Saturday, August 30, 2014

மேகா (2014) - திரைவிமர்சனம்

நாயகன் அஸ்வின் படித்து முடித்துவிட்டு படிப்புக்கேற்ற வேலை கிடைக்காமல் போட்டோ கிராபராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய தந்தை போலீஸ் அதிகாரியான விஜயகுமாரிடம் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

ஒருநாள் அஸ்வின் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருக்கும்போது எதேச்சையாக நாயகி சிருஷ்டியை பார்க்கிறான். அவளைப் பார்த்தவுடனேயே அவள் மீது காதலும் கொள்கிறான். அப்போது பெய்யும் மழையில் இருவரும் நெருக்கமாக நின்று ஒருவரையொருவர் அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர்.

இந்நிலையில், சிருஷ்டியின் அண்ணன் திருமணத்துக்கு அஸ்வின் போட்டோ எடுக்க போகிறார். சிருஷ்டிக்கு 2 அண்ணன்கள். 2-வது அண்ணனுக்கு நடக்கும் கல்யாணத்திற்கு வந்திருக்கும் மூத்த அண்ணன், குடும்பத்தின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டதால் அந்த குடும்பமே அவரை வெறுத்து ஒதுக்குகிறது.

இதுதெரியாத அஸ்வின், அவர்கள் எல்லோரையும் ஒன்றாக நிற்க வைத்து போட்டோ எடுக்கிறார். இதனால், சிருஷ்டியின் குடும்பத்திற்கு மூத்த அண்ணன் மீதிருந்த கோபம் சற்று தணிகிறது. இதற்கு காரணமாக இருந்த அஸ்வின் மீதும் தனிஈர்ப்பு உருவாகிறது.

இதை தனக்கு சாதகமாக வைத்துக்கொண்டு சிருஷ்டியிடம் சென்று காதலை சொல்கிறார் அஸ்வின். அவளும் அஸ்வினின் உண்மையான காதலை புரிந்துகொண்டு ஒத்துக்கொள்கிறார். இருவரும் காதல் ஜோடிகளாக உலா வருகின்றனர்.

ஒருநாள் இவர்களை சிருஷ்டியின் மூத்த அண்ணன் நேரில் பார்த்துவிடுகிறார். அப்போது, இவர்களை கண்டித்து செல்கிறார். இருந்தாலும், இருவரும் யாருக்கும் தெரியாமல் காதல் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், விஜயகுமார் மூலமாக போலீசில் தடவியல் நிபுணர் பணி அஸ்வினுக்கு கிடைக்கிறது. வேலை கிடைத்த மாத்திரத்தில் விஜயகுமாருக்கு கமிஷனராகும் அறிவிப்பு வருகிறது. மறுநாள் விஜயகுமார் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வருகிறது.

ஊடகங்கள் தற்கொலை என்று சொல்லி வரும்வேளையில், தடவியல் நிபுணரான அஸ்வின் அது தற்கொலை இல்லை கொலைதான் என்று கண்டுபிடிக்கிறார். அதை நிரூபிப்பதற்காக அவரை கொலை செய்யப்பட்டதற்கான காரணங்களை கண்டுபிடிக்கிறார் அஸ்வின்.

இந்த தகவல்களையெல்லாம் திரட்டி உயரதிகாரியிடம் சமர்பிக்க ரெடியாக இருக்கும்போது சிருஷ்டியை மர்ம கும்பல் ஒன்று கடத்துகிறது. அஸ்வின் திரட்டி தகவல்களை எங்களிடம் ஒப்படைத்தால்தான் சிருஷ்டியை விடுவிப்போம் என்று மிரட்டல் விடுக்கின்றனர்.

இறுதியில் அஸ்வின் தான் திரட்டிய தகவல்களை அந்த கும்பலிடம் ஒப்படைத்து சிருஷ்டியை மீட்டாரா? அந்த மர்ம கும்பலுக்கும் அஸ்வின் திரட்டிய தகவல்களுக்கும் என்ன சம்பந்தம்? என்பதை விளக்கி கூறியிருக்கிறார்கள்.

நாயகன் அஸ்வினுக்கு இந்த படத்தில் முழுநீள கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார். காதல் காட்சிகளாகட்டும், ஆக்ஷன் காட்சிகளாகட்டும் நடிப்பில் மிளிர்கிறார்.

