Sunday, October 6, 2013

வீட்டு வைத்தியமும் மக்கள் நம்பிக்கையும்!

வீட்டு வைத்தியமும் மக்கள் நம்பிக்கையும்


உலகெங்கிலும் வீட்டு வைத்திய முறைகள் கையாளப்படுகின்றன. சில பகுதிகளில் மரபு வழி வைத்திய முறைகள் தலைமுறை தலைமுறையாகப் பலநூறு ஆண்டுகளாகப் புழகத்தில் இருந்து வந்திருக்கின்றன. வீட்டு வைத்திய முறைகளில் பல, அதிக அளவில் பலன் தருகின்றன; வேறு சில, குறைந்த அளவில் பலன் தருகின்றன.

வீட்டு வைத்திய முறைகளில் சில ஆபத் தான வையாகவும், தீங்கு விளைவிக்கக் கூடியவையாகவும் இருக்கலாம். நவீன மருந்துகளைப் போலவே வீட்டு மருத்துகளையும் ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும்.

பலன் தரும் வீட்டு மருந்துகள்  :

பல நோய் களுக்குக் காலம் காலமாகப் பயன்படுத்திப் பலன் கண்ட வீட்டு மருந்துகள் நவீன மருந்துகளுக்கிணையாக அல்லது அவற்றுக்கும் மேலாகக்கூடப் பலன் தருகின்றன. பெரும்பாலானவை நவீன மருந்துகளைவிடச் சிக்கனமானவை.

மேலும் சில, நவீன மருந்துகளை விட அதிகப் பாதுகாப்பானவை. எடுத்துக்காட்டாக, இருமலுக்கும் சளிக்கும் பயன்படுத்தப்படும் மூலிகைக் கஷாயங்கள், நவீன மருத்துவர்கள் பரிந்துரை செய்யும் இருமல் இனிப்பு மருந்துகள், வீரியம் மிக்க மற்ற மருந்துகள் ஆகியவற்றை விடவும் நல்ல பலன் தருகின்றன.

இவற்றால் ஏற்படும் சிக்கல்கள் மிகவும் குறைவே. குழந்தைகளின் வயிற்றுப் போக்குக்குத் தாய்மார்கள் தருகிற கஷாயங்கள் அல்லது பானங்கள் வேறெந்த நவீன மருந்துகளை விடவும் சிறந்தவை; பாதுகாப்பானவை. வயிற்றுப்போக்கால் சிரமப்படும் குழந்தை அதிக அளவில் திரவத்தை உட்கொள்ள வேண்டும் என்பது மிக முக்கியம்.

வீட்டு வைத்திய முறைகளின் வரம்பு  :

சில நோய்களுக்கே வீட்டு மருந்துகள் உதவுகின்றன. மற்ற நோய்களை நவீன மருத்துவ முறைகள் மூலம், மேலும் சிறப்பாகக் குணப்படுத்த முடியும். இது பெரும்பாலான தொற்றுகளுக்குப் பொருந்தும். நிமோனியா, தசைவிறைப்பு ஜன்னி, டைஃபாய்டு, காசநோய், குடல்வால் அழற்சி, பால் வினைத் தொற்றுகள், பிரசவத்தைத் தொடர்ந்து ஏற்படுகிற காய்ச்சல் போன்றவற்றை எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவாக நவீன மருத்துவ முறைகளைக் கொண்டு குணப்படுத்த வேண்டும்.

இதுபோன்ற நோய்களை முதலில் வீட்டு மருந்துகள் மூலம் மாத்திரமே குணப்படுத்த முயன்று காலத்தை வீணாக்காதீர்கள். சில சமயங்களில் வீட்டு வைத்தியத்தில் எது நல்ல பலன் தரும், எது பலன் தராது என்பதை உறுதி செய்துகொள்வது கடினம். இது குறித்து அதிக கவனத் துடன்கூடிய ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன.

பழைய வழிமுறைகளும் புதிய வழிமுறைகளும்  :

சில நவீன சுகாதார வழிமுறைகள் பழங்கால முறை களைவிடச் சிறந்தவை. ஆனால் சில சூழ்நிலைகளில் மரபு வழிமுறைகளே நல்லது. எடுத்துக் காட்டாக, குழந்தை அல்லது முதியோர் பராமரிப்பில் மரபு வழிவந்த முறைகள் பெரும்பாலும் அன்பு கலந்த அக்கறை உடையனவாகவும், நவீன முறைகளைவிட உறவின் நெருக்கம் மிகுந்தவையாகவும் இருக்கின்றன.

தாய்ப்பால்தான் சிறு குழந்தைகளுக்கு மிகச் சிறந்த உணவு என்ற சரியான நம்பிக்கை அண்மைக் காலம்வரை எல்லோரிடமும் இருக்கிறது. ஆனால் புதிதாக வளர்ச்சி பெற்ற புட்டிப்பால் தயாரிக்கும் பெரிய வணிக நிறுவனங்கள், தாய்ப்பாலைவிட புட்டிப்பால் சிறந்தது என்றன.

இது உண்மை இல்லையென்றாலும் பெரும்பாலான தாய்மார்கள் இதை நம்பித் தங்கள் குழந்தைகளுக்கும் புட்டிப்பால் கொடுக்கத் தொடங்கினார்கள். இதன் விளைவாக ஆயிரக்கணக்கான சிறு குழந்தைகள் தேவையின்றித் தொற்றுகளுக்கும் பசிக்கும் இலக்காகி மடிந்தன.

