இனி அந்த பருப்பு வேகாது. 2013ம் ஆண்டு அதை சுத்தமாக மாற்றிவிட்டது. யெஸ், இனி நூறு ப்ளஸ் கோடி வசூலை எந்தப் படம் கடந்தாலும் அது சுமாரான வெற்றிதான். எந்தப் படம் குறைந்தது 200 ப்ளஸ் கோடியை கடந்து கல்லாவை நிரப்புகிறதோ அதுவே சூப்பர் ஹிட் மூவி.
இதை ஆரம்பித்து வைத்தப் புண்ணியம் ஷாருக் கான் நடிப்பில் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் படத்தை சாரும். இதை உறுதிப்படுத்திய பெருமை சென்ற ஆண்டு இறுதியில் வெளியான தூம் 3ஐ போய்ச் சேரும்.
நம்புங்கள் ஸ்வாமி, முதல் மூன்றே நாட்களில் தூம் 3 நூறு ப்ளஸ் கோடி ரூபாயை வசூலில் கடந்துவிட்டது. அதுவும் இந்தியத் தாய்த் திருநாட்டில் மட்டும். டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துவிட்டது என்றெல்லாம் நரம்பு புடைக்க சவுண்ட் விட்டது சினிமாவுக்கு பொருந்தாது போல.
ரைட், இப்படியாக சென்ற ஆண்டு குத்த வைத்து வசூலில் கும்மிய இந்தித் திரையுலகம் இந்த வருடம் எப்படியிருக்கும்? அதே ஜெகஜோதியாகத்தான் என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்கிறார்கள். லேசாக கண்களுக்குத் தெரியும் கீற்றுகள் அந்த பிரகாசத்தைதான் மெய்ப்பிக்கின்றன.
சென்னை எக்ஸ்பிரஸ் கொடுத்த எனர்ஜியில் ஹேப்பி நியூ இயர் என களம் இறங்குகிறார் ஷாருக் கான். இந்தப் படத்திலும் அவருக்கு ஜோடி அதே தீபிகா படுகோன்தான். இயக்கியிருப்பவர் ஷாருக்கானின் ஆருயிர் தோழியும், இந்தியாவின் முக்கியமான நடன இயக்குநர்களில் ஒருவருமான ஃபாரா கான். ஓம் சாந்தி ஓம் ப்ளாக் பஸ்டருக்கு பிறகு அதே கூட்டணி கைகோர்த்திருப்பதால் ஏரியா பரபரவென இருக்கிறது.
வழக்கமாக ரம்ஜான் பண்டிகை சல்மான் கானின் பட ரிலீஸ் இல்லாமல் பூர்த்தியாகாது. கடந்த சில ஆண்டுகளாகவே இதுதான் நிலை. சல்மான் கானே நம்பிக்கை வைக்காத பாடிகாட் கூட ரசிகர்களின் வரவேற்பில் சக்கைப்போடு போட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இப்படி செல்போனும் சிம்கார்டும் போல் இருந்த ரம்ஜானும் சல்மான் கானும் சென்ற ஆண்டு கா விட்டுக் கொண்டார்கள். சல்லு பாயின் படம் கடந்த ஈத்தில் வெளியாகவில்லை. இதை பிரஸ்டீஜ் இஷுவாக நினைப்பவர், 2014ல் வட்டியும் முதலுமாக அதை ஈடுகட்ட வருகிறார். தெலுங்கில் கிக் என பம்பர் ஹிட் ஆகி தமிழில் தில்லாலங்கடி என சூப்பர் ஹிட் ஆன படம், இப்போது சல்மான் கான் நடிப்பில் கிக் என்ற பெயரிலேயே தயாராகி வருகிறது. இந்தப் படத்தின் டெலிவரியை ரம்ஜான் அன்றுதான் குறித்திருக்கிறார்கள். இதுபோக மென்டல் என்னும் படமும் இவர் நடிப்பில் உருவாகி வருகிறது. வெளியாகும்போது இந்த டைட்டில் மாறலாம்.
இன்றைய தேதி வரையில் அதிக நூறு ப்ளஸ் கோடி வசூல் படங்களை இயக்கியிருப்பவர் என்ற பெருமைக்குரிய இயக்குநர் ரோஹித் ஷெட்டி, இந்த ஆண்டும் தன் பங்குக்கு ஓர் படத்தை சமூகம் முன் படைக்கப்போகிறார். அதுதான் சிங்ஹம் 2. சந்தேகமே வேண்டாம். தமிழ் சிங்கம் 2வின் ரீமேக்தான். முதல் பார்ட்டில் ஹீரோவாக நடித்த அஜய் தேவ்கன்தான் இதிலும் நாயகன்.