நாயகி சிருஷ்டி திரையில் பார்க்க அழகாக இருக்கிறார். இவர் கன்னத்தில் விழும் குழியில் இளைஞர்கள் தடுக்கி விழுவது நிச்சயம். மேலும், போலீஸ் அதிகாரியாக வரும் விஜயகுமார், அஸ்வினுக்கு உயரதிகாரியாக வரும் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

படத்தின் திருப்புமுனையாக வரும் ‘ஆடுகளம்’ நரேனுக்கு இப்படத்தில் சிறப்பான கதாபாத்திரம். அதை திறம்பட செய்திருக்கிறார்.

இயக்குனர் கார்த்திக் ரிஷி படத்தில் ரசிக்கும்படியாக காட்சிகளை வைக்காதது படத்திற்கும் பெரும் பின்னடைவை கொடுத்திருக்கிறது. கதையை வேகமாக நகர்த்தக்கூடிய அளவுக்கு காட்சிகள் இல்லாதது மிகவும் போரடித்திருக்கிறது.

இசைஞானி இளையராஜா இசைதான் படத்திற்கு மிகப்பெரிய பலமே. இவருடைய இசையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு படமாக்கப்பட்டிருக்கும் ‘புத்தம் புது காலை’ பாடல் கேட்கவும், பார்க்கவும் குளுமை.

மொத்தத்தில் ‘மேகா’ மயக்கம்.

காதல் 2014 (2014) - திரைவிமர்சனம்

நாயகன் பாஸ்கரின் (ஹரிஷ்) அப்பாவும், நாயகி ரஞ்சனியின் (நேகா) அப்பாவும் நெருங்கிய நண்பர்கள். அந்த உரிமையில் பாஸ்கர், ரஞ்சனியை தினமும் காலேஜூக்கு அழைத்துச் சென்று விடுவது, வருவதுமாக இருக்கிறார்.

பாஸ்கருக்கு வேலை வெட்டி எதுவுமில்லை. படித்துவிட்டு வேலைகிடைக்காமல் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவது, பொழுதுபோக்குவதுமாக இருக்கிறார். ஆனால், ரஞ்சனியோ ஓட்டப்போட்டியில் மாநில அளவில் இடம்பிடித்து பெரிய ஓட்டப்பந்தய வீராங்கனையாக ஆகவேண்டும் என்ற லட்சியம் இருக்கிறது. இதற்கு அவரது பெற்றோரும் உறுதுணையாக இருக்கின்றனர்.

தினமும் ரஞ்சனியை காலேஜூக்கு அழைத்துச் செல்லும் பாஸ்கர், ஒருகட்டத்தில் அவள்மீது காதல் கொள்கிறான். அந்த காதலை அவளிடம் சொல்லவும் செய்கிறான். அவளும் அதை ஏற்றுக்கொண்டு இருவரும் காதல் செய்ய ஆரம்பிக்கிறார்கள்.

மறுமுனையில், ரஞ்சனியின் தாய்மாமனான ராசுக்குட்டி (அப்புக்குட்டி) ஒருதலையாக ரஞ்சனியை காதலித்து வருகிறார். கட்டினால் அவளைத்தான் கட்டிக்கொள்வேன் என பிடிவாதமாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், பாஸ்கர்-ரஞ்சனியின் காதல் இருவருடைய பெற்றோருக்கும் தெரியவருகிறது. இரண்டு பேர் வீட்டிலும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதனால் காதல் ஜோடி தற்கொலை செய்துகொள்ள மலை உச்சிக்கு செல்கிறார்கள்.

அங்கு சென்றதும் பாஸ்கர், ரஞ்சனியிடம் ஒரு முத்தம் கேட்கிறார். முத்தத்திற்கு அவளும் ஒத்துக்கொள்கிறாள். அந்த ஒரு முத்தத்தால் அவளுடன் நீண்டநாள் வாழவேண்டும் என்ற ஆசை நாயகனுக்கு வந்துவிடுகிறது. எனவே தற்கொலை முடிவை ஒதுக்கி வைத்துவிட்டு வீடு திரும்புகிறார்கள்.

