Sunday, December 15, 2013

ஆஸ்துமாவா? அச்சம் வேண்டாம்!




கொட்டும் பனியும், கடும் குளிருமாக, காலையில் கண்விழிக்கும் போதே 'இன்னும் கொஞ்சம் தூங்கலாமே..!’ என போர்வைக்குள் சுருண்டு படுக்கத் தோன்றும் சொகுசான காலம் இது. இந்தப் பருவத்தில் வெயிலும் வெளிச்சமும் குறைந்து காற்றில் அதிக அளவு ஈரப்பதம் இருப்பதால், பல நோய்களும் வரிசைகட்டி வரக் காத்திருக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு நோய்களின் பாதிப்பு மிக அதிகமாகும்.


அதிலும் டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான இந்த மூன்று மாதங்கள் ஆஸ்துமா பிரச்னை இருப்பவர்களுக்கு ஒவ்வொரு நாளும் சிம்ம சொப்பனம்தான். இந்தப் பாதிப்பிலிருந்து மீள, இன்ஹேலர், வெந்நீர், மாத்திரைகள், மருந்துகள் என ஏகப்பட்ட தற்காப்புகள் தேவைப்படும்.


இந்தக் காலக்கட்டத்தில் ஆஸ்துமா நோயாளிகள் என்னென்ன தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து விளக்கமாகக் கூறுகிறார் சென்னை, ஆஸ்துமா மற்றும் அலர்ஜி நிபுணர் டாக்டர் ஸ்ரீதரன்.


'பொதுவாக ஆஸ்துமா நோயாளிகள், குளிர்காலம் வந்தால்தான் தடுப்பு நடவடிக்கைகளைப் பற்றி யோசிக்கிறார்கள். எதிர்பாராத ஆஸ்துமா தாக்குதல்களைத் தாக்குப்பிடிக்க, பெரிய அளவில் பிரச்னை வராமல் இருக்க சில முக்கியமான நடைமுறை ஆலோசனைகளை எப்போதும் கடைப்பிடிக்க வேண்டும்.


ஆஸ்துமா வந்த பிறகு அதிலிருந்து விடுபடுவதற்கு மருந்துகள் இருப்பது போல, வராமல் தடுப்பதற்கும் தடுப்பு மருந்துகள் உள்ளன'' என்கிற டாக்டர் ஸ்ரீதரன், ஆஸ்துமா ஏற்படுத்தக்கூடிய காரணிகளைப் பற்றி விவரித்தார்.


குளிர்ந்த காற்று: ஆஸ்துமாவுக்கான முக்கியக் காரணங்களில் முதன்மையானது. ஆஸ்துமா என்பது, மூச்சுக்குழல் பாதிப்பு நோய்.  அடுத்தகட்டமாகத்தான் இது நுரையீரலைப் பாதிக்கிறது. காற்றில் குளிர்ச்சி அதிகரிக்கும்போது, மூச்சுக்குழலில் சுருக்கம், வீக்கம், சளி சேர்தல் போன்றவை ஏற்படுகின்றன. இதனால், மூச்சுக்குழலில் அடிப்படைச் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன. சுவாசத்துக்கு உதவும் சிறிய காற்றுக்குழாய்கள் வீக்கம் அடைவதால், காற்றுப்பைகளில் அதிகமாக காற்று தங்கி, சுவாசிப்பது கஷ்டமாகிறது. மார்புத் தசைகள் புடைத்துக்கொண்டு விடுவதால், வலி ஏற்படுகிறது.


காற்றின் ஈரத்தன்மை (humidity): காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும்போது, பலவித மாசுக்களும், ஆஸ்துமா நோய்க்கான காரணிகளும் ஈரக்காற்றின் ஈரத்தன்மையோடு ஒட்டிக்கொண்டு, நீடித்திருக்கும். இவற்றால் ஒவ்வாமை ஏற்பட்டு, ஆஸ்துமா வரக் காரண மாகிறது.


காளான்களின் நுண் அணுக்கள் (mold spores): குளிர், மழைக் காலங்களில் காற்றில், கண்ணுக்குத் தெரியாத காளான்களின் நுண் அணுக்கள் இருக்கும். இவையும் ஆஸ்துமா காரணிகளே.


படுக்கை உண்ணி (dust mite): கண்ணுக்குத் தெரியாத இந்த உண்ணியின் கழிவுப்பொருளை சுவாசிக்கும்போது, அலர்ஜி ஏற்படுகிறது. மருத்துவ உலகில் இதை 'யுனிவர்சல் அலெர்ஜென்’ என்று அழைப்பார்கள். பொதுவாக எல்லோரும் 'ஏர்கண்டிஷன்’ சாதனம், ஆஸ்துமாவுக்கு நல்லதல்ல என்பார்கள். ஆனால், 'ஏசி’ ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஏனெனில், காற்றில் ஈரத்தன்மை அதிகமாக ஆக, காளான்களின் நுண் அணுக்களும், படுக்கை உண்ணிகளும் அதிகமாகும். குறைந்தது 50 சதவிகிதமாவது, ஈரத்தன்மை இருந்தால்தான் இந்த உண்ணியால் உயிர் வாழ முடியும். 'ஏசி’ போடும்போது, ஈரத்தன்மை 30 சதவிகிதமாகக் குறைந்துவிடும். படுக்கை உண்ணியின் தொகையும் குறைவாகவே இருக்கும்.


வைரஸ் தாக்குதல்: குளிர்காலத்தில், குறிப்பிட்ட சில வைரஸ் அதிகம் காணப்படும். நுரையீரலைத் தாக்கக்கூடிய ஆர்.எஸ்.வி. (respiratory syncytial virus) போன்ற வைரஸ் வகைகளும் மூச்சுக்குழலுக்கு அதிகப் பாதிப்பைக் கொடுக்கும். அதிலும், ஒரு வயதுக்குள் உள்ள குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த வைரஸ் தொற்றுக்கு 'பிராங்கியோலைடிஸ்’ என்று பெயர். இதன் அறிகுறியும் பாதிப்பும் ஆஸ்துமா போன்றே இருக்கும். வைரஸ் தொற்றா அல்லது ஆஸ்துமா தாக்குதலா என்று கண்டறிவதுகூடக் கடினம். இது மூச்சுக்குழாய்களில் தாக்கும்போது, மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு ஆஸ்துமா வருவதற்கு வாய்ப்பு உண்டு.


கொசு விரட்டிகள்: மழைக் காலம் வந்தால், கொசுக்களுக்குக் கொண்டாட்டம்தான்.  குளிர்காலத்திலும் இது அதிகமாக உற்பத்தியாக ஆரம்பித்துவிடும். கொசுவை விரட்டுவதற்காக, நாம் உபயோகப்படுத்தும் சுருள்களும் மருந்துகளும்கூட ஆஸ்துமாவை அதிகப்படுத்தும்.


ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த பாதுகாப்பான, வீரியமான மருந்துகள் உள்ளன. மூக்குக்குள் உறிஞ்சும், nasal spray வகைகளை மருத்துவரின் ஆலோசனையுடன் உபயோகிக்கலாம்.


மொத்தத்தில், 'ஆஸ்துமா வந்தால் மட்டுமே சிகிச்சை’ என்ற மனோபாவத்தை மாற்றி, எப்போதுமே மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்வதன் மூலம், குளிர்காலத் தாக்குதல்களிலிருந்து முழுமையாக விடுபடலாம்'' என்கிறார் டாக்டர்.

0 comments:

Post a Comment

காப்பகம்