Monday, December 16, 2013

மேலாண்மை புது உத்திகள்....!




களைக் காட்டில் கற்றுக் கொண்ட மேலாண்மை விதிகள்.அப்பொழுது ஒரு 15 வயதிருக்கும் ,களைக்காட்டிற்கு சென்று களை எடுக்கும் இடத்தில் இருந்து மேலாண்மை செய்யச் சொன்னார்கள் வீட்டில் .நான் செல்லும் போதே அம்மா சொன்னார் டே களை எடுக்கின்ற பொம்பிள்ளைங்க சரியா களை எடுக்காம பேசிக்கிட்டே இருப்பாங்க நீ அங்க இங்க போகாம அவங்களுக்கு பின்னாடியே நில்லு என்று . களைக் காட்டிற்கு சென்றால் அங்கே அப்பா இருந்தார் ,நீ எங்கடா இங்கே என்றார் ,அம்மா களை எடுக்கும் இடத்தில் இருக்கச்சொன்னதை சொன்னேன் .அவரோ சரி நீ இங்கேயே மர நிழலில் இரு வெயிலில் போய் அவர்கள் பின்னால் நிற்க வேண்டாம் என்றார் ,நானோ இல்லை அம்மா களை எடுக்கும் இடத்தில் தான் நிற்க சொன்னார் என்று .அப்பா சொன்னார் வேண்டான்டா அவர்களாகவே களை எடுத்து விடுவார்கள் என்று .எனக்கு ஒரே சுவாரசியமாகி விட்டது என்ன இது முரண்பாடான இரு கருத்துக்கள் ,எது சரி என்று பார்ப்போம் என்று.
                                                                   
களை எடுக்கும் பெண்கள் 9 மணி சங்கடிக்க ஒவ்வொருவராக 9.30 மணி வரை வந்தார்கள் .ஏன் இப்படி எல்லோரும் சரியாக வரவில்லை ,அம்மா மனதிற்குள் வந்தாள் நான் சொன்னேன் நாளைக்கு எல்லோரும் சரியாக 9 மணிக்கு வந்து விட வேண்டும் என்று.மேலாண்மையின் முதல் பாடம் பஞ்சுவாலிட்டியை மேலாண்மை செய்ய வேண்டும் என்பதை முதலில் கற்றுக் கொண்டேன். வந்தவர்கள் வேலையை ஆரம்பிக்க ஒரு கால் மணி நேரம் ஆனது இதனை என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.அதே சமயம் வேறு  வேலைக்கு வந்த ஆண்கள் அருகே வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள் .களை எடுக்கும் பணி அந்தா இந்தா என்று 10 மணியைப் போல் களைகட்ட ஆரம்பித்து விட்டது பெண்கள் கிராமத்து கதைகளை பேசிக் கொண்டே களையெடுத்துக் கொண்டிருந்தார்கள் .

ஒரு 11 மணியைப் போல் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று  ஒரு பெண் போனால் பின்னாடியே அணைத்து பெணகளும் இப்படியே அரை மணி நேரம் ஓட்டினார்கள் .அம்மா மனதிற்குள் வந்தாள் நான் பெண்களைப் பார்த்து ஏம்மா எல்லாரும் வேகமா தண்ணீர் குடிச்சுட்டு வாங்க என்று கோபமாகச் சொல்லவும் அதுவரை நெளித்துக் கொண்டிருந்தவர்கள் வேகமாக வந்து வேலையை செய்ய ஆரம்பித்தார்கள் ,ஆகா கோபமான சொல்லுக்கு மதிப்பிருக்கின்றதா?என்று ,

ஒரு  கேள்வி என் மனதில் .இதே கோபத்தை நாம் வேறு ஒருவரிடம் காட்டினால் அதற்கு மதிப்பிருக்குமா? இருக்காது ஏன் இந்த முரண்பாடு ,இந்த பெண்கள் களை எடுத்து அதற்கு சம்பளம் ஒன்றை நம்மிடம் பெற வேண்டும் என்ற உடன்படிக்கையை கொண்டிருப்பதால் தான் நாம் கோபப்பட்டதை ஏற்றுக் கொள்கின்றார்கள் . எப்பொழுதெல்லாம் மற்றவர்களிடையே ஒரு உடன்படிக்கை நமக்கு உருவக்கப்படுகிறதோ அப்பொழுது நாம் அவர்களிடம் கோபத்தைக் காட்டலாம் அதற்கு மதிப்பிருக்கும் .