ஒருவரையொருவர் மறந்துவிட்டதாக அவர்கள் பெற்றோர்களிடம் பொய் கூறிவிட்டு, தனிமையில் சந்தித்து வருகிறார்கள். இதை நோட்டமிடும் ராசுக்குட்டி அவர்களது காதலை பிரிக்க நினைக்கிறார்.

இந்நிலையில், தனிமையில் நெருக்கமாக இருக்க நினைக்கும் பாஸ்கரின் விருப்பத்துக்கு சம்மதம் தெரிவித்து, ரஞ்சனியும்-பாஸ்கரும் ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு நாவல்பழ காட்டுக்குள் செல்கிறார்கள். அங்கு எந்நேரமும் குடித்துக் கொண்டிருக்கும் குமார் (மணிகண்டன்) மற்றும் அவரது நண்பர்களின் கண்களில் இந்த காதல் ஜோடி சிக்குகிறது.

அவர்கள் பாஸ்கரை அடித்துப் போட்டுவிட்டு அவன் கண்முன்னாலேயே குமார் மற்றும் அவரது நான்கு நண்பர்களும் ரஞ்சனியை பலாத்காரம் செய்துவிட்டு சென்றுவிடுகின்றனர். பின்னர் இருவரும் வீடு திரும்புகின்றனர். தோட்டத்தில் நடந்தது எதையுமே வீட்டுக்கு தெரியாமல் மறைக்கின்றனர்.

தன் கண் முன்னாலேயே தன்னுடைய காதலி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டும் ஒரு ஆண் மகனாக தன்னால் எதுவுமே செய்யமுடியவில்லை என மிகுந்த வேதனை கொள்கிறான் பாஸ்கர். ரஞ்சனியை பார்க்கவோ, அவளுடன் பேசவோ கூச்சப்படுகிறான். மறுபக்கம் தனது காதலியை கெடுத்தவர்களை பழிவாங்கவும் துடிக்கிறான்.

மறுமுனையில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது ரஞ்சனிக்கு அடிக்கடி நினைவில் வருவதால் ஓட்டப்பந்தயத்தில் சரிவர கவனம் செலுத்தமுடியாமல் போய்விடுகிறது.

இறுதியில் ரஞ்சனி இதையெல்லாம் மீறி தனது லட்சியத்தில் வெற்றிபெற்றாரா? தனது காதலியை கெடுத்தவர்களை பாஸ்கர் பழிவாங்கினானா? என்பதே மீதிக்கதை.

பாஸ்கராக வரும் நாயகன் ஹரிஷுக்கு அழுத்தமான கதாபாத்திரம். காதல் காட்சிகளில் அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆக்ஷன் ஹீரோவுக்குண்டான தோற்றம் இருந்தாலும், இவருக்கென்று படத்தில் சண்டைக்காட்சிகள் வைக்காதது குறையே.

ரஞ்சனியாக வரும் நேகா, தோற்றத்தில் அச்சு, அசல் சினேகாவை நினைவுபடுத்துகிறார். சினேகாவை அடிக்கடி திரையில் பார்க்கமுடியவில்லையே என வருத்தப்படுகிறவர்கள் இவரை பார்த்து சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம். ஓட்டப்பந்தய வீராங்கனையாக வரும் இவருடைய நடிப்பு அபாரம். காதல் காட்சிகளிலும் உருக்கமான நடிப்பை கொடுத்திருக்கிறார். பழிவாங்கும் வீரப்பெண்மணியாக உருவெடுக்கையில் கைதட்டல் பெறுகிறார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தில் தலைகாட்டியிருக்கும் பாய்ஸ் மணிகண்டன் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். நாயகியின் தாய்மாமனாக வரும் அப்புக்குட்டி வரும் காட்சிகள் கலகலப்புக்கு பதில் வெறுப்பையே தருகிறது. இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை இன்னும் கொஞ்சம்கூட குறைத்திருக்கலாம்.

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் தன்னம்பிக்கை இருந்தால் தற்கொலை செய்துகொள்ள மாட்டாள். லட்சியத்தில் ஜெயிக்க தனது உயிரைக் கொடுத்தேனும் போராடுவாள் என்ற மையக்கருத்தை வலியுறுத்தி எடுத்திருக்கும் இயக்குனர் சுகந்தனுக்கு பாராட்டுக்கள்.

