Wednesday, December 4, 2013

சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள்.!



குறைந்தது ஒரு நபரையாவது உடன் வைத்து வேலை செய்தால் நீங்களும் மேலாளர் தான்.


பலரும் மேலாளராக இருப்பது என்னவோ… ஜமீன் போல தன்னைத் தானே பாவித்து அருகில் இருக்கும் அனைவரையும் ஏவல் செய்து கடித்துக் குதரி விரைச்சு நிற்பது என தவறாகப் புரிந்துகொண்டு இருக்கின்றனர்.

1. சக பணியாளர் விடுமுறை கேட்டால், உண்மையிலேயே அவருக்கான “உலகத்தை காப்பாற்ற வேண்டிய” வேலை ஏதும் இன்று அலுவலகத்தில் இல்லையென்றால் உடனே விடுப்பு கொடுத்துவிடுங்கள். 99% விடுமுறை காரணங்கள் பொய்கள் மட்டுமே. தமது தாத்தா பாட்டிகளை மீண்டும் மீண்டும் பாடையில் ஏற்றுவர். மனக் கசப்புடன் வேலை செய்யும் ஒவ்வொரு நிமிடமும் அங்கே எதுவும் நினைத்தபடி இருக்காது.

2. அவர்களுடன் உணவருந்துங்கள். தயவு செய்து அலுவலகத்தில் அவர்களுடன் சேர்ந்து சாப்பிடாதீர்கள். நான் சொல்வது வருடத்தில் இரு முறை வெளியே அருகில் உள்ள உணவு விடுதிக்கு சென்று அனைவருடனும் சகஜமாகப் பேசி உணவருந்துங்கள். அலுவலகத்தில் இதை முயற்சித்தால் அங்கே மயான அமைதி மட்டுமே நிலவும். மதிய உணவு சாப்பிடும் நேரம் தான் உலகப் புரணிகளை பேசும் மேடை.

3. கண்டிப்பாக பாராட்டுங்கள். உண்மையாகவே அவர் உங்களை சிறிதேனும் திருப்தி செய்திருந்தாலும் இன் சொற்களால் அவர்களை மகிழ்வியுங்கள்.

4. ஒருவரிடம் அவரின் குறை பற்றி பேச ஆரம்பிக்கும் முன். அவர் செய்த ஓரிரு சிறப்பான காரியங்களை பாராட்டி பேசுங்கள். பின்னர்., இது போல் சிறப்பாக செயல்பட்ட உங்களிடம் அதிகம் எதிர்பார்க்கிறேன்… ஆனால் நீங்கள் உங்களின் முழு திறமையையும் காட்டவில்லையே ஏன் எனக் கேளுங்கள். இது போன்ற குறை மற்றும் தவறுகளால் ஏற்படும் பிரச்சனைகளை எடுத்துச் சொல்லுங்கள். அவர்களை மதித்து அவர்களின் குறைகளை சொல்லுங்கள். அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் இதே முறையை தான் கையாளுகிறார்கள்.

5. ஆலோசனை கேளுங்கள்:
அவர்கள் சொல்வதை நீங்கள் ஆமோதிக்கிறீர்களா இல்லையா என்பது வேறு விசயம். ஆனால் அவர்களையும் மதித்து ஆலோசனை கேளுங்கள். நீங்கள் இந்தப் பதவியில் இருந்தால் இந்த சூழ்நிலையில் என்ன செய்வீர்கள் எனக் கேளுங்கள். ஒரு வேலை ஆச்சரியமூட்டும் தீர்வுகள் கிடைக்கலாம்.

6. புகழ்ச் சொற்களை சொன்னால்., அவர்களை வாயடைக்கும் விதமாக “நீங்களா இருந்தா என்னைவிட அற்புதமா செஞ்சு இருப்பீங்க… நீங்க தான் பெரிய ஆள்…” னு சொல்லுங்க… அவரின் ஆயுதத்தை அவருக்கே திருப்பி விட்டுவிட்டு நீங்கள் நிம்மதியா வேலை செய்யலாம்.

7. உங்களின் புதிய கட்டுப்பாடுகள் விதிமுறைகளுக்கு கட்டுப்படாமல் சிலர் எப்போதும் இருப்பார்கள். அவர்களின் மேல் கோவம் கொண்டால் உங்களின் உறவு கடைசி வரை மாமியார் மருமகள் உறவு போல மாறிவிடும். அவர்களை அழைத்துப் பேசுங்கள். அவர்களிடம் நியாயமான கோரிக்கை இருந்தால் முடிந்த அளவிற்கு உங்களின் விதிகளில் மாற்றம் செய்யுங்கள். அவர்கள் 4 கோரிக்கை வைத்தால் இந்த இரண்டை நீங்கள் ஏற்றுக் கொண்டால் நான் இந்த இரண்டை தளர்த்த மறு பரிசீலனை செய்கிறேன் எனச் சொல்லுங்கள். இது போன்ற விவாதத்தில் ஏற்கனவே அனைத்திற்கும் உடன்பட்ட அலுவலர் நான்கு பேர் மற்றும் உடன்படாத இரண்டுபேர் 4:2 என அமர வைத்து விவாதியுங்கள்.

8. பத்து நிமிடங்கள் தாமதமாக வந்தாலும்… உங்க தமாதத்ிற்கான காரணம் எனக்குத் தேவையில்லை இன்றைக்கு இந்த வேலையை முடித்தே ஆக வேண்டும் என பொறுப்புகளை அதிகமாகக் கொடுங்கள்.

9. அவதூறு சொல்வதும், புறங்கூறுவதும் நிறுத்த இயலாத ஒன்று. என்னதான் நீங்கள் நட்பாகப் பழகினாலும் உங்களைப் பற்றி அவர்கள் தனி நபர் விமர்சனம் செய்துகொண்டே தான் இருப்பர்.

அதனால் யாருக்கும் சல்லி காசு உபயோகம் இல்லை. இது ஒரு போதை போன்றது. தமது ஆசிரியரையோ அலது மேலதிகாரியையோ திட்டுவது அல்லது பட்டப் பெயர் சொல்லி அழைப்பது ஒரு போதையும் திருப்தியும் தரும். இது போன்றோர் எப்போதும் திறமையற்ற வெட்டிப் பேச்சு வீரர்கள் தான். இது போன்ற ஆட்களிடம் சற்று அதிக மரியாதையுடன் பேசுங்கள் பிறர் முன்னிலையில். ஒருவேளை பாராட்ட சந்தர்ப்பம் கிடைத்தால் அனைவர் முன்னும் அவர்களை பாராட்டுங்கள். இது அவர்களை மனதளவில் தலை குனியச்செய்யும் ., உங்களைப் பற்றி அவதூறு பேச பிறர் முன் அவர் நா எழாது.

10. மேலாளர் பணி என்பது., சக ஊழியர் சரியா வேலை செய்கிறாரா எனக் கண்கானித்து தார் குச்சி வைப்பது அல்ல. அவர்களை தன்னம்பிக்கையுடன், வாங்கும் சம்பளத்திற்கு முழுமையாக வேலை செய்ய வைப்பது மட்டுமே. அவர்களை அடிமை போல் எண்னாதீர்கள்.

நீங்கள் பணியாளராக இருக்கும் போது உங்கள் மேலாளர் இப்படி நடந்திருந்தால் நீங்கள் என்ன நினைத்திருப்பீர்கள் என யோசித்து ஒவ்வொரு சூழ்நிலையையும் கையாழுங்கள்.

0 comments:

Post a Comment

காப்பகம்