Monday, January 20, 2014

சுனந்தா இறந்தது எப்படி? பிரேத பரிசோதனை அறிக்கையில் பரபரப்பு தகவல்கள்..!



மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், அதிகமான மருந்துகளை சாப்பிட்டதால் இறந்திருக்கலாம் என்று பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா மரணத்தை அடுத்து அவரது உடலின் பாகங்கள் ரசாயன பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், சுனந்தாவின் உடலை 3 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர்.

அவரது மரணம் இயற்கையானதல்ல, திடீர் மரணம்தான் என்று குழுவினர் கண்டறிந்தனர் என்றனர்.இந்நிலையில், அவர் கடைசியாக எடுத்து கொண்ட உணவில் விஷம் கலந்துள்ளதா, மது குடித்திருந்தாரா என்று அறிய உடலின் பாகங்கள் சிலவற்றை ரசாயன பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் அறிக்கையில், அவரது உடலில் ஆல்கஹால் கலந்திருப்பதற்கான தடயம் இல்லை என்பதால், அவர் குடித்திருக்கவில்லை என தெரியவந்தது.

மேலும், மன அழுத்தத்திற்காக அல்பிராசோலம் எனப்படும் மருந்துகளை அவர் அதிகமாக சாப்பிட்டிருப்பதும் தெரிய வந்தது. இந்த மருந்து அதிகரித்ததால் அவர் உயிரிழந்திருக்கலாம் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த மருந்துகள் தூக்க மாத்திரைகளை போல் மயக்கத்தை தரக்கூடியது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.இதற்கிடையில், சிறப்பு புலனாய்வு படையினர் சசிதரூர் உள்பட 8 பேரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர். மேலும் சசிதரூரின் உதவியாளரும், பத்திரிகையாளருமான நளினி சிங்கிடமும் விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணையில் கிடைத்த வாக்குமூலங்கள், மருத்துவர் அறிக்கைகள், நடைபெற்ற சம்பவங்கள் ஆகியவற்றை ஒப்பிட்டு ஆய்வு செய்து பார்த்து சுனந்தா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அளவுக்கு அதிகமான மருந்துகளை உட்கொண்டதால் இறந்தாரா, அல்லது தற்கொலை நோக்கத்துடன் அதிக மாத்திரைகள் எடுத்து கொண்டாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.

மேலும், சுனந்தா அறையில் தங்கியிருந்த போது அவர் பேசிய தொலைபேசி உரையாடல்கள், இமெயில்கள், டுவிட்டர்கள் ஆகியவற்றையும் சிறப்பு புலனாய்வு படையினர் சேகரித்துள்ளனர். இவற்றை சிறப்பு புலனாய்வு படை தலைவர் அசோக் சர்மா ஆய்வு செய்து வருகிறார்.இந்நிலையில், சுனந்தாவின் பிரேத பரிசோதனை அறிக்கையையும், ரசாயன பரிசோதனை அறிக்கையையும் இன்று மாலையில் டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளனர்.

 இதைத் தொடர்ந்து, பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், ரசாயன பரிசோதனை செய்த நிபுணர்கள் ஆகியோருடன் சிறப்பு புலனாய்வு படையினர் விவாதிக்கவுள்ளனர்.இதற்கிடையே, ரசாயன மருத்துவ நிபுணர் குழு தலைவர் சுதீர் குப்தா கூறுகையில், எங்களது ஆய்வுகள் முழுமையாக முடிவடைந்து விட்டன.

சுனந்தாவின் உடலில் விஷம் எதுவும் கலக்கப்படவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டு விட்டது. இதயத்தை ஆய்வு செய்ததில் சில மருத்துவ தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை பிரேத பரிசோதனை அறிக்கையுடன் ஒப்பிட்டு பார்த்து இறுதி முடிவு எடுக்கப்படும்’ என்றார்.மேலும் தடயவியல் நிபுணர்களும் அறையில் எடுத்த மருந்துகள், கைரேகைகள், வியர்வை துளிகள், ரத்த மாதிரி உள்ளிட்டவற்றை வைத்து ஆய்வு செய்வர். பின்னர் இவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு, போலீசாரின் விசாரணை அறிக்கைகளுடன் சேர்த்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று எய்ம்ஸ் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment

காப்பகம்