Tuesday, December 31, 2013

2014 ல் கோடிகளைக் குவிக்க காத்திருக்கும் பாக்ஸ் ஆபிஸ்



 தமிழ்த் திரையுலகின் முக்கிய வியாபாரக் கேந்திரங்கள் திரையரங்குகள். பாக்ஸ் ஆபீஸ் என்று வர்ணிக்கப்படும் திரையரங்குகளின் வசூல் நிலவரம்தான் இன்றைய வணிகத் தமிழ்சினிமாவின் ‘பிராண்ட் ஈக்குவிட்டியாக’ வலம் வரும் மாஸ் ஹீரோக்களின் செல்வாக்கை நிலைநிறுத்தும் சக்தி. ஒரு ஹீரோவின் வசூல் உயர உயரத்தான், அவரது ஊதியமும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இப்படி வசூல் புலிகளாக இருக்கும் மாஸ் ஹீரோக்களின் பாய்ச்சல் வரும் ஜனவரி முதல் பொங்கல் ஜல்லிக்கட்டாகத் தொடங்க இருக்கிறது!


நடப்பு 2013 ஆம் ஆண்டைவிட எதிர்வரும், 2014 ஆண்டு கண்டிப்பாக மாஸ் ஹீரோக்களின் ஆண்டாக இருக்கப்போவது உறுதி. மேலும் இயக்குநர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், சினிமா ரசிகர்கள் என அனைவருக்கும் முக்கிய ஆண்டாக இருக்கப் போகிறது என்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில்! அப்படியென்ன ஸ்பெஷல்? ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் என அனைத்து நடிகர்களின் படங்களும் வெளியாக இருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், முன்னணி நடிகர்கள் அனைவருமே, முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்து வருகிறார்கள்.


2014ன் தொடக்கத்தில் தமிழ்த் திரையுலகப் பாக்ஸ் ஆபிஸில் அஜித், விஜய் படங்கள் மோதவிருக்கின்றன. இப்படங்களைத் தொடர்ந்து கமலின் 'விஸ்வரூபம் 2', சிம்புவின் 'வாலு' ஆகிய படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் - கெளதம் மேனன், விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ், சூர்யா - லிங்குசாமி, விக்ரம் - ஷங்கர் இணைப்பில் 'ஐ', சிம்பு - கெளதம் மேனன், சிம்பு - செல்வராகவன், சிம்பு - பாண்டிராஜ், தனுஷ் - கே.வி.ஆனந்த் இணையும் 'அநேகன்', வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த் நடிக்கும் 'காவியத் தலைவன்', பாலா - சசிகுமார் இணையும் படம், ஆர்யா - விஜய் சேதுபதி -ஜனநாதன் இணையும் 'புறம்போக்கு', ஜெயம் ரவி - சமுத்திரக்கனி இணைப்பில் 'நிமிர்ந்து நில்', ஆர்யா - ராஜேஷ் இணையும் படம், சூர்யா - வெங்கட்பிரபு இணையும் படம், விஷால் - ஹரி இணையும் படம் உள்ளிட்ட படங்கள் 2014ல் வெளியாக இருக்கின்றன.


மேலே குறிப்பிட்டுள்ள படங்களைப் பார்த்தீர்கள் என்றால், அனைத்து நடிகர்களுமே முன்னணி இயக்குநர்கள் படங்களில் நடித்து வருகிறார்கள். இதனால் பாக்ஸ் ஆபிஸில், இப்படங்களுக்கு மிகப்பெரியளவில் ஒப்பனிங் இருக்கும். படமும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றால், பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை இருக்கும். 2014ல் இது போன்று, முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் இணைந்து பணியாற்றி வருவதால் விநியோகஸ்தர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. காரணம், அவர்களுக்கு எந்தப் படத்தினை வாங்கினாலும் கண்டிப்பாகக் கல்லா கட்டிவிடலாம் என்ற நம்பிக்கையை இது கொடுத்திருக்கிறது.


விநியோகஸ்தர்கள் தரப்பில் வைக்கப்படும் கோரிக்கை ஒன்று தான். அந்தக் கோரிக்கை, அனைத்துப் படங்களுமே போதிய இடைவெளி விட்டு வந்தால் நடிகர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும்,எங்களுக்கும் நல்லது என்பதுதான்.


டி.வி நிறுவனங்களுக்கு மத்தியிலும், எந்தப் படத்தின் உரிமை நமக்கு என்பதிலும் போட்டி நிலவி வருகிறது. தங்களது நிறுவனத்தின் விளம்பர வருவாய் குறைந்துள்ளதால், சன் டி.வி நிறுவனம் முக்கியப் படங்கள் அனைத்தையும் வாங்கி விளம்பர வருவாயைப் பெருக்க வேண்டும் என்ற முனைப்பில் இறங்கியிருக்கிறது. அஜித்தின் 'வீரம்', விஜய்யின் 'ஜில்லா', சூர்யா - லிங்குசாமி படம் ஆகியவற்றை வாங்கி வைத்திருக்கிறது.


சன் டி.வியைத் தொடர்ந்து, கலைஞர் டி.வி, விஜய் டி.வி, ஜெயா டி.வி, ராஜ் டி.வி, ஜி தமிழ் என முன்னணி டி,வி நிறுவனங்களும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தித் தங்களது நிறுவனத்தினை டி.ஆர்.பியை ஏற்றுவதற்கு பிரபல நடிகர்களுடைய படங்களை வாங்கும் போட்டியில் இறங்கி இருக்கின்றன.


மொத்தத்தில் 2014ம் ஆண்டு நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், டி.வி நிறுவனங்கள் என அனைவருக்கும் பண மழையில் நனைய வாய்ப்பு இருப்பது மட்டும் உறுதி.

0 comments:

Post a Comment

காப்பகம்