இந்த சமயம் ஒரு வயதான மூதாட்டி சொன்னார் ஏம்ப்பா இப்படி பின்னாடியே நின்னுட்டிருந்தா எப்படி நாங்க இயற்கை உபாதையல்லாம் கழிக்க வேண்டாமா? நான் அப்பொழுது தான் நினைத்தேன் பாவம் இவர்கள் ,மனித உரிமைகள் எல்லாம் இவர்களுக்கு இல்லையா? நான் சிறிது நேரம் என்னை அவ்விடத்தில் இருந்து விலக்கிக் கொண்டேன்.மற்றவர்களின் இப்படிப்பட்ட இயற்கை உணர்வுகளை மதிக்க வேண்டும் என்று .

இப்படியே போய்க் கொண்டிருந்த போது நான் ஒரு பெண்ணிடம் சொன்னேன் எனக்கும் களை எடுக்க கற்றுக் கொடுங்கள் என்று பெண்கள் சுவாரசியமானார்கள் அங்கிருந்த கொத்துவான் என்னும் கருவியைக் கொண்டு களை எடுக்க கற்றுக் கொடுத்தார்கள் ,அப்பொழுது தான் தெரிந்தது களை எடுப்பது எவ்வளவு கடினம் என்று ,நான் அவர்களிடம் வெளிப்படையாகவே சொன்னேன் களை எடுப்பது இவ்வளவு கடினமா?என்று அவர்கள் இதனால் ஊக்கப்படுத்தப்பட்டார்கள் ,அந்த கடுமையான வெயிலிலும் உற்சாகமாக வேலை பார்த்தார்கள் இப்பொழுது ஒரு பாடம் கற்றுக்கொண்டேன் ,உற்சாகப் படுத்தப்படும் பொழுது மனிதன் பணி மேண்மை பெருகின்றது என்று.

அப்புறம் 1 மணியை நெருக்கும் போது எனது தந்தை வந்தார் ஏம்மா இன்னும் கொஞ்சம் நேரம் ஒரு குறிப்பிட்ட நிலத்தைக் காட்டி இதையும் முடுத்து விட்டுப் போங்கள் என்று பணிந்து கேட்டுக் கொண்டார் ,பெண்கள் அந்த பணிவுக்காக அரை மணி நேரம் கூடுதலாக பணி புரிந்தார்கள் .பணிவின் பெருமையை அப்பொழுது புரிந்து கொண்டேன் .

பின்பு அன்றைய சம்பளம் வழங்கும் நிகழ்ச்சி வேலை பார்த்த ஆண்களுக்கு 60 ரூபாயும் பெண்களுக்கு 20 ரூபாயும் சம்பளம் வழங்கப்பட்டது ,ஒரே வேலை ஒரே மனித உடல் கடினம் ,ஆண்களுக்கு அதிக சம்பளம் ஏன்?சோசலிச உணர்வு விதைக்கப்பட்டது.

இப்படி களை எடுக்கும் இடத்தில் ஆரம்பித்த மேலாண்மை பாடம் பிற்காலத்தில் பெரிது உதவிகரமாக இருந்தது .முடிவில் அப்பா சொன்னதும் சரி அம்மா சொன்னதும் சரி என்று தெரிந்து கொண்டேன்.இதை படிப்பதின் மூலம் உங்களுக்கும் உதவிகரமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

0 comments:

Post a Comment

காப்பகம்