போலவே ரவுடி ராத்தோர் படத்துக்கு பிறகு எந்த ப்ளாக் பஸ்டரையும் கொடுக்காத அக்ஷய் குமார், இந்த ஆண்டு சொல்லி அடிக்கும் கில்லியாக இரு படங்களுடன் களம் இறங்குகிறார். இரண்டுமே வெற்றிப் பெற்ற தமிழ்ப் படங்களின் ரீமேக்தான் என்பதால் நாம் காலரை உயர்த்திக் கொள்ளலாம். அதில் ஒன்று ரமணா ரீமேக். தில்லியில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்திருக்கும் இந்த நேரத்தில் ஊழல், லஞ்சத்துக்கு எதிராக ஒரு பேராசிரியர் தன் மாணவர்களை திரட்டி போராடியதை சரசரவென விவரிக்கும் இந்தப் படம் தோற்கவா செய்யும்? அதே போல் விஜய்யின் இமேஜை சர்வதேச அளவில் உயர்த்திய துப்பாக்கி படமும் அக்ஷய் குமார் நடிப்பில் இந்தியில் தயாராகிறது. இயக்கம் அதே ஏ.ஆர்.முருகதாஸ். இந்தப் படமும் பாக்ஸ் ஆபீசை அடித்து நொறுக்கும் என்று சொல்லவும் வேண்டுமா?
இந்த நிமிடம் வரை ஆமிர் கானின் அடுத்தப் படம் எதுவென்று மீடியாவுக்கு தெரியாது. அதற்கு அவசியமும் இல்லை. ஆண்டு இறுதியில் வெளியான தூம் 3 இன்னும் மூன்று மாதங்களுக்கு இண்டு இடுக்கெல்லாம் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும். எனவே ரிலாக்ஸாக அடுத்த ப்ராஜெக்ட்டுக்கு செல்வார். ஒருவேளை அது இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு
தொடக்கத்தில் வெளியாகலாம்.
பிறகு இருக்கவே இருக்கிறார் நம்ம பிரபுதேவா. இந்தி சினிமாவின் ஒன் அண்ட் ஒன்லி மினிமம் கேரண்டி இயக்குநர். ஒருவகையில் 1980களில் தமிழ்ச் சினிமாவில் வீடு கட்டி அடித்த இயக்குநர் எஸ்.பி.முத்துராமனின் எக்ஸ்டென்ஷனாக இவரை சொல்லலாம். தப்பில்லை. கடந்த ஆண்டு ராமய்யா வஸ்தாவய்யா, ஆர்... ராஜ்குமார் என இரு படங்களை கொடுத்தார். இரண்டுமே முறையே அறிமுக நாயகன், மூன்றாம் நிலை நாயகன் என்று அறியப்பட்டவர்களை ஆக்ஷன் ஹீரோக்களாக உயர்த்திய படங்கள். நூறு ப்ளஸ் கோடியை எல்லாம் வசூலிக்கவில்லைதான். ஆனால், பி, சி சென்டர்களை இரண்டுமே வாழ வைத்தது. தயாரிப்பாளர்களையும் காப்பாற்றியது. எனவே இவரும் தன் பங்குக்கு எதையாவது கொடுப்பார் என்று தீர்மானமாக நம்பலாம். அதிகபட்சம் நான்கு மாதங்களில் ஒரு படத்தை எடுத்து முடித்து ரிலீஸ் செய்யும் வித்தையை கற்றவர் அல்லவா இவர்?
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், ஆண்டு தொடக்கத்தில் ஷோலே படம் ரீ ரிலீஸ் ஆகிறது. அதுவும் 3டியில். இந்திய திரையுலக வரலாற்றிலேயே குறைந்தது 15 வெளிநாட்டுப் படங்களில் இருந்து காட்சிகளை சுட்டு ஒரு படத்தை உருவாக்கலாம் என்பதை நிரூபித்த முதல் படமும் இதுதான். பரந்த அளவில் மெகா ஹிட் அடித்த மெகா பட்ஜெட் படமும் இதுவேதான். அப்படிப்பட்ட லேண்ட் மார்க் படம், அதிநவீன தொழில்நுட்பத்துடன் மறு வெளியீடு காண்பது ஒருவகையில் எதிர்கால இந்தி சினிமாவின் போக்கை கட்டியங்கூறும் விஷயம்தான்.
இந்த ஆண்டும் இருநூறு ப்ளஸ் கோடி ரூபாயை அனைத்துப் படங்களும் வசூலிக்க வாழ்த்துகள்.
0 comments:
Post a Comment