Wednesday, September 10, 2014

திருட்டுக்கல்யாணத்திற்கு கற்றுக்கொடுக்கும் டிவி சீரியல்கள்..!

சமையல் நிகழ்ச்சி, அழகுக்குறிப்பு, ஆங்கிலத்தில் பேசுவது எப்படி? என பல ஆரோக்கியமான விசயங்களை கற்றுக்கொடுத்த தொலைக்காட்சிகள்தான் இன்றைக்கு கள்ளக்காதல் தொடங்கி திருட்டுக்கல்யாணம் வரை பலவித சமூக விரோதச் செயல்களை கற்றுக்கொடுக்கும் தொல்லைக்காட்சிகளாக மாறிவருகிறது.

மாமியார் மருமகள் பிரச்சினை தொடங்கி நாத்தனார், அண்ணி, கொழுந்தனார் இடையேயான உறவுமுறைக்குள் பலவித சந்தேகங்களையும் பிரச்சினைகளையும் உருவாக்கி வரும் தொலைக்காட்சி சீரியல்களில் தற்போது திருட்டுக்கல்யாணங்களும் அதிகரித்து வருகிறது.

திருமணமான ஆணுக்கு மற்றொரு பெண்ணை மணமுடித்து வைக்க அந்த பெண்ணின் குடும்பத்தினரும், பையனைப் பெற்ற அம்மாவும் சேர்ந்து பல்வேறு தகிடுதத்த வேலைகளை செய்கின்றனர். கடந்த பல மாதங்களாகவே இந்த திருட்டு கல்யாணம் பற்றிய சம்பவங்கள்தான் சன்டிவியின் சீரியல்களில் இடம் பெறுகிறது.


சன் டிவியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் தெய்வமகள் தொடரில் இந்த திருட்டு கல்யாணம் தொடர்பான கதைதான் இப்போது பத்து எபிசோடுகளுக்கும் மேல் ஒளிபரப்பாகிவருகிறது.


மகன் சுரேசுக்கு சௌமியாவை திருட்டு கல்யாணம் செய்து வைக்க பெண்ணின் குடும்பத்தினருடன் சேர்ந்து சரோஜா போடும் நாடகம்தான் இப்போது இல்லத்தரசிகளிடம் பேச்சாக இருக்கிறது.

கணவருக்கு ஆகாது எனக்கு தாலிப்பிச்சை போடு என்று மகனை ஏமாற்றி திருட்டு கல்யாணம் செய்ய முயலும் சரோஜா, ஐயரை கூட்டிக்கொண்டு கோவில் கோவிலாக ஓடுகிறாள். ஐயர் ஏதாவது சொன்னால் பணத்தை கொடுத்து வாயை மூடிவிடுகிறாள் சரோஜா.


இது இப்படி என்றால் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் தென்றல் தொடரின் கதையோ அதைவிட கந்தரகோலம். இந்த சீரியரின் தொடக்கவே கணவனையும் மகளையும் விட்டுவிட்டு ஓடிப்போன ஒரு பெண்ணைப் பற்றியதுதான். இப்போது மருமகளை கழற்றிவிட்டு மகனுக்கு மற்றொரு பெண்ணை கல்யாணம் செய்து வைக்கும் கதையாக மாறிவிட்டது.

இந்த அசிங்கத்திற்கு பெண்ணை பெற்றவர்கள், பையனின் அம்மா என அனைவரும் உடந்தை. இதில் சாருவின் அம்மா என்று கூறிக்கொள்ளும் அமைச்சரின் கள்ளமனைவி மாயாவும் உடந்தை என்பதுதான் கொடுமை. மகளுக்கு பிடித்தவனுடன் சேர்த்துவைக்க எந்த எல்லைக்கும் போவேன் என்கிறாள் மாயா.

ஆகாத மருமகளா கழற்றிவிட்டுவிட்டு அப்படியே வசதியான பெண்ணாக பார்த்து வளைத்துப்போட்டு மகனுக்கு இரண்டாம் தாரமாக திருமணம் செய்து வை இதுதான் இந்த சீரியல்கள் உணர்த்தும் உண்மையாக இருக்கிறது. இதில் என்ன கொடுமை என்றால் தென்றல், தெய்வமகள் தொடரின் இயக்குநர் ஒருவர் என்பதுதான். இரண்டு தொடர்களுமே விகடன் தயாரிப்புதான்.

ஏற்கனவே குழந்தை இல்லை என்றால் கணவனுக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்கும் மனைவிகள் சீரியலில் அதிகரித்தனர். இதனால் அப்பாவிப் பெண்கள் பலரும் உண்மையிலேயே தங்களின் கணவருக்கு இரண்டாம் திருமணம் செய்து வைத்தனர் என்று செய்திகள் வெளியாகின. இப்போது திருட்டுக்கல்யாண சீசன் அதிகரித்துள்ளது. எங்கே போய் எப்படி விடியப்போகிறதோ?

0 comments:

Post a Comment

காப்பகம்