Wednesday, January 1, 2014

பலவீனங்களை பலமாக்குவோம்...?



 ஜப்பானில் பத்து வயதுப் பையன் ஒருவன் இருந்தான். ஜூடோ சாம்பியனாக வேண்டும் என்பது அவனுடைய கனவு. ஆனால் அவனுக்கு இடது கை கிடையாது. கையும் காலும் வலுவாய் இருப்பவர்களுக்கே ஜூடோ சாம்பியன் ஆவது சிம்ம சொப்பனம். கையில்லாத பையன் என்ன செய்வான்?
பல மாஸ்டர்களிடம் போனான். எல்லோரும் அவனைப் பரிதாபமாய்ப் பார்த்துவிட்டு திருப்பி அனுப்பிவிட்டார்கள். கடைசியில் ஒரு குரு அவனுக்கு ஜூடோ கற்றுத் தர ஒப்புக்கொண்டார்.


பயிற்சி ஆரம்பமானது. குரு ஒரே ஒரு தாக்குதலை மட்டும் அவனுக்குக் கற்றுக் கொடுத்தார். நாட்கள், வாரங்கள், மாதங்க ஓடின. குரு வேறு எதையும் கற்றுக் கொடுப்பதாகத் தெரியவில்லை. பையன் சோர்ந்து போனான்


"குருவே.. ஜூடோ சாம்பியன் ஆக இந்த ஒரு தாக்குதல் தெரிந்தால் மட்டும் போதாதே. வேறு எதுவும் சொல்லித் தருவீர்களா? " என்றான்.


"இந்த ஒரே ஒரு தாக்குதலில் நீ வல்லவன் ஆனால் போதும்" என்றார் குரு.


குரு சொல்லிவிட்டால் மறு பேச்சு ஏது? பையனும் பயிற்சியைத் தொடர்ந்தான். சாம்பியன்களுக்கான போட்டி ஆரம்பமானது !

முதல் போட்டி.


ஜூடோவில் எல்லா வகைகளும் கற்றுத் தேர்ந்த எதிராளி. ஒரே ஒரு தாக்குதல் மட்டும் தெரிந்த இந்தப் பையன். போட்டி ஆரம்பமானது.

எல்லோரும் ஆச்சரியப்படும் விதமாக பையன் வெற்றி பெற்றான்.


இரண்டாவது போட்டி.


அதிலும் அவனுக்கே வெற்றி. அப்படியே முன்னேறி அரை இறுதிப் போட்டி வரை வந்தான்.
அதிலும் கொஞ்சம் போராடி ஜெயித்து விட்டான்.


கடைசிப் போட்டி.



எதிரே இருப்பவன் பலமுறை சாம்பியன் பட்டம் பெற்றவன். ஒரு கை இல்லாத எதிராளியைப் பார்த்து அவனுக்கு கொஞ்சம் பரிதாபமும், இளக்காரமும். பையன் சளைக்கவில்லை. போட்டி ஆரம்பமானது.
முதல் சுற்றில் பையனை அடித்து வீழ்த்தினான் எதிராளி. பையனின் நிலையைக் கண்டு பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி. போட்டியை நிறுத்திவிடலாமா என்கின்றனர் போட்டி நடத்துபவர்கள்.

"வேண்டாம்., பையன் சண்டையிடட்டும்" என்றார் குரு.

இந்தப் பையனோடு போரிட இனிமேல் பாதுகாப்புக் கவசம் தேவையில்லை என எதிராளி அலட்சியமாய் வந்திறங்கினான். பையன் தனக்குத் தெரிந்த அந்த ஒரே தாக்குதலை பலமாய் நிகழ்த்தினான். எதிராளி வீழ்ந்தான். பையன் சாம்பியனானான்.


பார்வையாளர்களுக்கு ஆச்சரியம்.


அந்தப் பையனுக்கே தனது வெற்றியை நம்ப முடியவில்லை. அன்று மாலை குருவின் பாதங்களில் பணிந்த அவன் கேட்டான் "குருவே, நான் எப்படி இந்த போட்டியில் வெற்றி பெற்றேன்? ஒரே ஒரு தாக்குதலை மட்டும் வைத்துக் கொண்டு வெற்றி பெற்றிருக்கிறேனே" என்றான்.


புன்னகைத்தபடியே குரு சொன்னார் "உனது வெற்றிக்கு இரண்டு காரணங்கள். ஒன்று ஜூடோவிலுள்ள மிகக் கடுமையான ஒரு தாக்குதலை நீ கற்றுத் தேர்ந்திருக்கிறாய்.

இரண்டாவது இந்த தாக்குதலைத் தடுக்க வேண்டுமானால் எதிராளிக்கு ஒரே ஒரு வழி தான் உண்டு. உனது இடது கையைப் பிடிக்க வேண்டும்.

உனக்குத் தான் இடது கை கிடையாதே! உன்னுடைய பலவீனம்தான் பலமானதாய் மாறி உன்னை சாம்பியன் ஆக்கியிருக்கிறது!"

குரு சொல்லச் சொல்ல பையன் வியந்தான்.  

0 comments:

Post a Comment

காப்பகம்