Sunday, January 5, 2014

நீங்கள் நல்ல நுகர்வோரா?




ஒரு பிரபலமான பிஸ்கெட் நிறுவனம். அவர்கள் தயாரித்த 50 கிராம் இருக்க வேண்டிய பிஸ்கெட் பாக்கெட் ஒன்று 36 கிராம்தான் இருந்தது. உடனே நாங்கள் நோட்டீஸ் அனுப்பினோம். உடனே நிறுவனத்தில் இருந்து செட்டில்மென்ட் பேசி முடிக்க வந்தார்கள். நாங்கள் ஒத்துக் கொள்ளாமல் வழக்குத் தொடுத்திருக்கிறோம். ஒரு பிஸ்கெட் பாக்கெட்டில் 14 கிராம் பிஸ்கெட் குறைந்தால் என்ன? பெரிய இழப்பா? என்று கேட்கலாம். ஆனால் அந்த ஒரு பிஸ்கெட் பாக்கெட்டைப் போல அந்தப் பேட்சில் தயாரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பிஸ்கெட் பாக்கெட்களும் அதே எடையில்தானே இருந்திருக்கும்? அப்படியானால் அந்த நிறுவனத்துக்கு எவ்வளவு லாபம்? நாடு முழுவதும் உள்ள நுகர்வோர்களுக்கு எவ்வளவு நஷ்டம்? வழக்கு இப்போது நடந்து கொண்டிருக்கிறது.


நாடு முழுக்க அதிக வலைப் பின்னல்களை வைத்திருக்கக் கூடிய தொலைபேசி நிறுவனம் ஒன்று ஒரு நுகர்வோருக்கு இண்டர்நெட் இணைப்பு கொடுக்கிறது. அதற்கு ஒரு மோடம் தேவை. அந்த மோடத்தை வேறு ஒரு நிறுவனம் தயாரிக்க, அதை வாங்கி தொலை பேசி நிறுவனத்தின் ஷோ ரூமில் விற்கிறார்கள். இணைப்பு வாங்கிய நுகர்வோர் இண்டர்நெட்டைப் பயன்படுத்த முடியவில்லை. காரணம் அந்த மோடம் வேலை செய்யவில்லை. அவர் தொலைபேசி நிறுவனத்திடம் கேட்டால் மோடம் தயாரித்த நிறுவனத்தில் கேட்கச் சொல்லியிருக்கிறார்கள். மோடம் தயாரித்த நிறுவனத்தில் கேட்டால் தொலை பேசி நிறுவனத்தில் கேட்கச் சொல்லியிருக்கிறார்கள். இப்படியே அலைந்து திரிந்தாலும் இண்டர் நெட் மட்டும் வேலை செய்யவில்லை. ஆனால் வேலை செய்யாத இண்டர்நெட்டுக்கு 4 மாத பில்லை மட்டும் அனுப்பி வைத்துவிட்டது தொலைபேசி நிறுவனம். அந்த நுகர்வோர் எங்களிடம் வந்தார். வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.


சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர்களிடம் நோட்டு புத்தகங்களுக்கு மொத்தமாகப் பணம் வாங்கிக் கொண்டு, நோட்டுப் புத்தகங்களைக் கொடுத்தார்கள்.


ஆனால் அந்த நோட்டுப் புத்தகத்தில் விலை (ஙதட) குறிப்பிடப்படவில்லை. நோட்டின் விலை கூடுதலாக இருக்கட்டும். அல்லது குறைவாக இருக்கட்டும். விலை என்ற ஒன்றைப் போட வேண்டாமா? ஒரு பொருளை வாங்குபவருக்கு அதன் விலை தெரிய வேண்டாமா? இதை எதிர்த்தும் வழக்குப் போட்டிருக்கிறோம்.


ஒருவர் மூட்டு வலி என்று மருத்துவமனைக்குப் போனார். அங்கே டாக்டர்கள் எழுதிக் கொடுத்த மாத்திரையை மருத்துவமனை நடத்தும் மருந்துக் கடையில் வாங்கினார். மாத்திரையை வாங்கிச் சாப்பிட்டதும் முற்றிலும் நடக்கவே முடியாமல் போய்விட்டது. காரணம் என்னவென்று பார்த்தால், காலாவதியான மாத்திரையைக் கொடுத்திருக்கிறார்கள். மருத்துவமனையில் போய்க்கேட்டால் அவரை மிரட்டியிருக்கிறார்கள். அதை எதிர்த்தும் வழக்கு போட்டிருக்கிறோம்.


நீங்கள் பேருந்தில் செல்கிறீர்கள். ஓட்டுநர் நீங்கள் இறங்க வேண்டிய இடத்தில் நிறுத்தாமல், அடுத்த நிறுத்தத்தில் நிறுத்துகிறார். நுகர்வோர் என்ற முறையில் நீங்கள் வழக்குப் போட முடியும். ஆனால் உங்களை அடுத்த நிறுத்தத்தில் இறக்கிவிட்டதற்கு ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த இடத்தில் தான் பலரும் என்ன செய்வதென்று தெரியாமல் விழிப்பார்கள். போக்குவரத்து நிறுவனத்துக்கு உடனே கம்ப்ளெயின்ட் பண்ண வேண்டும். அதை உங்கள் கைபேசியில் இருந்தே பண்ணலாம். அது ஓர் ஆதாரமாக இருக்கும். உங்களுடன் பயணம் செய்த சக பயணி ஒருவரின் துணையை நாடி, அவரைச் சாட்சி சொல்லச் சொல்லலாம். இது போன்ற புகார் தெரிவிக்க வேண்டிய எண்களை நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.


மருந்து வாங்கும்போது, பில் மறக்காமல் வாங்க வேண்டும். மருந்து காலாவதியானதா என்று பார்க்க வேண்டும். அதைவிட முக்கியமானது, பில்லில் மருந்தின் பெயரை எழுதுவதோடு, அந்த மருந்தின் பேட்ச் எண்ணையும் குறிப்பிடச் சொல்ல வேண்டும். அப்படி ஒரு பில்லை வாங்கிக் கொண்டால், ஏதேனும் பிரச்னை என்றால் உடனே வழக்குப் போட முடியும்.


எந்தப் பொருளை வாங்கினாலும் எப்போதும் பில் வாங்க வேண்டும். குறிப்பிடப்பட்டுள்ள ஙதட விலைக்கே தருகிறார்களா? என்று பார்க்க வேண்டும். கேரண்டி, வாரண்டி கார்டுகளில் கையெழுத்து இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். இவை எல்லாம் ஒரு நுகர்வோர் என்ற முறையில் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டியவையாகும். அப்போதுதான் நீங்கள் ஒரு நல்ல நுகர்வோராக இருக்க முடியும்.

0 comments:

Post a Comment

காப்பகம்