Tuesday, December 17, 2013

வித்தியாசமான பிறந்தநாள் விழா!




எங்கள் பேத்தியின் பிறந்தநாள் விழாவை, வித்தியாசமாக கொண்டாட விரும்பினோம். வழக்கமாக, அனாதை ஆசிரமங்களுக்கு உணவு அளிப்போம். இம்முறை, அவர்களை ஒரு நாள் சுற்றுலாவாக அழைத்து செல்ல எண்ணி, சென்னை அருகே உள்ள ஒரு முதியோர் இல்லத்தை அணுகினோம். அவர்களும் அனுப்ப சம்மதித்தனர். இல்லத்தில் இருப்போர், 51 பேர் அதில்: 40 பேர் வருவர் என்று கூறினர். தனியார் பேருந்தை ஏற்பாடு செய்து, பேத்தியின் பிறந்த நாளன்று, அவர்கள் இல்லத்தை அடைந்து, பிறந்த நாள் கேக் வெட்டி, எல்லாருக்கும் வழங்கி, சுற்றுலா கிளம்பினோம்.

சுற்றுலா வராமல், இல்லத்தில் இருந்தோருக்கு, வெளியில் இருந்து அவர்கள் விரும்பியதை சாப்பிட, ஏற்பாடு செய்து விட்டு வந்தோம். மொத்தத்தில், அவர்கள் இல்ல கிச்சனுக்கு, அன்று முழுவதும் விடுமுறை.

காலை உணவு, விரும்பியதை விரும்பியவாறு சாப்பிட வைத்து, சென்னையில் உள்ள அஷ்டலட்சுமி கோவிலுக்கு அழைத்து சென்றோம். பிறகு முட்டுக்காடு போட்டிங். விருப்பபட்டவர்கள், 16 பேர் மட்டும் போட்டிங் சென்றனர். பின், மகாபலிபுரத்தில் மதிய சாப்பாடு; சைவம், அசைவம் என, விரும்பியதை சாப்பிட வைத்தோம். பின், 6:00 மணிக்கு கடற்கரை, 7:00 மணிக்கு திருவிடந்தை நித்ய பெருமாள் கோவில் தரிசனம்.

இரவு டின்னரை முடித்து, இல்லம் வந்து, நினைவு பரிசாக அனைவருக்கும் கோ.ஆப்டெக்ஸ் பெட்ஷீட்டை வழங்கினோம். அவர்கள் அடைந்த மகிழ்ச்சி அளவிடற்கரியது. அதை விட, நாங்கள் அடைந்த மகிழ்ச்சி எல்லையில்லாதது. செலவு கொஞ்சம் அதிகம் என்றாலும், வசதி படைத்தோர், ஆதரவு அற்ற முதியோர்களை, அவர்கள் பார்க்க விரும்பும் இடங்களுக்கு அழைத்துச் சென்று அசத்தலாமே!

0 comments:

Post a Comment

காப்பகம்