Sunday, August 24, 2014

திருப்பதி கோவிலில் பிரம்மோற்சவ விழா செப்டம்பர் 26–ந் தேதி தொடக்கம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா அடுத்த மாதம் (செப்டம்பர்)26–ந் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.

பிரம்மோற்சவ விழா:- திருமலை–திருப்பதி தேவஸ்தான அனைத்துத்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் திருமலையில் நடந்தது. கூட்டத்தில் சித்தூர் மாவட்ட கலெக்டர் சித்தார்த்ஜெயின், போலீஸ் சூப்பிரண்டுகள் சீனிவாஸ் (சித்தூர்), கோபிநாத்ஜாட்டி (திருப்பதி), தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு, கோவில் துணை அதிகாரி சின்னம்காரி ரமணா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் எம்.ஜி.கோபால் பேசியதாவது:–

அடுத்த மாதம் (செப்டம்பர்) 26–ந்தேதி மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணிவரை ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று ஆந்திர அரசு சார்பில் முதல்–மந்திரி என்.சந்திரபாபுநாயுடு கலந்து கொண்டு, ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை சமர்ப்பிக்கிறார்.

30–ந்தேதி கருட சேவை நடக்கிறது. அதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். பக்தர்கள் நெரிசலின்றி சாமி தரிசனம் செய்யவும், கேலரிகளில் அமர்ந்து வாகன ஊர்வலத்தின் போது தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். பக்தர்கள் அதிகம் கூடுவதால் கருப்பு பூனைப்படை அதிகாரிகள் வந்து திருமலையில் பாதுகாப்பு பணியை ஆய்வு செய்ய உள்ளனர். அன்று திருப்பதி மலைப்பாதைகளில் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தடையில்லா மின்சாரம்:- அக்டோபர் மாதம் 1–ந்தேதி தங்க தேரோட்டம், 3–ந்தேதி மரத்தேரோட்டம், 4–ந்தேதி சக்கர ஸ்நானம் ஆகிய மிக முக்கிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு 24 மணி நேரமும் அரசு பஸ்களை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் தடையின்றி மின்சாரம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமலையில் கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில் வாகனங்களை ஒழுங்குபடுத்த வேண்டும்.

தனியார் வாகனங்களில் தேவஸ்தானம் நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். திருமலை, திருப்பதி, ரெயில் நிலையம், பஸ் நிலையங்கள் ஆகிய இடங்களை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். வழக்கம்போல் வாகன வீதி உலாவின்போது முன்னால் கலை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:

Post a Comment

காப்பகம்