Thursday, January 9, 2014

வந்தாச்சு கேப்ஸ்யூல் பேபி..!



'கொஞ்சி மகிழக் குழந்தை இல்லையே...’ என்று ஏங்குபவர்களின் எண்ணிக்கை குறையும் வகையில் மருத்துவ அறிவியலும், ஆராய்ச்சியும், டெக்னாலஜியும் படுவேகமாக வளர்ந்து நம்மை வியக்கவைக்கின்றன.

கருத்தரித்தலில் பிரச்னை உள்ள தம்பதிகளுக்கு, ஐ.யு.ஐ., ஐ.வி.எஃப். போன்ற செயற்கைக் கருவூட்டல் முறைகள், இப்போது வரப்பிரசாதமாக உள்ளன. இதில், ஐ.வி.எஃப். சிகிச்சைக்கான கட்டணம் சில லட்சங்கள். சிகிச்சை வெற்றிபெறுவதற்கான வாய்ப்பும் குறைவுதான். ஓரிரு தடவை ஐ.வி.எஃப். முறையில் சிகிச்சைக்கு முயற்சித்தும், குழந்தை பெறாதவர்களும்கூட உள்ளனர். தற்போது ஐ.வி.எஃப். சிகிச்சையின் கட்டணத்தை மூன்றில் ஒன்றாகக் குறைக்கும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஈரோட்டைச் சேர்ந்த மாருதி மருத்துவமனை அறிமுகம் செய்துள்ளது.

சேலத்தைச் சேர்ந்த வேலப்பன், பங்கஜம் தம்பதியினருக்கு இந்த நவீனத் தொழில்நுட்பத்தின் மூலம் பெண்குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து ஈரோடு மாருதி மெடிக்கல் சென்டரின் மகப்பேறு இன்மைக்கான சிறப்பு மருத்துவர் நிர்மலா சதாசிவம் மற்றும் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சதாசிவம் ஆகிய இருவரிடமும் பேசினோம்.

'ஐ.வி.எஃப். முறை சிகிச்சையில், சினைப்பை முட்டை தூண்டப்படுதல், முட்டையை வெளியே எடுத்தல், விந்து அணுவுடன் சேர்த்துக் கருவை உருவாக்குதல், உருவான கருவை குறிப்பிட்ட நாட்கள் வரை இன்குபேட்டரில் வளர்த்தல், வளர்ந்த கருவை, கருப்பைக்கு மாற்றுவது என்று பல கட்டங்கள் உள்ளன. இந்தச் சிகிச்சைக்கு வெளிநாடுகளில் இருந்து விலை உயர்ந்த மருந்துகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. மருந்து தவிர்த்து, இன்குபேட்டர் உள்ளிட்ட மேலும் சில காரணங்களால் சிகிச்சைக்கான செலவு அதிகரிக்கிறது.

இந்தச் செலவைக் குறைக்கும் வகையில், கேப்ஸ்யூல் ஐ.வி.எஃப். என்ற நவீன சிகிச்சை வந்துள்ளது. இதில் முட்டை, குறைந்த அளவில் தூண்டப்பட்டு எடுக்கப்படுகிறது. வெளியே எடுக்கப்படும் முட்டை, ஆண் உயிரணுவுடன் சேர்க்கப்படும். இதை கேப்ஸ்யூலில் உயிர்ச் சத்து திரவத்துடன் சேர்த்து இன்குபேட்டரில்வைத்து வளர்க்காமல், பெண்ணின் ஜனனப்பாதையின் உட்பகுதியில் பாதுகாப்பாகவைக்கப்படும். உயிரணு குறைவு பிரச்னை இருந்தால், நுண்ணோக்கியில் பார்த்தபடி, விந்தணுவை முட்டைக்குள் செலுத்தி, அதை கேப்ஸ்யூலில்வைத்து ஜனனப்பாதையில் வைப்போம். இதனால், இயற்கையான சூழ்நிலையில் கரு வளர்வதற்குத் தேவையான தட்பவெப்பநிலை கிடைக்கிறது. கரு வளர்ச்சி அடைந்ததும், அது கர்ப்பப்பைக்கு மாற்றப்படும். கர்ப்பப்பையில் ஒட்டிக்கொள்ளும் அந்தக் கரு நன்கு வளர்ச்சி அடையும். இன்குபேட்டர், அதிக ஆற்றல்மிக்க மருந்துகள் பயன்படுத்துவது குறைக்கப்படுவதால் சிகிச்சைக்கான செலவும் பெருமளவு குறைந்துவிடுகிறது. இந்த கேப்ஸ்யூல் உள்ளிட்ட மருந்துகளை இந்தியாவிலேயே தயாரிக்கும்போது ஐ.வி.எஃப். கட்டணம் தற்போது உள்ளதைவிட, நான்கில் ஒரு பங்காகக் குறைந்துவிடும்' என்றார் டாக்டர்.

பணம் அதிகம் செலவழித்து, சோதனைக்குழாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கும் தம்பதிகளின் வயிற்றில் பால்வார்க்கும் செய்திதான்!

0 comments:

Post a Comment

காப்பகம்