Sunday, September 21, 2014

அரண்மனை (2014) - திரைவிமர்சனம்

ஜமீன்தார் குடும்ப வாரிசுகளான சித்ரா லட்சுமணன், கோவை சரளா மற்றும் வினய் ஆகியோர் தங்களின் பாரம்பரிய அரண்மனையை விற்க முயற்சி செய்கிறார்கள். இவர்கள் மூவரும் கையெழுத்திட்டால் தான் அந்த அரண்மனையை விற்கமுடியும் என்பதால் அனைவரும் ஒன்று கூடுகிறார்கள். இந்த அரண்மனையை வாங்க நீண்ட நாட்களாக முயற்சி செய்து வருகிறார் சரவணன்.

அரண்மனையை விற்பதற்காக பத்திரம் ரெடியாகும் வரை வாரிசுகள் அனைவரும் அங்கு தங்க முடிவு செய்கிறார்கள். அதன்படி வினய் மற்றும் அவரின் மனைவி ஆண்ட்ரியா, மனோபாலா-கோவை சரளா இவர்களின் மகன் நிதின் சத்யா, சித்ரா லட்சுமணன் மற்றும் அவரின் மகள் ராய் லட்சுமி ஆகியோர் அந்த அரண்மனையில் தங்குகிறார்கள். இதற்கிடையில் அந்த அரண்மனையை விற்பனைக்கு வருவதை அறிந்து அதே ஊரைச் சேர்ந்த சந்தானம், தனக்கும் சொத்தில் பங்குண்டு என்பதை அறிகிறார். ஆனால் ஆதாரம் இல்லாததால் வேலைக்காரனாக அங்கு நுழைகிறார்.

இந்த அரண்மனையில் ஏதோ மர்மம் இருப்பதாக அனைவரும் அறிகிறார்கள். இந்நிலையில் ஆண்ட்ரியாவின் அண்ணனான சுந்தர்.சி அரண்மனைக்கு வருகிறார். இந்த அரண்மனையில் பேய் இருப்பதாகவும் அந்த பேய் ஆண்ட்ரியாவின் மீது இருப்பதாகவும் அறிந்து கொள்கிறார்.

இறுதியில் அந்த பேய் யார்? எதற்காக ஆண்ட்ரியாவின் உடலில் புகுந்திருக்கிறது? பேயின் பிடியில் இருந்து அனைவரும் மீண்டார்களா? என்பதை காமெடி கலந்து திரில்லராக மீதிக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர்.

சுந்தர்.சி அண்ணன் கதாபாத்திரத்தை ஏற்று பொறுப்பான அண்ணாக நடித்திருக்கிறார். கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார் வினய். இரண்டு கதாநாயகன்கள் இருந்தாலும் நாயகிகளின் ராஜ்ஜியமே படத்தில் மேலோங்கி இருக்கிறது. நாயகிகளாக வரும் ஆண்ட்ரியா படத்தில் பேயாட்டம் ஆடுகிறார். இவர் உடம்பில் பேய் புகுந்தவுடன் இவர் செய்யும் செய்கைகள் அருமை. ராய் லட்சுமி கவர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார் ஹன்சிகா.

சந்தானத்தின் காமெடி ரசிகர்களை வயிறு வலிக்க செய்கிறது. மனோபாலா, கோவை சரளா, நிதின் சத்யா, சித்ரா லட்சுமணன் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

பரத்வாஜ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார். செந்தில்குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். இதுவரை காமெடி படங்களில் வெற்றி கண்டு வந்த இயக்குனர் சுந்தர்.சி, இப்படத்தில் காமெடியுடன் திரில்லரையும் சேர்த்து வெற்றி கண்டிருக்கிறார். ரசிகர்களுக்கு போரடிக்காத வகையில் திரைக்கதை அமைத்து காமெடி விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர். அரண்மனை செட்டை அருமையாக அமைத்த கலை இயக்குனரை பாராட்டலாம்.

மொத்தத்தில் ‘அரண்மனை’ கலகலப்பான திகில் வீடு.

0 comments:

Post a Comment

காப்பகம்