டெல்லி சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு வெற்றி பெற்றது.
சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் வெற்றி பெற்று, தமது அரசின் பெரும்பான்மையை நிரூபித்தார், ஆம் ஆத்மியின் தலைவரும், முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால்.
மொத்தம் உள்ள 70 உறுப்பினர்களில், ஆம் ஆத்மி அரசுக்கு பெரும்பான்மைக்குத் தேவையான 36 வாக்குகள் கிடைத்தது. ஆம் ஆத்மி கட்சியின் 28 உறுப்பினர்களும், காங்கிரஸின் 8 உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்தனர். பாஜகவின் 31 உறுப்பினர்கள், ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.
டெல்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சர் மனீஷ் சிசோதியா நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை தாக்கல் செய்தார்.
ஆம் ஆத்மி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்புத் தீர்மானத்துக்கு காங்கிரஸ் ஆதரவாக வாக்களித்தது. பாஜக எதிர்த்து வாக்களித்தது. முடிவில், நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி அரசு வெற்றி பெற்றது.
வாக்கெடுப்புக்கு முன் நடந்த விவாதத்தின்போது, மக்களுக்காக ஆம் ஆத்மி நல்லாட்சி செய்தால், ஆட்சி காலம் முழுவதும் ஆதரவு நீடிக்கும் என காங்கிரஸ் உறுதி அளித்தது.
அதேவேளையில், காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி ஆட்சியமைப்பதைக் கடுமையாக விமர்சித்த பாஜக, ஊழல் கட்சி என விமர்சித்துவிட்டு, அதன் ஆதரவுடன் அரசு அமைப்பதன் கட்டாயம் என்ன? என்று கேள்வி எழுப்பியது.
இறுதியாக பேசிய முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், நாட்டில் ஊழல் அரசியலை துடைப்பதற்கான முதல் படியை டெல்லி மக்கள் எடுத்து வைத்துள்ளனர் என்றார்.
முந்தைய காங்கிரஸ், பாஜக நகராட்சி நிர்வாகத்திலோ, எங்களது அரசிலோ ஊழல் புரிந்தவர்கள், ஊழலில் ஈடுபடுவோர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிபட கூறினார்.
முன்னதாக, டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா 31 இடங்களையும், ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களையும் வென்றன. காங்கிரஸ் கட்சி 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மையில் இல்லாத நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைத்தது.
ராம் லீலா மைதானத்தில் 28ம் தேதி நடந்த பதவியேற்பு விழாவில், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
மொத்தம் 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டசபையில் பெரும்பான்மைக்கு 36 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. 28 உறுப்பினர்களைக் கொண்டுள்ள ஆம் ஆத்மிக்கு 8 உறுப்பினர்களைக் கொண்டுள்ள காங்கிரஸ் ஆதரவு தருவதாக ஏற்கெனவே உறுதி அளித்திருந்தது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி அரசு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நாளை (வெள்ளிக்கிழமை) சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடைபெறும். சபாநாயகர் தேர்தலில் ஆம் ஆத்மியின் மணீந்தர் சிங் போட்டியிடுகிறார். பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் சபாநாயகர் பதவிக்கு ஜெகதீஷ் முகி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
முன்னதாக, டெல்லி சட்டசபையின் முதல்கூட்டம் நேற்று (புதன்கிழமை) தொடங்கியது. இதில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள் உள்பட அனைத்து உறுப்பினர்களும் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றுக் கொண்டனர்.
0 comments:
Post a Comment