ஆனால், படத்தில் ஆரம்ப காட்சிகளை நகர்த்த ரொம்பவும் சிரமப்பட்டிருக்கிறார். தேவையில்லாத காட்சிகளை புகுத்தி கொஞ்சம் போரடித்திருக்கிறார். ஆனால், இரண்டாம் பாதியை கொஞ்சம் விறுவிறுப்பு கூட்டி கொண்டு சென்றிருக்கிறார். முடிவு எதிர்பார்த்ததுதான் என்றாலும் அருமை.

பைசல் இசையில் கானா பாலா பாடிய ‘ஓ ஜங்கிலி’, ‘மானப்போல ஓடுறவ’ ஆகிய பாடல்கள் ஆட்டம் போட வைக்கின்றன. ‘பத்திக்கிச்சே’ பாடல் நமக்குள்ளும் காதல் தீயை பற்றவைக்கிறது. பின்னணி இசை பரவாயில்லை. ரித்திஷ் கண்ணாவின் ஒளிப்பதிவு கண்களுக்கு குளுமையாக இருக்கிறது.

மொத்தத்தில் ‘காதல் 2014’ புதுமை.

புதியதோர் உலகம் செய்வோம் (2014) - திரைவிமர்சனம்

‘லஞ்சத்தை முதலில் வீட்டிலிருந்து ஒழி. நாடு தானாக திருந்திவிடும்’ என்ற அப்துல்கலாமின் பேச்சிலிருந்து ஒரு வரியை மட்டும் எடுத்து முழு திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள்.

ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில் படிக்கும் நான்கு நண்பர்களாக ஆஜித், அனு, யாழினி, சூர்யேஸ்வர். இவர்கள் நால்வரில் அனு, யாழினி இருவரும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஆஜித், சூர்யேஸ்வர் இருவரும் பெரிய பணக்காரர்கள். இருந்தும் நால்வரும் நண்பர்களாக பழகி வருகின்றனர்.

நான்கு பேரில் யாழியின் அம்மாவுக்கு திடீரென உடம்பு சரியில்லாமல் போகிறது. அவரது சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தை வீடு கட்டும் இன்ஜினியரான ஆஜித்தின் அப்பாவிற்கு லஞ்சமாக கொடுக்கிறார் யாழினியின் அப்பா. இதனால் யாழினியின் அம்மாவுக்கு சிகிச்சை அளிக்கமுடியவில்லை.

அந்த லஞ்சத்தை வாங்கியது தனது அப்பாதான் என்று தெரிந்ததும், ஆஜீத் அந்த பணத்தை எடுத்துவந்து யாழினியிடம் கொடுத்து விடுகிறார். இதேபோல் போலீசாக இருக்கும் சூர்யேஸ்வரின் அப்பாவும் லஞ்சம் வாங்கி திளைக்கிறார்.

தனது அப்பாக்கள் லஞ்சம் வாங்குவதை தட்டிக் கேட்க நினைக்கும் இவர்கள், இதை நேரடியாக தங்களுடைய மியூசிக் மாஸ்டரான பிரவீணிடம் சென்று முறையிடுகின்றனர். அவர், லஞ்சம் வாங்கி கொழுத்து போயிருக்கும் பண முதலைகளிடமிருந்து பணத்தை அடித்து இல்லாத ஏழைகளிடம் கொடுக்கும் இமான் அண்ணாச்சியை கைகாட்டுகிறார்.

இமான் அண்ணாச்சியை இவர்கள் சந்தித்து, தங்கள் அப்பாக்கள் லஞ்சம் வாங்காமல் தடுத்து நிறுத்தினார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

படத்தில் சின்னத்திரையில் பாடகர்களாக வலம்வந்த ஆஜித், அனு, யாழினி, பிரவீன், அல்கேட்ஸ் அழகேசன் உள்ளிட்ட பலர் நடிகர்களாக உருமாறியிருக்கிறார்கள். அனைவரும், ஓரளவுக்கு நடித்திருத்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.

நம் நாட்டின் முதுகெலும்பை உடைத்துக் கொண்டிருப்பதே லஞ்சம் தான். குழந்தையை கொஞ்சும் அப்பாக்களைவிட லஞ்சத்துக்காக கெஞ்சுபவர்கள்தான் அதிகம். அந்த லஞ்சத்தை ஒழிக்க வேண்டுமானால்   இப்படியொரு படம் மாதத்திற்கு ஒன்று ரிலீஸ் ஆகவேண்டும். அப்போதுதான் லஞ்சம் வாங்கும் பெற்றோர்களை வீட்டிலிருக்கும் குழந்தைகள் தட்டிக் கேட்பார்கள். இதை எடுத்துச் சொன்ன இயக்குனர் நித்தியானந்தனுக்கு பாராட்டுக்கள்.

பண முதலைகளிடமிருந்து பணத்தை அடித்து ஏழைகளிடம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் வரும் இமான் அண்ணாச்சி, சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் செய்யும் சேட்டைகளை ரசிக்க முடியவில்லை. படத்தின் இசையமைப்பாளரான பிரவீண் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். படத்தில் இவருக்கு காதலியும் இருக்கிறார். இவர் காதலிக்கும் காட்சிகளில் வரும் பிண்ணனி இசை அருமை. பாடல்களும் அலுப்பு தட்டவில்லை.

மொத்தத்தில் ‘புதியதோர் உலகம் செய்வோம்’ பாடம்

இரும்பு குதிரை (2014) - திரைவிமர்சனம்

அதர்வா படித்து முடித்துவிட்டு பீட்சா கடையில் டெலிவரி பாயாக வேலை பார்த்து வருகிறார். இவர் பைக் ஓட்டுவதென்றால் ரூல்ஸை கடைப்பிடிக்கிற கேரக்டர். ஒருநாள் பஸ்ஸில் போகும்போது பிரியா ஆனந்தை பார்க்கிறார். பார்த்தவுடனயே அவள் அழகில் மயங்கிவிடுகிறார்.

மறுநாளும் பஸ்ஸில் போகும்போது பிரியா ஆனந்தை பார்க்கிறார். அப்பொழுது பிரியா ஆனந்த் நேரடியாக இவரிடம் வந்து, அவரை காதலிப்பதாக கூறிவிட்டு சென்றுவிடுகிறார். அதைக்கேட்டதும் அதர்வா அதிர்ச்சியில் உறைந்து போகிறார். மறுபக்கம் சந்தோஷமும் அடைகிறார்.

ஒருநாள் பிரியா ஆனந்தின் வீட்டுக்கே பீட்சா டெலிவரி பண்ணப்போகும் அதர்வாவிடம், பிரியா ஆனந்த் தான் அன்று பஸ்ஸில் தனது பிரெண்டோட பாய் பிரெண்டை கலாய்ப்பதற்கு பதில், தவறுதலாக உன்னிடம் கூறிவிட்டேன் என்று சொல்கிறாள். இதனால் சோகத்துடன் திரும்பும் அதர்வா, அவளுடைய போன் நம்பரை கண்டுபிடித்து அவளுடன் பேசத்துடிக்கிறார்.

ஒருகட்டத்தில் பிரியா ஆனந்தின் போன் நம்பரை கண்டுபிடித்து அவளிடம் பேச ஆரம்பிக்கிறார் அதர்வா. அவளும் அதர்வாவுடன் பேசத்தொடங்குகிறாள். இருவரும் நட்பாக பழகிக்கொண்டிருக்கும்போது அதர்வா மனதுக்குள் மட்டும் காதல் துளிர்விடுகிறது.

பிரியா ஆனந்த்துக்கு பைக் என்றால் கொள்ளை பிரியம். ஒரு பைக்கின் சத்தத்தை வைத்தே அது எந்த பைக் என்று கண்டுபிடிக்கக்கூடிய ஆற்றல் படைத்தவள். அவள் நமக்கென்று ஒரு பைக் இருந்தால் எப்படி இருக்கும் என்று அதர்வாவிடம் தனது ஆசையை கூறுகிறாள். பிரியா ஆனந்திற்கு விருப்பமான பைக்கை வாங்க முடிவெடுத்து ஒரு ஷோரூமுக்கு செல்கிறார்கள்.

அங்கு சில பைக்குகளை பார்த்து திருப்தியடையாத பிரியா ஆனந்த், குடோனுக்குள் வைக்கப்பட்டிருக்கும் ரேஸ் பைக்கான டிகார்டி பைக்கை வாங்கவேண்டும் என்று அதர்வாவிடம் கூறுகிறாள். அதர்வாவோ அந்த பைக் வேண்டாம் என்று கூறுகிறார். ஆனால், பிடிவாதமாக பிரியா ஆனந்த் அந்த பைக்தான் வாங்கவேண்டும் என்று கூறிவிட்டு சென்றுவிடுகிறார்.

வேறு வழியின்றி அதர்வாவும் அந்த பைக்கை வாங்கிக்கொண்டு பிரியா ஆனந்தை சந்திக்கிறார். அதனால் சந்தோஷமடையும் பிரியா ஆனந்த், அதர்வாவை கூட்டிக்கொண்டு தான் படித்த கல்லூரிக்கு சென்று சுற்றி காட்டுகிறாள். அப்போது அவள்மீதுள்ள காதலை சொல்லும் அதர்வாவிடம், நட்பாகத்தான் பழகுகிறேன் என்று சொல்லி அவன்மீது கோபப்படுகிறாள்.

இருவரும் அங்கிருந்து கோபத்துடனேயே திரும்பி வரும்வேளையில் இவர்களை ஜானி மற்றும் அவருடைய ஆட்கள் ரேஸ் பைக்கில் வந்து அவர்களை சுற்றி வளைத்து ஒரு குடோனுக்குள் அழைத்துச் செல்கின்றனர். அங்கு அதர்வாவை அடித்துப் போட்டுவிட்டு, பிரியா ஆனந்தை கடத்தி சென்றுவிடுகின்றனர்.

ஜானி, பிரியா ஆனந்தை கடத்திச் செல்ல காரணம் என்ன? பிரியா ஆனந்தை ஜானியிடம் இருந்து அதர்வா மீட்டாரா? என்பதை சுவாரஸ்யத்துடன் பிற்பாதியில் சொல்லியிருக்கிறார்கள்.

‘பரதேசி’ படத்திற்கு பிறகு அதர்வாவுக்கு இப்படத்தில் நடிக்க நல்ல வாய்ப்பு. அதை சரியாகவும், செம்மையாகவும் செய்திருக்கிறார். பைக் ஓட்டுவதில் ரூல்ஸ் ராமானுஜராக வரும் அதர்வா, பிற்பாதியில் எடுக்கும் விஸ்வரூபம் அனைவரையும் ஆச்சர்யப்பட வைக்கிறது. இந்த படத்தில் எதற்காக சிக்ஸ் பேக் வைத்தார் என்பதுதான் தெரியவில்லை.

பிரியா ஆனந்த்-அதர்வாவுடன் இணைந்து வரும் காட்சிகளில் அழகாக நடித்திருக்கிறார். அதர்வாவின் நண்பியாக வரும் லட்சுமிராய் நடிப்பிலும், கவர்ச்சியிலும் சமமாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். வில்லனாக வரும் ஏழாம் அறிவு ஜானி, அதர்வாவுடன் சண்டை போடும் காட்சியில் ஆக்ரோஷம் காட்டுகிறார்.

படத்தின் கதை ஓ.கேதான் என்றாலும் அதை திரைக்கதையாக்குவதில்தான் இயக்குனர் யுவராஜ் போஸ் கொஞ்சம் தடுமாறியிருக்கிறார். படத்தின் முன்பாதியை நகர்த்துவதற்கு ரொம்பவும் சிரமப்பட்டிருக்கிறார். பிற்பாதியில், கொஞ்சம் விறுவிறுப்பு காட்டியிருக்கிறார். இருந்தாலும் ஒருசில காட்சிகளை நீளமாக வைத்திருப்பதால் கொஞ்சம் போரடிக்க வைத்திருக்கிறது.

படத்தில் பாராட்டப்பட வேண்டியது கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவுதான். இறுதிக்காட்சியையும், படத்தின் பாடல்களையும் படமாக்கியது அருமை. ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசை பரவாயில்லை.

மொத்தத்தில் ‘இரும்பு குதிரை’ முரட்டுத்தனம்

காப்பகம்