Thursday, January 9, 2014

வங்கி வாடிக்கையாளர்களின் வரலாற்றில் திருப்பு முனை!




வங்கிகளுக்கு சாதகமாக தற்போது நடைமுறையில் இருந்துவரும் சில விதிமுறைகளை, அவற்றின் வாடிக்கையாளர்களை முன்னிறுத்தி, அவர்களுக்கு சாதகமாக மாற்றி அமைக்கவேண்டும் என்ற உத்தரவை ஜனவரி மாதம் முதல் அமலாக்கப் போவதாக, வங்கிகளின் தரக் கட்டுப்பாடு மற்றும் ஒழுங்கு விதிமுறை ஆணையம் அறிவித்திருக்கிறது. இந்திய வங்கி வாடிக்கையாளர்களின் வரலாற்றில் இதை ஒரு முக்கிய திருப்பு முனையாகக் கருதலாம்.

இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகளின் பொருளாதார செயல்பாடுகளைத்தான் பெரும்பாலும் மேற்பார்வையிட்டு வருகிறது. வாடிக்கையாளர் சேவை தரம் மற்றும் அவர்களின் உரிமை பாதுகாப்பு ஆகிய விஷயங்களில் கவனம் செலுத்தும் பிரத்தியேக நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட சுதந்திரமான தனி அமைப்பாக ஒழுங்கு விதிமுறை ஆணையம் செயல்பட்டு வருகிறது.

வங்கிகளில் கணக்கு துவங்குவது என்பது சாமானியர்களுக்கு இன்னமும் ஒரு கடினமான செயலாகத்தான் இருந்து வருகிறது. அதற்கான வழிமுறைகளை எளிதாக்கி, சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்களை சீர்படுத்த வேண்டும் என்று வங்கிகளை ஆணையம் அறிவுறுத்தியிருக்கிறது.

அதிக வருவாய் ஈட்டும் நோக்கத்துடன், வாடிக்கையாளர்களிடம் முழு விவரங்களை விளக்காமல், அவர்களுக்கு சாதகமான காரணிகளை மட்டும் பெரிது படுத்தி, இன்ஷூரன்ஸ போன்ற வங்கி வியாபாரம் சாராத சில சேவைகளை வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் மீது திணித்துக் கொண்டிருக்கின்றன. விற்பனைக்குப் பின், வாடிக்கையாளர்களுக்கு தேவையான சேவைகளை செய்வதற்கு அவை முன் வருவதில்லை. சில சமயங்களில், வாடிக்கையாளர்களின் முறையீடு இல்லாமலேயே, இம்மாதிரி சேவைகளுக்கான கட்டணங்கள் அவர்கள் கணக்குகளிலிருந்து எடுக்கப்படுகின்றன என்பது போன்ற புகார்களும் பதிவாகியிருக்கின்றன. இம்மாதிரி நிகழ்வுகள் நடக்காமல், வாடிக்கையாளர்களின் நலன் பாதுக்காக்கப்படவேண்டும் என்று வங்கிகள், ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றன.

தற்போதைய தொழில் நுட்ப யுகத்தில், வங்கிகளுக்கு நேரடியாக செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்து, ஏ.டி.எம். மற்றும் இணைய தளங்கள் மூலம் தங்கள் வங்கி கணக்குகளை நிர்வகிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே வேகத்தில், அவர்களுடைய பண பரிவர்த்தனைக்களுக்கான பாதுகாப்பு குறைந்து வருவது ஒரு அச்சுறுத்தலான விஷயமாகும். தொழில் நுட்பத்துடன் கூடிய வங்கி சேவையில் செüகரியங்களுடன், பல இடர்பாடுகளும் (ரிஸ்க்) ஒளிந்திருக்கின்றன.

டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் மூலம் நடக்கும் பணபரிவர்த்தனை களின் போது, கார்டு உரிமையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு, அவர்கள் பெரும் பொருள் இழப்புக்கு ஆளாகின்றனர். வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு சார்ந்த இணையதள தகவல்கள் கடத்தப்பட்டு, அவை முறைகேடாக பயன்படுத்தப்படுகின்றன. அம்மாதிரி இடர்பாடுகளை சந்திக்க நேரிடும் வாடிக்கையாளர்கள், பொருள் இழப்புக்கு ஆளாகின்றனர். இம்மாதிரி அசம்பாவிதங்களின்போது, அனைத்து பொறுப்புகளையும் வாடிக்கையாளர்களின் மீது சுமத்தி, வங்கிகள் இழப்பீடு வழங்காமல் தப்பிக்கும் விதமாகத்தான் தற்போதைய விதிமுறைகள் அமைந்திருக்கின்றன. தவிர்க்கமுடியாமல் இழப்பீடுகள் வழங்கினாலும், அவை காலம் கடந்தே வழங்கப்படுகின்றன.

நவீன தொழில் நுட்ப வசதிகளை வழங்கும் வங்கிகள், வாடிக்கையாளர் களுடன் செய்து கொள்ளும் ஒப்பந்தத்தில் அடங்கியிருக்கும் ஷரத்துக்கள், பெரும்பாலும் வங்கிகளுக்கு சாதகமாகவே அமைந்திருக்கும் விஷயம், நம்மில் பலருக்கு தெரியாது. அதன்படி, பணபரிவர்த்தனைகளின்போது முறைகேடுகள் நடந்தால், அந்த முறைகேடுகள் வங்கியின் அசட்டையால் தான் நடந்தது என்று நிரூபிக்க வேண்டியது வாடிக்கையாளரின் பொறுப்பாகும். வங்கி ஊழியர்கள் பணபரிவர்த்தனை முறைகேடுகளுக்கு துணை போனாலும், வாடிக்கையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு கிடையாது. தங்கள் பணம் பறிபோனதற்கு, அவர்கள்தான் காவல் துறையினரிடம் புகார் அளிக்கவேண்டும் என்ற விதிமுறையும் அமலில் இருக்கிறது.

தற்போதைய நிலைமையை, வாடிக்கையாளர்கள் பக்கம் சாய்க்கும் விதமாக, விதிமுறைகளை வங்கிகள் திருத்தி அமைக்க வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டு இருக்கிறது. அதன்படி, பண இழப்பு சம்பவங்களில், வாடிக்கையாளரின் கவனக்குறைவு முக்கிய பங்கு வகித்ததற்கான ஆதாரங்களை இனி வங்கிகள்தான் சமர்ப்பிக்க வேண்டும். அதனால் வங்கிகள், பண பரிவர்த்தனைகளுக்கான தங்கள் கட்டமைப்பு வசதிகளை மேலும் பலப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

ஒரு கணக்கிலிருந்து, டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் தொடர்ந்து ஒரே நாளில் அல்லது குறுகிய இடைவெளிகளில் பணம் எடுக்கப்பட்டால், வாடிக்கையாளரின் செலவு வரலாற்றின் அடிப்படையில் கணக்கை தொடர்ந்து ஸ்கேன் செய்து, வாடிக்கையாளரின் ஒப்புதலை பெறும் வரை, கார்டை தற்காலிகமாக முடக்கும் மென்பொருள் வசதிகள் வெளிநாடு களில் பயன்படுத்தப்படுகின்றன. இது, முறைகேடுகளை தக்க தருணத்தில் தடுத்து, வாடிக்கையாளரை பெருத்த பொருள் இழப்புகளிலிருந்து பாதுகாக்கும் ஒரு நடவடிக்கையாகும். மேலும், வாடிக்கையாளரின் கவனக்குறைவு உறுதி செய்யப்படாத பட்சத்தில், அவரை அலையவிட்டு, மன உளைச்சல்களுக்கு உள்படுத்தாமல், இழப்பீடுகள் 48 மணி நேரத்திற்குள் பட்டுவாடா செய்யப்படுகின்றன.

மேக்னெடிக் டேப் பொருத்தப்பட்ட கார்டுகளிலிருந்து, வாடிக்கையாளரின் எண் போன்ற ரகசிய தகவல்களை கடத்துவது எளிதாக இருப்பதால், அதற்கு பதிலாக சிப்ஸ் பொருத்திய கார்டுகளின் பயன்பாடு வெளிநாடு களில் அதிகரித்திருக்கின்றன.இதுவும், வாடிக்கையாளர் பாதுகாப்பு சார்ந்த ஒரு நடவடிக்கையாகும். இந்திய வங்கிகள் இம்மாதிரி தொழில் நுட்ப மேம்பாடுகளை ஆராய்ந்து அமல் படுத்தினால்தான், பொருளாதார மோசடிகளால் ஏற்படும் நஷ்டங்களிலிருந்து தப்பிக்க முடியும்.

