Sunday, August 17, 2014

பெற்றோர்களின் பொறுப்பின்மை..! - அதிர்ச்சியூட்டும் தகவல்கள்

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இல்லாமல் இருந்த வசதிகள் இப்போது இருப்பது என்னவோ உண்மை. தெரு விளக்கில் படித்ததும், பல காத தூரம் நடந்தும், சைக்கிளிலும் பள்ளிக்குச் சென்று வந்ததும், ஒரு வேளை மட்டுமே உணவு அருந்தியதும் முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய தலைமுறையினரில் பலருக்கும் நடைமுறை அனுபவமாக இருந்தன. இன்று அந்தத் தலைமுறையினர், படித்துப் பட்டம் பெற்று நல்ல வேலையில் இருப்பது மட்டுமல்லாமல், கணவனும் மனைவியும் வேலைக்குப் போவதால், அவர்களது பெற்றோர்கள் கனவில்கூடக் கண்டறியாத வாழ்க்கை வசதிகளை அனுபவிக்கிறார்கள் என்பது உண்மை.

தங்களுக்குக் கிடைக்காத கல்வி வசதியோ, உணவு வசதியோ, குடியிருப்பு வசதியோ தங்களது குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்று பெற்றோர் விழைவதில் குறை காண முடியாது. ஆனால், அந்தக் குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும், வருங்காலத்திற்கும் பாதகமான வசதிகளைப் பெற்றோர்கள் செய்து கொடுத்து, அதைப் பெருமையாகக் கருதுவதுதான், "அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்' என்கிற பழமொழியை நினைவுபடுத்துவதாக இருக்கிறது.

சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு அளவுக்கதிகமாக சாக்கலேட்டுகளை வாங்கித் தருவது, கழிவு உணவுகள் (ஜங்க் ஃபுட்) எனப்படும் உணவகங்களின் துரித உணவுப் பழக்கத்தை ஏற்படுத்துவது, பொருளாதார இயலாமை காரணமாகத் தங்களுக்கு மறுக்கப்பட்ட அசைவ உணவுகளைத் தங்கள் குழந்தைகளுக்குத் தினப்படி செய்து கொடுத்துப் பழக்குவது, முறையான உடற்பயிற்சிக்கு ஊக்குவிக்காமல் கணினியின் முன்னாலும், தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னாலும் குழந்தைகள் பொழுதுபோக்குவதைப் பார்த்துப் பூரித்து மகிழ்வது என்று, அவர்களை அறியாமலே அந்தக் குழந்தைகளின் வருங்காலத்தைப் பாழாக்கிக் கொண்டிருக்கும் பெற்றோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

நாம் வாழும் காலத்தில் குழந்தைகள் நம்மைப் போற்ற வேண்டும் என்பதிலும், அவர்கள் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்து மகிழ்விக்க வேண்டும் என்பதிலும் பெற்றோர் குறியாக இருக்கிறார்களே தவிர, தமது காலத்திற்குப் பிறகு அந்தக் குழந்தைகள் நாற்பது வயதில் சர்க்கரை நோயாலும், இரத்தக் கொதிப்பாலும், இன்னபிற பிரச்னைகளாலும் அவதிப்படும்போது, "பெற்றோர் தங்களைச் சரியாக வளர்த்திருந்தால் இந்த அவதி வந்திருக்காதே' என்று சபிப்பார்களே என்பதைப் பற்றிய கவலையே இல்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான் பிரச்னைக்குக் காரணம்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட 66,238 சாலை விபத்துகளில் 15,563 பேர் இறந்துள்ளனர். இதில் இரு சக்கர வாகன விபத்துகளினால் இறந்தவர்கள் 4,467 பேர். சென்னையில் மட்டும் கடந்தாண்டு ஏற்பட்ட சாலை விபத்து மரணங்கள் 1,247. இவர்களில், இரு சக்கர வாகனங்கள் மூலம் ஏற்பட்ட சாலை விபத்துகளினால் இறந்தவர்கள் 417 பேர். காயமடைந்தவர்கள் 3,403 பேர். இந்த ஆண்டு இதுவரை 236 பேர் இறந்திருக்கிறார்கள். 2,161 பேர் காயமடைந்திருக்கிறார்கள். சென்னையில் மொத்த விபத்தில், ஆண்டுக்கு 8.3% விபத்துகள் இரு சக்கர வாகனங்களால் ஏற்படுகின்றன.

மேலே குறிப்பிட்ட புள்ளிவிவரங்களுக்குக் காரணம் இருக்கிறது. சென்னையில் மட்டும், இரு சக்கர வாகன விபத்துகளில் இறந்தவர்களில் 30% முதல் 40% வரை பள்ளி, கல்லூரி மாணவர்கள் என்பதுதான் குறிப்பிட வேண்டிய ஒன்று. 16 வயது நிரம்பாதவர்கள் கியர் இல்லாத இரு சக்கர வாகனங்களையும், 18 வயது நிரம்பாதவர்கள் கியருடன் கூடிய வாகனங்களையும் ஓட்டுவதற்கு உரிமம் பெறத் தகுதியில்லாதவர்கள். மோட்டார் வாகனச் சட்டம் 181ஆவது பிரிவின்கீழ் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யலாம். மோட்டார் வாகனச் சட்டம் இருந்தும்கூட, தங்களது 13 வயது மகனோ, மகளோ இரு சக்கர வாகனம் ஓட்டுவதை பெற்றோர் அனுமதிப்பதும், தங்கள் குழந்தை பிஞ்சிலேயே பழுத்துவிட்டதைப் பெருமையாகக் கருதுவதும்தான், இந்த உயிரிழப்பு அனைத்திற்கும் காரணம்.

சென்னை பெருநகரக் காவல் துறை ஆணையர் எஸ். ஜார்ஜ், இந்தப் பிரச்னையை முறையாக அணுக முற்பட்டிருப்பதுடன், பள்ளிகள்தோறும் போக்குவரத்துப் போலீஸார் விழிப்புணர்வு வகுப்புகள் நடத்த உத்தரவிட்டிருப்பதும் பாராட்டுதற்குரியது. சட்டம் போட்டோ, மிரட்டியோ இந்தப் போக்கைத் தடுத்துவிட முடியாது. பெற்றோர்களுக்குப் பொறுப்புணர்வு ஏற்பட்டால் மட்டுமே மாற்றம் ஏற்படுவது சாத்தியம்.

பெற்றோர்களால் கண்டித்து வளர்க்கப்படாத குழந்தையை, சமுதாயம் தண்டித்துப் பாடம் கற்பிக்கும் என்பதை தாய், தந்தையர் உணர்ந்தாக வேண்டும்!

0 comments:

Post a Comment

காப்பகம்