சவூதி அரேபியாவில் கொடிய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது வாடிக்கை. இந்த ஆண்டில், கடந்த மே மாதம் வரையில் அங்கு 47 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் பொதுவாக மன்னர் குடும்பத்தில் யாருக்கும் மரண தண்டனை விதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் சவூதி இளவரசர் ஒருவருக்கு விரைவில் மரணத் தண்டனை அளிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சவூதி இளவரசர் ஒருவர் தன்னுடன் தங்கியிருந்த சக சவூதி அரேபியர் ஒருவரை கொலை செய்துவிட்டார். அங்கு, கொலையாளி சார்பில், கொலை செய்யப்பட்டவர் குடும்பத்துக்கு ஒரு பெருந்தொகையை கொடுத்து விட்டால் அவர்கள் மன்னித்து விடுவார்கள். கொலையாளி தண்டனையில் இருந்து தப்பி விட முடியும்.
ஆனால் இந்த வழக்கை பொறுத்தமட்டில் இளவரசர் தரப்பில் தரக்கூடிய தொகையை பெற்றுக்கொண்டு, மன்னிப்பு வழங்க கொலை செய்யப்பட்டவர் குடும்பம் முன்வரவில்லை. இதையடுத்து சவூதி இளவரசருக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் நிலை உருவாகி உள்ளது. இதற்கான அனுமதியை சவூதி பட்டத்து இளவரசர் சல்மான் வழங்கி விட்டதாக பத்திரிகை தகவல்கள் கூறுகின்றன.
உள்துறை மந்திரி முகமது பின் நயீப்புக்கு பட்டத்து இளவரசர் சல்மான் அனுப்பியுள்ள தகவல் அறிக்கையில், “ஷரியத் சட்டம் (இஸ்லாமிய சட்டம்) எந்தவித விதிவிலக்குமின்றி அனைவருக்கும் பொருந்தும். பெரியவர், சிறியவர், பணக்காரர், ஏழை என்று வித்தியாசம் எல்லாம் கிடையாது. நீதித்துறை தீர்ப்பில் தலையிடுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. அதுதான் இந்த நாட்டின் பாரம்பரியம். ஷரியத் சட்டத்தை நாம் அனைவரும் பின்பற்றித்தான் ஆக வேண்டும்” என கூறி உள்ளார்.
இதையடுத்து சவூதி இளவரசருக்கு மரண தண்டனை நிறைவேற்றப் படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment