Thursday, January 16, 2014

பொற்கோயில் ராணுவ நடவடிக்கை இங்கிலாந்து திட்டம் வடிவமைத்து கொடுத்ததா?



பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள பொற்கோயிலில், சீக்கிய தீவிரவாதிகள் பெருமளவில் மறைந்திருந்தனர். அங்கிருந்தபடியே அவர்கள் தங்கள் சதித் திட்டங்களை தீட்டி வந்தனர். இதனால் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக, 1984ம் ஆண்டு ஜூன் மாதம், அதிரடியாக பொற்கோயிலில் ராணுவம் நுழைந்தது.

அங்கிருந்து தீவிரவாதிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இச்சண்டையில் பலர் இறந்தனர். இதற்கு ராணுவ தளபதி லெப்டினன்ட் கே.எஸ்.பிரார் தலைமை வகித்தார். ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டதால், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மீது சீக்கியர்கள் ஆத்திரம் அடைந்தனர். இதனால் அதே ஆண்டில், அக்டோபர் மாதம் சீக்கிய பாதுகாவலரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இச்சம்பவம் நடந்து சுமார் 30 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இப்போது புதிய சர்ச்சை கிளம்பி உள்ளது. அதாவது, பொற்கோயில் ராணுவ நடவடிக்கைக்கு இங்கிலாந்துதான் திட்டம் வடிவமைத்து கொடுத்தது என்பதுதான் அது.இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்த ராணுவ உயரதிகாரி ஒருவர், தன் நாட்டு உள்துறை அமைச்சரின் செயலாளருக்கு, 1984 பிப்ரவரி 23ல் எழுதிய ரகசிய கடிதம் தற்போது வெளியாகி உள்ளது.

அதில், ‘‘பொற்கோயில் ராணுவ நடவடிக்கைக்கு உதவும்படி இந்திராகாந்தி கேட்டுக் கொண்டதன்பேரில், பிரதமரின் (இங்கிலாந்து) ஒப்புதலுக்கு இணங்க இதற்கான திட்டம் வடிவமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இத்திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கிறேன்.

ஆனால், இங்கிலாந்துதான் இத்திட்டத்தை வடிவமைத்து கொடுத்தது என்று வெளியே தெரியவந்தால், அங்கு வசிக்கும் சீக்கிய சமுதாயத்தினர் இடையே பதற்றம் எழ வாய்ப்புள்ளது’’ என்று கூறப்பட்டுள்ளது.ஆனால், இத்தகவலை ராணுவ நடவடிக்கையை முன்னின்று மேற்கொண்ட தளபதி கே.எஸ்.பிரார் மறுத்துள்ளார்.

‘‘பொற்கோயில் ராணுவ நடவடிக்கை முழுவதையும் இந்திய ராணுவம்தான் வடிவமைத்து செயல்படுத்தியது. எனக்கு தெரிந்தவரையில், வெளிநாடுகள் எதுவும் இதில் தலையிடவில்லை’’ என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே, இங்கிலாந்து அரசின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பொற்கோயில் ராணுவ நடவடிக்கைக்கு இங்கிலாந்து உதவியதாக வெளியான குற்றச்சாட்டு தொடர்பாக உடனடியாக விசாரிக்கும்படி அமைச்சரவை செயலாளருக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்’’ என்று கூறியுள்ளார்.

தொழிலாளர் கட்சியை சேர்ந்த எம்.பி.யான டாம் வாட்சன் கூறுகையில், ‘‘இங்கிலாந்து பிரதமராக இருந்த மார்க்ரெட் தாட்சர், நாடாளுமன்றத்துக்கு தெரிவிக்காமலேயே இதுகுறித்து முடிவு எடுத்து செயல்பட்டார். இதன் மூலம்தான் ரகசியமாக ராணுவ நடவடிக்கை திட்டம் அளிக்கப்பட்டது’’ என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

காப்பகம்