Sunday, August 17, 2014

கிரிகெட்டை என் உயிர்மூச்சாக நினைத்து நான் வாழ்ந்த காலம் உண்டு

கிரிகெட்டை என் உயிர்மூச்சாக நினைத்து நான் வாழ்ந்த காலம் உண்டு. மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வந்தபோது ஒரு முறை என் காலில் பலத்த அடிபட்டு விட்டது. அதன்பிறகுதான் சினிமாவில் என் கவனம் திரும்பியது என்கிறார் வெண்ணிலா கபடிக்குழு விஷ்ணு.

* சினிமாவில் என்டரியாகி 5 ஆண்டுகளில் என்ன சாதித்திருப்பதாக நினைக்கிறீர்கள்..?

எதுவும் சாதித்திருப்பதாக நினைக்கவில்லை. நான் சாதிக்க வேண்டியது இனிமேல்தான் உள்ளது. இதுவரை விஷ்ணு என்றொரு நடிகன் சினிமாவில் இருப்பதை அவ்வப்போது ஒரு படம் மூலம் ரசிகர்களுக்கு ஞாபகப்படுத்திக்கொண்டு வந்திருக்கிறேன் அவ்வளவுதான். ஆனால் இனிமேல் எனக்கென்று ஒரு நிலையான இடத்தை பிடிக்க வேண்டும் என்று இப்போது களமிறங்கியிருக்கிறேன். அதனால், இதுவரை பார்த்த விஷ்ணுவுக்கும், இனிமேல் பார்க்கப்போகிற விஷ்ணுவுக்குமிடையே நிறைய வித்தியாசம் இருக்கும்.

* இனிமேல் விஷ்ணுவின் ரூட் என்னவாக இருக்கும்..?

இதுதான் எனது ரூட். இந்த மாதிரியான கதைகளில் மட்டும்தான் நடிப்பேன் என்று ஒரு வட்டம் போட்டுக்கொள்ள விரும்பவில்லை. என்னைப் பொறுத்தவரை வித்தியாசமான கதைகள். அது லவ்வோ, ஆக்சனோ, செண்டிமென்டோ, காமெடியோ, திரில்லரோ எதுவாக இருந்தாலும் அந்த கதையில் எனக்குரிய கதாபாத்திரமாகவே மாறி நடிப்பேன். எந்த அளவுக்கு என்னால் மாறுபட்ட நடிப்பை கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு முழுசாக இன்வால்வ்மென்டோடு நடிப்பேன். படத்துக்குப் படம் எனக்குள் இருக்கும் பெஸ்ட் அவுட்புட்டை கொடுப்பேன்.

* நீர்ப்பறவையில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது..?

சதா குடிபோதையில் இருக்கும் வேடம். நிஜத்தில் நான் குடிக்க மாட்டேன். அதனால், அந்த படத்திற்கு நடிப்பதற்கு முன்பு குடிகாரர்கள் எப்படியெல்லாம் நடப்பார்கள், பேசுவார்கள் என்பதை நேரில் சென்று பார்த்து அதற்கேற்ப நடித்தேன். அதற்கு முன்பு வரை வெண்ணிலா கபடிக்குழு, பலே பாண்டியா, துரோகி, குள்ள நரிக்கூட்டம் போன்ற படங்களில் நடித்திருந்தாலும் இந்த படத்தைப்பொறுத்தவரை நான் ஓரளவு நடித்திருந்தேன் என்றே சொல்ல வேண்டும்.

அதற்கு முன்பு நான் நடித்த படங்களில் எனது நடிப்பை யாருமே பாராட்டியதில்லை. ஆனால் நீர்ப்பறவை படத்தைப்பார்த்து விட்டுத்தான் பலர் பாராட்டினார்கள். இருப்பினும் என்னை அப்படி நடிக்க வைத்தது சீனுராமசாமி சார்தான். அதனால் அவருக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும்.

* முண்டாசுப்பட்டி ஹிட்டுக்கு பிறகு உங்களது மார்க்கெட் நிலை என்ன..?

முண்டாசுப்பட்டி எனது கேரியரில் எனக்கு பெரிய உற்சாகத்தைக் கொடுத்த படம். கதை கேட்கும்போது அது ஒரு புதுமையான கதைக்களமாக இருந்தது. அதிக ஆர்ப்பாட்டமில்லாமல் வெளிவந்த அப்படம் அதிரடியான வெற்றியை எட்டியது. இந்த படத்திற்கு பிறகுதான் விஷ்ணுவை வித்தியாசமான கதைகளுக்கும் யூஸ் பண்ணலாம் போலிருக்கே என்று டைரக்டர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது.

அதோடு, எனக்கும், இனிமேல் நார்மலாக இல்லாமல், வித்தியாசமான கற்பனைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் உருவானது. அதனால் இப்போது வித்தியாசமான கதைகளாக தேடிக்கொண்டிருக்கிறேன்.

* சுசீந்திரன், சீனுராமசாமி படங்களில் மீண்டும் நடிப்பது பற்றி..?

