வேலைகளுக்கு எளிதாக இருக்கும். சில கல்வி நிறுவனங்கள் 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில்கூட மாணவர் களைத் தேர்வு செய்கின்றன.


மேலும், ஒவ்வொரு நாட்டிற்கும், ஒவ்வொரு பருவத்திற்கு ஏற்ப கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை இருக்கும். நம்மூரில் மே - ஜூன் மாதங்கள் என்றால், வெளிநாடுகளில் மார்ச் - ஜூலை, ஜனவரி - செப்டம்பர் என கல்விப் பருவத்துக்கேற்ப மாணவர் சேர்க்கை நடக்கும். எனவே, கொஞ்சம் முன்கூட்டியே திட்டமிட்டால், செலவினங்கள், ஸ்காலர்ஷிப், கல்வி நிறுவனங்கள் தேர்வு போன்றவற்றை எளிதாக செய்ய முடியும்.


கல்வி நிறுவனங்கள் தேர்வு!


குறிப்பிட்ட கல்வி நிறுவனம் எவ்வளவு வருடங்கள் பாரம்பரியம் கொண்டது, சர்வதேச அளவில் அந்தக் கல்வி நிறுவனத்தின் ரேங்க், அந்நிறுவனம் வழங்கும் படிப்புகளுக்கு உள்ள சர்வதேச மதிப்பு, அங்கீகாரம், வெளிநாட்டு மாணவர்களுக்கு அந்நிறுவனம் அளிக்கும் விகிதாசாரம், எவ்வளவு பேர் படிக்கின்றனர் என்பதுபோன்ற விவரங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும்.


இந்த விவரங்கள் அந்தக் கல்வி நிறுவனத்தின் இணையதளத்தில் கிடைக்கும் என்றாலும், நமது நாட்டிலிருந்து சென்றிருக்கும் மாணவர்களின் அனுபவங்களைக் கேட்டறிவது, அதே படிப்பு பிற கல்வி நிறுவனங்கள் / நாடுகளில் எப்படி உள்ளது என்று ஒப்பீடு செய்து பார்ப்பது போன்றவற்றின் மூலம் தேர்வு செய்யலாம். சில வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கையை நேரடியாகவே செய்கின்றன. அதுபோன்ற சேர்க்கை முகாம்களிலும் விவரங்களை அறிந்துகொள்ள முடியும்.

தயாராவது!

வெளிநாட்டுக் கல்வி, குறிப்பாக இந்த நாடுதான் என்று முடிவாகிவிட்டால், அதற்குரிய தகுதித் தேர்வு மற்றும் அந்த நாட்டின் மொழியை அறிந்து கொள்வது போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும். குறிப்பாக, அமெரிக்கா, இங்கிலாந்து, அயர்லாந்து, நியூசிலாந்து, நெதர்லாந்து போன்ற நாடுகளுக்கு செல்லவேண்டும் எனில் ஆங்கிலம் அவசியம்.


ஜெர்மனியில் படிக்க ஜெர்மன் தெரிந்திருப்பது கட்டாயம். மலேசியா, சிங்கப்பூரில் அந்நாட்டு மொழி தெரிந்திருக்கவேண்டிய கட்டாயமில்லை. ஐ.இ.எல்.டி.எஸ். (International English Language Testing System);டி.ஓ.இ.ஐ.எல் (Test Of English as a Foreign Language) போன்ற தகுதித் தேர்வுகளை முடித்தால்தான் வெளிநாட்டில் படிப்பு சாத்தியம்.


எம்.பி.ஏ. படிப்பிற்கு ஜி-மேட் (Graduate Management Admission Test)தேர்வும், எம்.சி.ஏ. போன்ற தொழில்நுட்ப படிப்புகளுக்கு ஜி.ஆர்.இ. (Graduate Record Examinations)-போன்ற தகுதித் தேர்வுகளும் சில நாடுகளுக்கு அவசியம். எனவே, இதுபோன்ற தகுதித் தேர்வுகளுக்கு தயாராகிக்கொள்ள வேண்டும்.
வேலை வாய்ப்பு!


வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் படித்து முடித்ததும் உடனடியாக வேலை கிடைத்துவிடும் என்றாலும், படிக்கும் காலத்திலேயே அதற்கான சாத்தியங்களும் உள்ளன. சில நாடுகளில் கட்டுப்பாடுகள் இருந்தாலும், பெரும்பாலான நாடுகளில் படித்துகொண்டே வேலைக்குப் போகும் வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, துபாய் போன்ற நாடுகளில் மாலை நேரம்தான் வகுப்பு என்றால், காலை நேரத்தில் ஃப்ரீ ஜோன் ஏரியாக்களில் மாணவர்கள் பணியாற்ற முடியும். அமெரிக்காவில் வாரத்திற்கு 20 மணிநேரம் பகுதிநேர வேலை பார்க்கலாம்.


இதுதவிர, படிப்போடு சம்பந்தப்பட்ட வேலை வாய்ப்புகளும் உள்ளன. குறிப்பாக, ஒரு வாரத்தில் இரண்டு நாட்கள் வகுப்பறை பாடமும், மூன்று நாட்கள் பணியிடப் பயிற்சியும் தரப்படும். நான்கு வருட கல்வி என்றால் கடைசி இரண்டு வருடங்கள் நேரடி பயிற்சி வகுப்புகளாகத்தான் இருக்கும். சில நாடுகளில், படித்தபிறகு வேலை தேடிக்கொள்வதற்கு ஏற்ப விசா சலுகைகளும் உள்ளன. இச்சலுகை காலத்திற்குள் வேலை தேடிக்கொண்டால் விசாவை புதுப்பித்துக்கொள்ளும் வசதிகளையும் வழங்குகின்றன.
உதவித் தொகைகள்!


எல்லா வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களும் உதவித் தொகை வழங்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், சிறந்த மாணவர் என்றால் ஸ்காலர்ஷிப் கண்டிப்பாக கிடைக்கும். சில நாடுகளில், வெளிநாட்டு மாணவர்களுக்கு மட்டும் இதுபோன்ற உதவித் தொகைகள் கிடைக்கும். குறிப்பாக, ஜப்பானில் மாணவரின் தரத்திற்கு ஏற்ப 100 சதவிகிதம்கூட கல்வி உதவித் தொகை கிடைக்கும். குறிப்பிட்ட மாணவர் தொடர்ச்சியாக அக்கல்வி நிறுவனத்தில் படித்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைத்தால் அவருக்கு உயர்கல்வி, ஆராய்ச்சி கல்வி என அனைத்து வாய்ப்புகளையும் வழங்குகின்றன. சில கல்வி நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் உதவித் தொகைகள் வழங்குகின்றன.


தரமான படிப்பு, படித்து முடித்தவுடன் வேலை என பலவிதங்களில் பயனுள்ளதாக அமையும் வெளிநாட்டுப் படிப்பை நீங்களோ, உங்கள் பிள்ளைகளோ ஏன் படிக்கக்கூடாது?

0 comments:

Post a Comment

காப்பகம்