Saturday, December 14, 2013

ஜாதியில் என்ன இருக்கு?



"ஜாதிகள் இல்லையடி பாப்பா..."என்ற பாரதியின் பாடலை பள்ளியில் பாடமாக படிக்க வேண்டுமென்றால் கூட முதலில் நாம் என்ன ஜாதி? என்ற விபரம் சொல்லிய பிறகு தான் அந்த பள்ளியில் நம்மை சேர்த்துக் கொள்வார்கள்.


அந்த அளவுக்கு இன்றைக்கும் நாட்டில் ஜாதி என்பது தவிர்க்க முடியாத கருவியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.


கடந்த ஒருமாத காலமாக இந்திய நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை மத்திய அரசு செய்து வருகிறது.இந்தக் கணக்கெடுப்பில் முளைத்திருக்கும் பிரச்சனை தான் "ஜாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு."


நம் நாட்டை ஆங்கிலேயர் ஆண்ட போது 1936 - ஆம் ஆண்டு தான் கடைசியாக ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.அதன் பிறகு நம் நாட்டில் ஜாதி வாரியான கணக்கெடுப்பே நடைபெறவில்லை.


அரசியல், சமூக, பொருளாதார ரீதியாக மக்கள் எவ்வாறு பின்தங்கியுள்ளனர் என்பதை அறிந்து, அதற்கு ஏற்றவாறு திட்டங்களைத் தீட்டுவதற்கு இந்த புள்ளிவிவரங்கள் உண்மையிலேயே அவசியம் தான்.


ஆனால் அதேநேரம் ஜாதிகள் மூலமாகத்தான் ஒருவர் தாழ்ந்தவர், ஒருவர் உயர்ந்தவர் என்று தரம் பிரித்து பார்க்க முடியும் என்று நினைப்பது உண்மையிலேயே முட்டாள்தனமான செயல் மட்டுமில்லாது வன்மையாக கண்டிக்கத்தக்கதும் கூட...


ஒரு குறிப்பிட்ட சாதியில் படித்தவர்கள், டாக்டர்கள், அரசுஊழியர்கள் போன்றவர்களின் எண்ணிக்கையை அறியாமல், அந்த சாதியினர் பின்தங்கியுள்ளனரா, இல்லையா என்பதைக் கண்டறிய முடியாது என்ற வாதத்தையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.


தங்களை சார்ந்திருக்கும் மக்கள் எல்லோருடைய வாழ்க்கை தரத்தையும் உயர்த்த வேண்டும் என்று அரசு நினைத்தால் அரசின் எண்ணம் அனைத்து ஜாதி மக்களின் வாழ்க்கை தரத்தையும் கருத்தில் கொள்வதாகத்தான் இருக்க வேண்டும்.


ஆனால் ஜாதி வாரியான கணக்கெடுப்பில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்களின் வாழ்க்கை தரத்தை கவனிக்காமல் விட்டுவிடுவதற்கும் இந்த கணக்கெடுப்பு ஒரு வாய்ப்பாக அமைந்து விடும். இதுவே பிற்காலத்தில் ஜாதிவாரியான மோதலுக்கும் வழிவகுத்து விடும்.


நண்பர் ஒருவர் உங்களிடம் நன்றாக சிரித்து பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென்று உங்களிடம் "நீ எந்த ஜாதி?" என்று கேட்கிறார் என்று வைத்துக்கொள்வோம் அப்போது உங்கள் நண்பரைப் பற்றி உங்கள் மனதில் எழும் எண்ணம் எப்படிப்பட்டதாக இருக்கும்? என்று சற்றே யோசித்துப் பாருங்கள்.


"இவன்..ஜாதி வெறி பிடிச்சவனா இருப்பான் போலருக்கே..?" என்ற மரியாதை குறைந்த எண்ணமாகத்தான் அது இருக்கும்.அதன் பிறகு உங்கள் முகத்தில் எழும் எரிச்சல் கலந்த முகபாவங்களும்,நீங்கள் சார்ந்திருக்கும் ஜாதியின் பெயரை சொல்லி முடித்த பிறகு அவர் முகத்தை நீங்கள் பார்க்கையில் உங்கள் மனதில் எழும் எண்ணங்களும், அல்லது அவர் உங்கள் முகத்தைப் பார்க்கையில் உங்களைப் பற்றி அவர் மனதுக்குள் எழும் எண்ணங்களும் அதுவரை கலகலப்பாக போய்க்கொண்டிருந்த உரையாடலை கொஞ்சம் கொஞ்சமாக முடிவுக்கு கொண்டு வருவதாக நீங்கள் உணர்வீர்கள்.அல்லது உங்கள் நண்பர் உணர்வார்.


லல்லுபிரசாத்யாதவ்,முலாயம்சிங்யாதவ்,டாக்டர்.ராமதாஸ் என்று பல அரசியல் தலைவர்கள் இந்த ஜாதி வாரியான கணக்கெடுப்புக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். மேலும் ஜாதி வாரியான கணக்கெடுப்பு கண்டிப்பாக தேவை என்றும் அவர்கள் அபயக்குரல்களையும் எழுப்பியுள்ளனர்.


ஒரு சமுதாயத்தில் எத்தனை பேர் உள்ளனர்? அவர்களின் தற்போதைய சமூக பொருளாதார நிலை என்ன? என்பது பற்றி எந்தவொரு உண்மையான தகவல்களும் இல்லாமல் நாட்டு மக்களுக்கான சமூக நீதியை எப்படி நிலைநாட்ட முடியும்? என்றெல்லாம் ஜாதி வாரியான கணக்கெடுப்பை ஆதரிக்கும் அரசியல்வாதிகள் கேட்கலாம்.


ஆனால் அதில் அவர்கள் ஜாதிவாரியான ஓட்டுகளை வாங்கி தொடர்ந்து அரசியல் நடத்துவதற்கான சுயநலம் மட்டுமே இருக்குமன்றி கண்டிப்பாக அதில் பொதுநலம் இருக்காது.அதனால் தான் அவர்கள் இப்படி கூச்சலிடுகிறார்கள்.


அதேநேரம் மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதிவாரியான கணக்கெடுப்பை ஒரு பொருட்டாக கொள்ளாமல் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும்,சமூக,பொருளாதாரத்தை மேம்படுத்தும் விஷயங்களையும் கணக்கில் கொண்டால் சிறப்பாக இருக்கும்.


தற்போதைய சமூக வாழ்க்கையில் உள்ள மக்கள் நூற்றுக்கு தொண்ணூறு சதவீதத்தினர் ஜாதியையும்,மதத்தையும் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை.மேலும் ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழும் வாழ்க்கையில் ஜாதி ஒரு பொருட்டாக பார்க்கப்படுவதில்லை என்பதை இதற்கு முன்பு நடத்தப்பட்ட பல ஆய்வு முடிவுகள் நமக்கு தெரிவிப்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

0 comments:

Post a Comment

காப்பகம்