Wednesday, September 24, 2014

அத்துமீறுகிறதா ஆன்லைன் கலாய்ப்புகள்... 'வித்தை'களை இறக்கி 'டியூன்' ஆக வேண்டியது யார்..?

"இதுவரைக்கும் கத்துகிட்ட மொத்த வித்தையும் முழுசா இறக்கனும்னு நினைச்சிட்டு இருக்கேன்.

நானே அப்படி டியூன் ஆகிருக்கேன்"

சென்ற வருடம் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் இந்த வார்த்தைகளை சொல்லும்போது, இயக்குநர் லிங்குசாமி சத்தியமாக அது இப்போது இந்த அளவில் பிரபலமாகும் என நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

கடந்த சில நாட்களாக, தமிழ் கூறும் சமூக வலைதளங்களில் இந்த வார்த்தைகள்தான் கன்னா பின்னா ஹிட். தமிழ் சினிமா பிரியர்கள் அனைவரும் தங்களால் முடிந்தவரை இதற்கான வெவ்வேறு அர்த்தங்களை கற்பித்து, அடுத்தவர்களை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

முதல் பத்தியில் விவரம் புரியாதவர்களுக்கு: சென்ற வருடம் ஒரு தொலைக்காட்சி பேட்டி ஒன்றில், அஞ்சான் படம் எப்படி இருக்கும் என தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு, இயக்குநர் லிங்குசாமி தந்த பதில்தான் முதல் இரண்டு வரிகள்.

அஞ்சான் திரைப்படம் வெளியாகி, அதற்கு கிடைத்த விமர்சனங்கள் அனைவரும் அறிந்ததே. திடீரென எவருக்கோ இந்த பேட்டி நினைவில் வர, அவர் அதை எடுத்துப் பகிர, அதைப் பார்த்து ரசித்த, அஞ்சான் திரைப்படத்தால் திருப்தி அடையாத ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பகிர, ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் அந்த வார்த்தைகள் ட்ரெண்டிங் ஆக, ஐ படத்தில் 'மெர்சலாய்ட்டேன்..' என்று வந்த பாடல், 'டியூன் ஆயிட்டேன்..' என ரீமிக்ஸ் ஆக, மீம் (Meme) எனப்படும் நையாண்டி புகைப்பட வாக்கியங்கள் புதிது புதிதாக முளைக்க, இப்படி அந்த பேட்டியில் சொன்ன வார்த்தைகள் கட்டுக்கடங்காமல் பிரபலமாகிவிட்டன. வேறு எப்படியெல்லாம் அந்த வார்த்தைகளை வைத்து நையாண்டி செய்யலாம் என இதற்கென்றே பிரத்தியேகமாக பல ஃபேஸ்புக் குழுக்களும் உருவாகி 'ரூம் போட்டு' யோசித்து வருகின்றன.

திரைப் பிரபலத்தை சமூக வலைதளங்களில் கிண்டலடிப்பது ஒன்றும் புதிதல்ல. டி. ராஜேந்தர், பவர் ஸ்டார் என்று அழைக்கபடும் சீனிவாசன், சாம் ஆண்டர்சன் எனப் பலரும் தொடர்ந்து ரசிகர்களின் நையாண்டிக்கு ஆளாகி வருகின்றனர். ஹாலிவுட்டிலும் கூட, நட்சத்திரங்கள் இப்படி பேட்டியில் ஏதாவது ஏடாகூடமாகச் சொல்லி மாட்டிக் கொண்டால் அதை வைத்து அவர்களை கிண்டலடிப்பது வழக்கம்.

ஆனால் லிங்குசாமியின் பேட்டி ஒளிபரப்பாகி ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு, அஞ்சான் திரைப்படம் வெளியான ஒன்றரை மாதங்கள் கழித்து, ஏன் இந்த கேலியும், நக்கலும் என பலருக்குப் புரியவில்லை. இணையத்தில் இருக்கும் ஒரே வசதி, பெருந்திரளாகச் சென்று கலவரம் செய்வதைப் போல, இதை யார் தொடங்கியது என்று யாருக்கும் தெரியாது.

அஞ்சான் திரைப்படம் தந்த ஏமாற்றத்தால் ஒரு பக்கம் பலரும் இதை சந்தோஷமாக அணுகினாலும், ஒரே ஒரு நபரை இப்படி குறி வைத்து கலாய்ப்பது நியாயம்தானா என லிங்குசாமிக்கு ஆதரவாக அனுதாப அலைகளும் வீசிக் கொண்டுதான் இருக்கின்றன.

இதற்கு காரணம் ரசிகர்களுக்கு லிங்குசாமியின் மீது இருந்த மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏமாற்றமாய்ப் போனது தான் என சொல்லப்பட்டாலும், இது சரியான போக்கு தானா?

இணையவாசிகளின் கற்பனை வளம் செழித்து வளர்ந்தோங்குவது ஒருபுறம் இருந்தாலும், சில பல கலாய்ப்புகள் அத்துமீறி தனி மனிதத் தாக்குதல்கள் / கிண்டல்களாய் இருப்பதை அனுமதிப்பது எப்படி?

சமூக வலைதளங்களில் படைப்பாளிகளையும் படைப்புகளையும் கலாய்த்தல் என்பது இயல்பானதே. ஆனால், அதைத் திட்டமிட்டு ஓர் இயக்கமாக செயல்படுத்துவதால் பிற்காலத்தில் ஏற்படும் விளைவுகள் எப்படிப்பட்டதாய் இருக்கும்..?

0 comments:

Post a Comment

காப்பகம்