என்னை நடிகனாக்கியவர் சுசீந்திரன் சார்தான். அதையடுத்து இப்போது அவரது ஜீவா படத்திலும் நடிக்கிறேன். கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட கதை. ஏற்கனவே நான் கிரிக்கெட் பிளேயர்தான். சினிமாவில் நடிகனாவதற்கு முன்பு மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தேன். அப்போது பலதடவை காயம்பட்டிருக்கிறேன். ஒரு போட்டியின்போது எனது காலில் பலத்த அடிபட்டு, பல மாதங்களாக நடக்க முடியாமல் சிகிச்சை பெற்றேன். அதன் பிறகுதான் வீட்டில் நான் கிரிக்கெட் விளையாட தடை போட்டு விட்டனர்.

அதன் காரணமாகத்தான் சினிமாவில் நடிக்க வந்தேன். அந்த வகையில் இந்த ஜீவா படத்தில் நான் நடிக்கிறேன் என்று சொல்வதை விட ஒரு காலத்தில் எனது உயிர்மூச்சாக இருந்த கிரிக்கெட் விளையாட்டு கதையில் மறுபடியும் நடிக்கிறேன் என்பது எனக்கு சொல்ல முடியாத சந்தோசத்தையும், உற்சாகத்தையும் தந்திருக்கிறது. அதனால் இந்த படத்தில் ஒருநிஜ கிரிக்கெட் வீரனாகவே வாழ்ந்திருக்கிறேன்.


* விஜயசேதுபதியுடன் நடித்த அனுபவம் எப்படி..?

நான் ஏற்கனவே துரோகி என்ற படத்தில் ஸ்ரீகாந்துடன் இணைந்து நடித்தேன். அதன்பிறகு இப்போது விஜயசேதுபதியுடன் இடம் பொருள் ஏவல் படத்தில் நடிக்கிறேன். எந்தவித ஈகோவும் இல்லாமல் நல்ல நண்பனாக பழகும் அவர், இயல்பாக நடிக்கிறார். நாங்கள் இணைந்து நடிக்கும் காட்சிகளில் முன்கூட்டியே ஒருமுறை ரிகர்சல் பார்த்து விட்டே நடிக்கிறோம்.

அந்த வகையில், ஸ்ரீகாந்த்துடன் நடித்தபோது அவர் என்னைவிட சீனியர் என்பதால் ஒருவித பயம் இருந்தது. ஆனால் விஜயசேதுபதியுடன் அப்படியில்லை. நல்ல நண்பனாக இருப்பதால், ரொம்ப ஜாலியாக நடித்து வருகிறோம்.

* சில மேடைகளில் விஷாலை ரொம்ப கலாய்க்கிறீர்களே..?

சினிமாவில் உள்ள எனது நண்பர்களில் விஷால் ரொம்ப நெருக்கமானவர். அதோடு ரொம்ப அந்நியோன்யமாக பழகுவார். அதனால்தான் அவர் விசயத்தில் நான் அதிக உரிமை எடுத்துக் கொள்வேன். பாண்டிய நாடு படத்தின் ஆடியோ விழாவில் கூட, லட்சுமிமேனனை ஒருமுறை கூட பார்க்க அனுமதிக்கவில்லை என்று அவரை கலாய்த்தேன்.

ஆனால், அதற்கு பதிலாக, முண்டாசுப்பட்டி படத்தின் வானொலி ப்ரமோஷனில் நானும், நந்திதாவும இருந்தபோது, ரசிகர் போன்று போனில் பேசிய விஷால், நீங்களும், நந்திதாவும் ஸ்பாட்டில் ரொம்ப நெருக்கமாக பழகினதா கேள்விப்பட்டேனே என்று கேட்டு என்னை கலாய்த்து விட்டார். இதெல்லாம் சும்மா ஒரு ஜாலிக்காகத்தான். நண்பர்களுக்குள் இதுகூட இல்லைன்னா எப்படி.

* உங்களுடன் இதுவரை ஜோடி சேர்ந்த நடிகைகளில் எந்த நடிகை உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்..?

எல்லோரையும் எனக்கு பிடிக்கும். சரண்யா மோகன்தான் எனது முதல் பட நாயகி. எனக்கு முன்பே அவர் சில படங்களில் நடித்தவர். ஆனால் எனக்கு அதுதான் முதல் படம். அந்த வகையில் அந்த படத்தில் நடித்தபோது எனக்கு நிறைய உதவிகரமாக இருந்தார் அவர். அதேபோல், அதன்பிறகு நடித்த பியா, ரம்யாநம்பீசன், சுனைனா, நந்திதா என பலர் நடித்தனர். என்னுடன் நடித்த நேரத்தில் எல்லோருமே என்னுடன் நல்லபடியாகத்தான் பழகினார்கள் அதனால் அனைவரையுமே எனக்கு பிடிக்கும் என்கிறார் விஷ்ணு.

0 comments:

Post a Comment

காப்பகம்