ஏ.டி.எம். பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், அதை பயன்படுத்தும் வங்கி வாடிக்கையாளர்களுக்கு தகுந்த உயிர் மற்றும் பண பாதுகாப்பை அளிக்கவேண்டியது வங்கிகளின் கடமையாகும். இந்த இயந்திரங்கள், வங்கிகளின் மினி கிளைகளாக செயல்படுகின்றன. அதனால், வங்கி கிளைகளின் நேரடி வேலை பளு குறைந்து, நிர்வாக செலவும் மிச்சமாகிறது. ஆகையால், வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்காமல், ஏ.டி.எம். மையங்களுக்கு, அவை இயங்கும் எல்லா நேரத்திலும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவேண்டியது வங்கிகளின் தலையாய கடமையாகும். விழித்திரை பதிவுகள் மூலம், ஏ.டி.எம். வாடிக்கையாளர்களை அடையாளம் காணும் முறை பல நாடுகளில் நடைமுறையில் இருக்கிறது. ஏ.டி.எம். பணபரிமாற்றங்களில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் ஆள்மாறாட்ட மோசடிகளை தடுக்க,விரல் ரேகைகளை பதிவு செய்து, வாடிக்கையாளரை அடையாளம் காணும் முறையை வங்கிகள் உடனடியாக அமல்படுத்தினால், மோசடி குற்றங்களை பெருமளவில் தவிர்க்கலாம்.

இந்திய வங்கிகளின் வரலாற்றில் முதன் முறையாக, சேவைகளின் தரத்தை பொருத்து, வங்கிகளை உயர் ரகம், நடுத்தரம், அதற்கும் கீழ் என்று தரம் பிரிக்கும் பணியையும் ஒழுங்குமுறை ஆணையம் துவங்கியிருக்கிறது. ஒருவர் கணக்கு துவங்கும் போது கேட்கப்படும் கேள்விகள், கோரப்படும் ஆவணங்கள் ஆகியவை இந்த தரப் பிரிவிற்கு சில காரணிகளாக அமையும். இதைத் தவிர, அன்றாடம் வாடிக்கையாளர் கள் நடத்தப்படும் முறை, அவர்கள் அளிக்கும் புகார்கள், குறைகள் தீர்க்கும் முறை, தொலைபேசி உரையாடல்களின் தரம் ஆகியவைகளும், தரவரிசை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். வங்கிகளின் பொருளாதார பலம் இதில் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படமாட்டாது. இந்த தரவரிசைப் பட்டியலை, இணையதளத்தில் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் வெளியிட உத்தேசித்திருப்பதாக ஆணையம் தெரிவித்திருக்கிறது.

ஒரு குறிப்பிட்ட வங்கியில் கணக்கு துவங்குவது அல்லது ஒரு வங்கியில் இருக்கும் கணக்கை மற்றொரு வங்கிக்கு மாற்றுவது போன்ற முடிவுகளை எடுக்க, இம்மாதிரி தர வரிசை பட்டியல் வாடிக்கையாளர்களுக்கு வழிகாட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். தங்கள் சேவை தரத்தை உயர்த்திக்கொள்ள, இந்த தகவல்கள் வங்கிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்திய பொருளாதாரத்தின் தூண்களாக விளங்கும் வங்கிகள், தங்கள் வியாபாரத்தின் தூண்களான வாடிக்கையாளர்களுக்கு உரிய அனைத்து தரமான சேவைகளையும், பாரபட்சமின்றி வழங்க வேண்டும் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பும் ஆகும். அதை பூர்த்தி செய்ய, வங்கிகள் தங்களை பெருமளவில் தயார் படுத்திக்கொள்ளவேண்டும் என்பதுதான் தற்போதைய நிலைமையாகும்.

வங்கிகளின் சேவை தரத்தை பலப்படுத்தும் நோக்கத்துடன் கூடிய ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவிப்பு, வாடிக்கையாளர்களின் காதுகளில் தேனாக வந்து பாய்ந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

0 comments:

Post a Comment

காப்பகம்