Monday, December 23, 2013

தலைமுறைகள் – விமர்சனம்!




சலசலத்து ஓடும் ஆறு. பசுமை போர்த்திய மரங்கள், பரபரப்பின்றி நடமாடும் ஆவினங்கள், புள்ளினங்களின் சங்கீதம், பேரனின் கையைப் பிடித்தபடி நடந்து செல்லும் கிழவர்...

இயற்கையின் அழகு, மண் வாசனை, பரபரப்பற்ற வாழ்க்கை ஆகியவற்றின் கவித்துவமான சித்தரிப்பாகத் திரையில் விரிகிறது பாலுமகேந்திராவின் தலைமுறைகள். நகர வாழ்க்கையிலும் ஆங்கிலத்திலும் ஊறிப்போன ஒரு குடும்பம் இங்கே வந்தால் எப்படி இருக்கும்? அவர்களை இங்கே வரவழைத்த பாசம் இங்கே அவர்களை வாழவைக்குமா?

பழமையிலும் சாதி சம்பிரதாயங்களிலும் ஊறிய அந்தப் பெரியவரால் தன் மகன் வேற்று மதத்தைச் சேர்ந்த அனாதைப் பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. “என் பிணத்தைப் பார்க்கக்கூட வராதே” என்று துரத்திவிடுகிறார். பையனும் அவள் மனைவியும் சென்னையில் பெரிய டாக்டர்களாகிறார்கள். அவர்களுக்கு ஒரு மகன். ஊரோடும் அப்பாவோடும் தொடர்பே இல்லாமல் காலம் கழிகிறது. அப்பாவுக்கு உடல்நலம் மோசமாகிவிட்ட செய்தி வருகிறது. திட்டுவாரே என்னும் அச்சத்தை மீறிப் பாசம் உந்தித் தள்ளுகிறது. ஊருக்குச் செல்கிறார்கள்.

இன்னமும் அதே வீம்புடன் இருக்கும் தாத்தா இவர்களது அன்பினால் சலனம் கொள்கிறார். பேரக் குழந்தையுடன் ஏற்படும் ஒட்டுறவு அவரை இளக்குகிறது. மெல்ல மெல்ல நகரமும் கிராமமும் ஒன்றையொன்று நெருங்குகின்றன.

வழக்கம்போல இயக்கத்துடன் ஒளிப்பதிவைச் செய்திருப்பதோடு, பாலுமகேந்திரா பிரதான பாத்திரம் ஏற்று நடித்தும் இருக்கிறார். கிராமத்து மண்ணோடு ஒட்டியிருக்கும் சாதி, அதே மண் முன்னிறுத்தும் மனித நேயத்துக்கு எதிராக இருப்பதையும் படம் உணர்த்துகிறது.

படத்தின் கதை மிகவும் எளிமையானது. திரைக்கதை அதைவிட எளிமையானது. காட்சிகளில் தெரியும் யதார்த்தம் நிகழ்வுகளின் பயணத்தில் மங்குகிறது. சின்னச் சின்ன சலனங்களில் பெரும் மாற்றங்கள் சாத்தியப்பட்டுவிடுகின்றன. எல்லோருமே அன்புடனும் மாற்றங்களுக்குத் தயாரான நெகிழ்வான மனநிலையுடனும் இருக்கிறார்கள். முரண்பாடுகளின் பரஸ்பர ஊடாட்டத்தி னூடே முகிழ்க்கும் இயல்பான மாற்றங் களைப் பார்க்க முடியவில்லை. விளைவு, மாற்றங்கள் யதார்த்த அனுபவங்களாக மாறாமல் பகல் கனவுகளின் காட்சிகளாகவே தோற்றம் கொள்கின்றன.

பாலு மகேந்திரா நிறைவான நடிப்பைத் தந்திருக்கிறார். தீவிரமான அவரது கண்களும் தளர்வான உடல் மொழியும் மனதில் நிற்கின்றன. மகனாக நடித்திருக்கும் சசி, அவரது மனைவி ரம்யா ஷங்கரும் தேவைக்கேற்ப நடித்திருக்கிறார்கள். ரம்யாவின் கண்கள் பேசும் மொழி வலுவானது. பேரனாக நடித்திருக்கும் மாஸ்டர் காந்த் படத்துக்குப் பெரிய பலம். பாலுமகேந்திராவின் கேமரா கவித்துவமான படிமங்களை உருவாக்குகிறது. இளையராஜா வின் இசைக்கோலங்கள் படம் தரும் அனுபவத்தின் பரிமாணத்தைக் கூட்டுகின்றன.

காலத்துக்குத் தேவை யான ஒரு கனவைத் தனக்கே உரிய திரைமொழியில் முன்வைத்திருக்கிறார் பாலுமகேந்திரா.

0 comments:

Post a Comment

காப்பகம்