Sunday, August 17, 2014

வீட்டுக்கடனுக்கு விண்ணப்பிக்கும்போது கவனிக்க வேண்டியவை..!

வீட்டுக்கடன் கொடுப்பதற்கு அனைத்து தரப்பு வங்கிகளும், வீட்டுவசதி நிறுவனங்களும் தாராளமய கொள்கையை கடைபிடிப்பதால் கடன் பெறுவதற்கான வழிமுறை எளிதாகி இருக்கிறது. கடனை திருப்பி செலுத்தும் தகுதி படைத்தவர்கள் யார் வேண்டுமானாலும் வீட்டுக்கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்ற நடைமுறை கடன் பெறுபவர்களின் எண்ணிக்கையை உயர்த்தி இருக்கிறது.

வட்டிவிகித முறை:- வீட்டுக்கடனுக்கு விண்ணப்பிக்கும்போது சில விஷயங்களை கவனத்தில் கொள்வது கடனை சுலபமாக திருப்பி செலுத்த உதவும். பிற்காலத்தில் ஆதாயம் தருவதாகவும் அமையும். அந்த வகையில் வீட்டுக்கடன் விஷயத்தில் முதலில் கவனத்தில் கொள்ள வேண்டியது வட்டிவிகிதம் பற்றியது தான். ஏனெனில் வட்டிவிகிதமே வீட்டுக் கடனை திரும்ப செலுத்தும் தொகையை நிர்ணயிக்கும் அளவுகோலாக இருக்கிறது.

 மற்ற கடன்களுக்கான வட்டி விகிதத்தை விட வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைவுதான் என்றாலும் அதை சரியாக தேர்ந்தெடுத்தால் கூடுதல் ஆதாயத்தையும் பெற முடியும். பொதுவாக வீட்டுக்கடனுக்கு இரண்டு வகையான வட்டிவிகிதங்களே நடைமுறையில் இருக்கின்றன.

அவை:– நிலையான வட்டி விகிதம் (பிக்ஸட்), மாறுபடும் வட்டி விகிதம் (பிளோட்ட்டிங்). இவைகளில் நிலையான வட்டி வகிதம் அதிக மாறுதலுக்கு உட்படாதது. குறிப்பாக சுமார் மூன்று ஆண்டுகள் வரை நிலையாக இருக்கும். அதனால் மாதத்தவணை தொகையில் எந்த மாறுதலும் இருக்காது.

மாறுதலுக்கு உட்பட்டது:- தொடர்ந்து ஒரே தொகையையே செலுத்த வேண்டியிருக்கும். இது பட்ஜெட் போட்டு செலவு செய்பவர்களுக்கு பொருத்தமான வட்டிவிகிதமாக  இருக்கும். ஏனெனில் வீட்டுக்கடனுக்கு என்று மாதம் தோறும் ஒரு தொகையை நிரந்தரமாக ஒதுக்கிவைத்து விடலாம்.

மீதி தொகையில் திட்டமிட்டு குடும்ப செலவுகளை மேற்கொள்ளலாம். மூன்று ஆண்டுகளை கடந்த பிறகு பொருளாதார சந்தை நிலையை பொறுத்து வட்டி விகிதம் மாறுபடும். அந்த வட்டிவிகிதமும் அடுத்த  மூன்று ஆண்டுகளுக்கு மேல் மாறுபடாமல் மாதத்தவணை தொகையை நிர்ணயிக்கும்.

 ஆனால் மாறுபடும் வட்டி விகிதம் அடிக்கடி மாறுதலுக்கு உட்பட்டது. அப்போதைய சந்தை நிலவரத்தை கணக்கில் கொண்டு வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படும். இதன் தாக்கம் மாதத்தவணை தொகையில் வெளிப்படும். அதனால் மாதத்தவணை தொகை நிலையாக இருக்காது. சில மாதம் அதிகரிக்கும். சில மாதம் குறையவும் செய்யும். அதற்கு ஏற்ப மாதத்தவணை தொகையை செலுத்த வேண்டிவரும்.

தேர்வு செய்யும் முறை:- இந்த இரண்டு வட்டி விகிதங்களில் எது ஆதாயம் தருவதாக அமையும் என்பதை கவனத்தில் கொண்டு வீட்டுக்கடனை தேர்வு செய்ய வேண்டும்.

பொதுவாக நிலையான வட்டி விகிதத்துக்கு வட்டி விகிதம் அதிகமாகவே இருக்கும். அது மாறுபடும் வட்டி விகிதத்தை விட 1 முதல் 2 சதவீதம் வரை அதிகமாக இருக்கும். இதன் சதவிகித புள்ளி விவரம் வங்கிக்கு வங்கி மாறுபடவும் செய்யலாம்.

 கடனுக்கு ஒரு சதவீதம் அதிகமாக வட்டி செலுத்துவதாக இருந்தாலும் அது திருப்பிசெலுத்தும் தொகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதாவது வாங்கிய கடன் தொகையை விட வட்டிக்கு அதிகமாக பணம் செலுத்துவதாக இருக்கும். இதை கவனத்தில் கொள்ள வேண்டும். நிலையான வட்டி விகித முறையில் மாதத்தவணை தொகை நிலையாக இருக்கும்  என்றாலும் செலுத்தும் தொகை  அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

அதிலும் தற்போதுள்ள சூழ்நிலையில் மாறுபடும் வட்டி விகிதமே லாபகரமாக  இருப்பதாக நிதி ஆலோசகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

வட்டிவிகித குறைப்பு:- ஏனெனில் வட்டி விகிதம் பெரிய அளவில் மாறுபடாத நிலையில் இருக்கும் சமயத்தில் நிலையான வட்டிவிகிதத்தை தேர்ந்தெடுப்பது 2 சதவீதம் வரை கூடுதல் வட்டித்தொகையை செலுத்துவது ஆதாயத்தை குறைப்பதாகவே மாறுகிறது.  இதுதவிர வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் பெரிய அளவில் உயர்வதற்கு வாய்ப்பு இல்லை. வட்டி விகிதம் இன்னும் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியிருக்கையில் மாறுபடும் வட்டிவிகிதத்தை தேர்ந்தெடுக்கும்போது வட்டி விகிதம் குறைந்தால் அதன் பலனை உடனே அனுபவிக்கலாம்.

மாதத்தவணை தொகையை குறைவாகத்தான் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் நிலையான வட்டிவிகிதத்தை தேர்ந்தெடுத்தால் வட்டிவிகிதம் குறைந்தாலும் குறிப்பிட்ட 3 ஆண்டு வரையில் என்ன வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறதோ அதுவே தொடர்ந்து கடைபிடிக்கப்படும்.

அதனால் வட்டி விகித குறைப்பு பலனை அனுபவிக்க முடியாமல் போய்விடும். எனினும் சந்தை நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும். வட்டி விகிதத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை கவனத்தில் கொண்டு அதற்கு ஏற்ப இறுதி முடிவு எடுப்பது ஆதாயம் தருவதாக அமையும்.

0 comments:

Post a Comment

காப்பகம்