Saturday, August 23, 2014

நீரிழிவு நோய் குறித்த கட்டுக் கதைகளும்... உண்மைகளும்...!

நீரிழிவு என்பது ஒரு தொற்று நோய்... அதிகமாக சர்க்கரை சாப்பிட்டால் இவ்வியாதி வரும்... இந்த நோய் வந்தால் சர்க்கரையே சாப்பிடக் கூடாது... இது ஒரு பரம்பரை வியாதி, பரம்பரையில்/குடும்பத்தில் யாருக்குமே இவ்வியாதி இல்லையென்றால் உங்களுக்கும் இது வராது... இந்த நோய் வந்தவர்களுக்குக் காயம் ஏற்பட்டால் அவ்வளவு சீக்கிரம் அது ஆறாது... நீரிழிவைக் குணப்படுத்த வல்லது இன்சுலின்...

இப்படி நீரிழிவு நோய் குறித்துப் பலரும் பலவிதமாகப் பேசுவதுண்டு. ஆனால், இவற்றில் எது உண்மை? எது கட்டுக் கதை? இது குறித்து நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

சில மருத்துவர்கள் கூட நீரிழிவு என்பது ஒரு நோயே கிடையாது என்று கூறுவார்கள். இன்சுலின் பற்றாக்குறையால் தான் இந்தக் குறைபாடு ஏற்படுகிறது. இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கிடுகிடுவென அதிகரித்து இருக்கும். இந்த அதிகப்படியான சர்க்கரையைக் குறைக்கவே இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வார்கள்.

இனி, நீரிழிவு குறித்த சில கட்டுக் கதைகளையும், உண்மைகளையும் குறித்து நாம் தெரிந்து கொள்ளலாம்.

கட்டுக் கதை: அதிகமாக சர்க்கரை சாப்பிடுவதால் நீரிழிவு ஏற்படும்.

உண்மை: இன்சுலின் பற்றாக்குறையால் மட்டுமே நீரிழிவு ஏற்படும். இதில் இரண்டு வகை உண்டு. இன்சுலின் குறைவதால் டைப்-1 நீரிழிவு ஏற்படுகிறது. இன்சுலினை நம் உடல் பொதுவாக ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், அதற்குப் பெயர் தான் டைப்-2 நீரிழிவு. பெரும்பாலும், டைப்-2 நீரிழிவு பரம்பரை பரம்பரையாகத் தான் ஏற்படும். உடற்பயிற்சி மற்றும் கட்டுப்பாடான உணவுகள் மூலம் நீரிழிவை சரிக்கட்டலாம். இனிப்புகளைக் குறைவாக உண்பது நலம்.

கட்டுக் கதை: நீரிழிவு ஒரு தொற்று வியாதி ஆகும்.

உண்மை: கணையத்தில் சுரக்கும் இன்சுலின் குறைவால் மட்டுமே நீரிழிவு ஏற்படுகிறது. இதை ஒரு நாளமில்லா நோய் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

கட்டுக் கதை: நீரிழிவு ஏற்பட்டால், இனி வாழ்க்கையில் சர்க்கரையே சாப்பிடக் கூடாது.

உண்மை: நீரிழிவு உள்ளவர்கள் தாராளமாக சர்க்கரையை சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், அளவோடு மட்டுமே. சர்க்கரை மட்டுமல்ல, கார்போஹைட்ரேட் அளவையும் குறைத்துக் கொள்ள வேண்டும். மேலும், உடற்பயிற்சியையும் தொடர்ந்து செய்ய வேண்டும். அப்போது தான் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு சமப்படும்.

கட்டுக் கதை: நீரிழிவு வந்துள்ள குழந்தைகள் இனிப்பே சாப்பிடக் கூடாது.

உண்மை: குழந்தைகளுக்கு நீரிழிவு ஏற்பட்டால், அவர்களுடைய கட்டுப்பாடான உணவில் குறிப்பிட்ட அளவு சர்க்கரை கலந்த உணவையும் சேர்த்துக் கொள்ளலாம். முழுவதும் இனிப்பே சாப்பிடக் கூடாது என்ற கட்டாயம் கிடையாது.

கட்டுக் கதை: இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு சரியாக உள்ளது என்று உங்களுக்குத் தோன்றினால், டாக்டரிடம் செக்கப் செய்ய போக வேண்டியதில்லை.

உண்மை: நீரிழிவை ஒரு நோயாக எடுத்துக் கொள்ளக் கூடாதே தவிர, அதை நாம் கண்டிப்பாக சீரியஸாக எடுத்துக் கொள்ளத் தான் வேண்டும். அடிக்கடி டாக்டரிடம் சென்று செக்கப் செய்து கொள்ள வேண்டும். வழக்கமான உணவுக் கட்டுப்பாட்டையும், உடற்பயிற்சியையும் கண்டிப்பாகத் தொடர வேண்டும்.

கட்டுக் கதை: நீரிழிவு உள்ளவர்களால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கூடியுள்ளதா அல்லது குறைந்திருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க முடியும்.

உண்மை: சர்க்கரையின் அளவை சும்மா ஃபீல் பண்ணி நம்மால் தெரிந்து கொள்ள முடியாது. தாகம், உடல் சோர்வு ஆகியவற்றின் மூலம் சிலர் இதைத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் பலருக்கு இதுப்போன்ற அறிகுறிகள் தோன்றுவதில்லை. எனவே, கண்டிப்பாக இது குறித்து பரிசோதனை மூலம் மட்டுமே தெரிந்து கொள்ள வேண்டும்.

கட்டுக் கதை: சிலருக்கு இரத்தத்தில் அதிக சர்க்கரை இருப்பது இயல்பு தான். அதுவே நீரிழிவுக்கான அறிகுறி அல்ல.

