Saturday, January 18, 2014

உயர்க்கல்விக்கான உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பது எப்படி?



 உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

வெளிநாட்டில் கல்வி கற்க வேன்டும் என்பது படிக்கும் மாணவர்கள் பலரின் கனவாக இருந்தாலும், வாய்ப்புகளையும், வசதிகளையும் ஏற்படுத்திக் கொண்ட ஒரு சிலருக்குத் தான் நனவாகிறது.

வெளிநாட்டுக் கல்வியானது திட்டமிட்டவர்களுக்கு மிகவும் எளிதான ஒன்றாகிவிடுகிறது. திட்டமிடாமல் கடைசி நேரத்தில் முயற்சி செய்பவர்களுக்கு பதட்டத்தோடு, பண விரயமும் அதிகமாகிறது. கடைசி நேரத்தில் முயற்சி செய்பவர்கள் பலரும் உதவித்தொகைகளை பெறுவதற்கான காலத்தை கடந்துவிடுகிறார்கள் என்பதுதான் உண்மை.

நாட்டைத் தேர்ந்தெடுங்கள்


நீங்கள் குறிப்பிட்ட பாடம்தான் படிக்க வேண்டும் என்று முடிவு செய்தவுடன் அந்த படிப்பிற்கு எந்த நாடுகள் சிறந்த நாடுகள் என்பதை முடிவு செய்யுங்கள். சில பாடங்களுக்கு சில நாடுகளின் பல்கலைக்கழகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதால், அந்த நாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. எதோ ஒரு நாட்டில் படிக்கலாம் என்ற எண்ணத்தில் நீங்கள் இருந்தால் நிச்சயம் அது தவறான முடிவாகத்தான் இருக்கும் என்பதை நினைவு கொள்ளுங்கள்.

நாட்டைத் தேர்ந்தெடுத்தவுடன் அந்த நாடுகளில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்கள் எது? அந்த பல்கலைக்கழகங்களின் கட்டண விபரங்கள், பகுதி நேர வேலை விபரங்கள் மற்றும் குறிப்பாக அந்த பல்கலைக்கழகங்கள் வழங்கும் உதவித்தொகைகள் குறித்த விபரங்களை முதலில் அறியுங்கள்.

சேகரித்த தகவல்களையெல்லாம் கொண்டு ஒரு அறிக்கை தயார் செய்யுங்கள். உங்களுக்கு தேர்ந்தெடுப்பது எளிதானதாக இருக்கும்.

விண்ணப்பியுங்கள்

உதவித்தொகைகளுக்கு விண்ணப்பிக்க ஆரம்பிக்கும்பொழுது இதற்கு விண்ணப்பிக்கலாம், இதற்கு விண்ணப்பிக்க வேண்டாம் என பிரிக்கும் வேலையில் இறங்க வேண்டும். உதவித்தொகையைப் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும் என கருதும் உதவித்தொகைக்கும் தயங்காமல் விண்ணப்பியுங்கள்.

உதவித்தொகைகளை வழங்கும் நிறுவனங்கள் தங்கள் இணையதளத்தில் விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்துகொள்ளும் வசதிகளை வைத்திருக்கும். அஞ்சல் வழியாக விண்ணப்பங்களைப் பெறலாம் என்று காலத்தை வீணாக்காதீர்கள். அதே போன்று விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விதிமுறைகளை கூர்ந்து படியுங்கள்.

வெற்றிகரமாக எழுதுங்கள்

உதவித்தொகையை பெறுவதற்காக உதவித்தொகை வழங்கும் நிறுவனத்திற்கு வரக்கூடிய விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகமான அளவு இருக்கலாம். உங்கள் விண்ணப்பம் தனித்து தெரியவேண்டும் என்றால் நீங்கள் உங்களைப் பற்றிய ஒரு கடிதத்தை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

நீங்கள் எழுதும் கடிதத்தில் உங்களின் தனித்திறன்கள், இதற்கு முன் கல்வியில் நீங்கள் சாதித்த சாதனைகள், உங்கள் விருப்பங்கள், எதிர்கால லட்சியங்கள், மொழித்திறன், உங்களின் உறுதி போன்றவை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

நீங்கள் பெறப்போகும் உதவித்தொகை உங்களுக்கு எந்தவிதத்தில் பயனுள்ளதாக இருக்கும் என்பதையும் விவரித்து எழுதுங்கள். ஏனெனில் ஒரு சிறந்த சுய விபரக் கட்டுரை உதவித்தொகை எளிதாகப் பெறுவதற்கு துணை புரியும்.

பரபரப்பு வேண்டாம்

உங்கள் விண்ணப்பத்தை சிறப்பாக கட்டமைத்தப் பின்னர் உடனடியாக உதவித்தொகை வழங்கும் நிறுவனத்திற்கு அனுப்புங்கள். முதலாவதாக வரும் விண்ணப்பங்களை ஆழந்து படித்து முன்னுரிமை அளிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

கடைசி நேரத்தில் பரபரப்புடன் சரியாக பூர்த்தி செய்யாமலோ, இறுதி நாளுக்குப் பிறகோ அனுப்பினால் உங்களுக்கு உதவித்தொகை கிடைப்பது அரிதான காரியமாகிவிட வாய்ப்பிருக்கிறது.

காத்திருங்கள்

உதவித்தொகைகள் எளிதாக கிடைத்துவிடுவதில்லை. உதவித்தொகைக்கான விண்ணப்பத்தை அனுப்பிய பிறகு உதவித்தொகை வழங்கும் நிறுவனத்தை தொடர்புகொள்வதற்கு முயற்சிக்க வேண்டாம், அமைதியாக காத்திருங்கள்.

நீங்கள் தகுதியுள்ள நபராக இருந்தால் நிச்சயம் உங்களுக்கு உதவித்தொகை கிடைக்கும்.

0 comments:

Post a Comment

காப்பகம்