குணமளிக்கும் நம்பிக்கைகள்  :

வீட்டு மருந்துகளில் சில, உண்மையாகவே குணமளிக்கின்றன; மற்றவை, குணமளிப்பதைப் போல் தோன்றுகின்றன. காரணம், மக்களுக்கு அவற்றின் மீதுள்ள நம்பிக்கைதான். குணப்படுத்து வதில் நம்பிக்கைக்குள்ள சக்தி மிகவும் வலுவானது.

எடுத்துக் காட்டாக, மிகக் கடுமையான தலைவலியால் அவதிப்படும் ஒருவருக்கு தலைவலியைப் போக்க, ஒரு பெண் சேனைக் கிழங்குத் துண்டு ஒன்றைக் கொடுத்து, அது சக்தி வாய்ந்த வலி நிவாரணி என்று சொன்னாள். அவள் சொன்னதை அவர் நம்பினார்.

தலைவலி விரைவில் மறைந்தது. இங்கே அவருக்குக் குணம் அளித்தது அந்தப் பெண் கொடுத்த கிழங்குத் துண்டால் அல்ல; அந்தப் பெண்ணின் வைத்தியத்தில் அவர் கொண்டிருந்த நம்பிக்கைத்தான். வீட்டு மருந்துகளில் பல இவ்வாறே வேலை செய்கின்றன. இவற்றால் பெரும்பாலும் குணம் தெரிவதற்குக் காரணம், மக்களுக்கு அவற்றில் உள்ள நம்பிக்கையே.

மக்களின் மனபிராந்தி தொடர்புடைய நோய்களையும், கவலை, பயம் ஆகியவற்றால் ஏற்படும் நோய்களையும் ஓரளவு குணப்படுத்துவதில் இத்தகைய நம்பிக்கைகள் குறிப்பிடத்தக்க வகையில் உதவியாக இருக்கின்றன. இவ்வகை நோய்கள் எல்லாவற்றுக்கும் வைத்தியம் செய்வோரின் குணப்படுத்தும் முறை அல்லது `கைராசி' மிகவும் முக்கியமானது.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நாம் செய்ய வேண்டியது எல்லாம், நாம் நோயாளியிடம் அக்கறை கொண்டிருக்கிறோம் என்பதை நோயாளி உணருமாறு செய்வதும், அவர் குணமடைந்துவிடுவார் என்ற நம்பிக்கை அவரிடம் ஏற்பட அல்லது அவர் அமைதியடைய உதவுவதும்தான்.

உட்கொள்ளும் மருந்தில் வைத்திருக்கிற நம்பிக்கை மாத்திரமே, சில சமயங்களில் முற்றிலும் உடல் தொடர்பான கோளாறு களைக்கூடக் குணப் படுத்திவிடுகிறது. எடுத்துக்காட்டாக, கிராம மக்கள் விஷப்பாம்புக் கடிக்குப் பயன்படுத்தும் வைத்திய முறைகள்:

1. பாம்புக் கல்லைப் பயன் படுத்துவது; ஒருவித வேர் பயன் படுத்தப்படுவது. 2. கையளவு மிளகாய் அல்லது வேப்பிலையைச் சாப்பிடுவது.
3. வாழைத்தண்டுச் சாறு நிறையக் குடிப்பது.

பாம்புக்கடிக்கு வெவ்வேறு பகுதிகளில் மக்கள் வெவ்வேறு வகையான மருந்துகளைப் பயன்படுத்துக்கின்றனர். நாம் அறிந்த வரையில் இந்த வகையான வீட்டு மருந்து எதுவுமே பாம்பு விஷத்தை முறிப்பதில்லை. பாம்பு விஷத்திலிருந்து தன்னைக் காப்பாற்றியது வீட்டு மருந்துதான் என்று ஒருவர் சொன்னால் அவரைக் கடித்தது விஷப் பாம்பாக இருந்திருக்காது.

இருந்தாலும் இவ்வகை வீட்டு மருந்தை ஒருவர் நம்பும் பட்சத்தில் அது சில நன்மைகளைச் செய்யலாம். இந்த நம்பிக்கை அவருடைய பயத்தைக் குறைப்பதால் நாடித்துடிப்பின் வேகமும், பதற்றமும், உடல் நடுக்கமும் குறையும். இதன் காரணமாக விஷம் அவருடைய உடலில் மெதுவாகவே பரவும். ஆகையால் அபாயம் குறைகிறது.

ஆனால் இவ்வகை வீட்டு மருந்துகள் ஓரளவு பலனையே தருகின்றன. இம்மருந்துகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட போதிலும் பாம்புக் கடியினால் இன்னமும் பெரும்பாலானவர்கள் கடுமையாக நோய்வாய்ப்படுகின்றனர் அல்லது இறந்து போகின்றனர். பொதுவாகப் பாம்புக்கடிக்கு நவீன மருந்துகளைப் பயன்படுத்துவதே நல்லது. `பாம்புக்கடி விஷமுறிகள்' அல்லது `நிணநீர் மருந்துகளை' தேவை ஏற்படுவதற்கு முன்னரே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

0 comments:

Post a Comment

காப்பகம்