உண்மை: இரத்தத்தில் அதிகமான சர்க்கரை இருப்பது சாதாரண விஷயமில்லை. நீரிழிவு இல்லாதவர்களுக்கு சில நேரங்களில் தற்காலிகமாக அதிக சர்க்கரை இரத்தத்தில் தோன்றும். ஆனாலும், நீரிழிவு உள்ளதா இல்லையா என்பதைப் பரிசோதனைகள் மூலம் உறுதி செய்து கொள்ள முடியும்.

கட்டுக் கதை: சிறிதளவு மட்டுமே நீரிழிவு ஏற்பட்டுள்ளது என்பதற்கு வாய்ப்புள்ளது.

உண்மை: அப்படி சிறிது, பெரிது என்றெல்லாம் கிடையவே கிடையாது. ஒருவருக்கு நீரிழிவு இருக்கிறதா இல்லையா, அது டைப்-1 அல்லது டைப்-2 என்பதுதான் முக்கியம்.

கட்டுக் கதை: இது ஒரு பரம்பரை வியாதி, உங்கள் பரம்பரையில்/குடும்பத்தில் யாருக்குமே இவ்வியாதி இல்லையென்றால் உங்களுக்கும் இது வராது.

உண்மை: உங்கள் பரம்பரையில்/குடும்பத்தில் யாருக்காவது நீரிழிவு இருந்தால், உங்களுக்கும் அது வருவதற்கான வாய்ப்புக்கள் மற்றவர்களை விட அதிகம். பரம்பரையாக நீரிழிவு இல்லாத சிலர் கூட இந்தக் காலத்தில் இந்தக் குறைபாட்டால் அவதிப்படுவதை நாம் காண முடியும். உடல் எடை மற்றும் வாழ்க்கை முறைகள் தான் பெரும்பாலும் இதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

கட்டுக் கதை: நீரிழிவை அவ்வளவு எளிதாகக் கட்டுப்படுத்த முடியாது.

உண்மை: நீரிழிவு என்பது ஒரு வளர்சிதை மாற்றக் குறைபாடு என்பதால் அதைக் கட்டுப்படுத்த நிறைய வாய்ப்புக்கள் உள்ளன. முறையான உடற்பயிற்சிகள், கட்டுப்பாடான உணவுகள், சரியான மருத்துவம்... இம்மூன்றையும் ஒழுங்காகக் கடைப்பிடித்து, நீரிழிவைக் கட்டுக்குள் கொண்டு வந்தவர்கள் நிறைய உண்டு.

கட்டுக் கதை: நீரிழிவை இன்சுலின் குணப்படுத்துகிறது.

உண்மை: நீரிழிவு ஒரு வளர்சிதை மாற்றக் குறைபாடு என்பதால், அது ஒரு குணப்படுத்தக்கூடிய நோயல்ல. தொடர்ந்து இன்சுலினை எடுப்பதால், அதைக் கட்டுப்படுத்த முடியுமே தவிர, முற்றிலும் குணப்படுத்த முடியாது. இரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரை அளவை இன்சுலின் ஊசி கட்டுப்படுத்துகிறது, அவ்வளவே. இன்சுலின் குறைபாடு இருந்து கொண்டே தான் இருக்கும்.

கட்டுக் கதை: நீரிழிவு உள்ள அனைவரும் இன்சுலின் எடுத்துக் கொள்வது அவசியம்.

உண்மை: இன்சுலினை கணையம் சுரக்காததால், டைப்-1 நீரிழிவு உள்ளவர்கள் கண்டிப்பாக இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். ஆனால் சில டைப்-2 நீரிழிவு கொண்டவர்கள், இன்சுலினுடன் சில மாத்திரைகளையும் எடுத்துக் கொண்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு சீராகும்.

கட்டுக் கதை: நீரிழிவுக்கான இன்சுலினை மாத்திரைகள் வடிவிலும் எடுத்துக் கொள்ளலாம்.

உண்மை: இன்சுலினை மாத்திரைகளாகப் போட்டுக் கொள்ள முடியாது. இன்சுலின் என்பது ஒரு புரதம். அதை மாத்திரை வடிவில் எடுத்துக் கொள்ளவே முடியாது. அது இன்சுலினை சுரக்க உதவாது. ஊசிகள், இன்ஹேலர்கள் மூலம் மட்டுமே இன்சுலினை இரத்தத்தில் சுரக்க வைக்க முடியும்.

கட்டுக் கதை: இன்சுலினை அதிக அளவு எடுத்துக் கொண்டால், நீரிழிவு இன்னும் மோசமாகி விடும்.

உண்மை: இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைச் சீராக்கும் வகையில், இன்சுலினை அதிகமாகவோ குறைவாகவோ எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு எவ்வளவு டோஸ் என்பதை உங்கள் டாக்டர் கூறுவார்.

கட்டுக் கதை: குழந்தைகளுக்கு ஏற்படும் நீரிழிவு விரைவில் சரியாகும்.

உண்மை: ஒருபோதும் இல்லை. இன்சுலின் அளவு குறையும் போது, டைப்-1 நீரிழிவு உள்ள குழந்தைகளுக்கு, குணமாகும் வரை எப்போதும் இன்சுலினைக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அதேப்போல், டைப்-2 நீரிழிவுக் குழந்தைளுக்கு இரத்தத்தில் சர்க்கரை அதிகரித்துக் கொண்டே போவதற்கான வாய்ப்புக்கள் மிக அதிகம். எனவே, அதைக் கட்டுப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல!

0 comments:

Post a Comment

காப்பகம்